தமிழாக்க மான்மியம் !

தமிழ் இலக்கிய இலக்கணப் புலமையாளர் , பன்மொழி பயின்ற சொற்பிறப்பியலாய்வாளர் , தூயதமிழ்ப் பற்றாளர் அறிஞர் ப.அருளி அவர்கள் முதன்மைப் பதிப்பாசிரியராயிருந்து உருவாக்கியது ‘அருங்கலைச்சொல் அகரமுதலி (ஆங்கிலம் – தமிழ்)’ .

இந்த அகரமுதலி, அவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘தூய தமிழ்-சொல்லாக்க அகரமுதலித்துறையில் ஆய்வறிஞராகப் பணியற்றிய காலத்தின் பயனாக 2002 இல் வெளிவந்தது.

“தமிழியல் வளர்ச்சி வரலாற்றுச் செலவுக்கிடையில் – ஒரு சிறப்புக்கூறாக – உங்கள் முன் கணத்துத் தோன்றும் இத்தொகுப்பாக்கப் பெருநூல் – ஒரு தனி முத்திரைத் தகைமையுடையதாகும்! இதன் ஆக்க வரலாறும் தனிச்சுவை தாங்கியதாகும்.

“பதினைந்தாண்டுக்கால நெட்டநெடிய பேருழைப்பை உள்வாங்கிச் சுமந்துகொண்டு உருவும் திருவும் எய்தி நிற்கும் ஓர் அரிய கலைச்சொற் கருவூலம், இது ! பென்னம்பெரிய இருமொழிக்களஞ்சியம் இது ” என்று தொடங்கும் அறிஞர் அருளி அவர்களின் ‘முன் முகவுரை’க் கூற்று முற்றிலும் உண்மை ; வெறும் புகழ்ச்சியில்லை.

தூயதமிழ் நடை நலனும் ஆய்வார்ந்த அலசல்களும் கொண்ட இந்த முன் முகவுரையையே தனிநூலாக வெளியிடலாம். இந்நூலுருவாக்கத்திற்குப் பல்லாற்றானும் துணை நின்றோரையும் பணிக்கட்டங்களையும் முறைமையையும் பற்றி அவர் விரிவாக எழுதியுள்ளார்.

இதனை இல்லத்தில் எப்போதும் என் கைக்கெட்டிய அண்மையில் வைத்துள்ளேன். பணியில் இருந்தபோது அலுவல் மிசையமிசை *(மேசை மீது) இருக்கும்.

இன்றளவும் ஆங்கிலவழித் தமிழாக்கம் எதுவாயினும் முதலில் இந்த அகரமுதலியைக் காண்பது என் வழக்கம்.

இந்த அகரமுதலியின் வரம்புக்குள் வராத சில பலவற்றையும் என் பணிப்பொறுப்புக் காரணமாகத் தமிழாக்க வேண்டிய நெருக்கடி எனக்கு நேர்ந்தது.

முற்பகல் 11.00 மணிக்குக் கொடுத்து நண்பகல் உணவு நேரத்துக்குள் கேட்பார்கள். மறுநாள் நண்பகலிலாவது கொடுத்துவிடலாம் என்று எண்ணி எனக்குப் பெரிதும் புழக்கமற்ற ஆங்கிலத்திலிருந்து சற்றும் பழக்கமற்ற தமிழாக்கப் பணி தொடர்வேன்.

ஒரு முறை எங்கள் மூத்த பேராசிரியர் ஒருவர் – பல்கலை. அதிகாரப் பொறுப்பிலிருந்தவர் – தலைமைச் செயலகத்தில் (சென்னை) பிணையாளர் போல் அமர்ந்திருக்க இங்கு (திருச்சி) ஓர் ஆங்கிலப் பேராசிரியர், ஓர் அறிவியல் பேராசிரியர், இரண்டு தமிழ்ப்பேராசிரியர்கள்(முனைவர் அலிபாவா அவர்களும் நானும்) எனத் தமிழாக்கத்தை மாலை 06.00 மணியளவில் தொடங்கி , தலையைப் பிய்த்துக்கொண்டு ஒருவழியாக நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் முடித்து மின்னஞ்சலில் அனுப்பிய கதையும் உண்டு.

கடந்த பதினெட்டாண்டுகளில் அறிவியல் துறைகள் சார்ந்த பல புதுப்புதுச்சொற்கள் வந்துவிட்டன. இந்த அகரமுதலிப் பணி தொடர்பணி. ஆனால் நம் நிறுவனச் சட்டதிட்டச் சிடுக்குகள் பற்றிச் சொல்லவேண்டுமா என்ன!

வந்ததை வரவில் வைப்போம்.

* மிசையம் = மேசை. மிசை = மேல் (அருளியார்க்கு நன்றி)

– மதிவாணன் பாலசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *