நூல் அறிமுகம்: “அருந்தவப்பன்றி” – சுப்பிரமணிய பாரதி | பாரதிகிருஷ்ணகுமார் | உஷாதீபன்

நூல் அறிமுகம்: “அருந்தவப்பன்றி” – சுப்பிரமணிய பாரதி | பாரதிகிருஷ்ணகுமார் | உஷாதீபன்



நூல்: “அருந்தவப்பன்றி” சுப்பிரமணிய பாரதி
ஆசிரியர்:  பாரதி கிருஷ்ணகுமார்
வெளியீடு: THE ROOTS
விலை: ₹200.00

பாரதி குறித்த புத்தகங்கள் வரலாற்றாசிரியர்களாலும், பாரதி குறித்த நூலாசிரியர்களாலும் அவ்வப்போது வந்து கொண்டேயிருக்கின்றன. பாரதியை முழுமையாகப் புரிந்து கொள்ளும் முயற்சியாக, இந்தத் தமிழ்ச் சமூகம் தெளிவாய் அறிவதற்காக, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நூலாக, முக்கிய ஆவணமாக இப்போது வந்திருக்கிறது பாரதி கிருஷ்ணகுமாரின் இந்த “அருந்தவப்பன்றி”. பெயரைப் பார்த்ததும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அதையும் காரண காரியத்தோடு விளக்கி இந்தத் தலைப்பே இப்புத்தகத்திற்கு சாலவும் பொருத்தம் என்று நிறுவி இந்த அருமையான புத்தகத்தை நமக்கு வழங்கியிருக்கிறார் ஆசிரியர். தன்னைப்பற்றி பாரதியே குறிப்பிடும் சொல் என்பதால் அதை மறைத்துத் திரையிடும் உரிமை நமக்கு இல்லை என்கிறார்.

தொன்மம் சார்ந்த கதைகளில் முனிவர்களே சாபமிடுவார்கள். சமயங்களில் அதே முனிவர்களும் சாபங்களுக்கு ஆளாவார்கள். இங்கு குறிப்பிடப்படும் முனிவனும் பன்றியாக உருவம் கொள்ளுமாறு சபிக்கப்பட்டான்.ஒரு சாதாரண மனிதன் பன்றியாகுமாறு சபிக்கப்பட்டிருந்தால் அவனை / அதனைப் “பன்றி“ என்று அழைத்துவிட முடியும். அருந்தவம் செய்து வாழ்ந்த ஒரு முனிவன், பன்றியாக உருமாறுவதால் அவனை / அதனை “அருந்தவப்பன்றி” என்றே அழைக்க நேரிடுகிறது என்று விளக்குகிறார்.

அருந்தவம் செய்த ஒரு முனிவன் கொடிய சாபத்திற்கு ஆளாகி, பன்றியாக மாறி காட்டிற்குள் சென்று வாழ்கிறான். கொஞ்ச நாளில் அந்த வாழ்க்கையே அவனுக்குப் பழகி விடுகிறது. அதுவே சுகமாக இருப்பதாக உணர்கிறான். தந்தையை மீட்க வந்த மகனிடம்….நான் இப்படியே இருக்கிறேன்…இது எனக்கு சுகமாக, சந்தோஷமாகப் படுகிறது…என்னை விட்டு விடு…என்று பன்றியான தந்தை கூறுகிறான்.

உயர்ந்த நிலையில் இருந்து தாழ்வுற்று விடுதலை தவறிக்கெட்ட முனிவன் பன்றியாகி அந்த வாழ்வே உகந்தது என்று முடிவு செய்து, அந்தப் புதிய நீசப் பொய்மையான வாழ்வில் விருப்பம் கொண்டு வாழ முற்பட்டதுபோல், தானும் தன் நிலை தாழ்ந்து, இழிந்ததோர் பன்றியைப் போன்ற வாழ்க்கையைச் சில ஆண்டுகள் வாழ நேர்ந்ததாக துயர் மிகுந்த ஒரு வாக்குமூலத்தை தன் கவிதை மூலம் முன் வைக்கிறான் மகாகவி. வாராய்! கவிதையாம் மணிப்பெயர்க் காதலி என்னும் முதல் அடியுடன் தொடங்கும் அந்த நீண்ட கவிதையை நம்மில் எத்தனை பேர் உய்த்துணர்ந்து கண்டுபிடித்து வாசித்து உருகியிருப்போம்?

அறிவிக்கப்படபாத ஆசிரியராகப் பொறுப்பு வகித்த “இந்தியா“ பத்திரிகையில் 1909 ம் வருடம் ஜனவரி மாதம் “இலக்கியப்பகுதி” என்று ஒரு பகுதியைத் திறக்கிறார் பாரதி. அதில்தான் முதல் பகுதியாக 85 வரிகளும், இரண்டாம் பகுதியாக 87 வரிகளாகவும் மொத்தம் 172 வரிகளில் அமைந்தது இந்தக் கவிதை என்று விபரங்களைக் கருத்தோடு நமக்குத் தருகிறார் பாரதிகிருஷ்ணகுமார். அனைத்துப் பதிப்புகளிலும் “கவிதைக் காதலி” எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் இக்கவிதைக்கு மகாகவி ”கவிதா தேவி அருள் வேண்டல்” எனத் தலைப்பிட்டிருக்கிறார்.

பாரதிக்கும் தொலைந்து போன ஒரு வாழ்க்கை உண்டு….என்று நெஞ்சம் உருகச் சொல்லப்படும் இத்தொகுப்பில் காணப்படும் தகவல்கள் கடுமையான உழைப்பின்பாற்பட்டும், இதுவரை எந்தப் புத்தகத்திலும் சொல்லப்படாததாய் இருக்க வேண்டும் என்பதிலும் கருத்தோடும் கவனத்தோடும் சேகரிக்கப்பட்டு, மிகப்பெரிய தாக்கத்தை நம்முள் ஏற்படுத்தும் விதமாய் அக்கறையோடு தொகுக்கப்பட்டுள்ளது.



சுப்பிரமணியன் என்று பெயரிடப்பட்ட பாரதியார் “சுப்பையா” என்கிற செல்லப் பெயராலும் அழைக்கப்பட்டதும், அடுத்துப் பிறந்த பெண் குழந்தைக்கு தன் தாயாரின் பெயரான “பாகீரதி” என்ற பெயரை சின்னச்சாமி அய்யர் சூட்டியதும், ஓரிரு ஆண்டுகளில் அந்தப் பெண் குழந்தை அகால மரணமடைந்ததும், 1887 ல் பாரதிக்கு ஐந்து வயதாகி இருந்தபோது அவரது தாயார் லட்சுமி அம்மாள் காலமானதும், தன்னோடு விளையாட ஒரு துணையுமின்றி, தனிமை வயப்பட்டு, தாயையும் இழந்து நின்ற பாரதி, அம்மா…அம்மா…என்று தன் பாட்டுக்களில் கூவி அழைத்திருப்பதைக் கொண்டு அந்த நெஞ்சத் துயரை நாம் உணர நேரிடுகிறது.
ஆங்கிலம், கணிதம், தமிழ் ஆகியவற்றில் புலமை கொண்டிருந்த சின்னச்சாமி அய்யர் எந்திரத் தொழில் நுட்ப அறிவும் கொண்டிருந்தார். அந்த உந்துதல்தான் எட்டயபுரத்திற்கு மேற்கே 1892 ல் பருத்தி அரைக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவ அவரை உந்தித் தள்ளியிருக்கிறது. அதே காலகட்டத்தில் 1893 ல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரு உறார்வி, பிராங்க் உறார்வி என்கிற இரண்டு சகோதரர்கள் நெல்லை மாவட்டம் தூத்துக்குடியில் ”கோரல் மில்ஸ்” என்கிற பஞ்சாலையைத் தொடங்குகின்றனர். சாதாரண மக்களால் உறார்வி மில் என்றழைக்கப்பட்ட இதுதான் பின்னர் இந்திய முதலாளிகளின் கைகளுக்கு மாறி “மதுரா கோட்ஸ்” எனப் பெயர் மாற்றம் கொள்கிறது.

தொழில் போட்டியில் பெருத்த நஷ்டத்திற்குள்ளாகிறார் சின்னச்சாமி அய்யர். அந்நிய மூலதனத்தின் அசுரத்தனத்திற்கு ஈடுகொடுக்க முடியாமலும், கடன் கொடுக்க முன்வந்த எட்டயபுரம் மன்னரும், பணம் படைத்த நண்பர்களும் ஆங்கிலேயர்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாக விலகிக் கொண்டதும், இயந்திரங்களைக் கழற்றி விற்று இருக்கும் கடன்களை அடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அவரது பஞ்சாலைக் கனவு பஞ்சாகப் பறந்து போன அவலத்தை நாம் அறியும்போது மனம் புண்பட்டுத்தான் போகிறது.

காளிதாசனின் சாகுந்தலைக்கு ஒப்பிட்டு தான் காதலித்த சிறுமியைப் பற்றி பாரதி எழுதியிருப்பதில் எந்த இடத்திலும் அவள் பெயரைச் சொல்லாமல், சிவன் கோவில் மண்டபத்தில் அவளைச் சந்தித்ததும், பேசியதும், பழகியதும் தனது சின்னச் சங்கரன் கதையில் பாரதி விளக்கியிருப்பதையும், அந்தக் காதலிலும் இடி விழுந்தது என்று அறியும்போது நம்மைத் துயரம் பற்றிக் கொள்கிறது.

தொடர்ந்து கல்வி பயிலுவதற்கான வசதியில்லாதிருந்தது, எட்டயபுரம் மன்னரை அணுகியது, தந்தையின் மரணம், பிறகு படிப்பைத் தொடர காசிக்குச் சென்றது…தாயோடு அறுசுவை போம், தந்தையொடு கல்வி போம்…என்ற பழம்பாடல் நம் நினைவுக்கு வந்து ஏன் பிறந்தேன் இத் துயர் நாட்டினிலே? என்று பாடும் பாரதியின் நிலையை எண்ணி வருத்துகிறது.

சுய சரிதைப் பாங்குடன் பாரதியார் எழுதிய படைப்புக்களில் மிக மிக முக்கியமானது “சின்ன சங்கரன் கதை” ஒரு பரிசோதனை முயற்சியாக, சுய அனுபவப் பகிர்வாக அமைந்த சிறந்த படைப்பு என்பதும் அதன் கையெழுத்துப் பிரதி தொலைந்து போய் விடுவதும், பாரதியை மீண்டும் எழுதத் தூண்டி, எழுதி ஆறு அத்தியாயங்களே கிடைக்கப் பெற்றன என்கிற விபரமும் அறிய நேரிடுகிறது. ஸ்ரீசுப்ரமணிய சிவம் நடத்திய ஞானபானு இதழில்தான் இந்த ஆறு அத்தியாயங்களும் வந்து, நம் தமிழ் நெஞ்சங்களுக்குக் கிடைக்கும் அரிய பொக்கிஷமாகிறது.



1903 ம் ஆண்டு எட்டயபுரம் திரும்புகிறார் பாரதியார். ஜமீனதார் அவரை அழைக்கிறார். அப்படியெல்லாம் வந்து அடிமைப்பட்டுக் கிடக்க முடியாது என்கிறார் பாரதி. உன் சுதந்திரத்திற்கு எந்தக் கேடும் வராது என்கிறார் ஜமீன்தார். அதற்கு மேல் தட்டிச் சொல்ல மனமின்றி எட்டயபுரத்தில் குடித்தனம் ஆரம்பிக்கிறார் பாரதியார். ஜமீன்தாருக்கும் அவருக்குமுள்ள நட்புபற்றிய விபரங்கள் வ.ரா.வின் நினைவுக் குறிப்புகள் மூலம் நமக்குக் கிடைக்கிறது. அவை பாரதியாரே தாமாக முன்வந்து மனமுவந்து தெரிவித்த விபரங்கள் என்று வ.ரா. பதிவு செய்வதாக அறிகிறோம்.

திருநெல்வேலியில் இருந்து வந்த சர்வஜன மித்திரன் என்கிற பத்திரிகையில் பாரதி கட்டுரை ஒன்றை வரைகிறார். பொதுவாகப் பணக்காரர்கள் பற்றியும், அவர்கள் செய்யும் அநாகரீகமான செய்கைகள் பற்றியும் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. இது தன்னைப் பற்றித்தான் என்பதாகக் கருதி, ஜமீன்தார் அவருக்குச் செய்துவந்த உதவிகளை நிறுத்தி விடுகிறார். பாரதி ஆய்வாளர்களும், வரலாற்றாசிரியர்களும் பல்வேறு நிலைகளில் பாரதியின் வாழ்க்கையை ஆய்வு செய்திருக்கின்றனர். அந்த ஆய்வின் மூலம் ஏராளமான விஷயங்களை நாம் அறியத் தலைப்படுகிறோம்.

இப்படி இப்புத்தகத்தில் உள்ள அனைத்து விபரங்களையும் சுருக்கமாகத் தெரிவித்து இந்த நூலின் வாசிப்பு அவசியத்தை விரிவாக விளக்கி விடலாம்தான். அனைத்தையும்தான் சொல்லியாயிற்றே…போதுமே…இன்னும் என்ன விலைக்கு வாங்கிப் படிப்பது என்கிற அபாயம் இருக்கிறது இதில். புத்தகங்களை விலைக்கு வாங்கிப் படிப்பதே அவைகளுக்கு நாம் செய்யும் மரியாதை.. அதிலும் தேர்வு செய்த முக்கியப்புத்தகங்கள் அந்த மதிப்பை நிச்சயம் பெற்றாக வேண்டும்.
நான் சமீபத்தில் படித்த நூற்களுள், எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒர நூல் இந்நூல் என்பதை ஓர் ஒப்புதல் வாக்குமூலமாகச் சொல்வதில்தான் நான் பெருமையடைகிறேன் என்கிறார் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் அவர்கள்.

பாரதியின் மறுபக்கத்தை வடிவமைத்துக் கொடுத்துள்ளது இந்த ஆவணம் என்கிறார் கவிஞர் புவியரசு. ஆய்வு நூல் வரிசையிலான பாரதிகிருஷ்ணகுமாரின் இப்புத்தகம் மூன்றாவது பதிப்பு கண்டிருக்கிறது இப்போது என்பதே இப்புத்தகத்திற்கான மகிமையை நமக்குத் தெரிவிக்கும்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *