நூல் அறிமுகம் : அறுபடும் விலங்கு – சித்தார்தன்

நூல் அறிமுகம் : அறுபடும் விலங்கு – சித்தார்தன்

வெளிச்சத்திற்கு வந்தவர்களை மட்டுமே உங்களோடு பகிர்ந்து கொள்வதாக நீங்கள் நினைக்க கூடும். என்னில் தாக்கத்தை உருவாக்கிய புத்தகங்களையே உங்களோடு பகிர்கிறேன். அந்த வகையில் நான் அடுத்து பகிர விரும்புவது, எனக்கு ரொம்பவும் பிடித்த “அறுபடும் விலங்கு” என்ற புத்தகம். ஏனெனில், அது என் வாழ்நிலையோடு சம்மந்தபட்டது. நான் எப்போதும் கடந்து செல்லும் இடங்கள் குறித்தும், சென்னையின் வரலாற்றில் அவற்றிற்கான முக்கியத்துவம் குறித்தும் இந்த புத்தகம் மூலம் தான் அறிந்துக் கொண்டேன்.
 இந்த நூலின் ஆசிரியர், தினகரன் என்கிற தனது பெயரை ரஷ்ய எழுத்தாளர் மக்சிம் கார்க்கி மீதான ஈர்ப்பின் காரணமாக கரன்கார்க்கி என்று மாற்றிக் கொண்டவர். எனது தந்தையின் பள்ளி நண்பர் என்பது அவரோடு பழகுவதற்கான வாய்ப்பை கூடுதலாக ஏற்படுத்தி கொடுத்தது.
 எல்லா எழுத்தாளனுக்கும் இருக்கிற பிரச்சனை தான் இவரிடம் இருந்தது. நிதி. என்னத்தான் பெரிய புத்தகம் என்றாலும் அதை வெளியிட அன்றைக்கு பெரிய பெரிய வெளியீட்டாளர்கள் மத்தியிலேயே தயக்கம் இருந்ததாக கேள்விபட்டேன். முதல் புத்தகம் வெளிவருவது என்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் பிரசவ வலி தான் என்பதை அவரோடு இருக்கையில் உணர்ந்து இருக்கிறேன். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, அவர்களின் புத்தகம் எதுவாயினும் அதை குறைந்த எண்ணிக்கையிலாவது வெளியிடுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். அப்போது தான் தமிழ்ச்சமூகம் உலக இலக்கிய வரிசையில் தனக்கான இடத்தை நிரந்தரப்படுத்திக் கொள்ள முடியும்.
 இந்த நாவல் நிதிச்சுமையால் வெளிவருவதற்கு தாமதித்து கொண்டிருந்த நேரத்தில், என் தந்தை அவருக்கு தெரிந்த சில நண்பர்கள் மூலமாக சிறு நிதிக்கு ஏற்பாடு செய்து தந்தார். அப்போது இந்த நாவலின் தட்டச்சு பிரதியோடு நான் கரன்கார்ககி அவர்களை பார்த்திருக்கிறேன். வாசிப்பை வாழ்க்கையாக கொண்டவர்களோடு எப்போதுமே இணங்கி போகிறவன் நான் என்பதால் அவரோடும் இணைந்துக் கொண்டேன்.
 அந்த நாவலுக்கு பணம் கொடுப்பது என்று உறுதிசெய்தாகி விட்டது. ஆயினும், எவரேனும் அதை வாசித்திருக்க வேண்டும் என்று என் தந்தையின் நண்பர் விரும்பினார். என் தந்தையிடம் நீங்கள் படியுங்கள் என்று அளித்தார்கள். என் தந்தை எனக்கு அளித்தார். அது 1000 பக்கங்களை நெருக்கி வந்தது. பார்த்ததுமே எனக்கு மலைப்பாக இருந்தது. வேற வேலையில்லாம இவ்வளவு பக்கம் எழுதியிருக்காரு என்று தான் நினைத்து ஆரம்பித்தேன்.
 முதலில் ஆரம்பித்ததுமே ஒரு பிணம். அதை சுற்றி மனிதர்களின் அழுகை. அங்கு பிணமாக கிடந்தவனின் வாழ்வில் ஒருவர் பின்னோக்கி பயணிக்கிறார். அப்படித்தான் கதை விரிகிறது. எனக்கு கடுப்பாக இருந்தது. என்னடா ரொம்ப மெதுவாக போகிறேதே என்று. ஒரு 10 பக்கங்களை கூட நான் கடந்து இருக்க மாட்டேன், அதற்குள்ளாக கதையின் மனிதர்களோடு நானும் பயணிக்க தொடங்கி விட்டேன். காலை 11 மணிக்கு ஆரம்பித்தவன் இடையறாது படித்தபடியே கிடந்தேன். ஏ.ஜி.எத்திராஜூலு எழுதிய தீண்டாத வசந்தம் புத்தகத்திற்கு அடுத்து என்னை தூங்க விடாத புத்தகமாக இதுதான் இருந்தது.
 இந்த நாவலில் 1930களில் கிராமங்களில் இருந்து நகரம் நோக்கி இடம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையில் துவங்கி சென்னையின் நகர வாழ்க்கையை அழகாக எடுத்துச் சொல்லி இருப்பார். அதிலும் அந்த சூழலை நம் கண் முன்னால் நிறுத்துவதில் நேர்த்தியான வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பார்.
 இந்த நாவலில் பல மனிதர்கள் வந்து போவார்கள். சாதி, தீண்டாமைக் கொடுமைகள், சென்னையின் குடிசை வீடுகள், கிறித்துவ மதத்தின் விரிவாக்கம், மக்களின் மீதான மதத்தின் பிடிப்பு, அன்றைய அரசியலில் காந்திக்கும் அம்பேத்கருக்குமான முரண்பாடுகள், தேவதாசி முறை, பிராமணீயத்தின் குணாம்சம் என இவர் தொட்டுச் செல்லும் அத்தனை இடமும் சிந்திப்பதற்கு செறிவானவை.
 இந்த நாவலின் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாக நான் கருதுவது, இவரின் எழுத்து நடையும், வார்த்தை பயன்பாடும் தான். எந்த இடத்திலும் சமசரம் செய்துக் கொள்ளாமல் வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பார்.
 சங்கரனையும் அவன் காதலியையும் என்னால் மறக்கவே முடியாது. அவன் காதலி ஒரு தேவதாசி. இவன் பிராமணன். இருவருக்குமிடையில் காதல். வெறித்தனங்களுக்கு மத்தியில் அவளுக்கு வெண்சாமரம் வீசியவன் சங்கரன். எந்த இடத்திலும் அவள் மீது ஆதிக்கம் செலுத்தாதவன். பிராமணனாக இருப்பதால் மநுதர்மத்தை உயர்த்தி பிடித்தவன் அல்ல. மக்களின் வாழ்வுக்காக குரல் எழுப்பியவன்.
இந்த நாவல் தமிழ்ச்சமூகத்திற்கு சில முக்கிய விவாதங்களை முன்வைத்து இருக்கிறது. ஒன்று, தலித்துகளுக்காக தலித்துகள் மட்டுமே குரல் எழுப்ப வேண்டும் என்று சொல்வது அபத்தமானது, தலித் அல்லாதார்கள் சாதியத்திற்கு எதிராகவும், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் தலித்துகளோடு கைகோர்த்து போராடினால் தான் தீர்வு கிடைக்கும். ஆனால், தலித் அல்லாதாரை நாம் எப்படி கையாள்கிறோம் ?. தலித் விடுதலை குறித்து பேசும் பல அறிவார்ந்த மக்களும் தலித் அல்லாதோரோடு இணைவதில் பெரும் தயக்கம் காட்டுகின்றனர். ஒத்த கருத்துடையவர்களை இணைப்பதற்கு நம்மிடத்தில் இடம் இல்லை என்று சொன்னால் எப்படி எதிர்கருத்து கொண்டவர்களை மாற்றி நம்மோடு இணைக்க போகிறோம் ?.
 இடதுசாரிகள் தீண்டாமைக்கு எதிராக வலுவான தலையிட்டை செய்து வரும் இப்போதும் கூட சில அறிவார்ந்த மக்கள் சொல்கின்றனர் “பாருய்யா, நாமெல்லாம் (தலித் அமைப்புகள்) சரியா வேலை செய்யாததால் தான் இந்த கம்யூனிஸ்ட்டுங்க வராய்ங்க”. தலித்துகளுக்கான போரட்டங்களை தலித் அமைப்புகள் மட்டும் நடத்த வேண்டுமாம்.. கூலிக்கும் தொழிலாளர் நலனுக்குமான பொருளாதார கோரிக்கைகளுக்காக மட்டுமே இடதுசாரிகள் குரல் எழுப்ப வேண்டும்.. அத்துடன் அவர்கள் நின்றுக் கொள்ள வேண்டுமாம். என்னவிதமான புரிதல் இது ?. இதை இந்த நாவலில் வலுவாக எழுப்புகிறார் எழுத்தாளர்.
 அடுத்து, சென்னை நகரத்தின் குடிசைகள் பற்றி. அந்த புத்தகத்தை நான் வாசித்து கொண்டிருந்த நேரத்தில் தான் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்ற போகிறோம் என்று சொல்லி நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை தமிழக அரசு அகற்றிக் கொண்டிருந்தது. அவர்களை கண்ணகி நகர், செம்மஞ்சேரிக்கு இடம்பெயர்த்தது. இந்த நாவல் கொடுத்த உத்வேகத்தால் கண்ணகி நகர், செம்மஞ்சேரிக்கு நான் நேரிலேயே சென்று பார்த்து உரையாடி இருக்கிறேன். தமிழக அரசின் நவீன தீண்டாமையும் அப்போது தான் புரிய ஆரம்பித்தது. இந்த நகரத்தை உருவாக்கியவர்களில் பெரும்பான்மையினராக இருந்த ஒடுக்கப்பட்ட மக்களை, இருக்க வீடின்றி தெருவோரங்களில் வாழ்ந்து வந்த அவர்களை எந்த சலனமும் இன்றி அப்புறப்படுத்தியது தமிழக அரசு. இதில் கொடுமை என்னவெனில், இப்படியொரு அகற்றம் நடக்கிறது என்பது பற்றி எதுவுமே சென்னையின் பிறபகுதியில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தெரியாது. அவர்களின் குடிசைகளும் எரிக்கப்படும் போதுதான், அவர்களும் கண்ணகி நகர், செம்மஞ்சேரிக்கு துரத்தியடிக்கப்படும் போது தான் இப்படியொரு அவலம் நிகழ்கிறது என்பதை அறிகிறார்கள்.
 சென்னையை நிர்மாணித்தவர்கள் துரத்தியடிக்கப்பட்ட போது, நாம் ஏன் அமைதியாக இருந்தோம் ? ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேற்றப்பட்ட போது நாம் ஏன் மவுனமாக இருந்தோம் ?. இதில் சாதியின் வெற்றி அடங்கியிருக்கிறது. சாதியம் தன்னை நவீனப்படுத்திக் கொண்டே வருகிறது. ஆனால் அதற்கு எதிரான போராட்டங்களில் இப்போதுதான் துவக்கப்புள்ளியில் உள்ளோம். சுயசாதி பெருமை பேசும் படித்த இளைஞர்களும், சொந்த சாதியில் தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று சொல்லும் ஐடி பெண்களும் சென்னையில் அதிகமாகி வருகின்றனர். கிராமங்களில் சேரிகளுக்கு துரத்தியடிக்கப்பட்ட போலவே, இப்போது நகரத்தின் வெளியே நவீன சேரிகளான கண்ணகி நகர், செம்மெஞ்சேரிக்கு விரட்டியடிக்கப்படுகின்றனர்.
 குப்பங்களும், குடிசைகளும் அழுக்கானவை, அருவருப்பானவை என்ற கருத்தாக்கம் நம்மிடத்தில் வேரூன்றியுள்ளது. இதற்கு நாவலில் பதில் சொல்கிறார் எழுத்தாளர்.
 நீங்கள் சென்னையை புரிந்துக் கொள்ள வேண்டுமா இதை முதலில் படியுங்கள். இந்த கதையில் வரும் இடம் இன்றைக்கு கே.பி.பார்க் என்று அழைக்கப்படுகிற கேசவபிள்ளை பூங்கா குடியிருப்புக்கு அருகில் உள்ளது. இப்போது அந்த இடம் குப்பை மேடாக உள்ளது.
 இந்த நாவலை படித்ததும் அவரோடு தொடர்பு கொண்டு சிலாகித்து பேசினேன். எனக்கு தெரிந்த எல்லோரிடமும் நான் பரிந்துரைக்கிற முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும்.
 சமூக மாற்றம் வேண்டும் என யாரேனும் நினைத்தால், அதற்காக செயல்பட முன்வந்தால் அவர்கள் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான, அடிப்படை நூல்களில் ஒன்று “அறுபடும் விலங்கு”.
 எதிர்பார்த்தது போலவே, இந்த நாவலுக்கு ஆண்டின் சிறந்த நாவல் என்று பரிசளித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இவரை பாராட்டியது. அதன் பிறகு, கறுப்பர் நகரம் உள்ளிட்டு சென்னை நகரம் குறித்து பல்வேறு முக்கியமான நூல்களை படைத்து வருகிறார். இருந்த போதிலும், வாழ்நிலையிலோ, தனக்கான கொள்கை பிடிப்பிலோ மாற்றம் இல்லாத பெருமனிதர்.
 தமுஎகசவின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தோழர் ச.தமிழ்செல்வன் பேசியதில் எனை ஈர்த்த வாசகம் – “உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் எப்போதும் சும்மா இருப்பதில்லை”. இந்த நாவலுக்கு ஏற்ற வாசகமாக இதைத் தான் நான் சொல்லுவேன். இந்த நாவலை வாசித்து விட்டு உங்களால் சும்மா இருக்க முடியாது. சிந்தனையிலும், செயலிலும் மாற்றம் வரவழைக்கும் ரசவாச வித்தைக்காரர் கரன்கார்க்கி..
 இவரின் வீடு இப்போதும் சென்னை கன்னிகாபுரத்தில் தாஸ் நகரில் தான் உள்ளது. தமிழின் அழகிய எழுத்தாளன் எந்த பரபரப்பும் இன்றி சினிமாவில் இணை இயக்குனராக போராடிக் கொண்டு,  நெஞ்சில் பட்டதை நெருடல் இன்றி எழுதி கொண்டு, ஓவியராக, வாசகனாக, புதியதை தேடி அலைபவராக நம்மோடு தான் நம் அருகில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்..
 குறைந்தபட்சம் இந்த நாவலை வாசிக்க செய்யுங்கள். அதை இன்னொருவருக்கு அறிமுகம் செய்யுங்கள். கருத்தியல் மாற்றம் தான் சமூக மாற்றத்திற்கான துவக்கப்புள்ளி.
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *