நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆர். சண்முக சுந்தரத்தின் “அறுவடை” – ஜானகி ராமராஜ்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆர். சண்முக சுந்தரத்தின் “அறுவடை” – ஜானகி ராமராஜ்

இலக்கிய உலகிற்கு தன் சேவையை நிறுத்திக் கொண்ட பிறகு, கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப் பின் க.நா.சு. அவர்களின் தொடர் ஊக்கத்தால் இந்த குறுநாவலை எழுதியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். 1960 ல் வெளியான இந்நாவல் கொங்கு வட்டார வழக்கை அக்காலத்திலேயே சிறப்பாக கையாண்டுள்ளது. க.நா.சு. அவர்கள் தமிழின் முதல் வட்டார நாவல் என்கிறார் இதை.

மிகச்சிறிய கதைக்களத்தில் வாழ்வியலோடு இணைந்த மனிதர்களின் வாழ்க்கையைக் காட்டுகிறது. சின்னப்ப முதலியார், எழுபது வயதைக் கடந்தும் பெண்ணாசை விடவில்லை. ஒரே மகன். கள்ளுக்கடை, நிலம் என சொத்து நிறைய சேர்த்திருக்கிறார். மனைவி இறந்த பிறகு மருமகள் ஆட்சி ஆரம்பமாகிறது. எனவே இவர் அவர்களுடன் இருப்பதில்லை. தனக்கு சொந்தமான பருத்திக்காட்டில் குடிசையில் வசிக்கிறார். மனைவி இறந்து முப்பது வருடங்களாகியும் பெண் துணை தேடுகிறார், ஒரு பெண்ணைக் கூட நிலையாக வைத்திருக்கவில்லை என பலவிதமாக ஊருக்குள் பேசுகிறார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவர் வருத்தப்படுவதில்லை. “பேசுபவன் எவனாவது பொண்டாட்டி இல்லாமல் இருக்கிறானா? ” என்று கடந்து போய்விடுவார். கருப்பண்ண முதலியார், சின்னப்ப முதலியாரின் கல்யாண ஆசையை உயிர்ப்புடன் வைத்திருப்பவர். “உங்களுக்கென்ன மாமா ராஜாவாட்டம் இருக்கீங்க, ஐம்பதைத் தாண்டி உங்க வயதை யார் சொல்ல முடியும்” என்று உசுப்பேற்றிக் கொண்டிருப்பவர்.

இதில் கருப்பண்ண முதலியாருக்கும் லாபம் உண்டு. கல்யாண காரியங்களுக்கு என அடிக்கடி பணம் பெற்று கொள்வதற்கும், சின்னப்ப முதலியாருக்கு கல்யாணத்தை முடித்து விட்டால் வரும் கமிஷன் பணத்தைக் கொண்டு தன் மகன் கல்யாணத்தை முடித்து விடலாம் என்ற கணக்கு.

அறுவடை / Aruvadai (Tamil Edition) eBook: ஆர் ...

நாச்சிமுத்து, பனிரெண்டு வயதிருக்கும் போது சின்னப்ப முதலியாரின் கள்ளுக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான். இப்பொழுது வளர்ந்து பெரியாளாகி விட்டான். சீட்டு விளையாட்டு, சூதாட்டம் என பணம் சம்பாதிக்கிறான். ஒரே மகள் தேவானை. நாச்சிமுத்துவின் மனைவி இறந்துவிட அவனின் கைம்பெண் அக்கா அங்கம்மாள் தான் தேவானையை வளர்க்கிறாள். நாச்சிமுத்து வீட்டிற்கு அடிக்கடி வருவதில்லை. தன் பெண்ணிற்கு பணக்கார இடத்தில் சம்பந்தம் பேச வேண்டுமென்ற ஆசையில், அதற்கு தான் பணக்காரணாக வேண்டுமே என்ற நினைப்பில் அளவுக்கதிகமான சூதாட்டம். சில சமயம் போலீசில் இருந்து தப்பி ஓடுவதும் உண்டு.

கருப்பண்ண முதலியார் தான் சின்னப்ப முதலியாருக்குப் பேச்சுத் துணை. கருப்பண்ண முதலியார் ஒருநாள் தன்னை சின்னப்ப முதலியாரின் மருமகள் தங்களுக்கு மாப்பிள்ளை பார்ப்பதை தரக்குறைவாக பேசுவதாகவும் சீக்கிரமே கல்யாணத்தை முடித்து வருகிற பெண்ணின் பேரில் சொத்துக்களை எழுதிவிடுமாறும் கூறுகிறார்.

நாச்சிமுத்துவின் மகள் தேவானை மற்றும் சின்னப்ப முதலியாரின் பேரன் சுப்பிரமணியின் காதல் சோளக்காடு மட்டுமே அறிந்தது. யாருமறியா சோளக்காட்டில் இருவரும் காதல் வளர்க்கின்றனர். சோளக்காடு சின்னப்ப முதலியாருடையது. ஒருநாள் கருப்பண்ண முதலியார், திருப்பூர் சந்தைக்கு காடையூர்காரர் வருவார் அவர் பெண்ணை திருமணம் முடிக்க சம்மதம் பெற்று, நமது சார்பாக இருபது சவரன் நகை கொடுத்துவிடலாம் என அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு செல்கிறார்.

வீட்டிற்கு வந்த நாச்சிமுத்து உடைந்து உட்கார்ந்திருப்பதை தேவானை பார்க்கிறாள். அத்தை அங்கம்மாள் அழுகிறாள். போலீசிடம் மாட்டிக்கொண்டதாகவும், கருப்பண்ண முதலியார் தான் அபராதத் தொகையைக் கட்டி காப்பாற்றினார் இல்லையெனில் தான் ஜெயில் தண்டனை அனுபவித்திருக்கக் கூடும் எனவும் கூறுகிறான்.

Amazon.com: அறுவடை / ARUVADAI: குறுநாவல் ...
அதற்கு ஈடாக தேவானை சின்னப்ப முதலியாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனவும் அவர் மொத்த சொத்துக்களையும் இவள் பேரில் எழுதி வைத்துவிடுவார் எனவும் கூறுகிறான். தேவானை கதறி அழுகிறாள். கல்யாண வேலைகள் மிகப் பிரம்மாண்டமாக நடக்கின்றன.

இறுதியில், தேவானை, சுப்பிரமணியின் காதல் என்னானது, சின்னப்ப முதலியாருடனான திருமணம் நடந்ததா என்ற திருப்புமுனையில் முடிகிறது கதை. நாம் எதிர்பார்க்காத, யூகிக்காத ஒரு முடிவு கதைக்கு. 72 பக்கங்களுக்குள் ஒரு அழகான குறுநாவல்.

ஜானகி ராமராஜ்

நூல்: அறுவடை

ஆசிரியர்: ஆர். சண்முக சுந்தரம்

வெளியீடு: காலச்சுவடு

விலை: ₹85.00 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *