எனது மிக நெருங்கிய நண்பனும் தோழனும் ஆன வில்லியம் டயல் மறைந்த செய்தி பேர் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் உண்டாக்கியுள்ளது. பத்திரிக்கையாளராக அவர் தினத்தந்தியில் பணியாற்றி பின்னர் அலையோசையில் வேலை செய்தபோது தான் தொழிற்சங்க போராட்டங்களில் செய்தி சேகரிக்க வந்த அவர் எனது நண்பர் ஆனார்.
தோழர் விபிசி யின் பேச்சும் அணுகுமுறைகளும் அவரை மிகவும் கவர்ந்திருந்தது . திராவிட அரசியலிலும் பல திராவிட கருத்தியல் களிலும் அவர் உடன்பாடு கொண்டிருந்தார். தொழிலாளர் போராட்டங்கள், அந்தப் போராட்டங்களில் கம்யூனிஸ்டுகளின் அர்ப்பணிப்பான பங்களிப்பு, நேர்மையான செயல்பாடுகள் எல்லாம் அவரை கம்யூனிஸ்டு இயக்கத்திற்கு மிகவும் நெருக்கமாகக் கொண்டு வந்தது.
அலுவலகத்திற்கு வர தொடங்கினார். தோழர் வி எம் எஸ் பி ஆர் பி அரிபட் உள்ளிட்ட எல்லா தோழர்களோடும் அவர் நெருக்கமாகவும் அன்போடும் பழகினார். அவர் அப்போது பெரியமேட்டில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார் அவரைப் பார்க்க அங்கே நான் செல்வதுண்டு. அவர் உணவு வாங்கிக் கொடுப்பார். பிறகு அவரோடு பல விஷயங்களை பேசியவை மிகுந்த மகிழ்ச்சியான தருணங்கள்.
பல பொது விஷயங்களை அவரிடம் நான் கற்றவன். கம்யூனிஸ்ட் தலைவர்களோடு தனக்கு ஏற்பட்ட பழக்கம்தான் என்னுடைய உலகப் பார்வையை விசாலப் படுத்தியது என்றும் சமூகப் பிரச்சினைகளில் எனக்கு இருந்த பல குறுகிய அடிப்படைவாத கண்ணோட்டங்களில் இருந்து நான் விடுபட அதுவே காரணமாக இருந்தது என்றும் பல தருணங்களில் உணர்ச்சிபொங்க என்னிடம் கூறியிருக்கிறார்.
தன்னுடைய எழுத்துக்களுக்கே ஒரு புது பரிமாணம் கம்யூனிஸ்ட் தொடர்புக்கு பிறகுதான் கிடைத்தது என்றும் அவர் கூறுவார். ஒரு சம்பவத்தை எப்படி ஒரு செய்தியாளர் சமூக கண்ணோடு அணுக வேண்டும் என்பதையும் நான் நன்றாக கற்றுக் கொண்டதும் இந்த இயக்கத் தொடர்புக்கு பிறகுதான் என்று அவர் கூறுவார்.
கம்யூனிஸ்டுகளின் தாக்கம் அவருக்குள் ஏற்படுத்திய இந்த மாற்றங்களுக்கான நன்றி பெருக்கோடு அவர் எல்லா தோழர்களிடமும் அன்பு பாராட்டினார். போக்குவரத்து தொழிலாளர்களின் வாயில் கூட்டங்களில் அவர் எப்போதும் கலந்து கொள்வார். அவர் காலத்தில் இருந்த செய்தியாளர்களின் மிகவும் சாதாரண தொழிலாளர்கள் எவ்வளவு தெளிவோடும் வர்க்க புரிதலோடும் தொழிலாளர்களுக்கு புரிகிற மொழியில் பேசுகிறார்கள் என்பதை மிகவும் ரசிப்பார் ருசிப்பார். அவர்களின் கோபத்தை கண்டு அவரும் கொதிப்படைவார்.
ஒரு இயக்கமும் போராட்டங்களும் எப்படி ஒரு தலைவனை, ஒரு கிளர்ச்சி பிரச்சாரகனை உருவாக்குகிறது என்பதற்கு தோழர் சந்திரன் சிறந்த உதாரணம் என்று சொல்லுவார்.இதைப்போல நூற்றுக்கணக்கான தொழிலாளர் தலைவர்களை இந்த இயக்கம் உருவாக்கி இருக்கிறது என்று பெருமிதப் படுவார்.
போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில மாநாடுகள் அனைத்திலும் அவர்தான் செய்தியாளர்.
மாநாட்டின் மையமான கருத்துக்களை சிறப்பாக பதிவு செய்வது அவருக்கு இருந்த திறமை. அவர் காலத்தில் இருந்த செய்தியாளர்களில் அவர் சிறந்த செய்தியாளராக திகழ்ந்தார். ஒரு கூட்டத்தின் நெடிய உரையில் இருந்தும் மையமான கருத்தை, அவசியமான செய்தியை அடையாளமிட்டு, கருவும் கருத்தும் பிறழாமல் கொடுக்கிற திறமை அவருக்கு இருந்தது.
அலையோசை நாளேட்டுக்குப் பிறகு மக்கள் குரல், மக்கள் செய்தி, மணிச்சுடர் என சில நாளேடுகளில் பணியாற்றினார். இந்த நாளேட்டுப் பணிகள் அவருக்கு திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரவில்லை என்பதை நான் அறிவேன்.
அங்கு இருக்கிற நேரடியான மறைமுகமான கெடுபிடிகளையும் மனசாட்சிக்கு விரோதமாக எழுத வேண்டியிருக்கிற நிர்ப்பந்தங்களையும் அவர் வெறுத்தார். நாளேட்டுப் பணிகளை விட்டு விட்ட பிறகு அவருக்கு ஊடகங்களில் இருந்து கை நிறைய சம்பளத்தோடு அழைப்புகள் வந்த போதும் அவைகளை அவர் ஏற்கவில்லை.
காரணம் அவரது மனம் அதை விரும்பவில்லை.
ஒப்பந்த முறையில் வானொலியிலும் தூர்தர்ஷனிலும் மட்டும் செய்தி தயாரிப்பாளராக தனது பணியை சுருக்கிக் கொண்டார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்ற வாரம் வரை சிஐடியு செய்தி மாத இதழுக்கும் போக்குவரத்து தொழிலாளி மாத இதழுக்கும் கட்டுரைகளை எழுதினார். மொழிபெயர்ப்புகளை செய்து கொடுத்தார். உலக நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளின் திருப்பங்கள் ஆகியவற்றை எழுதும் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றி வந்தார்.
ஏகாதிபத்திய சதிகள், வகுப்புவாத பிரச்சாரங்கள், ஜாதி மோதல்கள், நீதிமன்ற தலையீடுகள் போன்ற எல்லாவற்றிலும் வர்க்க நோக்கங்களை புரிந்து வெளிப்படுத்துவதில் அவர் பேருதவி புரிந்தார்.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி என்கிற மார்க்சிஸ்ட் கட்சியின் ஆங்கில வார இதழ் என்னுடைய அறிவை பார்வையை தொடர்ந்து விசாலப் படுத்துகிறது என்று சொல்வார். அந்த இதழின் பல செய்திகளை உயிர் தன்மை மாறாமல் இந்த இதழ்களுக்கு அவர் வழங்கி வந்தார்.
எங்கே நான் வேலை பார்த்ததை விடவும் இந்த இரண்டு இதழ்களுக்கு நான் வேலை பார்ப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது என்பார். ஒரு சிறு தொகையை அவருக்கு நாங்கள் வழங்கி வந்தோம். இங்கே ஒரு பெரும் பள்ளம் ஏற்பட்டு விட்டது.
எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்ட பிறகு அவசர காலத்தின்போது நான் வி பி சி, வி எம் எஸ் உட்பட தலைவர்கள் தலைமறைவானோம்.
எனது தலைமறைவு தங்குமிடங்களில் ஒன்று பெரம்பூரில் இருந்தது. அவசர காலம் முடிவுக்கு வந்த பிறகு தோழர் வில்லியம்ஸ் என்னுடைய பெரம்பூர் அறையில் என்னுடன் வந்து தங்கினார்.
எனக்கு திருமணம் ஆகும் வரை நாங்கள் இருவரும் அறைத் தோழர்கள் ஆகவே இருந்தோம். எனது திருமணத்திற்கு பிறகு அந்த அறையிலேயே அவர் தொடர்ந்தார். என்னுடைய வீடும் விஎம்எஸ் வீடும் கிருஷ்ணன் வீடும் பெரம்பூரில் அருகருகிலேயே அமைந்தது.
வில்லியம் எங்கள் வீடுகளுக்கு அனேகமாக அன்றாடம் வந்து போகிற நபர். பல நாட்கள் குறிப்பாக விடுமுறை நாட்களில் எங்கள் வீடுகளில் அவர் சாப்பிடுவது வழக்கம்.
தோழர் வி எம் எஸ் அவர்களின் மூன்று மகன்களும் அவருடைய செல்லப் பிள்ளைகள். சைவர்களான இந்த மூன்று பிள்ளைகளையும் அசைவம் சாப்பிட அவர்தான் தூண்டினார். என் மனைவியின் கையில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அசைவம் பழகினார்கள்.
35 வயதை தாண்டியும் அவர் தனிக்கட்டையாகவே இருந்தார். அவர் திருமணத்தை பற்றி பேசினால் பேச்சை முடித்துக் கொள்வார். அவருடைய ஒரு மூத்த சகோதரி இலங்கையில் கொழும்பு நகரில் வாழ்ந்து வந்தார். இனக்கலவரம் மூண்ட பிறகு அங்கு ஏற்பட்ட நெருக்கடியில் அவர்களின் மகள் சென்னையில் குடியேறினார். அவரைத்தான் தாய்மாமனான வில்லியம்ஸ் மணந்தார்.
இவர்களுக்கு கேனன் டாயல் என்கிற ஒரே மகன் தான். அவர் அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். தந்தையின் மரணச் செய்தி அறிந்த பிறகு அவரது உடலைக் காண ஓடி வந்தான்.
தோழர் வில்லியம்சுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு ஏழாம் தேதி அவரிடம் பேசினேன்.கொரோனா சோதனை செய்ததில் தொற்று மைல்டாக இருப்பதாக சொன்னார். உடனே அவரை கடுமையாக சத்தம் போட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும் என்று அதற்கான ஏற்பாட்டை செய்தேன். ஓமந்தூரார் மருத்துவ மனையில் இருந்தே அவரை உடனே வந்து சேருமாறு அழைத்தார்கள். அவரும் அவரது மனைவியும் எட்டாம் தேதி மருத்துவமனையில் சேர்ந்தார்கள். சிகிச்சை நல்ல முறையில் நடந்த பிறகும் அவரது வயதும் அவரது உடல்நிலையும் புகைபிடித்தல் போன்ற பழைய பழக்கங்களும் அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது.
அவரது மனைவி மருத்துவமனையில் இப்போதும்இருக்கிறார்.
எவ்வளவு பெரிய வேதனை இது?
லட்சக்கணக்கான குடும்பங்கள் இன்றும் இது போன்ற வேதனையையும் சோதனையையும் சுமந்து கொண்டிருக்கிறது.
இந்த அன்பு தோழனை நேரில் பார்க்கவும் உடனிருந்து அடக்கம் செய்யவும் வழியில்லாத கொடுமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஏ எஸ் உங்களைப் பற்றி நான் எழுத வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். இன்று அவரைப் பற்றி நான் எழுத நேர்ந்து இருப்பது எனது இதயத்தை நொறுக்குகிறது. எனினும் நாம் தப்பிக்க முடியாத நிலையிது.
கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இல்லாமலேயே ஒரு கம்யூனிஸ்ட் ஆகவே நம்மோடு உலவிய தோழர் வில்லியம்ஸிற்கு எனது செவ்வஞ்சலியை செலுத்துகிறேன்.
அவரது துணைவியாருக்கும், அன்பு மகனுக்கும், மருமகளுக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

