பெண்மையும் பெண்மைச் சார்ந்தும் புதியமாதவி, மும்பையின் இலக்கிய அடையாளம். தொடர்ச்சியாய் தமிழுக்கு கதை ,கவிதை ,கட்டுரைகளென புதியனத் தருபவர். ‘ஐவருமாய்’ அண்மையில் வெளிவந்திருக்கும் புதியமாதவியின் சிறுகதை தொகுப்பில் 13 சிறுகதைகள் . ஒவ்வொரு கதையும் வெவ்வேறு முகங்களைக் கொண்டிருப்பினும் கதைகளின் உயிர்த்துளியாய் இயங்குவது பெண்மையும் பெண்மை சார்ந்தும்.
சிறுகதைகள் என்பது வாழ்வின் சிறுதுளியை , குறு நொடியைச் சிமிழுக்குள் அடைப்பது. கதைப்போக்கினோடு உடையாடலின் வெற்றியும் பாத்திரப்படைப்பும் பின்புலச் சம்பவமும் கதையை இன்னுமும் சுவாரஸ்யமாக்குகின்றன.
சமகாலத்தை எழுதுதல் படைப்பாளிகள் எவருக்குமே அவர் எதிர்கொள்ளும் பெரும் சவால். அதுவும் ‘கைபேசி’ என்கிற வஸ்துவின் இருப்பும் இன்மையும் சொல்லி மாளாதது. 5 மணி நேரமாய் கைபேசியை வெற்றுப்புலம்பலுடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது காதலா… அன்று மனப்பிறழ்வின் குறியீடா? ‘வைப்ரேஷன் ‘ கதை சொல்லலில் ஒரு புதிய உத்தி. வாசகனை கடைசிவரை அசைய விடாத அடுத்து என்ன என்று ஆவலோடு எதிர்நோக்க வைக்கும் குறையாத திரில்லிங் அனுபவம்.
‘ஐவருமாய்’ – நிலம், நீர், தீ, வளி, விசும்பு என் ஐம்பூதங்களின் உணர்வுகளை மனிதர்களிடம் பாய்ச்சி, குறு நாவலாய் விரிய வேண்டிய கதையை சிறுகதையாய் செதுக்கியிருப்பது ஏன்? புதியமாதவி மறுபரிசீலனை செய்ய வேண்டியக் கதை இது.உணர்ச்சிப் பிரவாகமாக பாயும் கதைத்துண்டுகளினூடாக நர்த்தனமிடும் கவிதைமொழி துன்பியல் நிகழ்வை சற்றே மறக்கடித்து வாசகனை அழகியன் நோக்கி மடைமாற்றி விடுகிறதென்பதும் நிஜம்.
‘இந்தி வாத்தியார் பொண்ணு’ , தமிழ்நாட்டுக்கு உரியதான ஒரு வரலாற்று சம்பவத்தில் விடலை ஒருவனின் அசட்டுவீரம், தைரியம், எப்படியோர் சமூகப்பிரச்சனையாகி விரிகிறது என்பதே கதை. 1965, இந்தி மொழி ஆதிக்க எதிர்ப்பு பின்னணியில் , பிராமணக்குடும்ப இந்திவாத்தியார் பொண்ணு என வலம் வந்து, முடிவிலியாக முடிகிறது. பாதுகாப்பாக கதையின் சமகால நிகழ்விடத்தை மும்பையின் புறநகர்ப் பகுதியாக ஆக்கிக்கொண்டதில் .ஆசிரியரின் புத்திசாலித்தனம் ‘பளீச்’.!
நியோகினி கதையில், “பசைப்போட்டு ஒட்டிக் கொண்டிருப்பது மட்டுமா ஆண் பெண் உறவு? தேவைப்படும்போது விலகி நிற்பதும், அதைப் புரிந்து ஏற்றுக்கொள்வதும் முடியவில்லை என்றால் இந்த உறவுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்’ என்கிற பேருண்மையை கதை வழியாக சொன்னதற்காக புதியமாதவியைப் பாராட்டலாம். யூதச் சமூகப் பின்னணியில் பாத்திரப்படைப்புகள். பெயர்களும் தமிழுக்குப் புதிதாய் புதுமையாய்!
நியோகம் என்கிற ஒரு புதியப் பின்னணி, கதையின் சுவராஸ்யத்தைக் கூட்டுகிறது. “நியோகத்தில் யாருமே ஏன் பெண் குழந்தையைப் பெற்றுக் கொள்ளவில்லை, மகாபாரத்த்தில் நியோகினிகள் இல்லையே” என்பது பாட்டியின் வழியாக கதாசிரியரின் கேள்வி. கேள்விகளை எழுப்புவதுதானே படைப்பாளியின் பணி.விடை தேடுவது வாசகன்,விமர்சகனின் கடமை.
“அன்றைக்கு நீ, இன்று நான்!, மகளா இருந்தப்போ இருந்த நியாயங்கள் அம்மாவா ஆயிட்டா மாறிப்போயிடும்மா?” தாய்க்கு உவப்பான காதல் மகளுக்கு ஏன் மறுக்கப்படுகிறது? ‘திரைகளும் வெளிகளும் ‘ கதை இன்றையச் சமூகச் சூழலில் ஒரு விவாதத்தைத் தொடங்கும் புள்ளியாக இருக்கிறது.
’39 சைஸ்” நவயுகக் காதலின் மற்றுமொரு பரிமாணம். முகம் காட்டாத ஒருவன் கதை முழுவதும் பேசப்படுகிறான். அவன் இருக்கிறானா இல்லையா… என்பதும் கதைப்போக்கில் சொல்லப்படவில்லை. 39 சைஸ் என்பது ஒரு குறியீடாக வாசகனுக்கு முன் பேருருவாய். ஆணொருவனின் முடிவெடுக்கும் திறனின்மயும்,பிரச்னைகளை எதிர்கொள்ளும் கையாலாகாத் தனமும் எப்படியோர் நேச்மிகு பெண்வாழ்வில் சூறாவளியை உருவாக்கும்…?
ஆண் மீது பெண் வைக்கும் நம்பிக்கையெனும் நூல் அறுந்து போனால், அந்த காற்றாடிப் பெண்ணின் மனம் எப்படி எல்லாம் அலைபாயும், திக்குத் தெரியாமல் தடுமாறும், அத்தகைய தடுமாற்றங்களை, மனக்கிலேசங்களை உணர்வின் வலி கடத்தியாக பதிவு செய்யப்பட்ட கதை.
‘தாத்தாவின் தேவதை’ உரையாடலிலேயே நகரும் கதை. தேவதைகளுக்கும் பெருந்தெய்வங்களின் துணையும் பாதுகாப்பும் தேவைப்படுகிறது. கதையின் இறுதிவரியான, ‘”கதவுகளைத் திறக்க முடியாதவன், சன்னலைத் திறந்து வைத்தால் தேவதை வருவாளா… தெரியாது” என்பதில் மனிதர்களின் பிம்பம் மட்டுமல்ல, தேவதைகளின் பிம்பங்களும் உடைபடக்கூடும்.
‘வாக்கிங் ஷூ ‘ பரமு என்கிறதொழிலதிபர் சமூகத்தில் பெரிய மனிதர் காலணி அணிவதில்லை. ஏன் என்ற புள்ளியில் தொடங்கி அவரின் பால்ய காலங்களுக்குள் ஊடாடி உணர்வுக்குவியலாய் சொல்லப்பட்டக் கதை.
‘அப்பாவின் முகக்கவசம்’ வரலாற்று துளியில் இருந்து ஒரு தீற்றல். மகாத்மா காந்திக்கும் அவர் மகன் ஹரிலாலுக்கும் இருந்த இடைவெளி, அப்பா- மகன் மனப்புரிதலும் கதையாகிறது. வித்தியாசமான பின்புலத்துக்காக பூங்கொத்து.வரலாற்றின் புனித பிம்பங்களை கட்டுடைப்பதும் கேள்விக்குள்ளாக்குவதும்,மறுபரிசீலனை செய்வதும் கூட படைப்பாளன்,வாசகன் மற்றும் விமர்சகனின் கூட்டு முயற்சி தான் உணர்வா, உறவா .. எது சிதைக்கிறது மனிதர்களை.. … அவர்தம் மனங்களை,உணர்வுகளை,முடிவுகளை ? அதற்கான விடையறியாதவர், ‘கருமாதிப்பந்தல்-‘ கதை வாசித்தால் தெளிவடைவார்கள்.
‘வெண்டிலேட்டர்’ என்பதோர் கருவி , உயிர்காக்கும் என்பது நம்பிக்கை. ‘சரி, வெண்டிலேட்டரைப் பொருத்திவிட்டால், உயிர் பிழைப்பது உறுதியா என்று கேட்டால் அதற்கான உத்திரவாதமில்லை. இதுவே வெண்டிலேட்டர் வார்டில் ஒரு கனமான மன அழுத்தத்தை நிரப்பி, ஒவ்வொருவர் முகத்திலும் அது தானே வந்து அப்பிக் கொண்ட து” மருத்துவமனை தீ நுண்மி பின்புலத்தில் மருத்துவர்களும் செவிலியர்களும் செய்த சேவையின் துளி ‘வெண்டிலேட்டர்’ கதையாய்.
‘உடல்மொழியின் கீறல்கள்’- இதை கதை என்று சொன்னால் தகுமா? கூத்து, நடிப்பு, கலைகள் பற்றிய வரைகவிதை…! கவிமொழியில் சுவராஸ்யம் கூட்டுவது பலமெனில் நடைப்போக்கு கதையின் வடிவக் கட்டுக்கோப்புக்குள் அடங்காமல் தத்தளிக்கிறது.
‘ராஜமாதா’ திரெளபதி குறித்து புதியபார்வையிலோர் கோட்டோவியம் .சூளுரைத்த பாஞ்சாலி ரவுத்திரம் தணிந்து, கைம்பெண்களை, பாரதப்போரில் தந்தையரை இழந்த குழந்தைகளையும் பார்த்தப்போது உள்ளுக்குள் கொதி நிலை. இது வேறு வெப்பம்.! அல்லிக்கும் திரெளபதிக்கும் இடையில் நிகழும் உரையாடலில் புதிய உண்மைகளாய்ப் பரல்கள் தெறிக்கின்றன! வாதிக்கும் நாம் பாண்டிய மன்னன் ஆகிவிடுகிறோம். !
புதியமாதவியின் கதை சொல்லல் உத்தி, விவாதங்களால் ஆனது. வாசிக்க இலகுவான மொழி நடை. எனினும், புதியமாதவி எழுப்பும் வினாக்கள் பாத்திரங்களுக்கானதல்ல! அவை வாசகர்களுக்கு! சிந்தனையால், அறிவார்ந்த தர்க்கத்தால், புதியமாதவியின் கதைகள் புதியதொரு வாசிப்பனுபவத்தை வழங்குகின்றன என்றால் மிகையாகாது.
இலக்கிய வகைப்பாடுகள் வாழ்விலிருந்து பிரசவிக்கும் கதைகளை, சிறுகதை, குறுநாவல், நெடுங்கதை, புதினம் என விதங்களாய் வகைப்படுத்தினாலும்,வாழ்வின் சாரமும்மண்ணின் மொழியும்,மனித உணர்வுகளும்,சரியான வீத்த்தில் இணையும் போதே கலையாகப் பரிமாணம் பெறுகிறது.என்னதான் கற்பனைக் கலந்தாலும் நிஜமென முகங்காட்டி வாசகனைத் தன்னுள் இழுக்கிறது,படைப்பாளியின் கைவண்னமும் அதற்கொரு முக்கியக் காரணம்.
இந்தக் கதைகள், வாசகனுடன் நெருங்கி உறவாடுகின்றன. சகஜமாய் சங்கோஜமின்றி உரையாடுகின்றன.கேள்விகஆலி எழுப்புகின்றன,புதிய விடைகளைக் கோருகின்றன. உரையாடல்கள் படைப்பாளிக்கும் வாசகனுக்குமிடையில் பொங்கும் அலையாகும், தணியும், தெளியும்.
‘ஐவருமாய்’ இருவருக்கும் இடையிலானபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் … வாசிக்கையில் ஏற்பீர்கள்.
நூலின் தகவல்கள்
நூல் : ஐவருமாய்
நூலாசிரியர் : புதியமாதவி
விலை : ரூ. 190/-
வெளியீடு : அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம்
பக்கங்கள் : 168
எழுதியவர்
அன்பாதவன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

