அசைவுகளின் அர்த்தங்கள் கவிதைத்தொகுப்பு – நூல் அறிமுகம்
கவிதைகளின் காலம் முடிந்துபோனதாகப் பலரும் பேசிக் கொள்கிறார்கள். மாபெரும் இலக்கிய ஆளுமை, கரிசல் இலக்கியத்தின் தந்தை கி ராஜநாராயணன் ஓர் இலக்கிய அரங்கத்தில் பேசும்போது கவிதை ஓர் இலக்கிய வடிவமே அல்ல என்றார். இப்படியாக கவிதை பற்றிய எதிர்மறைக் கண்ணோட்டமும் கவிதை வாசிப்பில் ஏற்பட்ட சுணக்கமும் கவிதை இயக்கத்தை, அதாவது பதிப்பகங்கள் கவிதைகளைப் பிரசுரம் செய்வதைத் தடுத்து நிறுத்தின.
ஆனாலும் படைப்பாளியாய்ப் பரிணமிக்க வேண்டும் என்ற உளவியல் விருப்பத்தோடு வரும் இளைஞர்கள் எழுதுவதற்கு முதலில் தேர்வு செய்வது கவிதைகளைத்தான். கவிதைதான் எழுதுவதற்கு எளிமையான வடிவம் என்பதோடு கற்பனைக் கண்ணைத் திறந்துவிடும் ஆற்ற்லைத் தன்னகத்தே கொண்டு இலங்குமகிறது. இளைஞர்களின் மனக்கிலேசமாக முதலில் தோன்றுவது உணர்ச்சித் தாக்கம் காதல் மற்றும் காமம் என்பதால் அதையே கருப்பொருளாக்கிக் கவிதைகள் படைக்கின்றனர். இன்றைய அழைபேசி வருகை கவிதை யாப்பை மேலும் எளிதாக்கியிருக்கிறது. ஏதேனும் வார்த்தைகளைக் கோர்த்து மாலையாக்கிப் பொதுவெளியில் உலவ விடுகின்றனர். யுவதிகளும் கூட கவிதை ஆக்க இயக்கத்தில் மனத்தடையின்றி பங்குகொண்டு தமது பேனாவை வலிமைப் படுத்துகின்றனர். ஆக, கவிதை என்பது அதிகம் பேரால் எழுதப் படும் இலக்கிய வடிவமாக இன்றும் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. (அதிகம்பேர் வாசிக்கிறார்களா, பதிப்பகங்கள் அதிகம் வெளியிடுகின்றனவா என்ற கேள்விகளுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.)
இந்தச் சூழலில்தான் கவிஞர் மு. அழகர்சாமியின் கவிதை ஆக்கத்தைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. வாசகப் பரப்பைத் தன்வயப் படுத்தும் ஆற்றல் பெற்றவையாய் அவரின் படைப்புகள் திகழ்கின்றன என உறுதியிட்டுச் சொல்ல முடியும்.
இலக்கியம் என்பது ஒரு பண்பாட்டு ஆவணம். நேற்றைய வாழ்வியலை இன்றைய சமுதாயம் அறிந்துகொள்ளவும், அறிந்ததிலிருந்து மாற்றமடைந்திருக்கும் போக்கைப் புரிந்துகொள்ளவும் எதிர்காலத்தின் வாழ்க்கைப் போக்கு எத்தகையதாய் இருக்கும் எனக் கணிக்கவும் இன்றைய படைப்புகள் உதவுகின்றன.
வீட்டு வாசலில் அமர்ந்து பணியாரம் மற்றும் இட்டிலி சுட்டு விற்கும் நடைமுறை முதிய பெண்களின் வாழ்வியல் மற்றும் பொருளியல் இயக்கமாக இருந்த காலம் ஒன்று உண்டு. ஆண்மகன் வெளிவட்டாரத்துக்குச் சென்று சம்பாதித்தபோது பெண்கள் குடியிருப்புப் பகுதியையே பொருளீட்டும் கூடமாய் மாற்றிய அந்த நிலவரம் எளிய மக்களின் உணவுத் தேவைபையும் தமது குழந்தைகளின் படிப்புச் செலவையும் பூர்த்தி செய்தது. “தினமும் எழுவேன்/ பாட்டி சுடும்/ பணியார ஓசையில்” என்ற கவிஞரின் முதல் கவிதையின் முதல் வரிகள் அந்திம வயதிலிருக்கும் ஒவ்வொருவரின் பால்யத்தையும் நினைவூட்டுவதாக இருக்கிறது; மட்டுமல்ல; அதுமாதிரியான இன்னொரு காலம் வராதா என ஏங்க வைக்கிறது. இதுதான் கவிதையின் அல்லது இலக்கியத்தின் வெற்றி. அதே கவிதையில் மேலும் அவர் எழுதுகிறார்;
”நான்
அஞ்சாம் வகுப்பு வரையில்
படித்ததே
பாட்டியின் வியாபாரத்தில்தான்.
பாவம்;
பாட்டியும் போய்ச்
சேர்ந்துவிட்டார்
எனது படிப்புக்கும்
வந்தது தடை.”
இப்படியாக இறந்தகால வாழ்க்கை முறையை நினைவு படுத்தி நிகழ்காலப் போதாமையை நிவர்த்தி செய்யத் தூண்டுகிறது கவிதை.
தைமாதம் வரும் மாட்டுப் பொங்கல் விழா தமிழர்தம் வாழ்வில் முக்கியமான தருணம். மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாள் அது. மாட்டை மகிழ்ச்சிப் படுத்தித் தானும் மகிழும் மதிப்பு மிக்க நாளும் ஆகும். வீதிவெளியில் மாடுகளை ஓட்டிவிட்டு ஆணும் பெண்ணும் கூடிக் குலவையிட்டு ஆடிப்ப்பாடுவதுதான் மகிழ்ச்சியின் இயல் வடிவம்.. ஆனால் இன்றைக்கு அது மாற்றமடைந்து வேறு திசையில் பயணிக்கிறது. மது அருந்திவிட்டு மாட்டை இம்சைப் படுத்தும் கொடுநிலையாக மாறிவிட்டது. வருத்த்ப் படுகிறார் கவிஞர்.
”ஊரில் வீதியில்
காளைகளின் ஓட்டம்.
அதை அடக்கும் கூட்டம்
குடிபோதையில்,”
மதுபோதைக்கு அடிமையாகாதே என்று அறவோர் பலரும் அறிவுறுத்துகின்றனர். “கள்ளுண்ணாமை” என்றோர் அதிகாரத்தைத் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார். உடலியல் இயக்கத்தில் மயக்கநிலை உண்டாக்கி மனித உடலின் நரம்பு மண்டலத்தைச் சிதைக்கிறது மது. ஏகடியம் பேசும் சிலர் “சோமபானமும் சுராபானமும்தானே ஆதித் தமிழனின் பண்பாடாக இருந்தது” என்கின்றனர். ஆதித்தமிழனோ, பாதித்தமிழனோ யார் செய்தாலும் குற்றம் குற்றம்தானே? குற்றமிழைக்கும் சமூகப் பண்பை மாற்ற வேண்டியது நம் கடமையல்லவா? இந்தவிதமான சிந்தனையைத் தூண்டுகின்றன மேற்கண்ட வரிகள்.
”திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது ஆதிநாளில் போதிக்கப் பட்ட அறிவுரை. நாகரீக சமுதாயம் உருவானபோது, சமகால வாழ்முறையைத் தாண்டி முன்னேறிய வாழ்க்கை நிலைகளை உருவாக்கும் மனிதத் தேடலின் அனுபவ மொழி இது. அந்தப்படி வாழ்வுதேடி பயணித்ததன் விளைவே இன்றைய புதிய நாகரீகமும் புதிய முன்னேற்றங்களும். ஆனாலும் எந்தத் திசைநோக்கிப் பயணித்து, எத்துணை பொருள் சேமித்தாலும் நிறைவாக வந்தடைவது பிறந்த மண்.
ஆசிரியர்களும் அரசூழியர்களும் ஊர்விட்டு ஊர் சென்று பணி செய்கின்றனர். நாடுவிட்டு நாடு போய்ப் பொருள் ஈட்டுகின்றனர் வணிகர்கள். வருடம் ஒருமுறையாவது, தமது ஊரின் பண்பாட்டு நிகழ்வுக்காக, பி|றந்தகம் நோக்கிப் பயணித்து, விழாக்கோலம் பூண்ட மண்ணைத் தரிசனம் செய்கின்றனர். பழைய நட்பையும் உறவுகளையும் காட்டு வெளிகளையும் மலைமுகடுகளையும் கண்டு புளகாங்கிதம் அடைகின்றனர். பகை பூண்டு ஒதுங்கியவர்கள் கூட நட்பு பாராட்டிப் பகை மறக்கின்றனர். “நிலம் நீ நல்லை” என்று ஒவ்வொரு மனமும் துள்ளிக் குதிக்கிறது. ஆண்டுக்கொரு முறை ஊர்கூடி மகிழும் அந்த நயமான நாட்களை நினைவுகூர்கிறர் கவிஞர் “மீண்டும் என் கிராமத்தில்” என்ற கவிதையில்.
விழா முடிந்து மீண்டும் தமது புகலிடம் நோக்கிய்ப் பயணிக்கும்போது உண்டாகும் பிரிவினை ஏக்கம் கவிதையின் இ|றுதி வரிகளில் பிரதிபலிக்கிறது.
”நான் போய் வ்ருகிறேன்.
என் கையை அசைத்தபோது
அந்த பூமித்தாய்
ஏக்கத்துடன் கேட்டது
நீ மீண்டும் எப்போது வருவாய்?”
இந்த வரிகளை வாசிக்கிற போது வாசகமனம் பிரிவுத் துயரத்தின் அழுத்தத்தை உணருகிறது. சொந்த மண்ணைவிட்டு (தற்காலிகமாக) பிரியும் போது உண்டாகும் உணர்வலைகள் வழியாக இலக்கியப் படைப்பின் ஓங்காரம் திசையெங்கும் எதிரொலிப்பதை மேற்கண்ட வரிகள் அடையாளமிட்டு நிற்கின்றன.
பேருந்துப் பயணத்தில் இளைஞர்களின் சேட்டை அலாதியானது. படிக்கட்டுகளில் நின்று பயணிப்பது, உள்ளே ஏறி யுவதிகளின் மேனியை உரசுவது என்று அவர்களின் சேட்டை அவர்களுக்குள் ஒருவித இன்ப லாகிரியை உண்டுபண்னுகிறது. பெண்களை உரசும்போது பலரும் பார்த்து அசூயைப் படுகின்றனர். வெளியில் சொல்லவும் முடியாது. ஆனால் சில பெண்கள் கோபக் குறியோடு திட்டவும் செய்கின்றனர். (அதுவே வேறுவித இன்பத்தை நுகர வைக்கிறது என்பது வேறு விஷயம்.)
கவிஞருக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. பாவம் ஒருபக்கம்; பழி ஒருபக்கம் என்பது அனுபவமொழி. எவனோ ஒருவன் உரசியதைத் தவறாகப்புரிந்து கொண்டு இவரைத் திட்டுகிறாள். இந்த அனுபவம் இருக்கிறதே; மதிப்புமிக்க தனது இருப்பின் மீது விழுந்த கல்லடியாக உணரவைக்கிறது. மானுட அறத்தை மீறும் செயலாக சமுதாயம் கணிக்குமானால் மனம் எவ்வளவு தூரம் காயப்படும் என்பதை அனுபவித்தவர்களால் மட்டுமே புரியமுடியும். அப்படியானதோர் அனுபவத்தைக் கவிதமொழியால் கட்டமைக்கிறார் கவிஞர்.
நெரிசலில் அடுத்தவன் உரச
என்னை அவள் திட்டியதில்
ஏற்பட்ட மனக்காயம் மட்டும்
இன்னும் அவமானச்சின்னமாய்…….
இன்னும் ஏராளம் உண்டு இந்தத் தொகுப்பில். அலுவலகப் பணிச்சுமை, ஜாதிக் கலவரம், கூட்ட நெரிசலின் ஒவ்வாமை, பள்ளிக் கூடங்களின் மகிமை, அலைபேசியின் தாக்கம், கடன் வலையில் சிக்கித் திண்டாடும் மானுட தர்மம், காதல் பார்வையின் கரகாட்ட ஒளிர்வு என ஏராளமான கருப்பொருள் கொண்டு நிறைந்திருக்கிறது தொகுப்பு.
மானுட விடுதலை எப்போது சாத்தியம் என்ற கேள்விக்கான விடையையும் ஒரு கவிதையில் அடையாளப் படுத்துகிறார் கவிஞர்.
”அடிமைச் சாசனத்தைக்
கிழித்தெறியும் வரையில்
மிரட்டல் விடுத்துக் கொண்டேதான் இருக்கும்
அதிகார வர்க்கம்.”
கவிஞர் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்றாலும் மேலும் சிறப்படைய வேண்டியிருக்கிறது. உள்ளடக்கத்தால் உயர்ந்திருக்கும் கவிதைகள் உருவ அழகாலும் உத்திப் படிம அடர்த்தியாலும் பளபளப்பு அடையவேண்டி இருக்கிறது. விசாலமான வாசிப்பின்மூலம் அதைக் கைவரச் செய்ய முடியும். அதை அவர் செய்வார் என்ற நம்பிக்கையை தருகிறது இந்த அசைவுகளின் அர்த்தங்கள் கவிதைத்தொகுப்பு.
நூலின் விவரம்:
நூல்: அசைவுகளின் அர்த்தங்கள் கவிதைத்தொகுப்பு.
ஆசிரியர்: மு. அழகர்சாமி.
வெளியீடு: அன்புநிலா பதிப்பகம். வந்தவாசி.
பக்கம்: 64
விலை: ரூ.80/
நூல் அறிமுகம் எழுதியவர்:
தேனிசீருடையான்.
20-11-2024
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
என்னுடைய நூலுக்கு மதிப்பு வழங்கிய தமிழ்ச்செம்மல்
தோழர் சீருடையான் அவர்களுக்கு நன்றியும் பேரன்பும்
என் நூலுக்கு மதிப்புரை வழங்கிய இலக்கிய செம்மல் தோழர் சீருடையான் அவர்களுக்கு நன்றியும் பேரன்பும்..