Ashok Yesuran Masilamani's Manithan Ninaippathu Ondru Book Review By Puduvai Yugabharathi. Book Day is Branch of Bharathi Puthakalayam.



ஓர் எழுபது அகவையுடைய பட்டறிவாளரின் எழுத்தாக்க முயற்சி இது. அகவை முதிர்ந்த காலத்தில் இந்தக் குமுகத்திற்கு ஏதேனும் பயனுள்ள வகையில் செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தின்-ஆசையின் விளைவாக எழுதப்பட்ட புதினம் இது.

ஆசைப்படு-முயற்சி செய்-பயிற்சி எடு-உழைப்பைக் கொடு, எண்ணியதை அடையலாம் என்பர். இதைத்தான் திருவள்ளுவர்,

எண்ணியர் எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணி யராகப் பெறின்

என்று கூறுகிறார்.

நூலாசிரியர் அசோக் யெசுரன் மாசிலாமணி அவர்கள் ஆசைப்பட்டிருக்கிறார்;; முயற்சி எடுத்திருக்கிறார்; உழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஆனால், பயிற்சி எடுக்கவில்லை என்பது இந்நூலைப் படிக்கும்போது தெரிகிறது. பயிற்சி எடுத்துவிட்டுத்தான் எழுதவேண்டும் என்பதில்லை. அப்படித்தான் எழுதவேண்டும் என்றால், எழுதுகின்ற அனைவரும் எவரிடம் அல்லது எங்குப் பயிற்சி பெற்றார்கள் என்று கேட்கத் தோன்றும். ஆனால், இவர்கள் பயிற்சி பெறவில்லை என்றும் ‘கருவிலே திருý பெற்றவர்கள்’ என்றும் சொல்லிவிட முடியாது. இவர்கள் மக்களுக்காக மக்களிடமிருந்து பயிற்சி பெற்றவர்கள் என்று எறுதியாகக் கூறலாம். இதனை,

நவில்தோறும் நூல்நயம் போலும் பயில்தோறும்
பண்புடை யாளர் தொடர்பு.

என்னும் திருவள்ளுவரின் வாய்மொழி உணர்த்தும்.

மாசிலாமணி அவர்களும் மக்களிடமிருந்து கற்றதை மக்களுக்காகக் கொடுக்க எண்ணியிருக்கிறார்; கொடுத்திருக்கிறார். அவருடைய எண்ணத்திற்கும் முயற்சிக்கும் முதற்கண் பாராட்டுக்கள்.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
இவ்வையம் செழித்தோங்குமாம்

என்று பாரதி பாடியதைப் போன்று,

வறியரும் செல்வரும் உன்றெனக் கொள்வதால்
இவ்வையம் செழித்தோங்குமாம்

என்று கூற விழைந்திருக்கிறார் நூலாசிரியர்.

ஆம், இப்புதினத்தின் கதைத்தலைவராக ஒரு பெருஞ்செல்வந்தரைப் (சின்ன சமீன்தாரை) படைத்திருக்கிறார். அவர் மேலை நாட்டில் படிக்கிறார்; அந்நாட்டுப் பண்புகளைக் கொண்டு தொழில் செய்து பெருஞ்செல்வம் சேர்க்கிறார்; இன்பக் களியாட்டங்களில் மூழ்கித் திளைக்கிறார்; இவருடைய செல்வச் செழிப்புகளுக்கு இணையான மற்றொரு பெருஞ்செல்வரின் (சமீன்தாரின்) மகளை இவருக்கு மணமுடித்து வைக்கக்கிறார்கள். அயல்நாடுகளில் சில ஆண்டுகள் மனைவியுடன் சுற்றித் திரிகிறார்; குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என எத்தனிக்கும்போது குழந்தைப்பேறு வாய்க்காமல் தள்ளிப்போகிறது; அதனால் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகிறார். அதைக்கண்டு பெற்றோர், நாட்டு வைத்தியர், திறன்வாய்ந்த மருத்துவர்கள், கணியர்கள் (சோதிடர்கள்), சாமியாடிகள் போன்று பல வகைகளிலும் முயன்று பார்க்கின்றனர். ஒன்றும் பயனளிக்கவில்லை. சிலர் குழந்தைப் பேற்றுக்கு வாய்ப்பில்லை என்கின்றனர்; சிலர் ஆண் குழந்தைக்கு வாய்ப்பில்லை ஒரேயொரு பெண்குழந்தை பெற வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்; செயற்கைக் கருவுருதல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்கின்றனர் சிலர்; சிலர் உறவினர் அல்லது பிறரின் குழந்தையைத் தத்து ஏடுத்துக்கொள்ளுங்கள் என்கின்றனர். இவ்வாறு பலரும் பல்வேறு கருத்துக்களைக் கூறப் பணம் மட்டுமே கரைந்துகொண்டிருக்கிறது. ஏந்தப் பயனும் விளையவில்லை.

கடவுள் நம்பிக்கையின்றி இருந்த ‘சின்ன சமீன் இறுதியில், கடவுளைத் தொழுது வணங்குகிறார். அதன்பிறகு, தன்னிடமிருந்த புகைத்தல், மது ஆருந்துதல் முதலான பழக்கங்களை விட்டு விடுகிறார்; மனைவியிடம் பேரன்பு காட்டுகின்றார்; விளைவு, மனைவி கருத்தரிக்கிறார்.

கதையை விறுவிறுப்பாக நகர்த்த எண்ணிய நூலாசிரியர் பின்வரும் நிகழ்வுகளுடன் கதையைப் பின்னிச்செல்கிறார்.

Ashok Yesuran Masilamani's Manithan Ninaippathu Ondru Book Review By Puduvai Yugabharathi. Book Day is Branch of Bharathi Puthakalayam.

இவருடைய கப்பலைக் கடற்கொள்ளையர்கள் பிடித்துக்கொள்கின்றனர்; தொலைவில் வாழ்கின்ற நெருங்கிய உறவினர் இறந்துபோகிறார்; பெற்றோர் அங்கே சென்றுவிடுகின்றனர்; திருநாளை முன்னிட்டுப் பணியாட்கள் அனைவரும் அவரவர் ஊர்களுக்குச் சென்றுவிடுகின்றனர். இவருடைய மகிழுந்து ஓட்டுநரும் அவரின் துணைவியும் மட்டுமே எஞ்சியிருக்கின்றனர்; எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் மனைவியை விட்டுவிட்டுக் கடல்கொள்ளையர்களிடமிருந்து கப்பலை மீட்டெடுக்கச் செல்லவேண்டிய கட்டாயத்தில் சின்ன சமீன்தார் செல்கிறார்; கடும்புயலுடன் அடைமழை பொழிகிறது; மனைவிக்குப் பேறுகால வலியெடுக்கிறது; மகிழுந்தில் ஓட்டுநரும் அவர் மனைவியும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். வழியில் மகிழுந்து மரத்தில் மோதி நேர்ச்சிக்குள்ளாகிறது; அங்கிருந்த குடிசைவாழ் மக்கள் அவர்களைக் காப்பாற்றுகின்றனர். ஓட்டுநர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார்; சின்ன சமீன்தாரின் மனைவி அக்குடிசைப் பகுதியிலிருந்த கிருபையம்மா என்னும் அன்புள்ளம் கொண்டவரின் முயற்சியால் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றார்; ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண்குழந்தையும் பிறக்கின்றன. இறுதியில், பெருஞ்செல்வந்தரின் குழந்தையைக் குடிசைப்பகுதியில் பிறக்க வைக்கிறார். வறிய ஏழையான ஓட்டுநரின் குழந்தையை சமீன்தாரின் மாளிகையில் பிறக்க வைக்கிறார். இதுதான் இப்புதினத்தின் கதை.

குழந்தைகள் பிறப்புக் குறித்துக் கருத்துக் கூறிய கணியர்களின் (சோதிடர்களின்) உள்ளிட்ட அனைவரின் கூற்றையும் பொய்யாக்கி ‘மாந்தர்கள் நினைப்பது ஒன்று, ஆனால், இறைவன் கொடுப்பது ஒன்று என்ற தன்னுடைய எண்ணத்தை நூலாசிரியர் புதினத்தின் வழியாகச் சொல்லியிருக்கிறார்.

நூலாசிரியர் ஓரு பகுத்தறிவாளரோ, கடவுள் மறுப்பாளரோ அல்லது பொதுவுடைமையாளரோ அல்ல. ஆனால், இவர்கள் எல்லாம் கலந்து வாழ்கின்ற மக்கள் திரளில் ஒருவர். தன்னுடைய வாழ்நாள் பயணப் பரப்பில் அவர் பெற்ற பட்டறிவைக் கொண்டு இப்புதினத்தைப் படைத்துள்ளார்.

இந்நூலில் இயற்கை வேளாண்மை வேண்டும்; எல்லோரிடமும் அன்பு செலுத்தவேண்டும், ஏழை செல்வர் என்ற ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது; சாதி-மதம் பார்க்கக்கூடாது; மாந்தர் அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை வேண்டும் என்ற நூலாசிரியரின் எண்ணம் வெளிப்பட்டுள்ளது.

ஒரு புதினம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரையறை ஏதுமின்றி உள்ளத்தில் பதிந்துள்ள உண்மையைச் சொல்லியுள்ளார் இந்த எழுபது அகவை முதிய-புதிய எழுத்தாளர். இப்புதினம் ஒரு தாத்தா தன் பேரனுக்குக் கதைசொல்லுவதுபோல் இயல்பாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

தோழமையுடன்
புதுவை யுகபாரதி

ஆசிரியர் : அசோக் யெசுரன் மாசிலாமணி
நூல் பெயர்: மனிதன் நினைப்பது ஒன்று… (புதினம்)
விலை : ரூ. 155
வெளியீடு: மாசி பப்ளிகேஷன்ஸ், 30 47, கந்தப்பா தெரு,
புரசைவாக்கம், சென்னை 600 007
தொடர்புக்கு: 9498552237

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *