அசோகரின் ஆணைக்கல்வெட்டுகளில் தம்மமும் தண்டனையும் - கி.இரா.சங்கரன் | Ashoka’s Edicts: Dhamma and Justice | www.bookday.in

அசோகரின் ஆணைக்கல்வெட்டுகளில் தம்மமும் தண்டனையும் – கி.இரா.சங்கரன்

அசோகரின் ஆணைக்கல்வெட்டுகளில் தம்மமும் தண்டனையும்

– கி.இரா.சங்கரன்

01. இந்தியத்துணைக்கண்டத்தில் நவீனகாலத்திற்குமுன் ஆட்சிசெய்த அரசகுலத்தினரில் மௌரியர் குடும்பத்தின் அசோகர் ஒரு வெற்றியாளர், புனிதர், துறவியும்-அரசரும் கலந்தபிறவி, அரசியல்மேதாவி என்றெல்லாம் அழைக்கபடுகிறவர். அவர் தம்காலத்தின் இயல்பினை வெளிப்படுத்தியவர் என்றும் சொல்லப்படுவதுண்டு. அசோகர் குறுகியமணம்கொண்ட சமயவாதியல்ல. பிற சமயத்தவரையும் அரவணைத்தவர் என்பதற்கு சான்றுகள் உண்டு. அவரது முன்னோர் சமணத்தையும் ஆசிவகத்தினையும் பின்பற்றினர். ஆனால், அவர் பௌத்தத்தினைப் பின்பற்றினார். அது ஒரேநாளில் நிகழ்ந்தது அல்ல.  அக்காலத்திய சமூக-அறிவியக்கம் அவரை பௌத்தத்திற்கு உந்தித்தள்ளியது என்று சொல்வர்.  அவராட்சிக்காலத்தில் உலகில் ஆட்சிசெலுத்திய பல அரசர்களில் அசோகர் ஒருவர்தான் எல்லைதாண்டி பிறநாட்டு அரசர்களின் பெயர்களையும் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட மக்களையும் அறிந்திருக்கிறார்.  கிரேக்கமன்னர்களான,Antiochus, Ptolemy, Antigonus, Alexander போன்றோரையும், தென்னிந்தியாவின் சோழர்கள், பாண்டியர்கள், கேரளபுத்திரர், சத்தியபுத்திரர் என்ற அரசகுலத்தினரையும் அறிந்திருந்தார்.  இது, அவரது புவியியல் அறிவினையும் அவர் ஒரு statesman என்றும் புரியவைக்கிறது.

02.அசோகரைப்பற்றி அறிந்துகொள்வதற்கு அவரது தூண்கல்வெட்டுகள், பாறைக்கல்வெட்டுகள், காசுகள், பௌத்த இலக்கியச்சன்றுகள் மட்டுமன்றி இலங்கையின் வரலாற்று ஆண்டுக்குறிப்புகளும் (chronicles) உதவுகின்றன.  அசோகரின் முழுப்பெயர் அசோகவர்தன்.  தொடக்கத்தில் சாண்டசோகா என்று அறியப்பட்ட அவர் பௌத்தத்தில் இணைந்தபின் தர்மசோகா என்று விளங்கப்பட்டார்.  கி.மு.269 இல் அரசரபதவியேற்ற அசோகர் 37 ஆண்டுகள் ஆட்சிசெய்தார்.   இரு கல்வெட்டுகளில் மட்டும் தம் இயற்பெயரால் சுட்டப்படும் அவர் பெரும்பாலும் கல்வெட்டுகளில் தேவனாம்பிய-ப்ரியதர்சி-ராஜா என்று அழைக்கப்பட்டுள்ளார். சில கல்வெட்டுகளில் தேவனாம்பிரிய (கடவுளுக்குப் பிரியமானவர்), பிரியதர்சி (அதாவது காட்சிக்குஎளிய என்றபொருளில்) என்றும் அழைக்கப்பட்டுள்ளார்.  இலக்கியமரபிலும் பிரியதர்சனா, பிரியதர்சி என்று குறிக்கப்பட்டுள்ளார்.  ஆணைகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் தம்மை ஒரு மூன்றாம் நபராகவும், சிலகல்வெட்டுகளில் தன்னிலையிலும் அறிமுகமாகிறார்.  இவருடைய கல்வெட்டுகள் பிரகிருதம், கிரேக்கம், அராமைக், என்று பலமொழிகளில் வெட்டப்பட்டுள்ளன. அவை வெட்டப்படுவதற்கு கிரேக்கம், பிராமி, கரோஷ்டி எழுத்துவடிவங்கள் பின்பற்றப்பட்டுள்ளன. மௌரியஅரசின் நகரங்களான உஜ்ஜயினி, தட்சசீலம், சுவர்ணகிரி, தோசாலி, கோசாம்பி, சமபா, இசிலா போன்ற நகரங்களில் இவரதுகுடும்பத்தின் இரத்தஉறவினர்கள் ஆண்டனர்.  தென்னிந்தியாவில் அசோகர் கல்வெட்டுகள் பெரும்பாலும் பொன்விளையும் வயல்களின் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

03. அசோகரின் தூண்கல்வெட்டுகள், பாறைக்கல்வெட்டுகளின்  இருப்பிடங்கள் அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தினை உணர்த்துகின்றன.   அவை, பெரும்பாலும் வணிகப்பெருவழிகள், வாழ்விடங்கள், சமயநிறுவனங்கள், கனிமவளப்பகுதிகள், நீர்நிலைகள் போன்றவற்றின் அருகிலேயே அமைந்துள்ளன. அவை,பெரும்பாலும் மக்கள்கூடுமிடங்கள். அவ்வாறு அவ்விடங்களை கல்வெட்டுகளுக்காக தேர்வுசெய்வதன்மூலம் அசோகர் அவ்வியற்கைவளங்களின் மீதான தம் ஆளுமையினை செலுத்தினார் எனலாம்.  அதாவது, அம்மூலவளங்கள் தம் நாட்டுக்குச்சொந்தமானவை என்பதனை ஆவணப் படுத்தியுள்ளார்.   இன்னொருவகையில் சொல்வதானால், அவற்றின் மூலம் தம் ஆட்சிப்பரப்பின் எல்லையினை உறுதிப்படுத்தினார்.  இதனால், தூண்கள் நடப்பட்ட இடங்கள் அரசியல், பொருளியல் முக்கியத்துவம் பெற்றன. அவை, அரசின் நிலைத்த தன்மையின் அடையாளங்களாக நின்றன. எனவேதான், அசோகருக்குப் பின்பும் அவர் நாட்டியகல்வெட்டுகளில் அடுத்தடுத்து ஆட்சிசெய்த அரசகுலத்தினரும் அத்தூண்களில் கல்வெட்டுகளைப் பொறித்தனர்.  Feroz-sha-Thuglag, தோப்ரா, மீரட், போன்ற இடங்களில் இருந்த தூண்களை டெல்லிக்குக் கொணர்ந்தார்.  குப்தர்காலம்வரை கொசாம்பியில் நின்றிருந்த அசோகர்நாட்டிய தூணை ஜஹாங்கீர் டெல்லிக்குப் பெயர்த்துவந்தார்.   இப்படி இடம்பெயர்த்து நாட்டியதன்மூலம் அவர்கள் ஆளுவதற்கான ஓர் அறிந்தேற்பினை அவ்வட்டாரத்து மக்களிடம் பெறுவதற்கு முயன்றனர். இதன்மூலம், இவர்கள் தங்களை அரசுரிமை பொறுத்து முந்தியஆட்சியின் தொடர்ச்சியாகக் காட்டிக்கொள்ள விழைந்தனர்.  இப்படி, தூண்களும் அரசின் ஓர் அடையாளமாகக் கருதப்பட்டன.

04. பாறைக்கல்வெட்டுகள், தூண்கல்வெட்டுகளின்மூலம் மக்களிடம் செல்வாக்குப்பெற்ற அசோகர் அதனை மக்களின் மனத்தில் இருத்திவைப்பதற்கு மற்றொரு உத்தியினையும் பின்பற்றினார்.  மக்கள் மனத்தில் மறுபிறப்பு என்றகொள்கையினையும் குற்றவுணர்வு என்ற கருத்தியலையும் பதியவைத்தார்.  இவ்விரண்டும் அவர் மனத்திலும் படிந்திருந்தது என்றாலும் அதனை தம் ஆட்சிக்கும் அரசியலுக்கும் தோதாகப்பயன்படுத்தினார். அடுத்தபிறவி,சொர்க்கமாக இருக்கவேண்டுமென்று எண்ணினார்.  சொர்க்கத்தினைத் தானும் நம்பி மக்களையும் நம்பவைத்தார்.

05. அசோகர் மேற்கொண்ட தொடர்ச்சியானபோர்களில் வீரர்கள் பலர் உயிரிழந்திருப்பர்.  அவருடைய வீரர்கள் எதிர்த்திசையில் பல உயிர்களைப் பறித்திருப்பர்.  கொலைச்செயல் அவ்வீரர்களுக்கு மன உளைச்சலைக் கொடுத்திருக்கும். அவரும், இம்மனவுளைச்சலுக்குள் இருந்திருப்பார். அவரையும், அவரின் வீரர்களையும் அம்மனவுளைச்சலில் இருந்து மீட்டெடுத்து அடுத்தடுத்த போருக்கு பதமாக வைக்கவேண்டும். இருந்தாலும் போரின் விளைவுகள் அசோகரின் மனத்தில் ஒரு குற்றவுணர்வினை விதைத்தது.  அதனால் அழுத்தப்பட்டு அவர் தம் 3-ஆம் தூண்கல்வெட்டில் ஒரு வாக்குமூலத்தினை பதிவிட்டுள்ளார்.  நான் நல்லதும் செய்தேன்;கெட்டதும் செய்தேன் என்றும் அதனை உணர்ந்தேன் என்றும் சொல்கிறார். கொடூரம்,வெகுளி,தற்பெருமை,பொறாமை,வேகப்படுதல் போன்றவை அனைத்தும் பாவத்தின் விளைவு என்கிறார். இவையெல்லாம் தன் வீழ்ச்சிக்குக் காரணக்கூறு  என்றும் புலம்புகிறார். இதனைத்தவிர்ப்பதுதான் தன்னுடைய இற்றை பிறவிக்கும்  அடுத்தபிறவிக்கும் பயன்தரும் என்றும் அசோகர் நம்பியிருக்கிறார். மேலே, வரிசைப்படுத்தப்பட்ட அவரின் குணவியல்புகளினால் வெளிப்பட்ட செய்கைகள் அவருக்கு குற்றவுணர்வினைத் தூண்டின எனலாம்.  இதனால் எழுந்த பாவங்கள் அடுத்தபிறவியிலும் தொடரும் என்று அஞ்சியுள்ளார். என்றால், அவரின் கொடூரச்செயல்கள் எண்ணிலடங்காதன போலும். அவரைப்போன்றே  மன உளைச்சலில் இருந்து அவருடைய போர்வீரர்கள்  மீளாதபோது, அவர்களுக்கு தம்மத்தின்மூலம் பாவம், மறுபிறப்பு, சொர்க்கம் என்ற கருத்தியல்கள் போதிக்கப்பட்டன. இதனால், உளைச்சலுற்ற அவர்களின் மனம் சமநிலைப்பெறுவதற்கு ஏதுவாகிறது. சமநிலையடைந்தபின் அவர்கள் அடுத்தபோருக்கு பயிற்சியளிக்கப்பட்டிருக்கலாம். அடுத்து எல்லைப்புறத்து மக்களிடம் தம்மத்தினைப்  போதித்து தம் அரசுக்கு எதிராக திரும்பாமல் இருக்க எண்ணியுள்ளார். அச்சூழலில் தம்மம் என்ற கொள்கை அவருக்கு கைகொடுத்துள்ளது.  எனவே, தம் 25-ஆம் ஆட்சியாண்டின் ஒரு தூண்கல்வெட்டில் நாட்டின் எல்லைப்புறங்களில் இருக்கும் தடுமாற்றத்தினை அலுவலர்கள் தம்மத்தின் மூலமே நேர்செய்து பேரரசினைக் காக்கவேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். இதனை வெளிப்படையாகவே பெரும்பாறைகல்வெட்டு 13-இல் பதிவிட்டுள்ளார்.  தம்மாவின்மூலம் ஆக்கிரமிப்பதே உண்மையான ஆக்கிரமிப்பாகும்.  இதுவே, இப்பிறவியிலும் அடுத்தபிறவியிலும் உன்னதமானது என்றார். இதனை ஓர் அரசியல்உத்தி என்று வகைப்படுத்தலாம்.  இப்படி தம்மத்தின்மூலம் தம் படையினரைப் பலப்படுத்தியும் எல்லைநாட்டுமக்களை பலவீனப்படுத்தியும் அசோகர் வெற்றிகண்டார் எனலாம்.

06. தம்மாவினை அண்டைநாடுகளில் போதித்து  அந்நாட்டவர்களிடம் போரினை ஒரு பாவச்செயலாகப் பதியவைத்து அந்நாட்டவரை ஓர்உளவியல் உணர்ச்சிக்குள் சிக்கவைத்தது ஓர் அரசியல்உத்தி. இதனால், தன் நாட்டுமக்களையும் மூலவளங்களையும் காத்துக்கொள்ளும் முயற்சியினை அசோகர் எடுத்துள்ளார். இன்னொன்று, இதனால் அயல்நாட்டினருடனான பகையினையும் முறித்திருக்கலாம்.  அக் காலக்கட்டத்தில் பலபழங்குடிகள் அரசுகளாக எழத்தொடங்கினர்.  இயல்பாகவே, பழங்குடிகள் போர்த்திறன் மிக்கவர்.  அவர்கள் மனத்தில் பாவம், இற்பிரப்பு, மறுபிறவி, சொர்க்கம் என்று புனைந்து அவர்களின் கைகளும் மனங்களும் தம்மத்தால் கட்டப்பட்டு போர்க்குணத்திலிருந்து விலக்கிகொண்டால் மௌரியர்அரசு பாதுகாப்புடன் இயங்கும் என்று கணித்திருப்பார். இதனால், பழங்குடியினரின் தன்னியல்புத்தன்மை மறக்கடிக்கபட்டு, போர்க்குணத்தினை இழந்திருப்பர்.

07. அசோகரின் மற்றொரு உத்தி தம் ஆட்சிக்குட்பட்ட மக்கள் அனைவரும் தம் குழந்தைகள் என்றும் தம்மைத் தந்தை என்றும் கல்வெட்டில் பதிவிட்டது.  இதனால், மக்களனைவரையும் உளவியல்ரீதியாக தம்மை நடுவாக வைத்து உறவுவகைப்/உணர்ச்சிவகைப் படுத்தியுள்ளார். தம் குழந்தைகளான மக்கள் இப்பிறவியிலும் அடுத்தப்பிறவியிலும் மனசாட்சியுடன் இயங்கவேண்டும் என்றும் அதற்காக சில குணங்களை தவிர்க்கவேண்டும் என்றும் போதித்தார்.  தன்னை, மக்களனைவருக்கும் தந்தையாக அறிவித்துக்கொண்ட அதேநேரத்தில் நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தந்தை, தாய், மூத்தோர், ஆசிரியர்கள் போன்றோரை மதிக்கவேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் உண்மையான உள்ளீட்டுப்பொருள் யாதெனில், பிரஜைகள் அனைவரும் தன்மேல் மதிப்புவைக்கவேண்டுமென்று நேர்முகமாகவும் மறைமுகமாகவும் ஆணையிட்டார் என்பதாகும்.  இதனை, மக்களுக்கு அறிவுறுத்தும் அதேவேளையில் தம்மத்திற்கென்று நியமிக்கப்பட்ட அலுவலர்கள் இவற்றைப் போதிக்க வேண்டுமென்கிறார்.  தம்மம் பின்பற்றப்படுவதால், உற்றார், பிராமணர், ஸ்ராமணர்களுடன் பிணக்கில்லை என்கிறார். தாய்,தந்தை, முதியோர் மதிக்கப்படுகின்றனர் என்று பெரும் பாறைக்கல்வெட்டு 4-இல் பதிவிட்டுள்ளார்.

08. அசோகர், போரில் பலமனிதர்கள் மடிந்துபோன கொடூரத்தினை விலங்குகள்மீது பரிவு என்ற கொள்கைக்குள் மறைத்து கழிவிரக்கம் தேடினார் எனலாம்.  பிற உயிர்களின் மீதான பரிவினை தூண்கல்வெட்டில் பதித்துள்ளார்.  தாம் விலங்குகள், பறவைகள், மீன் உள்பட மனிதருக்கும் நல்லவை செய்துள்ளேன் என்று பொதுவாகப்பேசுகிறார்.  பறவைகளின் பட்டியலை தூண்கல்வெட்டு 5-இல் பதிவாக்கினார்.  தம் 20-ஆம் ஆட்சி ஆண்டிலிருந்து கொல்லாமையினைப் பின்பற்றிவருவதாகாவும் கூறினார். கிளி,மைனா,செந்தலைக்கொக்குகள்,சக்கரவாகவாத்து,அன்னம், வவ்வால், நந்திமுகம்பறவை, நெல்வயல்களில்உலவும்பறவை,புறா,எறும்பு,ஆமை,எலும்பற்றமீன்,மான்,ஓணான்,அணில்,முள்ளம்பன்றி,வெண்புறா,வளர்ப்புவிலங்குகள்,திருக்கைமீன்,குதிரை,யானை,காண்டாமிருகம் என்று பட்டியல் நீண்டது.  மேலும், பாலூட்டும்நிலையிலிருக்கும் வெள்ளாடு, செம்மறியாடு, பன்றிகள் போன்றவற்றின் குட்டிகளைக் கொல்லக்கூடாது என்றும் ஆணையிட்டார். உமி எரிபொருளாகப் பயன்படுத்தப் படக்கூடாது என்றும் பதிவு உண்டு. உமி, வளர்ப்புவிலங்குகளுக்கான முதன்மையான தீவனங்களில் ஒன்று. விலங்கு கொலைவிலக்கின்மூலம் இங்கு இருவேறுகருத்துகளை யூகிக்கலாம்.

ஒன்று: சமூகத்தினை வேட்டைப்பொருளியல் நிலையிலிருந்து வேளாண்பொருளியலுக்கு மாற்றுவது.  இதனால், போர்க்கருவிகளின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் இரும்புத்தாது வேளாண்கருவிகள் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.  இதனால், உணவு உற்பத்தி கூடியிருக்கும். மக்களின் போர்த்திறன் உழைக்கும் திறனாக மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கும்.

இரண்டு: விதைபரவலுக்கு பறவைகள் பயன்படும் என்பதால் அவை காக்கப்படவேண்டும்.

மூன்றாவதாக ஒரு கருத்தினைப் பெறலாம்:  போக்குவரத்துக்கும் போருக்கும் யானையும் குதிரையும் பெரிதும் பயன்படும் என்பதாலும், வளர்ப்புவிலங்குகள்  பால்படுபொருள்களைத்தரும் என்பதாலும் அவை கொலைவிலக்கு பெற்றன எனலாம்.  இந்தியாவில் யானைக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. பிற்காலத்தில் ஒரிசாவினை கஜபதி குலத்தினர் ஆண்டனர் என்பதனை இங்கு குறிப்பிடவேண்டும். யானைக்கும் பௌத்தஜாதகக் கதைகளுக்கும் நெருக்கமான தொடர்புண்டு. புத்தருக்கும் யானைக்குமே தொடர்பு உண்டு. அதுபோல், ”மான்” இந்தியாவின் பெரும்பாலான புராணங்களில் இலக்கியங்களில் சிறப்பிடம் பெற்றவிலங்கு. அவற்றில், அடிக்கடி அஞ்சிஓடும் மான்கள் வருணிக்கப்பட்டுள்ளன. மான், அச்சத்தின் உருவகமாக மக்கள்மனத்தில் பதிந்துள்ளது.  எனவே, அது கொலைவிலக்கு பெற்றதுபோலும். அக்காலக்கட்டத்தில் விலங்கினத்தாலும் பறவையினத்தாலும் தொற்றுநோய்பரவல் இருந்ததா என்பதற்கான சான்றுகளைத்தேடவேண்டும்.   நோய்த்தொற்றும் அசோகரின் போர்விலக்கிற்கு ஒரு காரணமாகலாம்.  மௌரியர்காலத்திற்கு சற்றுமுந்திய காலகட்டத்தில் கிரேக்கத்தில் நிகழ்ந்தபோர்களில் பலவீரர்கள் நோய்த்தொற்றால் மடிந்தனர் என்பதனை இங்கு நினைவுகூர்தல் வேண்டும்.  இந்தியத்துணைக்கண்டத்தின் மீதான அலெக்சாண்டரின் படையெடுப்பில் வீரர்கள் பலர் நோயுற்று மடிந்தனர் என்பது வரலாறு.

10. அசோகர் சமயவாதிகளை சூசமாக அறிந்துவைத்திருந்தார் போலும்.  அச்சமயவாதிகள் சமூகத்தில் செல்வாக்கு பெற்றிருப்பார்களேயானால் அவர்கள் ஆட்சிமாற்றத்திற்கு மடைதிறப்பர் என்பதனை அறிந்து அவர்களை அரவணைக்கும் போக்கினை பின்பற்றினார்.  எனவே, அரியணையேறிய 10-ஆம் ஆண்டிலிருந்து தம்மப்பயணத்தில் துறவிகள், ஸ்ராமணர்கள், பிராமணர்களைச் சந்தித்து அவர்களுக்குக் கொடையளித்தார்.     தம்மத்தின் சடங்குகளில் முக்கியமானது பிராமணர்களுக்கும் ஸ்ராமணர்களுக்கும் கொடையளிப்பது என்று பெரும்பாறைக்கல்வெட்டு 9-இல் விளக்கியுள்ளார்.  மூத்தோருடன் (இங்கு, மூத்தோர் என்பது சமூகத்தலைவர்கள் என்ற பொருளில் கொள்ளலாம்) கலந்துரையாடவேண்டுமென்று பெரும்பாறைக்கல்வெட்டு 4-இல் பதிவிட்டுள்ளார்.

11. அசோகர் பலபோர்களை நிகழ்த்தியிருந்தாலும் கலிங்கப்போர் அழியாக்களங்கத்தினைக் கொண்டது என்பர்.  அதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர்.  இரு தரப்பிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோரையிழந்து அனாதையாகியிருப்பர். வெற்றிக்குபின், கலிங்கம் மௌரியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. அப்போது, இருபக்கநிலையிலும் உருவாக்கப்பட்ட அனாதைக் குழந்தைகளின் நிலை என்ன? இங்குதான் அசோகர் ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்.  ஓர் அரசனாக தம் ஆட்சியின்கீழுள்ள அனைத்துமக்களுக்கும் தன்னை தந்தையெனப் பிரகடனப்படுத்தினார்.  ஆனால், இது பொதுவாக இனக்குழுத்தன்மையின் நீட்சிதான்.  இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்திலிருந்து விலகி தன்னை புனிதராகக் காட்டினார்.  இது, ஓர் அரசியல்உத்தி;ஓர்உளவியல் உத்தியுமாகும். இப்படி, ஒரு கழிவிரக்கம் அசோகர்மேல் உருவாக்கப்படுகிறது. அசோகர் ஏன் இதுபோன்ற உத்தியினைப் பின்பற்றினார்.  அவர், தம் சொந்தவாழ்விலும் தொடர்ந்து ஓர்உளவியல் அச்சத்தால் அலைக்கழிக்கப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது. அவர்,  தன்னுடைய பல சகோதரர்களின் வாழ்க்கையினை முடித்தபின்புதான் அரசபதவியேற்றார் என்றொரு மரபான கதையுண்டு. உண்மையில் அவ்வாறு நிகழ்ந்திருப்பின் அதனைக் கண்ணுற்ற தம் உடன்பிறப்புகளும் மகன்களும் தமக்கு எதிராக வாளேந்தலாம் என்று அஞ்சியிருக்கலாம். வரலாற்றில், அதிகாரம் எப்போதும் கொலைகளின்மேல்தான் எழுப்பப்பட்டது என்பதற்கு பலசான்றுகள் உள்ளன.* இப்பின்னணியில்தான், அவர் தந்தை, தாய், மூத்தோர்கள் மதிக்கப்படவேண்டும் என்ற அறிவுரையினை வழங்கினார் போலும். இவ்வறிவுரையினை தம்மத்தின் வாயிலாக முன் வைத்திருக்கிறார். இதுவும் ஓர் உளவியல்உத்திதான்.  இப்படி, தனக்கு எதிராகப் பகையுடன் வருவதற்கு வாய்ப்புள்ளவர்களை உளவியல்ரீதியாகத் தடுத்துள்ளார்.   பொதுமக்களையும், பிறரையும் திசைதிருப்பி அவர்கள் பிறர்மேல் அன்பு பாராட்டவேண்டுமென்று பணித்துள்ளார். உறவினர்கள்,நண்பர்கள்,அடிமைகள்,பணியாளர்கள், உடன்பணியாற்றுபவர்களிடமும் மக்கள் நாகரிகமாக நடந்துகொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.  இதனால், அரசால் பாதிக்கப்பட்ட மக்களின்மனம் வேரொரு தளத்திற்கு தள்ளப்படுகிறது.   மக்களிடம் இணக்கம் இருந்தால்  பிணக்கிற்கு வழியில்லை என்று சொல்லப்பட்டது.  மக்களின் துயர் அரசரின் மனத்தினைப் பெரிதும் பாதித்ததனை கல்வெட்டில் பதித்துள்ளார். மக்கள் துயரற்றும் கட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகிறார். அரசர் அனைத்து சயப்பிரிவினரையும் மதிக்கிறார். அதனைப்போல் மக்களும் தம் சமயப்பிரிவினை மதிப்பதுபோப் மாற்றுப்பிரிவினரையும் மதிக்கவேண்டுமென்கிறார். அதுவே, தம்மத்தின் பெருமையென்று பாறைக்கல்வெட்டு 12-இல் அறிவுறுத்துகிறார்.

அனைத்து பிரிவினரும் அனைத்து சமயக் கருத்துகளையும் அறிந்திருக்கவேண்டுமென்கிறார். அதேபோன்று, தோசாலியில் கிடைத்த தனிக்கல்வெட்டில் தாம் கைப்பற்றாத எல்லைப்பகுதிகளில் உள்ளநாடுகளின் அரசர்கள் தம் தம் நாட்டுமக்களை மகிழ்ச்சியுடன் வைக்கவேண்டுமென்றும் அவர்கள் மக்களுக்கு அருளவேண்டுமென்றும் அதுபோன்ற செய்திகளை அவர்களிடம் பரப்பவேண்டுமென்றும் தம் அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளார். இதனால், பிற நாட்டு மக்களின் மனத்தில் இடம்பிடிக்கும் முயற்சியிலும் இறங்கினார் எனலாம். அசோகரால் நியமிக்கப்பட்ட தம்ம அலுவலர்கள் (பெண் அலுவலர்கள் உட்பட) எவரேனும் போரின் கொடுமையினை வீரர்களாக இருந்து நேரில் கண்டவரா? அல்லது போரில் கொல்லப்பட்டவரின் உறவினரா?தெரியவில்லை. இழந்தவரே, வலியினை அறிவர்; அரண்மனை மாடத்தில் இருப்பவர் அறிவதற்குவழியில்லை. இழந்தவரே வலியின்/போரின் கொடுமையினை மக்களிடம் விளக்கமுடியும். எனவே, அசோகர் இழப்புற்ற வீரர்களின் குடும்பத்தினரை தம்மமாகாமாத்திரர்களாக நியமிப்பதன்மூலம் செய்தபாவத்திற்கு விதாயம் தேடினாரா? அப்படியிருப்பின், போர்க்கொலையின் பாவத்திற்கு பாவமன்னிப்பு பெறுவதற்கு நினைத்தாரா? நியமிக்கப்பட்ட தம்மஅலுவலர்கள், எல்லைப்புறத்து மக்களிடம் பகைவிடுத்து தம்மத்தினைப் போதிக்கவேண்டுமென்றார். இங்கு, எதிர்நிலையில் பாதிக்கப்பட்டோரின் பழியுணர்ச்சி மறைக்கப்படுகிறது. மேற்சொல்லப்பட்ட உத்திகளின்வழியே தம்மம் அசோகரை குற்றவுணர்ச்சி என்ற தண்டனையிலிருந்து தப்பிக்கவைக்கிறது. தண்டனை முறியடிக்கப்படுகிறது. தம்மமும் பரவியது. இப்படி, அவரே வடித்தெடுத்த தம்மக்கொள்கை அவரைக் காத்தது எனலாம்.

* மகாவம்சம் என்றநூல் அசோகர் தம்மூத்த சகோதரரை கொலைசெய்தார்  என்று குறிக்கிறது.  இந்நூலிலும் தீபவம்சத்திலும் அசோகர் தம்தந்தையின் வெவ்வேறு மனைவியருக்குப் பிறந்த 99 சகோதரர்களையும் அவ்வாறு முடித்தார் என்று குறிப்பிடுகிறது.  தாரநாத என்ற நூலில் அசோகர் தம் 6 சகோதரர்களையும் முடித்தார் என்று குறிக்கிறது.

பார்க்க: Romila Thapar, Asoka and the Decline of the Mauryas, OUP, Madras,1987,p.25.

மௌரியர்அரசில், அலுவலராகப்பணியாற்றிய புஷ்யமித்ரசுங்கர் மௌரியரின் கடைசிஅரசனைப் படுகொலைசெய்து சுங்கர்வம்சத்து ஆட்சியினை நிறுவினார் என்று வரலாறு சுட்டுகிறது. காளிதாஸரின் மாளவிகா-அக்னிமித்ரம் என்ற இலக்கியத்தில் சுங்கர்களின் ஆட்சிபற்றிய குறிப்பு உள்ளது.

பார்க்க: Romila Thapar, The Pengun History of Early India from the Origins to AD1300,PenguinBooks, NewDelhi,2003.p.210. குப்தர் அரசகும்பத்தில்,சகோதரர்கள்

இராமகுப்தனுக்கும், இரண்டாம்சந்திரகுப்தனுக்கும் இடையிலான அரசியல் சூழ்ச்சியில் இராமகுப்தனைக்கொன்று அவன் விதவையானதுருவதேவியினை இரண்டாம்சந்திரகுப்தன் மணந்தான் என்று தெரியவருகிறது.  குப்தர்காலத்தில் தோன்றிய ஓர்அரசன் தன்சகோதரனைக்கொன்று அவனுடைய நாட்டினையும் அவனுடைய அரசியினையும் தனதாக்கிக் கொண்டான் என்று இராஷ்டிரகூடர்களின் சஞ்சன்செப்பேடு (கி.பி.817)கூறுகிறது. இராஷ்டிரகூடஅரசன் நான்காம்கோவிந்தன் காம்ப்பே, சாங்க் செப்பேடுகளின்படி (கி.பி.930-933) சசாங்கன் எனும் அரசன் தன் சகோதரனைக்கொன்று அவன் விதவைமனைவியினை மணந்தான் என்று அறியமுடிகிறது.

பார்க்க: V.D.Mahajan, Ancient India (reprint,2003),Delhi,pp.491-493.

தமிழ்நாட்டு வரலாற்றில் இரண்டாம்பாண்டியர் பேரரசுகாலத்தில் மாறவர்மன்குலசேகரனுக்கு (கி.பி.1268-1311) இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்களில், சுந்தரபாண்டியன் என்பவன் பட்டத்தரசியின்மகன்;வீரபாண்டியன் என்பவன் மற்றோர் அரசியின்மகன். குலசேகரன், இரண்டாம் மனைவியின் மகனானவீரபாண்டியனை அரசாளப் பணித்தான்.  எனவே, முதல்மனைவியின் மகன் சுந்தரபாண்டியன் தன் தந்தையினையே கொலைசெய்து (கி.பி.1310) மதுரையில் முடிசூடினான்.

பார்க்க: கே.வி.இராமன், பாண்டியர் வரலாறு, தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம், சென்னை,1977,ப.124).

முகலாயரின் அரசியல்வரலாற்றில் ஷாஜகான் கி.பி.1622 இல் ஒருசகோதரனையும் கி.பி.1628 இல் மற்றொரு சகோதரனையும் கொல்வதற்கு ஆணையிட்டார் என்று அறியமுடிகிறது.  தன் சகோதரர்களின் குழந்தைகளையும் (nephews) ஒன்றுவிட்ட இரண்டு ஆண்சகோதரர்களையும் (cousins) கொன்றபின் கி.பி.1628இல் அரியணையேறினார் என்றும் தெரியவருகிறது. அதேபோல், ஔரங்கசீப், தன் சகோதரன் கொல்லப்படுவதற்கு ஆணையிட்டார் என்று சொல்லப்படுகிறது.

பார்க்க: Andrey Truschke, Aurengzeb: Man and the Myth, Penguin Books, Gurgoan,2018.pp.29;41.

பேராசிரியார் ரொமிலா தாப்பர் Asoka and the Decline of the Mauryas, [(II edition), OUP, Delhi,1973] என்ற தலைப்பில் எழுதிய நூலின் பின்னிணைப்பு ஐந்தில் அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அசோகரின் கல்வெட்டுகளில் இருந்து இக்கட்டுரைக்கான தரவுகள் திரட்டப்பட்டன.   பேராசிரியர் அவர்களுக்கு நன்றி சொல்வது கடப்பாடாகும்.

📚 எழுதியவர் : 

✍🏻 – கி.இரா.சங்கரன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *