அசிமவ்வின் தோழர்கள் (Asimavvin Thozhargal) – நூல் அறிமுகம்
புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் புதிய நூலுடன் தொடங்குவோம் என்று அறிவியல் எழுத்தாளர் தோழர் ஆயிஷா இரா. நடராசன் அவர்கள் எழுதிய பாரதி புத்தகாலயத்தின் “அசிமவ்வின் தோழர்கள்” நூலை கையில் எடுத்துள்ளேன்.
“இவரது அறிவியல் கதைகள் வெறும் அறிவியலை மட்டும் பேசி விடாமல் நம் காலத்தின் அரசியலை சமூக அமைப்பை நம் கண் முன்னால் தோலுரித்துக் காட்டுகின்றன. அவை கண்டிப்பாக வாசகர் நெஞ்சில் இடம் பிடிக்கும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை” என்று வெ.இறையன்பு IAS அவர்களின் வாழ்த்துகளுடனும்;
“இந்திய அறிவியல் புனைக்கதைக் குடும்பத்தின் முக்கிய தலைமகன்களில் ஒருவர் ஆயிஷா நடராசன். மலையாளம், ஹிந்தி, வங்காளம் உட்பட பல மொழிகளில் இவருடைய தமிழ் கதைகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்திலும் நான் நாலைந்து கதைகளை வாசித்திருக்கிறேன் அவை தனித்துவமானவை” என்று INDIAN ASSOCIATION FOR SCIENCE FICTION STUDIES, பொதுச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீ நரஹரி அவர்களின் பெருமைமிக்க வாழ்த்துக்களுடன் இந்நூல் வந்துள்ளது மிகவும் சிறப்பு.
இந்நூலில் அறிவியல் புனைக்கதைகள் 26 தலைப்புகளில் உள்ளடங்கியுள்ளது. ஒவ்வொரு தலைப்பும் வித்தியாசமானவை. அதில் முதல் தலைப்பு இந்நூலின் தலைப்பான ‘அசிமவ்வின் தோழர்கள்’ என்னும் மிக முக்கியமான தலைப்பாகும்.
இன்று நாம் ஒருங்கிணைந்த கல்வி குறித்து நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். முன்பெல்லாம் மாற்றுத்திறன் குழந்தைக்கு வேறொரு பெயரை வைத்து அழைத்துக் கொண்டிருந்தோம். இப்போதுதான் சற்று முன்னேறி உள்ளோம். நாம் இன்னும் கடக்க வேண்டிய தூரம் நீண்ட தூரம் என்பது இந்தக் கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆராய்ச்சி என்கிற பெயரில் மனிதர்களை நடத்தும் விதம் எப்படி என்பதை ஒரு குழந்தையை வைத்து ஆராய்வதாக பெருமை கொள்ளும் ஒரு விஞ்ஞானி எனும் போர்வையில் இருக்கும் ஒருவர் அக்குழந்தையை எவ்வாறு இம்சிக்கிறார் என்பதுதான் இக்கதையின் மையக்கருத்து. அந்த இம்சையிலிருந்து அந்த மாற்றுத்திறன் குழந்தை எவ்வாறு, யாரால் மீட்கப்படுகிறார் என்பதுதான் கதையின் முடிவு.
கோரமான தோற்றம் கொண்ட ஒரு ‘சிறுமியை பார்த்துக்கொள்வதற்காக ஒரு அன்புள்ளம் கொண்ட செவிலியர் தேவை’ என்னும் விளம்பரம் பார்த்து மேரி என்பவர் வருகிறார். அக்குழந்தையின் முன் யாரும் நிற்க முடியாது, யாரைக் கண்டும் அது வீறிட்டு அழுகிறது. யாரையும் தொட அது அனுமதிக்கவில்லை. உணவு கூட எடுத்துக் கொள்வதில் மிகவும் சிரமம். அப்படிப்பட்ட நிலைமையில் தான் மேரி அக்குழந்தையின் முன் தோன்றுகிறார். மேரியையும் ஏற்றுக் கொள்ளவில்லை முதலில். வீறிட்டு அழுகிறது. மெல்ல குழந்தையை தடவுகிறார், ஆதரவாக பேசுகிறார். இறுதியில் பாலை கொண்டுவந்து கொடுக்கிறார் அந்தக் குழந்தை தட்டி விடுகிறது. அந்தப் பால் கீழே சிந்துகிறது, தட்டிலும் விழுகிறது. உடனே அக்குழந்தை தட்டில் குனிந்து நக்கி நக்கி குடிக்கிறது. இதை பார்த்தவுடன் ‘மேரி அக்குழந்தையை மிகவும் சிறப்பாக கவனிக்கிறார்’ என்று அவரை நியமித்து விடுகிறார்கள். அதன் பிறகு தான் அங்கே இருக்கும் பிரச்சினை மேரித்தாய்க்கு புரிகிறது.
அக்குழந்தை நியாண்டர்தால் குழந்தையாம். எனவே அந்த குழந்தை யாருடன் பழகுகிறது; யாருடன் சேர்ந்து வாழ விரும்புகிறது என்பதை ஆராய்வதற்காக ஒரு குழு செயல்படுவதாக இங்கே காண்பிக்கப்படுகிறார்கள். இதில் குரூரம் என்னவென்றால் அக்குழந்தை யாருடன் இனச்சேர்க்கை நடத்தும் என்பதை அறிவதற்கான ஆராய்ச்சியாம். மேரி மிரண்டு போகிறார். எவ்வளவோ எதிர்ப்பு தெரிவித்தும் முயற்சி பலிக்கவில்லை. ”அக்குழந்தை தன் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டதால் தான் உறவினர் துணையின்றி இப்படி கதறுகிறாள்” என்று மேரி சொன்னவுடன் அந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவன் தன்னுடைய அல்சேஷன் நாய்க்குட்டியை துணைக்கு அனுப்புகிறார். நாயுடன் குழந்தை பழகுகிறது. ‘லீலீ’ (ஆம் அக்குழந்தையின் பெயர்) குரல் கொடுத்தால் போதும் எங்கிருந்தாலும் நாய் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்.
குழந்தை கண்ணாடிக் கூண்டுக்குள் மேலே எந்தக் கூரையும் இல்லாத கூண்டில் தன்னந்தனியாக இருக்கிறாள். ஒருநாள் பத்து, பனிரெண்டு புகைப்படக்காரர்களுடன் புடைசூழ இரண்டு சிம்பன்ஸி குரங்குகளை கூண்டிலிருந்து வெளியே இழுத்து வருகிறான் ஆராய்ச்சி என்கிற பெயரில் குழுத் தலைவன். குழந்தை லீலீ வீறிட்டு அழுகிறது. மேரி இந்த மோசமான செயலுக்கு உடைந்தையாக இருக்கவில்லை என்பதால் அவர் இருக்கும் அறையின் வெளிப்பக்கத் தாழ்ப்பாளை இரவே பூட்டிவிடுகிறார்கள். இப்போது மேரியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கதறுகிறார் குழந்தையின் பரிதாப நிலையைக் கண்டு. அக் குழந்தை இப்போது ஊ… ஊ… ஊ… என்று வானை நோக்கி கத்துகிறது.
உடனே எங்கிருந்து தான் கேட்டதோ தெரியவில்லை லீலீயின் நாய்க்குட்டி அசிமவ் ஓடி வருகிறது. லீலீ மேலும் மேலும் வேகமாக தன் மாரில் அடித்து கத்துகிறாள். தெருவில் எங்கெங்கோ இருந்த நாய்கள் விரைந்து ஓடிவருகிறார்கள். கண்ணாடிக் கூண்டை துவம்சம் செய்கிறார்கள். கண்ணாடிக் கூண்டில் விஞ்ஞானிகள் எனும் போர்வையில் இருந்த அத்தனை பேரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள். அசிமவ்வின் தோழர்களால் லீலீ காப்பாற்றப்படுகிறாள்.
“லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தாய் புவியின் நியாண்டர்தால் மனிதப் பெண்ணின் பலம் என்ன என்பதை உலகிற்கு காட்டியிருந்தாள்… சிறுமி லீலி” இப்படியாக கதையை முடித்திருப்பார் ஆசிரியர். இக்கதையை ஆசிரியரின் எழுத்தில் வாசிக்க நூலை உடனே ஆர்டர் செய்யுங்கள்.
படித்தவுடன் மிரண்டு போனேன். இதுபோன்ற செயல்கள் மனிதத் தன்மையற்ற முறையில் எங்கெல்லாம் நடைபெறுமோ என்கிற அச்சம் இயல்பாக எழுந்தது. ஆசிரியர் தோழர் ஆயிஷா இரா.நடராசன் அவர்களுடன் நேரடியாக உரையாடினால் நமக்கு வெளிச்சம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
தன் நான்கு வயதில் வீட்டில் உள்ளோர் அனைவரையும் உட்கார வைத்து மொட்டைமாடியில் இரவு நேரத்தில் வானத்தின் நட்சத்திரங்களைக் காட்டி “நான் அங்கிருந்து வந்தவன்… அதோ அந்த மூலையில் தான் வந்து விழுந்தேன்…” என்று பலவிதமான அறிவியல் பூர்வமான கற்பனைக் கதைகளை கூறியவர் தான் இன்று அறிவியல் புனைக்கதைகளை எழுத்தின் வழியே நமக்கு 150க்கும் மேற்பட்ட நூல்களில் தந்திருக்கிறார் நம் எழுத்தாளர்.
ஆயிஷாவின் நெஞ்சில் குடியிருக்கும் நம்ம எழுத்தாளர் தோழர் இரா. நடராசன் அவர்கள் எழுதிய இன்னும் 25 அறிவியல் புனைக்கதைகள் இந்நூலில் உள்ளது. அவற்றையும் வாசித்தால் இன்னும் நிறைய தாக்கங்களை அறிந்துகொள்ளலாம்.. மனித சமூகம் மென்மேலும் மெருகேறிட ஒன்று கூடுவோம். இயற்கையை நேசிப்போம். அதற்காக வாசிப்போம். இப் புத்தாண்டில் ஆகச் சிறந்த அறிவியல் எழுத்தாளர் தோழர் ஆயிஷா இரா.நடராசன் அவர்களை வணங்குகிறேன்! இந்நூலை தந்தமைக்காக அவருக்கு நன்றி கூறுகிறேன்!!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
நூல் அறிமுகம் எழுதியவர் :
சண்முக சாமி
நூலின் தகவல்கள் :
நூல் : அசிமவ்வின் தோழர்கள்
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era.Natarasan)
விலை : ₹200
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
நூலிப் பெற : https://thamizhbooks.com/product/asimavvin-thozhargal/
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.