புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்து மத்திய அரசு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் கருத்து கேட்பதாக ஊடகங்களில் வருகிறது.. சமூக வலைத்தளங்களில் ஆசிரியர்கள் பலரும் வாங்க கருத்து சொல்லுவோம் வாங்க கருத்து சொல்லுவோம் என்று கூவிக் கூவி அழைக்கிறார்கள்.. ஆக.31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது..
இதில், ஆசிரியர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நீங்கள் இந்த கொள்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று அவர்கள் கேட்கவில்லை.. எதையெதை நீங்கள் ஏற்கிறீர்கள்.. எதையெல்லாம் நிராகரிக்கிறீர்கள்.. ஏன் அதை நிராகரிக்கிறீர்கள்.. அதற்கான நியாயமான காரணங்கள் ஐந்து கூறுக என்றெல்லாம் அவர்கள் கேட்கவில்லை…
மாறாக இப்படி முடிவு செய்திருக்கிறோம், அதை நீங்களாக இருந்தால் எப்படி செயல்படுத்துவீர்கள்.. அதற்கு சில உதாரணங்கள் கூறுக..
சிறப்பாக எப்படி அமல்படுத்துவது, அதற்கான உங்கள் ஆலோசனைகள் என்ன.. ஐந்து வழிமுறைகள் கூறுக என்று தான் கேட்கிறார்கள்…
அதிலும் நீங்கள் கருத்து கூறுவதற்கு முன்பு உங்கள் பெயர், பணிபுரியும் பள்ளி, யுடைஸ் நம்பர், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, உங்கள் முகவரி, அதற்கான பின்கோடு எண் இத்தனையும் நீங்கள் கொடுக்க வேண்டும்…
இத்தனையும் கொடுத்த பிறகு உங்களால் எந்த அளவிற்கு மாற்றுக் கருத்துகளை முன்வைக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்…?
அப்படியே முன்வைத்து விடலாம் என்று எத்தனை ஆசிரியர்கள் நினைத்து விடக் கூடும்..?
நாட்டில் 50% பேருக்கு கூட இந்தி தெரியவில்லை.. வசதியான, உயர்தர வர்க்கத்தினர் 15% பேரைத் தவிர யாருக்கும் ஆங்கிலம் தெரிவதில்லை என்று வரைவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஆனாலும் கூட விடாப்பிடியாக தேசியக் கல்விக் கொள்கையும் இந்தி, ஆங்கிலம் என இருமொழிகளில் தான் வெளியிடப்படுகிறது.. இந்த ஆலோசனை கேட்பு படிவமும் இருமொழிகளில் தான் இருக்கிறது.. எனில் இதை எப்படி எடுத்துக் கொள்வது.. எப்படி புரிந்து கொள்வது?
உயர்தர வர்க்கத்தினர் மட்டுமே கருத்து கூறினால் போதுமா? அவர்களுக்கு எப்படி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை முறை புரியும்? அவர்களுக்கு எப்படி ஏழை எளிய மக்களின் துயரம் புரியும்? அவர்களுக்கு எப்படி மாதவிடாய் வந்தால் பள்ளிக்கு விடுப்பெடுக்க வேண்டிய கிராமத்து பெண் குழந்தைகளின் வலி தெரியும்..??
கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆன பிறகும் தன் பள்ளிக்கு, தன் வகுப்பிற்கு என ஒரு ஆசிரியர் இல்லாமலே தொடக்க வகுப்புகளை நிறைவு செய்த என் கிராமத்து மாணவனின் ஏக்கம் புரியும்..??
உங்களுக்கு நடிப்பதற்கு நேரம் இருக்கிறது..
நாடகங்கள் போட வசதியிருக்கிறது..
பார்த்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது..
நடப்பது நாடகம் என்று புரியாமல் நாங்கள் பார்த்து கொண்டிருக்கவில்லை..
–தேனி சுந்தர்