அதனால் என்ன? – இரா. கலையரசி

அதனால் என்ன? - இரா. கலையரசி | Athanal Enna Title Poetry by Era Kalaiarasi in Tamil Language. Book day Website is Branch of Bharathi Puthakalayamஅதனால் என்ன?

குடித்து விட்டு
சாலையை
நடன மேடை
அமைப்பார் ஒருவர்
அதனால் என்ன?

நிற்க முடியாமல்
தவிக்கும் கர்ப்பிணிக்கு
இடம் அளிக்க
மறுப்பர் சிலர்
அதனால் என்ன?

ஓடி ஓடி விரட்டி
கண்களை சாட்சி
வைத்து நடக்கும்
பகல் நேர
படுகொலைகள்
அதனால் என்ன?

அழுக்கு கூடு அமைத்த
தலை முடியுடன்
சாலையில் திரியும்
நம்மை போல் ஒருவன்
அதனால் என்ன?

வெற்றிலை எச்சில்
வாயைக் குளமாக்கி
துப்ப காத்து இருக்கும்
முன் இருக்கை பயணி
அதனால் என்ன?

சாலை விதிகளுக்கே
விதி எழுதும்
சர்க்கஸ் சிறுவர்கள்
அதனால் என்ன?

வீதிக்கு ஒரு சாதி
சாதிக்கு ஒரு நீதி
ஆளுக்கொரு விதி
அதனால் என்ன?

காசு கொடுத்தால்
நல்லா வேலை செய்வாரு
அந்த மனுசன்
அதனால் என்ன?

பணம் பார்த்து
கனம் பார்த்து
ஆளுக்கு ஒரு மரியாதை
அதனால் என்ன?

வீட்டில் ஒரு பக்கம்
பொருள்களாய்
முதியவர்கள்
அதனால் என்ன?

சேமிப்பு போய்
கடன்கள் வாங்க
பழகி விட்டோம்
அதனால் என்ன?

காப்பாற்றிய கைகள் போய்
செல்பிக்குக் கைகள்
பழகி விட்டன
அதனால் என்ன?

தெரிந்தவர் நடந்து சென்றால்
வண்டியில் ஏற்றுவது போய்
மாற்று வழியில்
வண்டிகள்!
அதனால் என்ன?

என்ன நடந்தால்
நமக்கு என்ன?
அதனால் என்ன?

இரா. கலையரசிஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.