இந்திய தேசம் ஒரு ஆன்மீக தேசம்.. இந்திய தத்துவ மரபே ஆன்மீக மரபு தான்.. அதற்கு எதிராகப் பேசுபவர்களும் எழுதுபவர்களும் இந்திய மரபார்ந்த பாரம்பரிய, பண்பாட்டு, தத்துவ விரோதிகள் என்பது போல தான் சித்தரிக்கப்படுகிறது..
ஆனால் உண்மை அதுவல்ல. இந்திய தத்துவ மரபு நாத்திக மரபே என்பதை தகுந்த ஆதாரங்களுடன் மறுக்கும் சிறப்பான ஆய்வுநூல் “இந்திய நாத்திகம்”.. புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களால் எழுதப்பட்டது. திரு.சாமி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு பாரதிபுத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது.. இது தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் நூற்றாண்டுக் காலம்.. இவர் புகழ்பெற்ற தத்துவாசான்கள் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், தாஸ்குப்தா ஆகியோரிடம் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மாணவராகப் பயின்றவர்.. அதேபோல டி.டி.கோசாம்பி, ரொமிலாதாபர் போன்ற அறிஞர்கள் வரிசையில் வைத்தெண்ணத்தக்க சிறப்புடையவர்.
மத்தியில் ஒரு மதவாத அரசு ஆட்சியில் இருக்கும் சூழலில் இவருடைய நூல்கள் அவசியம் வாசிக்கவும் பரவலாக கொண்டுசெல்லப்படவும் வேண்டியவை..
சோசலிசத்திற்கான இந்திய முயற்சி என்பது இந்திய தத்துவ மரபுக்கான போராட்டத்துடன் தொடர்புடையது என்கிற புரிதலே இந்நூலின் அடிப்படை என்று துவங்குகிறார் நூலாசிரியர்.
மார்க்சியம் ஒரு மிகக் கடுமையான நாத்திகவாதம் ஆதலால் அது இறைவன் ஒருவனில் மட்டுமே இப்பேரண்டத்தின் இருத்தலைக் காண்கிற நமது தேசிய மரபினை அழித்தொழித்துவிடும் என்கிற கூற்றுதான் மார்க்சியத்துக்கு எதிரான பிரச்சாரங்களிலேயே மிகவும் ஓங்கி ஒலிப்பது.. அவர்களைப் பார்த்து ஒரேயொரு எளிய கேள்வியை முன்வைக்கிறார் நூலாசிரியர்.” நீங்கள் எப்போதாவது நமது இந்திய தத்துவ ஞானிகளின் எழுத்தை கருத்திலிருத்த முயன்றதுண்டா…? அல்லது மார்க்சியத்தின் மீதான உங்களது குற்றச்சாட்டை நிரூபிக்க அவையனைத்தையும் அழித்தொழித்துவிடப் போகிறீர்களா?” என்கிறார்…
”இந்திய நாத்திகம் பற்றிய போதிய தெளிவில்லையேல் இந்திய ஞானம் பற்றிய நமது அறிவு முழுமை பெற்றதாகாது.. இதற்கான காரணம் எளிதானது.. இந்திய ஞான மரபின் புகழ்வாய்ந்த பிரதிநிதிகளிடையே ஏதேனும் ஒரு விசயத்தில் பரந்த அளவில் உடன்பாடு இருந்ததெனில் அது நாத்திகம் பற்றிய கருத்தில் தான்.. கடவுள் என்பது வெறும் கற்பனையே- மாயையே எனத் தருக்கவியலின் அடிப்படையில் நிறுவிட இந்திய தத்துவ ஞானிகள் தங்களால் இயன்ற வரை முயன்றுள்ளார்கள்.. உண்மையில் இந்திய தத்துவ நூல்களை அலசுகிறபோது கடவுள் நம்பிக்கைக்கு எதிரான வாதங்களில் இத்தனை வகைகளா என வியப்பும் மலைப்புமே மேலோங்குகிறது..
ஆனாலும் நாம் மிகவும் அறிந்த தத்துவ மேதை டாக்டர் இராதாகிருஷ்ணன் இந்திய தத்துவம் சாராம்சத்தில் ஆன்மீக வயமானது.. காலத்தின் கரடுமுரடான சோதனைகளையும் வரலாற்று விபத்துகளையும் எதிர்த்து தாக்குப்பிடிக்க இந்தியாவுக்கு பேருதவியாக இருந்தது அதன் தீவிரமான ஆன்மீகமேயன்றி வேறெந்த அரசியல் அல்லது சமூக அமைப்புமன்று என நிறுவிட விளைகிறார்.. மேற்கத்திய மனம் அறிவியல், தருக்கம், மனிதநேயவாதம் ஆகியவற்றிற்கே மிகுந்த அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் இந்தியர்கள் புலனறிவுக்கப்பாற்பட்ட படைப்பூக்க உள்ளுணர்வுடன் செயல்படுபவர்கள் என்கிறார்..
மேலும் கம்யூனிச மதத்தின் இறைத்தூதர் லெனின் என்று இராதாகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். இறப்புக்கு பிந்தைய சொர்க்கத்தைப் பேசியவர்களுக்கு மத்தியில் வாழும்போதே மண்ணில் சொர்க்கத்தைப் படைக்கமுடியும் என நிரூபித்த பாட்டாளிவர்க்கத் தலைவனை இறைத்தூதராகப் பார்க்கும் அவரது பார்வை நகைப்பையும் வியப்பையுமே தருகிறது நமக்கு…
ஆனால் தன்னுடைய ஆசானாகிய இராதாகிருஷ்ணனுக்கு கொஞ்சமும் ஈவுஇரக்கமற்ற வகையிலேயே பதிலடி கொடுக்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா.. வாழ்வின் உன்னதமான உண்மை எதுவோ அதை உணர்வது தெய்வீகத் தன்மையை எய்துவதற்குச் சமம் என்றெல்லாம் பேசப்படுகிற கடவுளைப்பற்றி நீங்கள் புகழ்ந்தோதும் நூல்கள் என்ன கூறுகின்றன என்று கேட்கிறார்.. இத்தேசத்தின் மெய்யான தத்துவார்த்த இலக்கியம் இக்கூற்றுக்கு ஆதரவாக இல்லை என்பது சற்று வருத்தமளிக்கும் செய்தியே எனக் கிண்டலடிக்கிறார்.. உலகின் உன்னதமான உண்மை கடவுள் என்ற கருத்தை அந்நூல்கள் ஆமோதிக்கவில்லை என்பதோடு கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதில் உறுதியாகவும் நிற்கிறார்கள்.. நாத்திகக் கோட்பாட்டுக்கு விமர்சனப்பூர்வமான மதிநுட்பத்தை நம்பினார்களேயொழிய படைப்பூக்க உள்ளுணர்வை அல்ல என்பதையும் தெளிவுபட விளக்குகிறார்..
இவ்வுலகப்படைப்பின் இறுதிக்காரணி எது என்பது குறித்து பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற விவாதங்களை அழகுற எடுத்துக்காட்டுகிறார். இந்திய தத்துவ மரபுகளில் ஈஸ்வர வாதத்தை தூக்கிபிடிக்கும் அதாவது கடவுள் இருக்கிறார்.. கடவுளே இப்பேரண்டக் குயவன் என வாதிடும் ஆத்திக மரபினர் அய்யோ பாவமாக தனித்து விடப்பட்டிருப்பதை ஏராளமான உதாரணங்களுடன் விளக்கியுள்ளார். இந்திய தத்துவ மரபில் வேதாந்தம், சாங்கியம், சாருவாகம், சமணம், பௌத்தம், வைபாசிகம், நியாயவைசேசிகம், மீமாம்சம் ஆகியவற்றில் வேதாந்தம், நியாயவைசேசிகம் தவிர்த்து இதர அனைத்துவிதமான தத்துவங்களும் கடவுளை விரட்டிவிரட்டி அடிக்கும் இயற்பண்பு வாத நாத்திக மரபினைச் சேர்ந்தவையே.. வேதாந்தமும் கூட கடவுள் இருப்பை நிரூபிக்க முன்வரவில்லை.. மாறாக வேதக்கட்டளைகளே கடவுள் இருப்புக்கு சாட்சி.. அதைக் கேள்விக்குட்படுத்துவது கூடாது என்பதோடு முடித்துக் கொள்கிறது.. நியாய வைசேசிகப் பிரிவினரே வாதிட்டு வந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.. குணரத்னா, சாந்தரக்சிதர், சாந்திதேவர், நாகார்ஜூனா, குமாரிலர், பிரபாகர் உள்ளிட்ட பலரின் நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகளையும் வாரி வழங்கியுள்ளார்..
எல்லாத் தத்துவக் கண்ணோட்டங்களும் கடவுளைப் புறக்கணித்தபோதும் அது இந்திய மண்ணில் தன்னைத் தக்கவைத்துக் கொண்டது.. அதற்கான சூழலை நமது தத்துவ ஞானிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை. கடவுள் கருத்து வெறும் கற்பனையாக-மாயையாக-இருந்தபோதும் மனித உணர்வை, மனதை கவ்விப்பிடித்திருப்பது எப்படி?
இதற்கான தெளிவை இறுதியாக மார்க்ஸ் மட்டுமே வழங்குகிறார்.. “உணர்வு நிலையிலுள்ள அனைத்து வடிவங்களும் அவற்றின் விளைவுகளான கோட்பாடுகளும் ஆன்மீகப் பாங்கிலான விமர்சனத்தாலோ அல்லது தன்னை அறிதலில் மூழ்குவதாலோ அழியமாட்டா.. இந்தக் கற்பனாவாதப் பித்தலாட்டங்களைப் பெற்றெடுத்த அசலான சமூக உறவுகளை அழித்தொழித்தாலேயே அவையும் மறையும்..
மனிதனது சூழ்நிலையை அடியோடு மாற்றுவதன் மூலமே அந்தச் சிந்தனைகளை மாற்றமுடியும்.. மனிதனது வாழ்நிலையில் மாற்றம் ஏற்படுமேல் மதத்தைப் புறந்தள்ளவும் செய்வான்.. இது வெளியிலிருந்து புகுத்தப்பட்டதன்று.. திண்ணமான பொருளாதாயச் சூழலில் மனித உணர்வில் தோன்றிய கருத்து. அப்பொருளாதாயச் சூழல்கள் அடியோடு மாறும்போது அக்கருத்தும் பட்டுப்போகும்..” என்கிறார் மார்க்ஸ்.
தங்களை மார்க்சியவாதிகளாகக் கருதிக் கொண்டிருக்கிற நம்மில் பலர் அடிக்கடி காணத்தவறுகிற விசயம் ஒன்றுண்டு. இன்னும் வளர்ச்சியடையாத மக்களிடம் மதங்கள் குறித்த அறிவார்ந்த கண்ணோட்டத்தையும் அறிவார்ந்த விமர்சனத்தையும் தோற்றுவிப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே அது என இறுதியாகச் சொல்லி திசைவழிகாட்டி முடிக்கிறார் நூலாசிரியர்..
[button link= “https://thamizhbooks.com/india-naathigam-591.html”] புத்தகத்தை இங்கு வாங்கலாம் [/button]
நன்றி: தேனி சுந்தர்
source: thenisundar.blogspot.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *