இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற புரட்சி எனில் அது அக்டோபர் புரட்சியேயாகும். அக்டோபர் புரட்சி நடந்ததற்கு முன்பும், நடந்ததற்குப் பின்பு அதனைத் தங்கள் உயிருக்கும் மேலாக பாதுகாத்திடும் நடவடிக்கைகளிலும் மாமேதைகள் லெனின், ஸ்டாலின் தலைமையில் அனைத்துத் துறைகளிலும் மாபெரும் பாய்ச்சல் வேகத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
இத்தகைய முன்னேற்றங்கள் அவ்வளவு எளிதாக ஏற்பட்டுவிடவில்லை. ஐரோப்பிய மற்றும் ஆசிய கண்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த ரஷ்ய மக்களை எல்லாவிதங்களிலும் உருக்கு போன்று மாற்றியே இந்த சாதனையை அவர்களால் செய்ய முடிந்தது.
குறிப்பாக சோவியத் இலக்கியத் துறையில் சாமானிய மக்களை – ஆண், பெண், இளைஞர்கள், இளைஞிகள் அனைவரையும் உருக்கு போன்று மாற்றியதில் சோவியத் இலக்கியங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவிற்குப் பங்களிப்பு உண்டு.
அவற்றில் ஒரு சில இலக்கியங்களை நான் படித்திருக்கிறேன். அதில் ஒன்றுதான் அதிகாலையின் அமைதியில் என்னும் நாவல்.
ஐந்து பெண்கள் ஒரு ராணுவ தளபதி ஜெர்மன் பாசிஸ்ட்டுகளை எதிர்த்து அவர்களின் திட்டத்தை சீர்குலைத்தார்கள். சோவியத் மக்கள் நடத்திய போர்க் களத்தில் இளைஞர்களின் வீரத்தை இந்நாவல் எடுத்துக்காட்டுகிறது.
தோழர் பரீஸ் வஸீலியெவ் எழுதிய இந்நாவல், அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. இளைஞர்களுக்கான சிறந்த நூலுக்கான பரிசினை இந்நூல் பெற்றது.
பேராண்மை திரைப்பட பாடல் காட்சி
இந்த நாவலின் கதைக்கருவை நம் மண்ணுக்கேற்ற முறையில் மாற்றி தமிழில் பேராண்மை என்னும் திரைப்படமாக இயக்குநர் எஸ்பி ஜனநாதன் அவர்கள் எடுத்து, பின்னர் அது இந்தியிலும் டப் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரஷ்ய மொழியில் ”The Dawns are quiet here” என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ஆங்கில துணைத் தலைப்புகளுடன் யூட்யூப் இணையதளத்தில் பார்த்திடலாம்.
அதிகாலையின் அமைதியில் நாவலை சோவியத் யூனியன் இருந்த காலத்தில் மாஸ்கோ ராதுகா பதிப்பகம் தமிழில் வெளியிட்டிருந்தது. அதனை பூ. சோமசுந்தரம் தமிழாக்கம் செய்திருந்தார். அதனைத் தற்போது பாரதி புத்தகாலயம் மறுமதிப்பு செய்துள்ளது.
அதிலிருந்து சில வரிகள்:
“பிறந்தது முதலே வஸ்கோவ் தான் உண்மையில் இருந்ததைக் காட்டிலும் மூத்தவன் என்று உணர்ந்து வந்தான். பதினான்கு வயதுப் பையனாய் இருக்கையிலேயே அவன் குடித்தனப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிராவிட்டால், குடும்பம் வறுமையில் உழன்றிருக்கும். அதிலும் அது பஞ்சக் காலம். ஒழுங்கீனங்கள் மலிந்த காலம். குடும்பத்தில் எஞ்சியிருந்த ஒரே ஆண்மகன் அவன்தான். உண்ணவும், பருகவும், வகை செய்வதும், வாழ்க்கை வசதிகள் ஏற்படுத்துவதும் அவன் பொறுப்பு ஆயிற்று. கோடை காலத்தில் விவசாயம் செய்வான், குளிர்காலத்தில் விலங்குகளை வேட்டையாடுவான். மனிதர்களுக்கு விடுமுறை பெற உரிமை உண்டு என்பதை இருபது வயது ஆகும் தறுவாயில்தான் தெரிந்து கொண்டான். பிறகு இராணுவம். அதுவும் விளையாட்டு அல்ல. … இராணுவத்தின் திண்மைக்கு மதிப்பு. வஸ்கோவ் இராணுவத்தை மதித்தான். இந்தக் கட்டத்திலும் அவன் இளமை அடையவில்லை. மாறாக சார்ஜண்டு மேஜர் ஆகிவிட்டான். சார்ஜண்டு மேஜர் பெரியவன்தான். படையினருக்கு அவன் எப்போதும் முதியவன். அப்படி நினைப்பது வழக்கம் ஆகிவிட்டது.”
*** *** ***
” வஸ்கோவ் தன் வாழ்நாள் முழுவதும் உத்தரவுகளை நிறைவேற்றி வந்தான். அப்படியே விரைவாக, மனநிறைவுடன் நிறைவேற்றி வந்தான். ஏனெனில் பிறரது விருப்பத்தை இவ்வாறு துளி பிசகாமல் நிறைவேற்றுவதிலேயே தன் வாழ்க்கையின் பொருள் அடங்கி இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஆணைகளை நிறைவேற்றுபவன் என்ற முறையில் தலைமை அதிகாரிகள் அவனை மதித்தார்கள். அதற்கு மேல் எதையும் அவர்கள் அவனிடம் கோரவில்லை. மிகுந்த கவனத்துடன் பொருத்தி அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான இயந்திரத்தின் இணைப்புப் பல் சக்கரமாக இருந்தான் அவன். தானும் சுழன்றான். மற்றவர்களையும் சுழற்றினான். இந்தச் சுழற்சி எங்கே தொடங்கியது, எதை நோக்கிச் சென்றது, எதில் முடிந்தது என்பது பற்றி அவன் கவலைப்படவில்லை.”
*** *** ***
(ஜெர்மானியர்களைக் குறித்துக் குறிப்பிடுகையில், வஸ்கோவ்,) “ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், இவர்கள் மனிதர்கள் அல்ல, மக்களும் அல்ல, விலங்குகளும் அல்ல, பாசிஸ்டுகள். ஆகவே, இவர்களை இந்த நோக்கோடு பார்.”
*** *** ***
(அடுத்து இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களில் ஒருத்தி காலியா என்பவள். எப்போதும் கற்பனை உலகிலேயே சஞ்சரிப்பவள். தன் கற்பனையை உண்மை போன்று மற்றவர்களிடம் கதைவிடுவாள். இதேபோல் இக்கதையின் நாயகனான வஸ்கோ அவளிடம் கதைவிடும் சம்பவம் ஒன்றும் இந்நாவலில் வரும். அதைச் சற்றே பார்ப்போம்.)
“பாவெல் கர்ச்சாகினைப் பற்றிப் படித்திருக்கிறாயா எப்போதாவது?”
காலியா பைத்தியக்காரனைப் பார்ப்பது போல அவனைப் பார்த்தாள். ஆனால் தலையை ஆட்டினாள். வஸ்கோவ் உற்சாகம் அடைந்தான்.
“படித்திருக்கிறாயாக்கும். நான் அவனை நேரே பார்த்திருக்கிறேன், இப்போது உன்னைப் பார்ப்பதைப்போல. படைக் கலையிலும், அரசியலிலும் நன்றாகத் தேறிய எங்களை மாஸ்கோவுக்கு அழைத்துப் போனார்கள். அங்கே லெனின் சமாதியைப் பார்த்தோம். பலவித அரண்மனைகளையும் பொருட்காட்சி சாலைகளையும் பார்வையிட்டோம். அவனையும் கண்டோம். அவன் பெரிய பதவியில் இருந்தான். என்றாலும், சாதாரண மனிதன். மனங்கலந்து பழகினான். எங்களை உட்காரச் சொல்லி தேநீர் கொடுத்து உபசரித்தான். படைப்பணி எப்படி இருக்கிறது என்று விசாரித்தான். .. “
“ஆமாம், எதற்காக ஏமாற்றுகிறீர்கள்? “ என்று தணிந்த குரலில் சொன்னாள் காலியா. “பாரிச வாயு கர்சாகினைக் கிடத்திவிட்டதே தவிர அவன் கர்ச்சாகின் அல்ல. ஒஸ்திரோவ்ஸ்கி. அவருக்குப் பார்வை போய்விட்டது. அசையவும் முடிவதில்லை. எங்கள் பயிற்சிப் பள்ளியிலிருந்து நாங்கள் அவருக்குக் கடிதம் எழுதினோம். “
அன்பார்ந்த வாசகர் தோழர்களே, இந்த நாவலை அவசியம் படியுங்கள். இந்த நாவலைப் படித்துவிட்டு பேராண்மை படத்தை மீண்டும் பாருங்கள். ”The Dawns are quiet here” என்ற படத்தையும் பாருங்கள். இவற்றைப் படித்ததற்கு முன்பு இருந்ததைவிட, பார்த்ததற்கு முன்பு இருந்ததைவிட இப்போது ஒரு புதிய மனிதனாக நீங்கள் மாறி இருப்பதை நன்கு உணர்வீர்கள்.
—