கண்ணியமான வாழ்வு வெறுங்கனவு
ஒரு கிராமத்தின் கதை
கிராமத்தில் விவசாய வேலையும், கைவினை வேலையும் செய்யும் ஒரு குடும்பம். நான்கு பேர் இருக்கிற குடும்பம் எனக் கொள்வோம். வாரம் முழுவதும் நான்கு பேர் உழைத்து, பாய்கள், செருப்புகள் செய்கிறார்கள். திங்கட்கிழமை அவர்கள் ஊரில் வாரச் சந்தை. அவர்கள் பிழைப்பு எப்படி இருந்திருக்க வேண்டும்?
‘வாரம் முழுவதும் அவர்கள் உழைத்து உற்பத்தி செய்ததை சந்தையில் விற்பார்கள், அவர்களுக்கு பணம் கிடைக்கும். அடுத்த ஒரு வாரம் அவர்களுக்குப் பிழைப்பு ஓடும்’ என நாம் நினைக்கலாம். ஆனால், அந்தக் கிராமத்தில் நிலைமை அப்படி இல்லை.
ஒரு திங்கட்கிழமையில் இருந்து அடுத்த திங்கட்கிழமை வரைகூட அவர்களால் சமாளிக்க முடியவில்லை. வயிற்றுப்பாட்டுக்கு வழியின்றி அவர்கள் செய்த கைவினைப் பொருட்களை கொண்டுபோய் வட்டிக்காரரிடம் அடகு வைக்கிறார்கள். திங்கட்கிழமை சந்தை அன்று கணவன் சந்தைக்குப் போய், பொருட்களின் மாதிரிகளைக் காட்டி, அவற்றை வாங்குவதற்கான வியாபாரியை உறுதிசெய்து, குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு பொருட்களைக் கொண்டுவந்து தருகிறேன் என உறுதியளித்துவிட்டுத் திரும்புவார்.
பொருட்கள் எல்லாம் அடகுக்கடையில் இருக்கிறதே. என்ன செய்திருப்பார்? தனது மனைவியை அடகுவைத்துவிட்டுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு வியாபாரியைப் பார்க்க சந்தைக்கு ஓடுவார். அந்த வியாபாரி கொடுக்கப்போகும் பணத்தைக்கொண்டு மனைவியை மீட்க முடியும் என்று அவருக்கு நம்பிக்கை. 1880-களில் ரஷ்யாவின் ஒரு கிராமத்தின் கதை இது. ‘இப்படி ‘மனைவியை அடகுவைத்தல்’ முறை பாவ்லாவ் கிராமத்தில் இருந்தது’ என போல்ஷிவிக் தலைவர்களில் ஒருவரான தோழர் குருப்ஸ்கயா ‘பெண் தொழிலாளி’ என்ற தனது சிறுநூலில் குறிப்பிடுகிறார்.
“அடகுக்காரரிடமும், வியாபாரியிடமும் மாறிமாறி ஓட வேண்டிய சூழலில், அன்றைக்குப் பாவ்லாவ் கிராமத்தின் விவசாய கைவினைத் தொழிலாளிகள் இருந்தார்கள்” என்கிறார் அவர்.
ரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி…
ரஷ்யாவின் விவசாய உற்பத்தியை முழுமையாக ஆய்வு செய்வதற்கான கணக்கெடுப்புகள் ஜார் ஆட்சிக்காலத்தில் நடத்தப்படவில்லை. அன்றைக்கு ரஷ்யாவுடைய விவசாயக் குடும்பங்களின் வாழ்நிலையைக் கணிப்பதற்கு விவசாயக் குதிரைகள், ராணுவக் குதிரைகள் எண்ணிக்கை பற்றிய கணக்கெடுப்புகள் மட்டுமே உதவுகின்றன. தோழர் லெனின் அன்றைக்குக் கிடைத்த அரசாங்கத் தரவுகளை எல்லாம் திரட்டி, மிக விரிவான ஆய்வு மேற்கொண்டு, ‘ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி’ நூலை வடித்திருக்கிறார்.
“உழுவதற்கு ஒரு குதிரைகூட உடைமையாகக் கொண்டிராத ரஷ்யக் குடும்பங்கள் அன்றைக்கு 2.8 மில்லியன் (28 லட்சம்). ஒரு குதிரை மட்டுமே வைத்திருந்த குடும்பங்கள் 2.9 மில்லியன் (29 லட்சம்). ஒட்டுமொத்தமாக அன்றைக்கு ரஷ்யாவில் இருந்த விவசாயக் குடும்பங்கள் 10.2 மில்லியன் (ஒரு கோடியே 20 லட்சம்). இவர்களில் 22.5 சதவிகித குடும்பங்கள் ஒட்டுமொத்த குதிரைச்செல்வங்களில் பாதிக்கு மேல் வைத்திருந்தன (56.3%)” என்ற தகவலைப் பதிவு செய்திருக்கிறார் தோழர் லெனின்.
அதாவது, ஏறத்தாழ ஒரு கோடி விவசாயக் குடும்பங்களில், 30 லட்சம் குடும்பங்களிடம் ஒரு குதிரை கூட உழுவதற்கு இல்லை, ஏறத்தாழ 30 லட்சம் குடும்பங்களிடம் ஒரே ஒரு குதிரை மட்டுமே உள்ளது. கிட்டத்தட்ட 60 லட்சம் குடும்பங்கள் நிலத்தின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு வழியற்றவர்களாக, அதீதமான வரிகளைச் செலுத்திக்கொண்டு பணக்கார விவசாயிகளான குலக்குகளிடம் கடன் பட்டுக்கொண்டு வாழ்ந்தார்கள். ரஷ்யாவில் அன்றைக்கு விவசாய மக்கள் எத்தகைய மோசமான சூழலில் வாழ்ந்தார்கள், எத்தகைய சூழலில் அங்கு முதலாளித்துவ உற்பத்தி முறை வளர்ந்தது என்பதை இந்நூல் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.
கிரீமியா தீபகற்பத்தில் நடைபெற்ற போரில் ஜார் அரசு தோல்வியுற்று பலவீனமடைந்தது. நிலச்சுவான்தாரர்களை எதிர்த்து விவசாயிகள் புரட்சி செய்வார்கள் என்று அஞ்சி பண்ணையடிமை முறையை ஒழிக்க வேண்டிய அழுத்தம் அதற்கு ஏற்பட்டது. பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்டாலும் (1861) கொடூரமான சுரண்டல்கள் தொடர்ந்தன. விவசாயிகள் அநியாய குத்தகைக்கு நிலச்சுவான்தாரர்களிடம் நிலத்தைப் பெற்று விவசாயம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. ‘விளைச்சலில் பாதி’, ‘கூலியில்லா உழைப்பு’ என்ற வகைகளில் சுரண்டல்கள் தொடர்ந்தன. பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்டாலும் சவுக்கால் அடிக்கும் தண்டனை முறை 1903 வரை ரஷ்யாவில் ஒழிக்கப்படவில்லை.
பண்ணை அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட பிறகு ரஷ்யாவில் முதலாளித்துவம் வேகமாக வளர்ச்சியடைந்தாலும், ஐரோப்பிய நாடுகளைப் போல அங்கு முதலாளித்துவ உற்பத்தி முறை படுவேகமாக வளரவில்லை.
தோழர் லெனின் 1897ன் நிலவரப்படி ஆறில் ஒருவர் பெரிய, சிறிய இயந்திரத் தொழிலில்களிலும் ஈடுபட்டார்கள் என்றும் ஆறில் ஐந்து பேர் விவசாயத்தில் ஈடுபட்டார்கள் என்றும் பதிவுசெய்கிறார்.
ரஷ்யாவில் 1890-களில் மொத்த கூலித்தொழிலாளர்கள் எண்ணிக்கை ஒரு கோடி என்று அவர் கணிக்கிறார். 1) விவசாயம், 2) தொழிற்சாலைகள், சுரங்கம், ரயில்வே, 3) கட்டடத் தொழில், 4) மரமறுத்தல், சுமைப்பணித் தொழிலாளர்கள், 5)தொழிற்சாலைகள் அல்லாமல் முதலாளித்துவ உற்பத்தியாளர்களுக்காக சிறிய அளவிலான உற்பத்தியகங்களில் பணியாற்றுபவர்கள் என அனைத்து கூலித் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய எண்ணிக்கை இது. இவர்களில் பெண் தொழிலாளர்கள் கால்வாசி என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தோழர் குருப்ஸ்கயா 1890-ல் ஐரோப்பிய ரஷ்யாவில் அன்றைக்கு ஆலைத் தொழில்களில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை பத்து லட்சத்தில் கால்வாசி என்கிறார். அதாவது இரண்டரை லட்சம்.
கண்ணியமான வாழ்க்கை வெறுங்கனவு
தோழர் குருப்ஸ்கயாவின் ‘பெண் தொழிலாளி’ என்ற சிறுநூல் பாட்டாளிவர்க்கப் பெண்கள் ரஷ்யாவில் சந்தித்த உச்சபட்சக் கொடுமைகளை வெறும் முப்பதே பக்கங்களில் நமக்கு உணர்த்திவிடுகிறது.
ரஷ்யாவின் பெரும்பாலான மாகாணங்களில், கிராமங்கள் விவசாயத்திலும், கைவினைத் தொழில்களிலும் ஈடுபட்டன. வீடுகளில் குடும்பங்களாக உற்பத்தி செய்வார்கள். 16-19 மணி நேரம்கூட வேலை செய்வார்கள். நெசவு, தொப்பி செய்தல், பானைத் தொழில், தோல் தொழில், விளக்குகள், ஆணிகள், பீங்கான் பாத்திரங்கள், வண்டிச் சக்கரங்கள் செய்தல் என பல்வேறு கைவினைத் தொழில்கள் இருந்தன. உற்பத்தியில் பெரும்பகுதி இடைத் தரகர்கள் மூலமாகவே விற்பனை செய்யப்பட்டன.
“ஒவ்வொரு வருடமும் வறுமை அதிகரித்துக்கொண்டே போனது. விவசாயக் கைவினைத் தொழிலாளர்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள். தேவைகள் விவசாயப் பெண்ணையும் நகரத்துக்கு இடம்பெயர வைத்தது. பல்வேறு மில்களில் பெண்களின் உழைப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பஞ்சாலை நெசவு, கம்பளி, பட்டு தொழில்களில் பெண்கள் பணிசெய்கிறார்கள். பஞ்சாலைத் தொழில்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகம் வேலை செய்கிறார்கள்” என்று குறிப்பிடுகிறார் தோழர் குருப்ஸ்கயா.
நாள் முழுவதும் வேலை செய்தாலும் மூன்று வேளை உணவுக்கு வழியில்லை என்ற நிலையில்தான் அன்றைக்கு ஆலைத் தொழிலாளிகள் வாழ்ந்தார்கள். பெண் தொழிலாளிகள் நிலையோ இன்னும் மோசம்.
“வாழ்வதற்குப் போதாத சொற்ப கூலிதான் ஒரு பெண் தொழிலாளிக்கு வழங்கப்பட்டது. பெற்றோருடனோ, கணவருடனோ வாழ்ந்தால் மட்டுமே அவரால் பிழைக்க முடியும் என்ற நிலை. இருவரும் இல்லாத பெண்கள், கூடுதல் வருமானத்தை விபச்சாரத்தில் இருந்து தேடிக்கொள்வதற்கு நிர்பந்திக்கப்பட்டார்கள்.
“சமீபத்தில் 1899 ஆம் ஆண்டு மே மாதம் ரிகாவில் இதனால் மிகப்பெரும் சச்சரவுகள் நடந்தன. சணல் மில் ஒன்றில் பணியாற்றிய பெண்கள், கூலி உயர்வு கேட்டுப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். தொழிற்சாலை நிர்வாகம் குறித்து புகாரளிக்க கவர்னர் அலுவலகத்திற்கு அவர்கள் குழுவாகச் சென்றார்கள். வழியிலேயே அந்தப் பெண்கள் கைது செய்யப்பட்டு அலெக்ஸாண்ட்ரா பூங்காவில் அடைக்கப்பட்டார்கள். பக்கத்தில் இருந்த ஃபீனிக்ஸ் தொழிற்சாலையிலும் வேறு சில தொழிற்சாலைகளிலும் வேலை பார்த்த ஆண் தொழிலாளர்கள் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பியபோது, போராடி இந்தப் பெண்களை விடுதலை செய்தார்கள்.
“கவர்னர் ராணுவத்தை அழைக்க, மே மாதம் 5 முதல் 15 வரை ரிகா போர்க்களம் போலக் காட்சியளித்தது. படைவீரர்கள் துப்பாக்கியால் சுட, தொழிலாளர்கள் ராணுவத்தினரை நோக்கி கற்களை எறிந்தும், கட்டடங்களின் ஜன்னல்களை உடைத்தும், கட்டடங்களுக்குத் தீவைத்தும் எதிர்ப்பைக் காட்டினார்கள். ஆனால், இந்தத் தொழிலாளர்களின் கடுங்கோபம் விபச்சார விடுதிகளை நோக்கிச் சென்றது. ஒரே இரவில் 11 விடுதிகளை அவர்கள் அழித்தார்கள்.
தொழிலாளர்கள் ஏன் விபச்சார விடுதிகளைக் குறிவைத்தார்கள்? தொழிலாளர்களின் போராட்டத்திற்கும் இந்த விபச்சார விடுதிகளுக்கும் என்ன தொடர்பு? தங்கள் மனைவிமார்களால் இந்த சொற்ப கூலியில் வாழ முடியவில்லை என அதிகாரிகாரிகளிடம் அவர்கள் முறையிட்ட போது, அதிகாரிகள் திமிராக, கூடுதல் வருமானத்தை அவர்கள் விபச்சாரத்தில் தேடிக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இவ்வகையில் ஒரு பெண் தொழிலாளி அற்பமான கூலியில் வாழ முடியவில்லை எனில் அவர் கூடுதல் வருமானம் தேடிக்கொள்ள விபச்சாரம் ஒன்றே வழி என்று வெளிப்படையாகவே சொல்லப்பட்டது.” ரஷ்யாவில் முதலாளித்துவ உற்பத்தியின் தொடக்க காலத்தில் பெண் தொழிலாளர்களுடைய துயர நிலையை தோழர் குருப்ஸ்கயாவின் பதிவுகள் உணர்த்துகின்றன.
கண்ணியமான வாழ்க்கை என்பது தொழிலாளர்களுக்கு, அவர்களில் குறிப்பாகப் பெண் தொழிலாளர்களுக்கு இல்லவே இல்லை. இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா என முதலாளித்துவ முறை வளர்ந்த எல்லா பகுதிகளிலும் சுரண்டல் மட்டுமே முதலாளித்துவத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. உழைப்புக்கேற்ற கூலி என்பது முதலாளித்துவத்தின் வரலாற்றில் இதுவரை கிடையாது.
‘மூன்று வேளை உணவுக்குக்கூட கொடுக்கப்படுகிற கூலி பத்தாது!’, ‘கூடுதல் வருமானம் தேடிக் கொள்ள வேண்டும்!’, ‘‘விபச்சாரம்’ என்பது கூடுதல் வருமானம் தேடிக் கொள்வதற்கான முக்கிய வழி!’ – என்பது ஒரு சமூகத்தின் ஆளும் வர்க்கங்கள் விதித்த விதியாக இருக்கிறது என்றால், இது எத்தகைய கொடூரம்?!
தொடரும்…
ஆதாரங்கள்:
The Women Worker, N.K. Krupskaya, (Written in 1889 & First Published in Iskra in 1905) English Translation Mick Costello, First published in 2017 by Manifesto Press Cooperative Limited available at Marxists Internet Archive
The Development of Capitalism in Russia, V. I. Lenin, Lenin Collected Works, Volume 3
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திரம் (போல்ஷ்விக்), மொழிபெயர்ப்பு எம். இஸ்மத் பாஷா, 1947, ஜனசக்தி பிரசுராலயம்