கொஞ்சம் நாட்களுக்கும் முன்பு வரை தமிழின் முதல் நாவல் என்று யாராவது என்னிடம் இக்கேள்வியை கேட்டு இருந்தால் என் பதில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை இயற்றிய “பிரதாப முதலியார் சரித்திரம்” நாவலின் பெயரை தான் பதிலாக கூறியிருப்பேன்.
ஆனால்,இன்று யாராவது தமிழின் முதல் நாவல் எனும் கேள்வியை கேட்டால் என் பதில் தீர்க்கமாக ஆதியூர் அவதானி சரிதம் என்று கூறுவேன். இதுகாறும் நாவல் என்பது உரைநடை வடிவில் மட்டுமே இயற்றப்படும் என்னும் நம் நம்பிக்கையை உடைத்தெறிந்து விட்டது இந்நாவல்.
தமிழின் முதல் நாவலான இந்நூல் அம்மானை பாடல் வடிவில் இயற்றப்பட்டது.
இந்நாவல் வெளிவந்த ஆண்டு 1875 ஆகும்.பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்த ஆண்டு 1879 ஆம் ஆண்டு.இத்தகவலே போதும் தமிழின் முதல் நாவல் இந்த நாவல் என்பதை உறுதி செய்கிறது.
நான் பிரதாப முதலியார் சரித்திரம் நாவலை படிக்கவில்லை எனினும் வாய் மற்றும் செவி வழியாக இந்நாவலை குறித்து சில தகவல்களை அறிந்தேன்.ஒரு வகையில் நகைச்சுவை ததும்பும் வகையில் பிரதாப முதலியார் சரித்திரம் நாவல் பேசியிருந்தாலும் குறிப்பிட்ட சமுதாயத்தை சுற்றி பேசுப்பொருளாக பின்னிப்பிணைந்த நாவல்.
ஆனால்,இந்நாவல் இயற்றிய ஆசிரியர் பார்ப்பான சமுதாயத்தை சார்ந்தவர் எனினும் இந்நாவல் இருநூற்று ஆண்டுகளுக்கு முன்பே சமுதாய சீர்த்திருத்தை ஆணிவேராக பதிவு செய்துள்ளது.
ஆதியூர் என்னும் ஊரில்,பார்ப்பான சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த வினையாளன் என்பவனை சுற்றி நிகழ்கிறது கதை ஓட்டம்.
தந்தையை சிறுவயதிலேயே இழந்த வினையாளன் தன் தாயின் அரவணைப்பில் வளர்கின்றான்.கூட இருக்கும் சுற்றத்தார் தொடர்ந்து இன்னல்கள் தர தாயும் மகனும் வெளியூர் செல்கின்றனர்.கல்வியில் சிறந்து விளங்கிய வினையாளன் தன் ஆசிரியர் வழிகாட்டுதலின் மூலம் சென்னை மருத்துவக் கல்லூரியில் உடற்கூராய்வு படிப்பில் சேர்ந்து சிறந்து விளங்குகிறான்.
உயர்குடியில் பிறந்து வினையாளன் பிணங்களை உடற்கூராய்வு செய்யும் வேலையை கீழ்த்தரமான வேலை என்று சுற்றத்தார் கூறி வினையாளனையும் அவனது தாயையும் ஒதுக்கி வைக்கின்றனர்.

சுற்றத்தாரின் வசை சொற்களுக்கு மதிமயங்காது வினையாளன் தன் பணியை செவ்வனே செய்து சிறந்து விளங்கி அவதானி என்னும் பெயரையும் வாங்குகிறான்.
சத்திரியர் பிரிவை சேர்ந்த தேவதத்தை என்கின்ற கைம்பெண்ணை சந்திக்கின்றான்.நட்பு ரீதியில் ஆரம்ப நிலையில் பழகினாலும் இருவருக்குள்ளும் காதல் மலர்கின்றது.
இந்த காதல் திருமணத்தில் முடிகிறது.இறுதியில் சுபம் என்ற நிலையை அடைந்தாலும் வினையாளனும் தேவதத்தையும் அடைந்த துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.
நம் நாடு விடுதலை அடைவதற்கு முன்னரே சாதியின் கோரத் தாண்டவம் தன் முகத்தை காட்டி ஆடிய இருண்ட நாட்களில் இப்படியொரு சமுதாய சீர்த்திருத்த புரட்சியை பேசியது இந்த நாவல்.
இந்த நாவல் “பொய்ப்பெயர் பூண்டு மெய்ப்பொருள் காட்டி” பேசுகிறது.ஒருவகையில் இது உண்மை சம்பவமும் கூட!
தமிழின் முதல் நாவலான இந்த நாவலை கட்டாயம் அனைவரும் வாசிக்க வேண்டும்!
புத்தகம் : ஆதியூர் அவதானி சரிதம்.
ஆசிரியர் : வித்துவான் சேஷையங்கார்.
பக்கங்கள் :160.
வெளியீடு : விஜயா பதிப்பகம்.
₹ : 60/-