பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 6 வாரம் வரை ..வளர்ச்சி
கருமுட்டையும், விந்தணுவும் இணைவதே கருவுருதல் எனப்படுகிறது. இது நடந்து முடிந்த சுமார் 6 நாட்களுக்குப் பிறகு, கருவுற்ற பிளாஸ்டோசிஸ்ட் (Blastocyst) என்னும் செல்களின் பொட்டலம் கருப்பையின் புறணி/மேல்பகுதியில் ஒட்டுகிறது/இணைகிறது, பொதுவாக இது கருப்பையின் சுவருக்குள் ஆழமாகப் புதைவதையே பதித்தல்/. இம்ப்லாண்டேஷன்(implantation) என்று சொல்லுவார்கள். இந்த செயல்முறை கருவுற்ற 9 அல்லது 10 ஆம் நாளில் நிறைவடைகிறது. இதனைத்தான் நாம் போன அத்தியாயம்/முதல் பகுதியில் பார்த்தோம்.
3 வாரங்கள்
கருவாக மாறுமுன்னர், செல்களின்பொதி blastocyst என்றே அழைக்கப்படுகிறது. அதில் 3 அடுக்கு செல்கள் இருக்கும், அவை மேல்பகுதி (Ectoderm) நடுப்பகுதி, மற்றும் உட்பகுதி (Endoderm). முதல் அடுக்கு நரம்பு மண்டலம் மற்றும் மூளையாக மாறும். இரண்டாவது நடு அடுக்கு செரிமான மண்டலம் மற்றும் நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளாக உருவாகும், மூன்றாவது அடுக்கு இதயம், இரத்தஓட்ட மண்டலம் , தசைகள் மற்றும் எலும்புக்கூடு ஆக உருப்பெறும்.
அதன் பின்னர் செல்கள் வேகமாகப் பிரிந்து, ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு உறுப்பாக மாறும்/உருப்பெறும். அப்போது கருவின் எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். உங்கள் கருவின் எடை அதிகரிக்கும் போது, அதன் கொழுப்பு தோலின் கீழ் சேமிக்கப்படுகிறது. இது உங்கள் குழந்தையின் சருமத்தை மிருதுவாக்கி, உங்கள் குழந்தை குண்டாக இருக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தையின் எடை சுமார் 1 அவுன்ஸ் அதிகரிக்கிறது. இந்த நிலையில் அவர் உங்களின் இடுப்பு பகுதிக்கு நகர்ந்து செல்வார்.
4 வாரங்கள்
பாப்பா உருவாகப் போகும் செல்களின் பந்து/உருண்டை இப்போது அதிகாரப்பூர்வமாக ஒரு கருவாக உள்ளது. இனி இவரை கரு என்றே அழைப்போம். அம்மாவின் கடைசி மாதவிடாயின் தொடக்கத்திலிருந்து இப்போது கருவுருதல் நடைபெற்ற செல்பந்து கருவுக்கு 4 வாரங்கள் ஆகின்றன. (இந்த நேரத்தில் – உங்கள் அடுத்த மாதவிடாய் பொதுவாக வரும்போது – நீங்கள் வீட்டில் கருப்பை பரிசோதனையில் நேர்மறையான முடிவைப் பெற முடியும்). இப்போது கருவின் அளவு என்பது ஒரு கசகசா சைஸ்தான்.
கருக்காலத்தில் அம்மாவின் எடை அதிகரிப்பு
குழந்தை அம்மாவின் கருவறையில் வளரும்போது, பாப்பா மட்டும் வளருவதில்லை. அம்மாவும் கூட கூடவே வளருகிறார். எடையும் அதிகரிக்கிறார். அந்த எடை அதிகரிப்பு அவர் சுமப்பது ஆணா, பெண்ணா என்பதைப் பொறுத்தும் கூட வேறுபடுகிறது என்றால் ஆச்சரியமான ஒன்றுதான். அம்மா, ஆண் குழந்தையை/கருவை சுமந்தால், கருக்காலத்தில், பெண் கருவை சுமப்பதுடன் ஒப்பிட்டால், அவரது எடை கணிசமாக அதிகரிக்கும்.
16 வாரங்கள் வரை, கரு ஒரு வாரத்திற்கு சராசரியாக 19 கிராம் என வளருகிறது. ஆனால் கருவின் இந்த வளர்ச்சி என்பது படிப்படியாக 8 வாரங்களில் வாரத்திற்கு 7 கிராம் இருந்து, 12 வாரங்களில் 15 கிராம் மற்றும் 16 வாரங்களில் வாரத்திற்கு 29 கிராம் வரை அதிகரிக்கிறது. 20 வாரங்களில், ஒரு கரு வாரத்திற்கு 59 கிராம் பெறுகிறது.
கருவின் முதல் உறுப்பு
மனிதகருவில் முதலில் உருவாகும் உறுப்பு என்ன தெரியுமா?எந்த உறுப்பு நின்று போனால் உயிர் பறக்குமோ, அந்த உறுப்புதான், மனிதன் உருவாகும்போது முதல் உறுப்பாக உருவாகிறது என்றால் வியப்புதான் ஏற்படுகிறது. மனிதக்கரு என்பதை நாம் செல்லமாக பாப்பா என்றும் கூறுவோம். இப்ப பாப்பாவின் கருவில் முதன் முதல் உருவாகும் உறுப்பு இதயமா அல்லது மூளையா என்றால் இதயம்தான், மனிதக் கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயம். ஏனெனில், வளரும் கருவுக்கு ஆக்ஸிஜனும் உணவும் மற்றும் ஊட்டச்சத்துக்களும், அது உயிர்வாழ தேவை. எனவே அவற்றை வழங்குவதற்காகவே இதயம் முதலில் உருக்கொள்கிறது. அதுதான் உயிர் காக்க சுவாசிக்க தேவையான முதல் உறுப்பு. இதயம் இரத்த ஓட்ட மண்டலம்தான் முதலில் உருவெடுக்கிறது. மனிதக் கரு 4 வாரம் ஆனதும், பாப்பாவின் 4 அறைகள் கொண்ட இதயம் உருவாகிவிடுகிறது.
கருத்தரித்த நான்கு வாரங்களுக்குப் பிறகு, பாப்பா கருவின் முதுகில் உள்ள நரம்புக் குழாய் மூடுகிறது. பின்னர் கருவின் மூளை மற்றும் முதுகுத் தண்டு நரம்புக் குழாயிலிருந்து உருவாகிறது. இதயம் மற்றும் பிற உறுப்புகளும் இணைந்தே உருவாகத் தொடங்குகின்றன. கண்கள் மற்றும் காதுகளின் உருவாக்கத்திற்கு தேவையான கட்டமைப்புகளும் அப்போதே உருவாகின்றன.
5 வாரங்கள்
மனிதக் கரு 5 வது வாரத்தில் மனித உருவிலேயே இருக்காது. தவளையின் தலைப்பிரட்டை உருவில் இருக்கும். ஆனால் அதன் பின்னர் வெகு வேகமாக கரு வளரத் துவங்கும். இரத்த ஓட்ட மண்டலம் உருவாகத் தொடங்குகிறது, மேலும் குட்டியூண்டு “இதயத்தில்” உள்ள செல்கள் 5 வது வாரத்தில் இருந்து துடிக்க ஆரம்பிக்கும், அதாவது இதயம் துடிக்கத் துவங்கிவிட்டது. இப்போது துடிக்கத் துவங்கிய இதயம், மனிதனின் கடைசி மூச்சு விடும்வரை, இடைவிடாமல் துடித்துக்கொண்டே இருக்கிறது. இப்போது மனிதக் கருவின் அளவு எவ்வளவு தெரியுமா? ஓர் எள் விதை அளவுதான். ஆனாலும் கூட இந்த குட்டியூண்டு மனித துணுக்கில், நாம் எதிர்பாரா மாற்றங்கள் உருவாகிவிடுகின்றன. இந்த நேரத்தில், கரு நீண்டு, முதலில் மனித வடிவத்திற்கு வர முயற்சிக்கிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மூளை மற்றும் முள்ளந்தண்டு வடமாக (நரம்பியல் குழாய்) மாறும் பகுதி உருவாகத் தொடங்குகிறது. இதயம் மற்றும் முக்கிய இரத்த நாளங்கள் முன்னதாகவே உருவாகத் தொடங்குகின்றன – சுமார் 16 ஆம் நாள். இதயம் 20 ஆம் நாளுக்குள் இரத்த நாளங்கள் வழியாக திரவத்தை பம்ப் செய்யத் தொடங்குகிறது, அடுத்த நாள் முதல் சிவப்பு இரத்த அணுக்கள் தோன்றும். கரு மற்றும் நஞ்சுக்கொடியில் இரத்த நாளங்கள் தொடர்ந்து உருவாகின்றன.
இதயத்துடிப்பு.. லப் டப்
கருவுற்ற 5 1/2 முதல் 6 வாரங்கள் வரை கர்ப்பப்பை அல்ட்ராசவுண்ட் மூலம் கருவின் இதயத் துடிப்பை முதலில் கண்டறியலாம். அப்போதுதான் கரு துருவம், வளரும் கருவின் முதல் புலப்படும் அறிகுறி; சில நேரங்களில் பார்க்க முடியும். ஆனால் கருவுற்ற 6 1/2 முதல் 7 வாரங்களுக்கு இடையில், கருவின் இதயத் துடிப்பை சிறப்பாக மதிப்பிட முடியும்.
6 வாரங்கள்:
உங்கள் குழந்தையின்/கருவின் மூக்கு, வாய் மற்றும் காதுகள் வடிவம் பெறத் தொடங்குகின்றன. மேலும் அவர்களின் குடல் மற்றும் மூளையும் கூடவே வளர்ச்சியடைகின்றன.இப்போது உங்கள் குழந்தையின் அளவு என்ன தெரியுமா? ஒரு துவரம் பருப்பு அளவுதான்.அதாவது அப்போதைய கருவின் சைஸ் என்பது 5 மிமீ அளவுதான். இப்ப பாப்பா C வடிவில் வளைந்து இருப்பார்கள்.ஆச்சரியமாகவே உள்ளது பாப்பாவின் உருமாற்றமும், அளவும்…!.கருவின் இதயம் ஆறாவது வாரத்தில் உருவாகி தாளகதியில் துடிக்க ஆரம்பித்து இரத்தத்தையும் மற்ற பகுதிளுக்கு அனுப்பும். கைகள் மற்றும் கால்களாக மாறும் மொட்டுகள் கருவின் பக்க வாட்டுப் பகுதியில் ஆறாவது வாரத்தில் உருவாகிவிடுகின்றன. ஆனால் எட்டாவது வாரத்தின் முடிவில்தான் , கருவின் பெரும்பாலான உறுப்புகள் மற்றும் அமைப்புகள் முழு வடிவம் பெறுகின்றன.
பலருக்கு, கர்ப்ப காலத்தில், வாந்தி. மசக்கை, தலை சுற்றல் மற்றும் சோர்வு என்ற கருவுதலின் அறிகுறிகள் தோன்றும் மார்னிங் சிக்னஸ் எனற காலை நோய் என்ற தொடங்கும் புள்ளி இதுவாகும்.
அப்போது அம்மாவின் வாயில் ஒரு உலோக சுவை உருவாகும், மேலும் மார்பகங்களில் எரிச்சல் இருக்கலாம். இப்ப அம்மாவுக்கு வாந்தி தலை சுற்றல் இருக்கு.அவர்களை கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு, நாம அப்புறமா, அவர்களுடன் பேசலாமே…
(பாப்பா வளரும்)…