‘ஸ்வீட் கேப்பிடலிசம்’ – சில அடிப்படைகள்
இனி காலனிய நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சி, தொழிலாளர் வர்க்கத்தின் தோற்றம், பெண்களின் நிலை குறித்து அலசத் தொடங்குவோம். சில அடிப்படைகளை சற்று விரிவாகவே பார்ப்பது அவசியம் என்பதால், காலனி ஆதிக்கம், மூலதனத்திற்கு முந்தைய ஆதித்திரட்டல் பற்றியும் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.
ஒரே காட்சி
“முதலாளித்துவம் வெகுவாக வளர்ச்சியடைந்த ஒரு நாடு, முதலாளித்துவம் அவ்வளவாக வளர்ச்சியடையாத ஒரு நாட்டிற்கு அதன் எதிர்காலத்தின் சித்திரத்தையே காட்டுகிறது” என்கிறார் மார்க்ஸ்.
19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் இங்கிலாந்தில் ஆலை-உற்பத்தித் தொழில் வளர்ச்சியடைந்தபோது, அங்கு உருவான புதிய நிலைமைகளை, உலகின் பிற பகுதிகளில் இந்தப் புதிய உற்பத்திமுறை வளர்ந்தபோதெல்லாம் காண முடிந்தது. தொழிலாளர்களின் பணிச்சூழல், வாழ்நிலை, அவர்கள் அனுபவித்த சுரண்டல், தொழிலாளர்களில் பெண் தொழிலாளர்களின் நிலைமை, குழந்தைகளின் நிலைமை- எனப் பல்வேறு அம்சங்களில் முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படை குணாம்சங்களைக் காண முடிந்தது.
19-ஆம் நூற்றாண்டின் இறுதி, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம், மத்தி, இறுதி என எந்தக் காலகட்டத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறை ஒரு சமூகத்திற்குள் அறிமுகமாகி, வளர்ச்சியடையத் தொடங்கினாலும் கிட்டத்தட்ட ஒரே காட்சிதான்.
இங்கிலாந்தில் 1865 ஆம் ஆண்டில் இருந்த மொத்த நிலக்கரி சுரங்கங்களின் எண்ணிக்கை 3,217. மொத்த ஆய்வாளர்களின் எண்ணிக்கை 12. ‘இந்த ஆய்வாளர்கள் ஒரு சுரங்கத்தை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஆய்வு செய்ய முடியும் என யாக்க்ஷயர் சுரங்க முதலாளி ஒருவரே கணக்கிட்டு இருக்கிறார். கடந்த பத்தாண்டு காலமாக சுரங்கங்களில் வெடிப்பு விபத்துகள் அதிகரித்து வருவதில் ஒரு ஆச்சரியமும் இல்லை (ஒரு விபத்தில் 200-300 பேர் கூட மரணமடைகிறார்கள்). “சுதந்திர” முதலாளித்துவ முறையின் அழகு இதுதான்!’ என்று மார்க்ஸ் தன்னுடைய மூலதனம் நூலில் குறிப்பிட்டிருப்பார். இங்கிலாந்தில் 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் மார்க்ஸ் கண்ட காட்சி இது.
நூறாண்டுகள் கழித்து கிட்டத்தட்ட இதே காட்சியை, இன்னும் சொல்லப்போனால் அதைவிடக் கொடூரமான காட்சியை, தென் – அமெரிக்காவில் தோழர் சே-குவேரா கண்டு துடித்துப்போனார்.
தென்–அமெரிக்க நாடான சிலி நாட்டின் மிகப் பிரபலமான தாமிர சுரங்கப் பகுதி சூகீகமாட்டா. அமெரிக்க முதலாளிகளுக்குச் சொந்தமான இந்தச் சுரங்கத்தில் 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொழிலாளர்கள் எப்படி சுரண்டப்பட்டார்கள் எனப் புரட்சியாளர் சேகுவேரா தனது ‘மோட்டார் சைக்கிள் டயரீஸ்’ பயணக்குறிப்புகளில் விவரித்திருப்பார்.
அக்கம்பக்கத்தாரின் அரவணைப்பில் தங்களுடைய குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு தம்பதியினர் இந்த சுரங்கப்பகுதிக்கு இடம்பெயர்ந்திருந்தைப் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பார். வேலைதேடி அவர்களுடன் பயணித்த சிலர் மாயமானார்கள் என்றும், எங்கோ ஆழ்கடலில் அவர்கள் இருக்கலாம் எனக் கூறப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டார்கள் என்றும், சே பதிவு செய்திருப்பார்.
வீடில்லாமல் வெட்டவெளியில், போர்த்திக்கொள்ளக் கம்பளிகூட இல்லாத நிலையில், பாலைவனத்தின் குளிர் இரவில் மரத்துப்போய் ஒருவரை ஒருவர் அவர்கள் அணைத்துப் படுத்திருந்தார்கள், தங்களுடைய கம்பளியை அவர்களுக்குப் போர்த்திவிட்டோம் என்றும், மறுநாள் காலை அவர்கள் மலைகளில் அமைந்துள்ள, ஆபத்தான கந்தக சுரங்கத்திற்குக் கிளம்பிப் போனார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருப்பார். இந்தத் தொழிலாளர்கள் உலகத் தொழிலாளர்களின் வாழும் உருவங்களாகத் தனக்குக் காட்சி தருவதாக சே சொல்லியிருப்பார்.
‘பணி அனுமதியே தேவையில்லை எனும் அளவிற்கு, மிகக் கடுமையான பருவநிலையும், மிக ஆபத்தான வாழ்நிலையும் கொண்ட வேலை அது. உங்கள் அரசியல் என்ன என்றுகூட யாரும் உங்களைக் கேட்கமாட்டார்கள். வாழ்வதற்குப் பத்தவே பத்தாத ஒரு சில ரொட்டித் துண்டுகளாவது கிடைக்கும் என்ற ஆர்வத்தோடு, தொழிலாளர்கள் தங்களுடைய உடல்நலம் பாழாவதைப் பொருட்படுத்தாமல், வேலையில் இறங்குவது மட்டுமே அங்கே ஒரு பொருட்டாக இருக்கிறது’ என்று அவர் விவரித்திருப்பார்.
‘ஸ்வீட் காமர்ஸ்!’ ‘இனிய வர்த்தகம்’ என்று மார்க்ஸ் பகடியாகக் குறிப்பிடுவார். அன்றைக்கும், இன்றைக்கும், ஏன் முதலாளித்துவத்திற்கு உயிர் இருக்கும்வரை, அது மார்க்ஸ் சொன்னது போல ‘ஸ்வீட் காமர்ஸ்! ‘ஸ்வீட் கேப்பிடலிசம்தான்!’
1) உழைப்புச் சக்தியை விற்பதைத் தவிர வேறு பிழைப்பு வழிகள் இல்லாத தொழிலாளர்களை ஒட்ட சுரண்டுவது
2) தொழிலாளர்கள் எனும் ‘அடிமை’களிலேயே மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள பெண்கள் உள்ளிட்ட பகுதியினரை (கருப்பின மக்கள், இந்தியாவில் தலித், ஆதிவாசி மக்களை – இவர்களிலும் பெண்களை மிகக் கொடூரமாக சுரண்டுவது) கொடூரமாக சுரண்டுவது;
3) கூலி உழைப்பிற்குள் வராத பெண்களின் வீட்டு உழைப்பைக் கொடூரமாகச் சுரண்டுவது
4) வரைமுறை இல்லாமல் இயற்கை வளங்களை ஒட்ட சுரண்டுவது
இவை எல்லாம் ஸ்வீட் கேப்பிடலிசத்தின் பிரதான செயல்பாடாக இருக்கிறது. காரணம், உபரி-உற்பத்தி, மேன்மேலும் மூலதனத்தை அதிகரித்துக்கொண்டே போவது- இதுதான் அதன் ஒரே குறிக்கோள். தன்னுடைய வளர்ச்சிக்குத் தகுந்தவாறு முதலாளித்துவம் பிரதேசங்களைப் பயன்படுத்துகிறது, சுரண்டுகிறது, உலக அரசியலை, அரசு அமைப்புகளை, தேச எல்லைகளை, உலக வரைபடத்தை மாற்றுகிறது.
முதலாளித்துவத்தின் அடித்தளம்
உலகில் முதலாளித்துவ முறை வளர்ச்சியின் தொடக்கம் இங்கிலாந்தில் 1780 ஆம் ஆண்டு வாக்கில் இருந்து தொடங்குகிறது எனப் பார்க்கிறோம். பிற ஐரோப்பிய காலனி ஆதிக்க நாடுகளில் இந்த மாற்றம் அடுத்தடுத்து நிகழத் தொடங்குகிறது. இந்தக் காலகட்டத்தில் புதிய உற்பத்தி சக்திகள் முழுவீச்சாக வளரத் தொடங்குவதற்கான அடித்தளம் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து போடப்பட்டிருக்கிறது. இந்த அடித்தளத்தின் மிக மையமான அமைப்பு-காலனியாதிக்கம்! காலனி நாடுகள்!
முதலாளித்துவத்துக்கு முந்தைய பட்டறைத் தொழில் உற்பத்திக்கு அவசியமான சந்தைகளை காலனி நாடுகள் வழங்கின. சந்தை ஏகபோகத்தின் மூலமாக மிகப்பெரும் திரட்டல் அன்றைக்கு நடந்தேறியது. “ஐரோப்பாவிற்கு வெளியே அப்பட்டமான கொள்ளை, அடிமைப்படுத்தல், படுகொலை ஆகிய வழியில் கைப்பற்றிய செல்வங்கள் கடல்வழியாகத் தாய்நாடு வந்து அங்கே மூலதனம் ஆனது” என்கிறார் மார்க்ஸ்.
காலனிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று நிலமும், வளமும் எக்கச்சக்கமாக இருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற பிரதேசங்கள். மக்கள் என்று பார்த்தால் பூர்வகுடி மக்கள்தான் இங்கு வசித்தார்கள். நிலப்பரப்பை ஒப்பிடும்போது இந்தப் பூர்வகுடி மக்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. இவர்களுடைய உற்பத்தி முறையோ முற்காலத்தியவை. வில்-அம்பு, தூண்டில் வகை. உபரியைப் பார்த்திராத புராதனப் பொதுவுடைமைச் சமூகங்களாக இந்தச் சமூகங்கள் பெரும்பாலும் இருந்தன. ஐரோப்பியர்கள் பார்வையில் இவர்கள் ‘காட்டுமிராண்டிகள்’, ‘நாகரிகம் அற்றவர்கள்’.
இந்தப் பிரதேசங்களைக் காலனி ஆக்குவது என்பது ஒரு வகை. ‘உண்மையான’ காலனிகள் (Real Colonies) என இவற்றை மார்க்ஸ் குறிப்பிடுகிறார். யாரும் கால் பதித்திராத பூமி. ‘புதிய உலகம்’ -சுதந்திரமாகக் குடியேறிவர்களால், குடியேற்றங்களாய் மாற்றப்பட்ட பிரதேசம் இவை. இந்தப் பிரதேசங்களின் பூர்வகுடிகளைக் கொன்று குவித்து, அடிமைகளாக்கி, வேலை செய்யவதற்கு பூர்வகுடி அடிமைகள் போதவில்லை என்று ஆப்பிரிக்க கண்டங்களில் இருந்து கருப்பின மக்களை அடிமைகளாகக் கடத்திப் பிடித்துவந்து… ரத்தம் சொட்டச் சொட்ட முதலாளித்துவ முறை தொடங்குவதற்கான ஆதித்திரட்டல் இங்கு அரங்கேற்றப்பட்டன.
மற்றொரு வகையான காலனிகள்- ஏற்கனவே வளர்ச்சியடைந்த மக்கள் சமூகம், அரசு முறைகள் இருக்கும் பிரதேசங்கள். ‘பழைய உலகம்’. இவற்றில் காலனிகளை உருவாக்குவது. இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இந்தியா, இலங்கை, கிழக்கிந்தியப் பகுதிகளில் ஜாவா (இன்றைய இந்தோனேசியா) போன்றவை. இந்தப் பிரதேசங்களில் வாணிபம் செய்கிறேன் பேர்வழி என உள்ளே நுழைவது; பிறகு படிப்படியாய் அவற்றின் வளங்களைக் கைப்பற்றி, மக்களை அடிமைப்படுத்தி, ஆட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றுவது; தங்களுடன் நட்புறவைக் கடைப்பிடிக்கும் மன்னராட்சிப் பிரதேசங்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு கொள்ளையில் ஈடுபடுவது- இவையெல்லாம் இந்த வகையான காலனிகளில் கடைப்பிடிக்கப்பட்ட உத்திகள்.
‘புதிய உலகில்’ காலனிகள், ‘பழைய உலகில்’ காலனிகள் – எதுவாக இருந்தாலும் கொள்ளைதான். ஏறத்தாழ 400 ஆண்டு கால காலனிய ஆதிக்கப் போட்டியில், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஸ்பானிஷ்காரர்கள் தங்களுக்குள் முட்டிமோதிக்கொண்டு, ‘தங்களால் இயன்றவரை’ உலகின் பிரதேசங்களைக் கூறுபோட்டு, தங்களுடைய காலனிகளாக வசப்படுத்திக்கொண்டார்கள்; ‘தங்களால் இயன்றவரை’ உலக மக்களை அடிமைப்படுத்தி, ஒட்ட சுரண்டினார்கள்.
“அமெரிக்காவில் தங்கமும், வெள்ளியும் கண்டுபிடித்தது, அக்கண்டத்தின் பூர்வகுடிகளை அழித்தும், அடிமைப்படுத்தியும், சுரங்கங்களில் சமாதி கட்டியும் நாசமாக்கியது, கிழக்கிந்தியப் பகுதிகளை பிடித்து சூறையாடத் தொடங்கியது, கறுப்புத் தோல் மானிடரை வாணிப வேட்டையாடுவதற்கான வேட்டைக் காடாய் ஆப்பிரிக்காவை மாற்றியது- இவையெல்லாம் முதலாளித்துவப் பொருளுற்பத்தி சகாப்தத்தின் விடியல்காட்சிகளாய் அமைந்தன… ஆதித்திரட்டலின் (Primitive accumulation) பிரதான நிகழ்வுகளாய் அமைந்தன” என்று விளக்குகிறார் மார்க்ஸ்.
அடிமை வர்த்தகம்
அடிமை வியாபாரத்தில் ஐரோப்பிய முதலாளிகள் கொழுத்து வளர்ந்தார்கள். அதுவரை ஆப்பிரிக்காவிற்கும் ஆங்கிலேய மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையே மட்டும் நடந்துவந்த ‘நீக்ரோ’-அடிமை வர்த்தகம், ஆப்பிரிக்காவிற்கும் ஸ்பானிஷ் அமெரிக்காவுக்கும் இடையிலும் இனி நடக்கலாம் என ஆசியெந்தோ ஒப்பந்தம் (1713) வழிவிட்டபோது, இங்கிலாந்தின் முதலாளிகளுக்கு ஏகப்பட்ட குஷி ஏற்பட்டது. “இந்த ஒப்பந்தத்தின் மூலமாக ஸ்பானிஷ் அமெரிக்காவிற்கு 1743 வரை ஆண்டுக்கு 4,800 நீக்ரோக்களை வழங்கும் உரிமையை இங்கிலாந்து பெற்றது. அடிமை வர்த்தகத்தால் இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதி உப்பிக் கொழுத்தது. இதுவே லிவர்பூலின் ஆதித்திரட்டலுக்கு வழியாக இருந்தது. லிவர்பூலின் கப்பல் தொழிலுக்கும், மாலுமிகளுக்கும் விரிவான வேலைவாய்ப்பைத் தோற்றுவித்தது. நாட்டின் பட்டறை உற்பத்திப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்தது. அடிமை வர்த்தகத்தில் லிவர்பூல் ஈடுபடுத்திய கப்பல்கள் எண்ணிக்கை 1730ல் 15; 1751ல் 53; 1760ல் 74; 1770ல் 96; 1792ல் 132.” மார்க்ஸ் மூலதனம் நூலில் பதிவுசெய்திருக்கிற வரலாறு இது.
ஆப்பிரிக்க கருப்பின மக்களும் எல்லோரையும் போலவே, அவரவர் பூர்வீக ஊர்களில் அவரவர் குடும்பங்களுடன் மக்கள் சமூகமாக வாழ்ந்தவர்கள். காடுகளில் விலங்குகளைப் பொறிவைத்துப் பிடிப்பதைப் போல அவர்களைக் கடத்திப் பிடித்து, அவர்களுடைய சமூகத்தில் இருந்து அவர்களை வேரோடு பெயர்த்து எடுத்து வேறு கண்டத்திற்கு ஏற்றிச் சென்று, அடிமைச் சந்தையில் நிற்க வைத்து விலை பேசியது ‘ஸ்வீட் காமர்ஸ்’.
அமெரிக்க எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலியின் ரூட்ஸ் (Roots) நாவல் (தமிழில் ஏழுதலைமுறை) குன்ட்டா கின்ட்டே என்ற கருப்பின மனிதர் கடத்தப்பட்டு, அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்ட பிறகு, அவருடைய கதி என்ன ஆனது, அவருடைய சந்ததிகளின் கதி என்ன, என்பதை விவரிக்கும். உண்மைக் கதையும், புனைவும் கலந்த நாவல் இது. படிப்பவர் நெஞ்சு வெடித்துவிடும். எழுத்தாளரின் முப்பாட்டனார் குன்ட்டா கின்ட்டே. 1767ல் காம்பியாவில் இருந்து கடத்தப்பட்டவர். மார்க்ஸின் லிவர்பூல் புள்ளிவிவரங்கள் சுட்டும் அதே காலகட்டம்.
1833 ஆம் ஆண்டில் அடிமைவியாபரம் ஒழிக்கப்படுகிறது என இங்கிலாந்து சட்டமியற்றியபோது, அடிமைகளை வைத்திருந்த முதலாளிகளின் ‘இழப்பை’ ஈடுகட்டுவதற்கான ‘நஷ்டஈடு’ என்ற பெயரில் மிகப்பெரும் தொகையை இங்கிலாந்து அரசாங்கம் கொடுத்திருக்கிறது. சுமார் 46,000 முதலாளிகளுக்கு, அன்றைக்கு மொத்தம் 2 கோடி பவுண்டுகள் வழங்கியது. தற்போதைய மதிப்பில் 16-17 பில்லியன் பவுண்டுகள். (1600-1700 கோடி புவுண்டுகள்; இந்திய ரூபாய் மதிப்பில் 17 லட்சத்து 70 ஆயிரம் கோடிகள்) அந்தக் காலத்தில் இங்கிலாந்து அரசின் வருடாந்திர செலவில் இது 40 சதவிகிதமாம்.
லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆய்வாளர்கள் குழு ஒன்று (University College London), பழைய அரசு ஆவணங்களைத் தோண்டி எடுத்து இங்கிலாந்து சமூகத்தில் அன்றைக்கு யார் எல்லாம் எவ்வளவு ‘அடிமை’களை விடுதலை செய்ததற்கு, எவ்வளவு ‘நஷ்டஈடு’ வாங்கினார்கள் என்ற விவரங்களைக் கண்டுபிடித்தது. அந்தத் தரவுகளை எல்லாம் 2015ல் ஒரு இணைய தரவுத்தளத்தில் வெளியிட்டது. பிரிட்டிஷ் சமூகமே அப்போது இதனால் அல்லோல-கல்லோலப்பட்டது. இப்போதும் யார் வேண்டுமாலும் அந்தத் தளத்தில் இருந்து விவரங்களை எடுக்கலாம். (https://www.ucl.ac.uk/lbs/search/)
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் காமரூனின் கொள்ளுத்தாத்தா, இங்கிலாந்து வங்கியின் பழைய இயக்குனர்கள் பலர் அடிமை வர்த்தகத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். விலங்குப் பண்ணை நாவலின் ஆசிரியர் ஜார்ஜ் ஆர்வெலின் கொள்ளுத்தாத்தா சார்லஸ் பிளேர். இவர் ஜமாய்க்காவில் இருந்த ஒரு தோட்டத்தில் 218 ‘அடிமை’களை வைத்திருந்தார். அவர்களை விடுவித்ததற்காக இங்கிலாந்து அரசு அவருக்கு 4442 பவுண்டுகள் ‘நஷ்டஈடு’ வழங்கி இருக்கிறது. யாருக்கு நஷ்டஈடு பாருங்கள்!
நியாப்படி, திருவாளர் பிளேர் போன்ற அடிமை உடைமையாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து, அவர்கள் வைத்திருந்த முன்னாள் ‘அடிமை’களுக்கு அல்லவா ஒரு அரசு நஷ்டஈடு வழங்கி இருக்க வேண்டும்? (அப்படிச் செய்ய இங்கிலாந்து அரசு சோஷலிச அரசா என்ன?)
1833 ஆம் ஆண்டு இங்கிலாந்து சட்டத்தினால், பிரிட்டிஷ்காரர்களுக்கு சொந்தமான 8 லட்சம் ஆப்பிரிக்க ‘அடிமைகள்’ விடுதலை செய்யப்பட்டார்கள். எவ்வளவு பெரிய மக்கள் கூட்டம்! இவர்களுக்கு ஒரு பைசா கூட நஷ்டஈடு வழங்கப்படவில்லை என்பதோடு கொடுமை நிற்கவில்லை. அவர்கள் விடுவிக்கப்பட்ட அறிவிப்பு வந்ததில் இருந்து, ‘அடுத்த நான்கு ஆண்டுகள் வாரத்துக்கு 45 மணிநேரங்கள் கூலி இல்லா உழைப்பை தங்களுடைய ‘முன்னாள் எஜமானர்களுக்கு’ அவர்கள் வழங்கிட வேண்டும். அதன் பிறகே, அவர்கள் முன்னாள் எஜமானர்களிடம் இருந்து விலகிச் செல்லலாம்!’ – இது எப்படி இருக்கு?! உண்மையில், ‘அடிமை’களை விடுவிப்பதற்காக கொடுத்த நஷ்டஈட்டிற்கான தொகையையும் அடிமைகளிடமிருந்தே இங்கிலாந்து அரசும், அதன் ஆளும் வர்க்கமும் கறந்தன. ‘ஸ்வீட் காமர்ஸ்!’
பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு கரீபியன், மொரிஷியஸ், தென் ஆப்பிரிக்க பகுதிகளில் சொந்தமாக இருந்த தோட்டங்களில் ‘அடிமை’களின் வாழ்க்கை, பணிக்கொடுமைகள் எப்படி இருந்தது என்கிற விவரங்களையும் இந்தத் தளத்தில் வாசிக்கலாம். அடிமைகளாக சிறை வைக்கபட்டிருந்த கருப்பினத்தவர்களில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நிலைமைகள் பாலின அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
ஜமாய்க்காவில் சார்ல்ஸ்-டவுனின் தெற்கே 1839 ஆம் ஆண்டில் 840 ஏக்கர் பரப்பளவு கொண்ட கரும்புத் தோட்டம் பஃப் பே (Buff Bay). 1819 ஆவணத்தின்படி இந்தத் தோட்டத்தில் 157 ‘அடிமைகள்’ இருந்தார்கள். இவர்களில் வயது வந்த 48 பெண்களில் 65% பெண்கள் தோட்டப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பெரும்பாலான ஆண்கள் தொழிற்சாலையில் சர்க்கரை உற்பத்திக்கு முந்தைய பாகு காய்ச்சுதல் போன்ற தயாரிப்புப் பணிகளிலும், தச்சுவேலை, கட்டுமானம், மரக்கலன்கள் செய்தல் போன்ற வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஆண்களில் 42% பேர் தோட்டப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். ‘தோட்டம் சார்ந்த பணி பெண்களுக்கு, கைவினைஞர் பணி ஆண்களுக்கு’ என்ற பாலின அடிப்படையிலான பார்வை அடிமைமுறையிலும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பெண்களில் சற்று வயதானவர்கள் ‘அடிமைகளின்’ வசிப்பிடங்களில் செவிலி வேலைகள், பேருகாலப் பணியாளர் வேலைகளை செய்திருக்கிறார்கள். இந்தக் குறிப்பிட்ட தோட்டத்தைப் பொறுத்தவரை மூன்று பெண் செவிலியர் பெயர்களைக் காண முடிகிறது. அவர்கள் அனைவருமே ஏதோ வகையில் ‘உடல் ஊனமுற்றவர்களாக’ இருந்திருக்கிறார்கள். ‘ஒரு கால் இழந்தவர்’, ‘ஒரு கை இழந்தவர்’, ‘கால் புண் உடையவர்’…
‘ஸ்வீட் காமர்ஸ்!’ & ‘ஸ்வீட் கேப்பிடலிசம்!’
தொடரும்…
ஆதாரங்கள்:
The Capital, Karl Marx, Volumes 1 & 4
The Motorcycle Diaries, Ernesto Che-Guevara, Che Guevara Studies Centre
The Roots: The Saga of an American Family, Alex Halley
Database of Centre for the Study of the Legacies of British Slavery https://www.ucl.ac.uk/lbs/search/
The history of British slave ownership has been buried: now its scale can be revealed, The Guardian, https://www.theguardian.com/world/2015/jul/12/british-history-slavery-buried-scale-revealed

