அத்தியாயம் 5 : பெண்: அன்றும், இன்றும்… – நர்மதா தேவி

அத்தியாயம் 5 : பெண்: அன்றும், இன்றும்… – நர்மதா தேவி

பெண்: அன்றும், இன்றும்…

 

அத்தியாயம் 5

 

‘இல்லத்தரசி’ எனும் பம்மாத்து

 

நர்மதா தேவி

 

அரிசியும், காய்கறிகளும், பருப்பும் எப்படி சாப்பாடாக மாறுகிறது, மூன்று வேளை உணவு தங்கள் தட்டுகளில் எப்படி வருகிறது என்கிற பிரக்ஞையே இல்லாமல்தான் பெரும்பாலான குடும்பங்கள் இருக்கின்றன. ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற கதையில் எழுத்தாளர் அம்பை, “அத்தனை ருசியான, நாக்கை அடிமைப்படுத்தும் சாப்பாடும் மாயக் கம்பளத்தில் வந்ததுபோல அலட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்” என்று ஒரு வீட்டினரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார்.

 

அதிகாலை 4, 5 மணிக்கு எழுந்து குடும்ப வேலையை செய்யத்தொடங்கும் பெரும்பாலான பெண்கள், இரவு தூங்கப் போவதற்கு 11, 12 மணி ஆகிறது. மூன்று வேளை உணவு தயாரித்து, குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க செய்கிறார்கள். ‘இவ்வளவு சுமை தங்கள் மீது சுமத்தப்படுவது சுரண்டல்’ என்கிற விழிப்புணர்வே பெரும்பாலான பெண்களுக்குக் கிடையாது. ‘இது சுமையல்ல, கடமை’ என சமூகம் திணித்துள்ள அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ்க்கையை ஒட்டுகிறார்கள். 

 

‘தேங்க்லெஸ் ஜாப்’ (Thankless Job) என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் உண்டு. ‘நன்றி பாராட்டப்படாத வேலை’ என்று தமிழில் பொருள்படும். பெண்கள் செய்யும் குடும்ப ஊழியத்தைக் குறிப்பிடுவதற்காகவே இந்த வார்த்தைகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்க வேண்டும். இந்த வேலையால் குடும்ப உறுப்பினர்களுக்கும், சமூகத்துக்கும் மிகப்பெரும் பயன்கள் உண்டு. என்றாலும், குடும்பத்தாலும் சரி, சமூகத்தாலும் சரி, ‘வேலை’ என்று துளியும் அங்கீகரிப்படாத வேலையாகவே இருக்கிறது. 

 

“ஒரு பெண் செய்யக்கூடிய வேலைகளியே, மிகக் கொடூரமான, மிகக் கடினமான வேலை என்பது பெரும்பாலும் வீட்டுவேலைதான். ஒரு பெண்ணின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாத மிக அற்பமான வேலையாக இந்தக் குடும்ப வேலை இருக்கிறது” என்றார் மாமேதை லெனின்.

 

எத்தனை எத்தனை ஏமாற்றுப்பட்டங்கள்!

 

வெளிவேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண்களை ‘சும்மாத்தான் இருக்கிறார்கள்’ என்று வெகுகாலம் குறிப்பிட்டு வந்தோம். அப்படிச் சொல்வது உறுத்தலாகத் தெரியத் தொடங்கியதோ என்னவோ? இப்போது அரசாங்கம், ஆய்வு நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை ‘ஹோம் மேக்கர்கள்’ எனச் சொல்கின்றன. படித்தவர்கள் இந்த வார்த்தையைப் பிடித்துக்கொண்டு, ‘எங்க அம்மா ஹோம் மேக்கர்!’ ‘என் மனைவி ஹோம் மேக்கர்!’ ‘நான் ஹோம் மேக்கர்!’ எனக் குறிப்பிடுவதைப் பரவலாகக் காண்கிறோம். தமிழில் இந்தப் பட்டம் ‘இல்லத்தரசி’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காலம் முழுக்க அடிமையாக வைத்திருந்து நாம் சுரண்டுகிற ஒருத்தரை, ‘இல்லத்தரசி’ என்று குறிப்பிடுவதைப் போல ஓர் அபத்தம் இருக்க முடியாது. பொய்யான புகழ்ச்சிப்பட்டங்களை வழங்கி, உரிமைகள் பறிக்கப்படுவதை உணராமல் வைத்திருப்பது, காலந்தோறும் பெண்களுக்கு நடப்பதுதானே. பண்டைக்கால ‘கற்புக்கரசி’ வரிசையில், இந்தக்கால ‘இல்லத்தரசி’ பட்டம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் போல. இந்தப் பம்மாத்துப் பட்டத்தை வங்கக்கடலில் வீசியெறிந்துவிட்டு, வேறு சுரணைமிக்க வார்த்தையை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.

 

குடும்பங்கள் தனிப்பட்ட விவகாரமா?

 

பெண்களின் வீட்டு உழைப்பை, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் இரண்டாந்தரமாக நடத்தப்பட்டு, சுரண்டப்படுகிறார்கள் எனச் சொல்லி இந்தச் சமூகம் தப்பிக்க முடியாது. குடும்பம், வீடு என்கிற அமைப்பில் பெண்களின் கூலியில்லா உழைப்பைக் கொண்டு, நவீன முதலாளித்துவ உற்பத்தி முறைக்குத் தேவையான கூலித்தொழிலாளிகளை உற்பத்தி செய்கிறது நமது நவீன சமூகம்.  

 

ஒரு தொழிலாளி தனது வாழ்வாதாரத் தேவைக்கான மதிப்பை உற்பத்தி செய்ய ஒரு வேலை நாளில் செலவிடும் வேலை நேரத்தை மார்க்ஸ், ‘அவசியமான உழைப்பு நேரம்’ என்றும், அந்த உழைப்பை ‘அவசியமான உழைப்பு’ என்றும் குறிப்பிடுகிறார். அதற்கு மேல் அந்த நாளில் தொழிலாளி செய்யும் வேலையானது அவருடைய வாழ்வாதாரத்துக்கானது அல்ல; ஆனாலும் அவர் உற்பத்தி செய்வார். அந்த உற்பத்தி நேரம் முழுவதையும் ‘உபரி உழைப்பு நேரம்’ என்றும், அந்த உழைப்பை ‘உபரி உழைப்பு’ என்றும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

 

தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்குத் தேவையான மதிப்பை உற்பத்தி செய்வதற்காக, ஒரு நாளில் செய்ய வேண்டிய அவசியமான உழைப்பிற்காகச் செலவிடும் நேரத்தை மேன்மேலும் குறைத்து, உபரி உழைப்புக்கான நேரத்தை அதிகரித்தால் உபரியைப் பெருக்கலாம்.

 

தொழிலாளர்களைப் பராமரிப்பதற்கு அவர்கள் வீட்டில் மனைவியோ, தாயோ, சகோதரிகளோ எனப் பெண்கள் வேலை செய்தால், உணவுக்கான படியைக் குறைக்கலாம், சவலைக்கான படியைக் குறைக்கலாம், வீட்டுப் பராமரிப்புக்கான படியை வெட்டலாம். தொழிலாளியின் உழைப்பில், அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைத்து, உபரி உழைப்பு நேரத்தை அதிகரிப்பதில் பெண்களின் கூலியில்லா உழைப்பு கணிசமான பங்கைச் செலுத்துக்கிறது.

 

ஆக, நவீன முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படைத் தேவையான பாட்டாளி வர்க்கம் உற்பத்தி செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு, உழைப்பு சக்தியைச் செலுத்துவதற்குத் தயாராக இருப்பதற்கும், அவசியமான உழைப்பிற்கான நேரத்தைக் குறைத்து, உபரி உழைப்பிற்கான நேரத்தை அதிகரிப்பதற்கும், நவீன குடும்ப அமைப்பின் பெண்ணடிமைத்தன முறை முதலாளித்துவ அமைப்புக்கு மிகவும் பயன்படுகிறது. ஆனால், ஒரு வர்க்கத்தையே பராமரிப்பதற்கு அடிப்படையாக இருக்கிற இந்தப் பெண்களின் வீட்டு உழைப்போ, சமூக அளவில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத உழைப்பாகவே இருக்கிறது.

 

ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பைக் கணக்கிடும்போது, பரிவர்த்தனைக்கான சரக்குகளை, சேவைகளை உற்பத்தி செய்யும் வேலையின் மதிப்பே கணக்கில் கொள்ளப்படுகிறது. நவீன முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாளர்கள் கூலிக்கு விற்கும் அவர்களின் உழைப்புச் சக்தியும் ஒரு பண்டம்தான் என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். உழைப்புச் சக்தியை உற்பத்தி செய்வதற்கு பெண்களின் உழைப்பு ஆதாரமாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இந்த அடிப்படையிலாவது பெண்கள் செய்யும் வீட்டு வேலையின் மதிப்பு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால், பரிவர்த்தனை மதிப்பில்  இயங்குகிற ஒரு சமூகத்தில், விற்பனைக்காக செய்யப்படாத சேவை என்பதால், பெண்களின் வீட்டு வேலைக்கு ஊதியம் இல்லை என்பதோடு, அது ஒரு வேலையாகவே கருதப்படுவதில்லை. 

 

அம்பையின் கதையில் வருவதைப் போல வீட்டளவில் மட்டுமல்ல, சமூகத்தைப் பொறுத்தவரையிலும், பெண்களின் வீட்டு வேலை மற்றும் பராமரிப்புப் பணிகளால் விளையும் பயன்கள் அனைத்தும், ஒரு மாயக்கம்பளம் விஷ்க் என எங்கிருந்தோ கண்ணுக்குத் தெரியாமல் மனிதகுலத்துக்கு பரிசளிக்கும் விஷயங்களாக இருக்கின்றன. 

 

பெண்களின் வீட்டு வேலைக்கு என்னதான் விலை?

 

விலைக்கு வாங்குதல், விற்பனை செய்தல் என்ற பரிவர்த்தனை பெண்களின் வீட்டு உழைப்பில் நடப்பதில்லை. அதனால் இந்த உழைப்பின் மதிப்பைக் கணக்கிடுவதும் மிகக் கடினமான காரியமாக இருக்கிறது. என்றாலும், இந்த விஷயம் பல காலம் விவாதிக்கப்பட்டு வந்ததன் விளைவாக, 1995 ஆம் ஆண்டின் UNDP அறிக்கை பெண்களின் வீட்டு உழைப்பின் மதிப்பைப் பற்றிப் பேசியது. அன்றைய உற்பத்தி மதிப்பில் பெண்கள் செலுத்தும் வீட்டு உழைப்பின் மதிப்பு 11000 பில்லியன் டாலர்கள் எனக் கணித்தது. அன்றைய ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு 23000 பில்லியன் டாலர்கள். இந்த மதிப்புடன் பெண்களின் வீட்டு ஊழியத்தின் மதிப்பாகக் கணிக்கப்பட்ட 11000 பில்லியன் டாலர்களைக் கணக்கிட்டால், கணக்கில் கொண்டுவரப்படாத பெண்கள் வீட்டு உழைப்பின் அளவை, அதன் மதிப்பைப் புரிந்துகொள்ள முடியும். உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் கிட்டத்தட்ட பாதி! யம்மாடியோவ்!!! 

 

தற்போது ஐ.நா பெண்கள் அமைப்பு தன்னுடைய வளைதளத்தில்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் ஊதியமற்ற பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளின் மதிப்பு 10 மற்றும் 39 சதவீதம் என பதிவிட்டுள்ளது. அதாவது, உற்பத்தித்துறை, வர்த்தகம் அல்லது போக்குவரத்து துறைகளை விட பெண்களின் ஊதியமற்ற பணிகளின் மதிப்பு அதிகம். பெண்கள் ஆண்களைவிட இரண்டரை மடங்கு அதிக வீட்டு வேலையும், பராமரிப்பு பணிகளையும் ஊதியமில்லா உழைப்பாகச் செய்வதாக இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. இந்தியாவில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் நான்கரை மடங்கு அதிகமாக வீட்டு வேலை செய்கிறார்களாம்.

 

இந்திய ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் இந்திய வீடுகளில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையே ஊதியமற்ற வேலைகள் எவ்வாறு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு, ஒரு குடும்பத்தில் ஆணைக் காட்டிலும் ஒரு பெண் சராசரியாக 4.5 மடங்கு அதிகமாக ஊதியமற்ற பணிகளில் ஈடுபடுகிறார் என்றும், பெண்ணைக் காட்டிலும் ஒரு ஆண் சராசரியாக 4.3 மடங்கு அதிகமாக ஊதியம் கிடைக்கிற பணிகளில் ஈடுபடுகிறார் என்றும் தெரிவிக்கிறது. 

  • 81 சதவிகிதப் பெண்கள் ஒரு நாளில் 5 மணி நேரத்தை ஊதியமற்ற வீட்டுப் பணிகளுக்காகச் செலவிடுகிறார்கள். 
  • 15 முதல் 59 வயது வரையிலான பெண்களில் 92 சதவிகிதத்தினரும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 78 சதவிகிதத்தினரும், ஒரு நாளில் 5 மணி நேரம் ஊதியமற்ற வீட்டுப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். 60 வயதுக்கு மேல் ஓய்வு என்பது பெண்களின் வீட்டு வேலைக்கு இல்லவே இல்லை என்பதை இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. 
  • ஆண்களில், 15-59 வயது வரம்புக்குள் இருப்பவர்கள் ஒரு நாளில் 67 நிமிடங்கள் ஊதியமில்லா வீட்டுப் பணிகளிலும், 240 நிமிடங்கள் ஊதியம் கிடைக்கிற பணிகளிலும் செலவிடுகிறார்கள். அதுவே பெண்களோ 56 நிமிடங்கள் ஊதியம் கிடைக்கிற பணிகளிலும், 305 நிமிடங்கள் ஊதிமில்லா பணிகளிலும் செலவிடுகிறார்கள்.

 

உலகின் அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும்- ஏழை நாடுகள், வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் குடும்பப் பராமரிப்பு, குடும்பப் பராமரிப்பின் வாயிலாக தொழிலாளர்கள் பராமரிப்பு பணிகளை ஆண்களைக் காட்டிலும் அதிகம் செய்வது பெண்கள்தான். கலாச்சார ரீதியாக மிகமிக ஒடுக்கப்பட்ட நிலையில் பெண்கள் வாழ்கிற இந்தியா போன்ற நாடுகளில் பெண்களின் ‘முழுமுதற் கடமை’யாக ஆக்கப்பட்டிருக்கிறது. 

 

எனவே, பெண்களை அடிமைப்படுத்துதல் என்பது தனிச்சொத்து முறையை அடிப்படையாகக் கொண்ட வர்க்க சமூகங்களுக்குத் தேவைப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனால்தான், அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகங்களின் குடும்ப அமைப்புகளில் பெண்ணடிமைமுறை ‘வெற்றிகரமாகத்’ தொடர்ந்து, தற்போதைய முதலாளித்துவ சமூகத்திலும் நீடித்து வருகிறது. 

 

வர்க்கசுரண்டலும், பெண்ணடிமைத்தனமும் வர்க்க சமுதாயத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பதை நாம் உணர வேண்டும்.

 

ஆதாரங்கள்: 

  1. மாதர் அரங்கில் நமது கடமைகள் – பெண்களது பிரச்சனைகள் மற்றும் கடமைகள் குறித்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கருத்தோட்டம் பற்றிய ஆவணம், 2005
  2. Capital, A Critique of Political Economy, Volume I
  3. Wage Labour and Capital, Karl Marx
  4. Patriarchy subsidises Capitalism, Sanjay Roy, People’s Democracy, 23 April 2023
  5. Human Development Report 1995, UNDP
  6. The Tasks of the Working Women’s Movement in The Soviet Republic, Speech delivered by V. I. Lenin, at The Fourth Moscow City Conference of Non-Party Working Women, September 23, 1919

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *