அடிமைகளிலேயே சிறந்த அடிமைகள்
“பெண்ணடிமைத்தனம் என்பது பண்டைய நிலவுடைமைச் சமூகத்தின் மிச்ச சொச்சம். மக்களுடைய வாழ்க்கையில், கலாச்சாரத்தில் முந்தைய நிலவுடைமைச் சமூகத்தின் கட்டமைப்புகளான சாதி, பெண்ணடிமை முறை வேரூன்றியிருக்கிறது. அவை இன்னும் அறுபடவில்லை. அதனாலேயே நவீன முதலாளித்துவ சகாப்தத்திலும் பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட சுரண்டல் முறைகள் தொடர்கின்றன.” – நவீன காலத்திலும் பெண்ணடிமைத்தனம் ஏன் தொடர்கிறது? என்கிற கேள்வி எழுகிற போது, இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது.
இதோடு, முதலாளித்துவ சமூகத்தின் முற்போக்குத் தன்மைகளில் முக்கியமானதாக, அது பெண்களுக்கு ‘வழங்குகிற’ வேலைவாய்ப்பு குறிப்பிடப்படுகிறது. “முதலாளித்துவ சமூகம்தான் முதன்முதலாகப் பெண்களுக்கு வெளி வேலைவாய்ப்பை உருவாக்கியது; பெண்களை வெளி உலகிற்கு அழைத்து வந்தது; வேலைவாய்ப்புகளின் மூலம் பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிசெய்து பெண் விடுதலையைப் பெற்றுத் தரும் வல்லமை முதலாளித்துவ அமைப்புக்கு மட்டுமே இருக்கிறது” – பெண் விடுதலை குறித்த விவாதங்களில் மேற்கண்ட வாதம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
காலந்தோறும் உழைப்பாளியே…
எல்லா பகுதிகளிலும், எல்லா காலகட்டங்களிலும் பெண்கள் தங்களுடைய குடும்பத்திற்காகவும், சமூகத்தின் வளங்களை உற்பத்தி செய்வதற்காகவும் உழைப்பைச் செலுத்தியே வந்திருக்கிறார்கள். முதலாளித்துவ சமூகத்துக்கு முந்தைய சமூகங்களில் உற்பத்தி நடைபெறும் பகுதி, கிராம அளவிலேயே இருந்தது. இந்தச் சமூகத்தில் விவசாய நிலங்களில், குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கான தொழில்களில் எனப் பெண்களும் உழைப்பைச் செலுத்தி, உற்பத்தியில் பங்குபெற்றிருக்கிறார்கள். ஜமீன்தார்கள், பெருநிலவுடையாளர்கள் போன்ற கோமான்கள், சீமான்கள் குடும்பத்து செல்வச்சீமாட்டிகளைத் தவிர, சமூகத்தின் உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் சமூக உற்பத்தியில் பங்கெடுத்தார்கள்.
விவசாயம் சார்ந்த குடும்பங்கள் என்கிற போது, குத்தகை விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர விவசாய வர்க்கக் குடும்பங்கள் மேற்கொள்ளும் வேளாண் உற்பத்தியில் பெண்களின் பங்கு கணிசமானது. விவசாயம் அல்லாத குடும்பத் தொழில்கள் எனும்போது- அது இரும்பு, மரத்தொழிலாக இருக்கலாம், கைவினைத் தொழிலாக இருக்கலாம், வியாபாரத் தொழிலாக இருக்கலாம், செக்கு அரவைத் தொழிலாக இருக்கலாம், ஈயம் பூசும் தொழிலாக இருக்கலாம், நெசவுத் தொழிலாக இருக்கலாம்- அநேகமாக எல்லாத் தொழில்களிலும் பெண்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் இணைந்து கணிசமான அளவு வேலைகளைச் செய்தே வந்திருக்கிறார்கள். அதன் மூலம் சமூக உற்பத்தியில் பங்கெடுத்திருக்கிறார்கள். சமூக வளங்களின் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் வர்ண சாதியமைப்பு இறுகியிருக்கும் சமூகப் பின்னணியில், துண்டு நிலம் கூட இல்லாத கூலித்தொழிலாளர் வர்க்கங்களில் ஒட்டுமொத்தக் குடும்பமே பண்ணையடிமைகளாகப் பணியாற்றியது. தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இந்தக் குடும்பங்களின் பெண்கள், கழனியிலும், பண்ணையார்களின் குடும்பங்களிலும் இடுப்பொடிய வேலைவாங்கப்பட்டார்கள். ‘தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்’ என்ற நிலையில் பாலியல் சுரண்டல்களையும், வன்முறைகளையும் கூடுதலாகச் சந்திக்கும் அவலம் இவர்களுக்கு உண்டு. விவசாய வேலைகள் அல்லாத தொழில்களில், சலவை செய்தல், செருப்பு, தோல் பொருட்கள் செய்தல் என இழிவான தொழில்களாக வரையறுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதற்காகப் பணிக்கப்பட்ட சாதிகளிலும் குடும்பப் பராமரிப்பு என்பதைத் தாண்டியும் பெண்களின் உழைப்பு நிச்சயம் உண்டு.
வெளியுலகில் பெண்கள்
முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முந்தைய சமூகத்தில் பெண்களுடைய பணியிடம் பெரும்பாலும் வீடாகவோ, வீட்டை ஒட்டியோ, அவர்களுடைய கிராமமாகவோ இருந்தது. அவர்களுடைய பணியிடத்தில் அவர்களின் ‘பாதுகாவலரான’ கணவனோ, தந்தையோ, மகனோ சக-பணியாளராக இருந்தார்கள். ‘இன்னாரின் மனைவி, மகள், தாயார்’ என்ற அடையாளத்தில் குடும்பத்தின் அங்கமாகத்தான் பெண்களால் சமூக உற்பத்தியில் ஈடுபடமுடிந்தது. ஆனால், முதலாளித்துவ சமூகத்தில் வெளியே வேலைக்குப் போவது என்ற நிலை வந்தபோது, இன்னாரின் மனைவி, மகள், தாயார் என்கிற ஒட்டு எதுவும் இல்லாமல் தனிப்பட்ட நபர்களாகப் பெண்கள் வேலைக்குப் போகத் தொடங்கினார்கள். இதற்கு முன்பு வீட்டை ஒட்டிய தொழில்களில் இரண்டாம் நிலை வேலையாட்களாகப் பணியாற்றியவர்கள், தனிப்பட்ட நபர்களாக வெளிவேலைக்குப் போவது என்பது நிச்சயமாகப் பெண்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த முற்போக்கான மாற்றம்தான். அதுவும்,‘கற்பொழுக்கம்’ உள்ளிட்ட கற்பிதங்களால் பெண்களின் வெளிநடமாட்டாம் பெருமளவில் முடக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தில், பெண்கள் வீட்டிற்கு வெளியே வேலைக்குப் போவது என்பது புரட்சிகரமான விஷயமும்கூட. இந்த வாய்ப்பை முதலாளித்துவம் ஏற்படுத்தியது என்பதும் உண்மைதான். ஆனால், இது நிகழ்ந்தது முதலாளித்துவ முறையின் முற்போக்கு அம்சங்களால் அல்ல.
18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் நவீன தொழில் உற்பத்தி முறை உருவாகத் தொடங்கி, அதன் உடன் விளைவாக நவீன பாட்டாளி வர்க்கம் தோன்றிய வரலாற்றை நாம் ஆராய்ந்தால், பெண்ணடிமைத்தனம் வேரூன்றிய ஒரு சமூகத்தில் பெண்கள் எப்படித் திடீரென வெளிவேலைக்குப் போகும் தொழிலாளர்களாக மாறினார்கள் என்பது விளங்கும். தொழிலாளர்களாகப் பெண்கள் தொழிற்சாலைகளுக்குள் நுழையத் தொடங்கியதற்கான காரணம், பெண்களின் மேம்பாட்டின்மீது முதலாளித்துவ முறைக்கு இருக்கும் அக்கறை அல்ல என்பது புரிபடும்.
அன்றைக்கு இங்கிலாந்தின் பிரதான தொழில்களாக நிலக்கரி, பஞ்சாலைத் தொழில்கள் இருந்தன. இந்த இரண்டு தொழில்களும், 18-ஆம் நூற்றாண்டின் மத்தி வரை குடும்பங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்களாகவே இருந்தன. குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களோடு பெண்களும், குழந்தைகளும் இணைந்து பணியாற்றியே வந்தார்கள். கைநெசவு போன்ற தொழில்களில் பெண்கள் பிரதான பங்கு வகித்தார்கள். ராட்டை சுற்றும் ‘ஸ்பின்னிங்’ (Spinning) வேலையை குடும்பத்தில் பெண்களே செய்து வந்தமையால் புழக்கத்திற்கு வந்த வார்த்தைதான் திருமணமாகாத பெண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ‘ஸ்பின்ஸ்டர்’ (Spinster) என்ற ஆங்கிலச் சொல். சமையல், வீட்டுப்பராமரிப்பு வேலைகளைத் தாண்டி அன்றைக்கு உற்பத்தியில் பெண்கள் ஈடுபட்டதற்கு சாட்சியாக இந்த வார்த்தை இருக்கிறது. சரி, முதலாளித்துவ முறையின் ஆலைத்தொழிலுக்குப் பெண்கள் வந்த கதையைப் பார்ப்போம்.
ஆலை உற்பத்தி முறையில் பெண்கள்
இங்கிலாந்தின் முதல் (பட்டு) ஆலை 1718 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டிருக்கிறது. ஜின்னிங் இயந்திரம், புதிய நீராவி இயந்திரம், பவர் லூம் எனப் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வரத்தொடங்கி 1780 வாக்கில் நவீன ஆலை உற்பத்தியின் காலம் தொடங்கியது. ஆலைகளில் மின்னல் வேகத்தில் நடந்த உற்பத்தியால், பழைய பட்டறைத் தொழில்களுக்குரிய எளிய உற்பத்தி சாதனங்களைக் கொண்டு இனி பிழைத்திருக்க முடியாது என்ற நிலை உருவானது. முன்பு பட்டறைத் தொழிலாளர்கள் பொருட்களை தொடக்கம் முதல் இறுதிவரை முழுமையாக உருவாக்கும் முழுபடைப்புத்திறன் கொண்டவர்களாக இருந்தார்கள். தொழிற்சாலைகளில் பெரிய பெரிய இயந்திரங்களின் வரவுக்குப் பிறகு அத்தகைய முழுதிறன்கள் அவசியப்படவில்லை. இயந்திரங்களை இயக்குவதற்குரிய வலிமையும், திறனும் இருந்தால் போதும் என்றானது. முன்பு மக்கள் உற்பத்திக் கருவிகளுக்கு உடைமையாளர்களாக இருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வந்தார்கள். நவீன பிரம்மாண்ட தொழிற்சாலைகள் வந்ததும், உற்பத்திக் கருவிகள் ஏதும் அற்றவர்களாக, பிழைப்புக்குத் தங்களுடைய உழைப்புச் சக்தியை விற்க வேண்டிய நவீன பாட்டாளி வர்க்கமாக மாறிப்போனார்கள். கூலிக்கு வேலை தேடித் தொழிற்சாலைகளுக்குச் சென்றார்கள். இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியின் மக்கள் தொகை 1760 ஆம் ஆண்டில் வெறும் 17,000 மட்டுமே. அதுவே, 1830 ஆம் ஆண்டில் 1,80,000. வாழ்வாதாரங்களை இழந்து வேலை தேடி எவ்வளவு பேர் தொழிற்சாலை பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள்!
எங்கெல்ஸ் எழுதிய முதல் நூல் ‘இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கம்’. மார்க்ஸுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதுவதற்கு முன்பாக, உலகத் தொழிலாளர்களை கம்யூனிஸ்ட் லீக் போன்ற அமைப்புகளின்கீழ் அணிதிரட்டும் பணிகளில் ஈடுபடத் தொடங்குவதற்கு முன்பாக, எங்கெல்ஸ் தன்னுடைய 24 ஆம் வயதில் இந்நூலை எழுதினார். தொழிற்புரட்சியின் தாயகமாக விளங்கிய இங்கிலாந்தில் நவீன பாட்டாளி வர்க்கம் எப்படித் தோற்றம் பெற்றது, எவ்வளவு கொடூரமான சுரண்டலை அனுபவித்தது என்பதை விரிவாக ஆராய்ந்து இந்நூலை வடித்திருக்கிறார் எங்கெல்ஸ்.
நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்னணியில், நவீன தொழில்சாலைகளின் வரவோடு, இங்கிலாந்தில் பாட்டாளி வர்க்கம் தோன்றிய காலத்தில், பெண்கள் நவீன ஆலை உற்பத்திக்குள் நுழைந்த கதையையும் இந்நூல் நமக்குப் படம்படித்துக் காட்டுகிறது. “1839 ஆம் ஆண்டில் பிரிட்டனின் 4,19, 590 ஆலைத் (பருத்தி சார்ந்த) தொழிலாளர்களில் ஏறத்தாழ பாதி பேர் – 1,92, 887 பேர் 18 வயதுக்கு உட்பட்டோர். 2,42, 296 பேர் (பாதிக்கும் மேற்பட்டோர்) பெண்கள். இவர்களில் 1,12, 192 பேர் 18 வயதுக்கு உட்பட்டோர். ஆண் தொழிலாளர்களில் 80, 695 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்; 96, 599 பேர் வயதுவந்த ஆண்கள்.” என்ற விவரங்களை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் எங்கெல்ஸ். பஞ்சாலைகளில் 56.25 சதவிகித தொழிலாளர்களும், கம்பளித் தொழிற்சாலைகளில் 69.5 சதவிகித தொழிலாளர்களும், பட்டு ஆலைகளில் 70.5 சதவிகித தொழிலாளர்களும், ஆளி நூற்பாலைகளில் 70.5 சதவிகித தொழிலாளர்களும் பெண்களாக இருந்தார்கள்” –இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவையில் 10 மணி நேர வேலைச் சட்டம் குறித்த விவாதத்தில் (1844 ஆம் ஆண்டு, மார்ச் 15) ஆஷ்லே பிரபு தெரிவித்திருந்த தரவுகளை ஆராய்ந்து, இந்த விவரங்களைப் பதிவு செய்திருந்தார் எங்கெல்ஸ். 1818 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பஞ்சாலைகளின் மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையே வெறும் 57, 323 தான் என ஆஷ்லே தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அதுவே, 1839 ஆம் ஆண்டில் இந்தத் துறையில் பணியாற்றிய வயது வந்த பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை 1,30,104, சிறுமிகள் எண்ணிக்கை 1,12,192.
தொழிற்சாலைகளின் ஆரம்ப காலகட்டத்திலேயே, பெரும் எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் பணியாற்றியதைக் காண்கிறோம். பஞ்சாலைத் தொழிலில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகமாக இருந்திருக்கிறார்கள். பெண்கள் இப்படி கொத்துக்கொத்தாக வேலைக்கு எடுக்கப்பட்டதற்கான காரணம் என்னவாக இருந்திருக்க முடியும்? ஒன்று, பழைய உற்பத்தி முறை அழிந்து வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் எல்லாருமே தொழிற்சாலைகளுக்குப் போய் வேலை பார்த்தாக வேண்டும் என்கிற நிலைமை அன்றைக்கு உருவானது. அதோடு, தாங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராகப் பெரிதாக முணுமுணுக்காமல், அடிபணிந்த நிலையில், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் வேலை செய்வார்கள். ஏற்கனவே வீட்டளவில் காலங்காலமாக அனுபவித்துவரும் சுரண்டலுக்கு எதிராகப் போராடாத ஒரு மனித இனம் அல்லவா? அதனால், ஒப்பீட்டளவில் ஆண்களைவிடப் பெண்களை அதிகமாகச் சுரண்ட முடியும். அதைவிட முக்கியமாக, ஆண்களைக் காட்டிலும் குறைந்த கூலிக்கு பெண்களை வேலைக்கு எடுக்க முடியும். இவைதான் முக்கியக் காரணங்களாக இருந்தன.
இங்கிலாந்தின் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமும் விலங்குகளைவிட மோசமாக சுரண்டப்பட்டார்கள் என்றாலும், பெண்கள் மிக மிகக் கொடூரமான வன்முறையை அனுபவித்தார்கள். 12,14,16 மணி நேரங்கள் தொடர்ச்சியாக நின்ற நிலையில் அவர்கள் வேலை பார்க்க நேரிட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கும் இதே நிலைதான். பல சமயம் கர்ப்பிணிப் பெண் தொழிலாளர்கள் ஆலைகளில் இயந்திரங்களுக்கு இடையிலேயே குழந்தைகள் பெற நேர்ந்தது. குழந்தை பெற்றெடுத்த பெண் தொழிலாளர்கள் தாங்கள் சீக்கிரம் பணிக்குத் திரும்பாவிட்டால், வேலை பறிபோய்விடுமே! பிழைப்புக்கு வேறு வழி கிடையாதே! என்ற பயத்தில், மகப்பேறுக்குப் பிறகு வெறும் 3, 4 நாட்களுக்குள் பணிக்குத் திரும்ப வேண்டி இருந்தது. தாங்கள் வசித்துவந்த தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் பணிக்குச் செல்லாத பெண்களிடம் தங்களுடைய குழந்தைகளைத் திணித்துவிட்டோ, அல்லது வீட்டில் இருக்கிற சற்று பெரிய குழந்தைகளின் பொறுப்பில் சிறிய குழந்தைகளை விட்டுவிட்டோ, பெண்கள் வேலைக்குத் திரும்பி இருக்கிறார்கள். நாள் முழுவதும் மார்பகங்களில் இருந்து பால் வடிந்ததால் அவர்களின் உடைகள் ஈரமாயின. மார்பில் பால் கட்டிக்கொள்ள வலியால் அவஸ்தை பட்டுக்கொண்டே முதுகொடிக்கும் கடுமையான வேலையையும் அவர்கள் செய்தார்கள். அவர்களுடைய குழந்தைகளோ கவனிக்க ஆள் இல்லாத நிலையில், நீரில் மூழ்கி, தீ விபத்தில் சிக்கியெல்லாம் இறந்திருக்கின்றன. இந்தச் செய்திகளை எல்லாம் எங்கெல்ஸ் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.
இங்கிலாந்தின் ஆரம்பகாலத்தில் சில துறைகளில் ஆண் தொழிலாளர்களைவிடப் பெண் தொழிலாளர்களின் விகிதம் அதிகமாக இருந்திருக்கிறது. மேலே பார்த்த பஞ்சாலைத் துறை இதற்கு ஓர் உதாரணம். ஆனால், ஆடை உற்பத்தி, பஞ்சாலை போன்ற தொழில்களில் மட்டும் பெண்கள் வேலை பார்க்கவில்லை. உலோகம், கண்ணாடி, சுரங்கத் தொழில் உள்ளிட்ட எல்லா துறைகளிலும், எந்த வேலைகளில் எல்லாம் பெண்களைப் பயன்படுத்த முடியுமோ பயன்படுத்தியிருக்கிறார்கள். நிலக்கரிச் சுரங்கங்களின் குறுகிய பாதைகளில் நிலக்கரியைத் தள்ளுவண்டியில் இழுக்கும் கடினமான பணிகளைக்கூடப் பெண்கள் செய்திருக்கிறார்கள். இடுப்பில் ஒரு பட்டியைக் கட்டிக்கொண்டு அதோடு இணைக்கப்பட்டிருக்கும் வண்டியை அவர்கள் வாயில் வரை இழுத்துச் செல்ல வேண்டும். ஒரு சுரங்கத்தில் இந்த வேலையைச் செய்துகொண்டிருந்த போதே ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. பிறந்த சிசுவை தனது பாவாடையில் பிடித்துக்கொண்டே அந்தப் பெண் வெளியே வந்திருக்கிறார். இங்கிலாந்தின் சுரங்கத்தொழிலில் பெண்களும், குழந்தைகளும் பணியாற்றிய சூழல் குறித்த 1842 ஆண்டின் பிரிட்டிஷ் பாராளுமன்ற அறிக்கைகளில் இப்படிப்பட்ட பதிவுகளை நிறைய காணலாம்.
இப்போது, பெண்களைத் தொழிலாளர்களாக முதலாளித்துவ முறை உற்பத்திக் கூடங்களுக்கு இழுத்து வந்ததற்கான காரணம் நமக்குத் தெளிவாகப் புரியும். ‘பெண்களின் உழைப்பு தொழிற்துறை வளர்ச்சிக்கு அவசியமானது’ என்கிற சமூகத்தின் தேவையோ, அல்லது, ‘எனது மேம்பாட்டிற்கு, சொந்தக் காலில் நிற்கும் எனது சுயமரியாதை வாழ்வுக்கு, எனக்கு ஒரு வேலை மிகமிக அவசியமானது’ என்ற பெண்களின் தேவையோ, முதலாளித்துவ முறை பெண்களைப் பணியில் அமர்த்தியதற்குக் காரணம் அல்ல. மிக அற்பமான கூலியில் பணியமர்த்தி, நிறைய நேரம் வேலை வாங்கி, நிறைய உழைப்பை உறிஞ்சி, நிறைய உபரியைப் பெருக்கிட வேண்டும். இதுமட்டுமே முதலாளித்துவ முறையின் நோக்கம். யாரை இவ்வாறு சுரண்டிவிட முடியும்? சமூகத்திலும், குடும்பங்களிலும் ஏற்கனவே இரண்டாந்தர நிலையில், அடிபணிந்த நிலையில் இருப்பவர்கள் பெண்கள். எனவே, ‘அடிமைகளிலேயே மிகச் சிறந்த அடிமைகள் பெண்கள்தான்’ என்ற அடிப்படையில், தொழிலாளர்களிலேயே பெண் தொழிலாளர்களை மிக மோசமாகச் சுரண்ட முடியும். அதேபோல மிகவும் மென்மையான குழந்தைகளைச் சுரண்ட முடியும். இந்தக் காரணங்களாலேயே பெண்களையும், குழந்தைகளையும் ஆலை உற்பத்தி முறைக்கு முதலாளித்துவம் தன்னுடைய மிக ஆரம்ப காலத்திலேயே இழுத்து வந்தது.
ஆதாரங்கள்:
Women in Class society, 1978, Heleieth, I. B. Saffioti, Monthly Review Press
Working Class in England, F. Engels, First Published 1845 (available at marxists.org)
Lord Ashley, Hours of Labour in Factories, Address at the House of Commons of BP, March 15, 1844 (available at api.parliament.uk)
Economic Change and Sex Discrimination in the Early English Cotton Factories, Douglas A. Galbi, 8 March, 1994 (available at Galbithink.org)
Through Eyes in the Storm, Aspects of the Personal History of Women Workers in the Industrial Revolution, Douglas A. Galbi, 1994 (Available at Galbithink.org)
Women Workers in the British Industrial Revolution, Joyce Brunette (available at eh.net)