பெண்களை வதைக்கும் புதிய பேயும், பழைய பேயும்
‘சுரண்டல்தான் விதி’
மூலதன நூலைப் படைப்பதற்காக மார்க்ஸ் முதலாளித்துவ முறையையும், அந்த முறைக்குரிய உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை முறைகளையும் ஆராய வேண்டி வந்தபோது, அதற்கான தூய்மையான சூழல் இங்கிலாந்தில் நிலவியது. தொழிற்புரட்சி அங்கு உச்சத்திற்கு சென்ற காலம் அது. முதலாளித்துவ முறையின் தன்மைகள், முரண்பாடுகள் மிகத் தெளிவாக வெளிப்பட்டன. அதனால், மார்க்ஸ் கண்கூடாகப் பார்த்து, தன்னுடைய கோட்பாட்டு சிந்தனைகளை வளர்த்தெடுப்பதற்கு, இங்கிலாந்தை முக்கிய எடுத்துக்காட்டாகக் கொண்டார். கூலி உழைப்பில் பெண்கள் அனுபவித்த உச்சபட்ச சுரண்டலிற்கான காரணங்கள் அவருடைய மூலதனம் நூல் வாயிலாக நமக்குத் தெரிய வருகிறது.
‘காலங்காலமாக ஆணாதிக்க வர்க்க சமூகங்களின் குடும்ப அமைப்பில் கீழ்படிந்த நிலையில்தான் பெண்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களின் இந்த அடிமைநிலையை முதலாளித்துவ முறை ‘மிகச் சிறப்பாகப்’பயன்படுத்திக் கொண்டிருக்கிறது; தொழிலாளியாக பெண்களை கொடூரமாக சுரண்டுகிறது’- இதை முதலாளித்துவ முறை இங்கிலாந்தில் தோன்றிய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, நம்மால் தெளிவாக உணர முடிகிறது.
‘தொழிற்புரட்சியின் தாயகமான இங்கிலாந்தில் இப்படி நிகழ்ந்திருக்கலாம். மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு நவீன ஆலை உற்பத்தி முறை தோன்றிய பிற இடங்களிலும், நிலைமை இந்தளவுக்கு மோசமாக இருந்திருக்குமா என்ன?’ – என நாம் சந்தேகிக்கலாம்.
ஆனால், முதலாளித்துவ முறை எங்கெல்லாம் தோன்றியதோ, எங்கெல்லாம் உழைப்புச் சக்தியை விற்றுப் பிழைப்பதை விட்டால் தங்களுக்கு வேறு கதியில்லை என்ற நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டார்களோ, அங்கெல்லாம் ஏறத்தாழ இதே நிலைமைதான். குழந்தைகள் உட்பட குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் வேலைக்குப் போனால்தான் சோறு என்ற நிலை. அதனாலேயே முந்தைய உற்பத்தி முறைக்கான உற்பத்தி சாதனங்களை வைத்து பிழைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களில், பெண்கள் ஆலை உற்பத்தி வேலைக்குச் சென்றார்கள்.
மேற்கு ஐரோப்பாவில், இங்கிலாந்தைத் தொடர்ந்து, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்சு போன்ற நாடுகளில் நவீனதொழில் வளர்ச்சி நடந்தது. இடைவேளை இல்லாமல் தொடர்ச்சியாக தொழிற்சாலை இயங்குவதற்கான புனல்சக்தி கிடைக்கிற ஆற்றங்கரைப் பகுதி, நிலக்கரி போன்ற வளங்களைப் பொறுத்து ஆங்காங்கே நவீன உற்பத்தி முறை தொடங்கியது.
இங்கிலாந்தைப் போலவே இங்கெல்லாமும், பல துறைகளில் ஒப்பீட்டளவில் ஆண் தொழிலாளர்களைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் பெண்கள் பணியமர்த்தப்பட்டார்கள். எல்லா இடங்களிலும் பெண் தொழிலாளர்கள் பிற தொழிலாளர்களைவிட மோசமாகவே சுரண்டப்பட்டார்கள்.
ஜெர்மனியில் பெண் தொழிலாளர்கள்
மூலதனத்தைப் படிக்கும் ஜெர்மானியர்கள், ‘ஆங்கிலேய தொழிற்துறையில், வேளாண்துறையில் என்ன இந்தளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது!, ஜெர்மனியில் இந்தளவுக்கு நிலைமை மோசமாக இருக்காது’ எனக் கருதினால், ‘கதை உங்களைப் பற்றியதுதான்’ என்கிறார் மார்க்ஸ். மேலும், “ஜெர்மனியில் முதலாளித்துவ உற்பத்தி முறை முழுஅளவில் இயல்பாகிவிட்ட இடங்களில் (உதாரணமாக முழுமையான தொழிற்சாலைகளில்) இங்கிலாந்தைக் காட்டிலும் நிலைமை மோசம்” என்கிறார்.
இங்கிலாந்தில் 1780 தொடங்கி முதலாளித்துவ முறை வளர்ச்சிபெற்றது என்றால், ‘1848 தொடங்கி ஜெர்மனியில் முதலாளித்துவ முறை வேகமாக வளர்ச்சியடைந்தது’ என்கிறார் மார்க்ஸ். 1873 வாக்கில் ‘அது ஊகக்கொள்ளையிலும், வளங்களை சூரையாடுவதிலிம் முழுவளர்ச்சிடைந்துவிட்டது’ என்று அவர் விளக்குகிறார்.
இங்கிலாந்தில் கணக்கெடுப்புகள் மற்றும் கமிஷன்களின் செயல்பாடுகளால் நிறைய புள்ளிவிவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால், இங்கிலாத்தை ஒப்பிடும்போது, பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புள்ளிவிவரங்கள் படுமோசம், குறிப்பாக, முதலாளித்துவத்தின் தொடக்க காலத்திய புள்ளிவிவரங்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன.
தோழர் கிளாரா ஜெட்கின். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையில் பாட்டாளி வர்க்கப் பெண்களின் பாத்திரத்தை வலியுறுத்திய புகழ்பெற்ற ஜெர்மானிய கம்யூனிஸ்ட். ஜெர்மானிய சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரான இவர், ஜெர்மனியின் பெண் தொழிலாளர்கள் பற்றிச் சொல்கிறார்: “1882 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் 23 மில்லியன் மக்கள்தொகையில் 5.5 மில்லியன் பெண்களும், சிறுமிகளும் முழுமையான வேலைவாய்ப்பில் இருந்தார்கள். பெண்களில் கால்வாசியினருக்கு குடும்பங்களை அடிப்படையாகக் கொண்ட முந்தைய உற்பத்தி முறை வாழ்வாதாரமாக இல்லை. தொழிற்சாலை மற்றும் சுரங்கத்தொழிலில் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை, 1882 ஆம் ஆண்டைக் காட்டிலும், 1895 ஆம் ஆண்டில் 35 சதவிகிதம் அதிகரித்தது; அதுவே ஆண் தொழிலாளர்களில் இந்த அதிகரிப்பு விகிதம் வெறும் 28% மட்டுமே. சில்லரை வணிகத்தில் பெண்களின் வேலைவாய்ப்பு இதே இடைவெளியில் 94% அதிகரித்துள்ளது. ஆண்களின் வேலைவாய்ப்பு அதிகரிப்பு வெறும் 38 சதவிகிதம் மட்டுமே” இவ்வாறு குறிப்பிட்டார்.
உபரி உற்பத்தியைப் பெருக்கும் தனது தலையாய நோக்கத்தால், முதலாளித்துவ உற்பத்தி முறை வாய்ப்பிருக்கும் சூழல்களில் எல்லாம் பெண்களை வீட்டிற்கு வெளியே இழுத்துவந்து பணியில் அமர்த்தியது என்பதை ஜெர்மனியிலும் காண முடிகிறது.
பிரான்சில்…
நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொழிற்சாலைமயத்தோடு இணைந்திருந்த சிறிய அளவிலான உற்பத்திகள் (இவை குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது; மனித சக்தியை நம்பியிருந்தது) தொழிற்சாலைமயமான ஜவுளித் தொழில், ஆடை உற்பத்தி, வீட்டு சேவை- இவைதான் பிரான்சில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய துறைகளாக இருந்தன.
அங்கு பெண்களின் திருமணமான நிலை அவர்களுடைய வேலைவாய்ப்புகளில் தாக்கத்தை செலுத்தி இருக்கிறது. திருமணமாகாத பெண்களைப் பணியிலமர்த்துவதற்கே அங்கு முதலாளிகள் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள். 19, 20 ஆம் நூற்றாண்டு பிரான்சில், திருமணமான பெண்களை தொழில் உற்பத்தியில் பயன்படுத்திக்கொள்வதில் இரண்டு அணுகுமுறைகளை முதலாளித்துவம் கடைப்பிடித்திருக்கிறது.
1) திருமணமான பெண்களை முடிந்தால் தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தி வேலை வாங்குவது 2) குடும்பத்தைக் கவனிப்பதுதான் பெண்களின் பிரதான கடமை என்ற அழுத்தம் மிகுதியாக இருந்த சூழ்நிலையில், வீடுகளை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியை, தொழிற்சாலை உற்பத்தியோடு இணைத்து, பிரெஞ்சு முதலாளிமார்கள் தொழிலை நடத்தியிருக்கிறார்கள். வீடுகளில் இருந்துகொண்டு, பிள்ளைகளைக் கவனித்தல், சோறாக்குதல் போன்ற பணிகளோடு, துணி தைப்பது, லேஸ் செய்வது, ஷூக்கள் உற்பத்தியில் பகுதி வேலைகள் செய்வது போன்ற தொழிற்துறைப் பணிகளையும் செய்திருக்கிறார்கள் பெண்கள். ‘இது எப்படி இருக்கு?!’
பிரான்சின் மான்செஸ்டர்’ என வர்ணிக்கப்பட்ட பகுதி ரூபே (Roubaix). வடக்கு பிரான்சில் உள்ளது. இங்கு 1870ல் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் பாதி பேர் ஜவுளித்தொழிலாளர்கள்; இவர்களில் பாதி பேர் பெண்கள். 15 வயதுக்கு அதிகமான திருமணம் ஆகாத பெண்களில் 81 சதவிகிதத்தினரும், திருமணமான பெண்களில் 17 சதவிகிதத்தினரும், வேலைவாய்ப்பில் இருந்தார்கள். திருமணமான பெண்களை வெளிவேலைக்கு எடுப்பதில் சிக்கல்கள் இருந்ததை இந்தப் புள்ளிவிவரம் நமக்கு உணர்த்துகிறது.
வடக்கு பிரான்சில் அமிய(ன்) (Amiens) என்ற இன்னொரு புகழ்பெற்ற தொழிற்பகுதி உண்டு. அங்கு 1872ல் ஜவுளித் தொழிலாளர்களில் பாதி பேர் பெண்கள். ரூபேயைப் போலவே இங்கும் திருமணமான பெண்கள் வேலைவாய்ப்பில் இருந்தது குறைவுதான். 15 வயதுக்கு அதிகமான திருமணம் ஆகாத பெண்களில் 70 சதவிகிதத்தினரும், திருமணமான பெண்களில் 35 சதவிகிதத்தினரும் வேலைவாய்ப்பில் இருந்தார்கள். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அங்கு நவீன ஜவுளித் தொழில், ஆடை உற்பத்தித் தொழில், காலணி, ஷூக்கள் உற்பத்தி, ரயில் தண்டாவாளத் தொழில் எனப் பல வகையான தொழில்கள் வளர்ச்சியடைந்தன. உற்பத்தித் துறையில் பணியாற்றிய மொத்த தொழிலாளர்கள் 58 சதவிகிதம் பேர். அமியனின் மொத்த தொழிலாளர் படையில் 39 சதவிகிதத்தினர் பெண்கள். திருமணமான பெண்களில் 30 சதவிகிதம் வேலைவாப்பில் இருந்தார்கள். ரூபேவைப் போலவே இங்கும் திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பதில் சிக்கல்கள் இருந்தன என்பது இந்தப் புள்ளிவிவரத்திலேயே தெரிகிறது.
எப்படியாகினும் சுரண்டுவோம்!
இருந்த போதிலும், ரூபே, அமியன் இரண்டு பகுதிகளிலும் வீட்டில் இருந்தபடியே திருமணமான பெண்களை உற்பத்தியில் ஈடுபட வைத்து, கடுமையாகச் சுரண்டியிருக்கிறார்கள் முதலாளிமார்கள்.
நவீன தொழில்துறை உற்பத்தி முறைகளில் தொடர்ந்து மாற்றங்களைப் புகுத்திவரும். இன்றைக்கு வருகிற இயந்திரம், குறிப்பிட்ட உற்பத்தி வகை ஒரு சில ஆண்டுகளில் காணாமல் போய்விடும். அமியனில் நகர்ப்பகுதி ஜவுளித் தொழிலும், கைவினைத் தொழிலும் நசிந்து, ஜவுளிக்கான முன்தயாரிப்பு தொழில்கள் நசிந்து மாற்றங்கள் வந்தன. அப்போது அங்கு கிடைக்கிற உழைப்புக்குத் தகுந்தவாறு, கட்டுப்பாடுகளுக்குத் தகுந்தவாறு, உற்பத்தி இடங்களைத் திட்டமிட்டு, புதிய தொழில்களை முதலாளிகள் தொடங்கினார்கள். கிடைக்கிற உபரி உழைப்பை உறிஞ்சும் நோக்கில் ஆடை உற்பத்தித் தொழில் அங்கு சென்றது. ஷூக்கள் உற்பத்தி, உள்ளாடைகள் உற்பத்தி போன்ற தொழில்களில், தையல், செப்பனிடுவது போன்ற வேலைகளை திருமணமான பெண்களைக் கொண்டு வீடுகளிலேயே நிறைவேற்றிக்கொண்டார்கள் முதலாளிகள்.
வேலைநேரம், வேலை இடம் போன்ற அம்சங்களைப் பற்றி தொழிற்சாலை சட்டங்கள் பேசியபோது, ‘யாரை எங்கே, எப்படி வேலை வாங்க வேண்டும்?’ எனத் திட்டமிடும் சுதந்திரம் முதலாளிகளுக்கு அவசியம் என்ற ரீதியில், முதலாளிகள் பேசி இருக்கிறார்கள். ‘திருமணமான பெண்கள் ‘கூடுதலுக்காகத் தான்’ (For Extras) வேலை பார்க்கிறார்கள். அதற்கு அவர்களை தொழிற்சாலைகளுக்கு அழைத்து வந்து வேலைவாங்கத் தேவையில்லை; அவர்களுடைய வீட்டிலேயே வைத்து வேலை வாங்கினால் போதும்’ என்றெல்லாம் வாதிட்டிருக்கிறார்கள். நியமனம் செய்யப்படாத தொழிலாளர்களாக (Un appoints) திருமணமான பெண்கள் இருந்துள்ளார்கள். சுரண்டல் அளவு இவர்களுக்கு இன்னும் அதிகம். புள்ளிவிவரங்களில் இவர்கள் வரமாட்டார்கள். ஆனால், உற்பத்தியில் பிரதான பகுதியை இவர்கள் வீட்டில் இருந்துகொண்டு இடுப்பொடிய செய்வார்கள்.
சமீபத்தில் மறைந்த புகழ்பெற்ற ஜெர்மானிய மார்க்சிய பெண்ணியவாதியான மரியா மைஸ், இந்த வகையில் பெண்களின் உழைப்பை உறிஞ்சும் நவீன சுரண்டல் முறைகளை உலகம் முழுவதிலும் ஆய்வு செய்திருக்கிறார். ஐரோப்பாவில் தொழிற்புரட்சிக்கு முந்தைய காலம், தொழிற்புரட்சிச் காலம், நவீன காலத்தில் இந்தியா, பங்களாதேசம் உள்ளிட்ட முன்னாள் காலனி நாடுகள் என- திருமணமான பெண்களை அவர்களுடைய வீட்டில் வைத்தே உற்பத்தியில் ஈடுபடுத்தி சுரண்டும் முறையை ஆழமாக ஆராய்ந்திருக்கிறார். ‘Housewifization’ (ஹவுஸ்வைஃபைஸேஷன்) என இந்த வகைச் சுரண்டலை அவர் குறிப்பிடுகிறார். ‘வீட்டுமனைவி-மயமாக்குதல்’ எனத் தமிழில் சொல்லாமா?
‘பெண்களையும், குழந்தைகளையும் வேலைக்கு எடுப்பதில், வேலை நேரம், வயது தொடர்பான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டதால், குடும்பத்தின் பொருளாதார நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது’ என்ற கருத்துகளை பிரான்சு பற்றிய அந்தக் காலத்திய ஆவணங்களில் பார்க்க முடிகிறது. ‘பெண்கள் தொழிற்சாலைப் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டாலும், அவர்கள் ஏதோ ஒரு வகையில் சம்பாதிக்க வேண்டிய நிலையில்தான் இருந்தார்கள். வீட்டில் இருந்து துணி தைக்கும் வேலையைச் செய்வது, அல்லது முதலாளிகள் வீட்டில் வேலைக்குச் செல்வது என அவர்கள் ஏதாவது வேலையைச் செய்ய வேண்டி இருந்தது. எப்படியும் அவர்களால் குடும்பத்தைக் கவனிக்க முடியாமலே போனது. இப்படி பத்து மணி நேரம் அவர்கள் வேலை பார்த்தாலும், சொற்ப கூலியே பெற்றார்கள். அவர்களுடைய குடும்பத்தின் நிலை பரிதாபகரமாகவே இருந்தது. திருமணமான பெண்கள் வேலைக்குப் போக முடியாத குடும்பங்கள் மிகுந்த வறுமைநிலையில் இருந்தன’- என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பழைய பல்லவி
உலகம் முழுவதும் தொழிற்சாலை சீர்திருத்தம் என்று வருகிற போது, இங்கிலாந்தின் சட்டங்களைப் போலவே, பிற பகுதிகளிலும் பெண் தொழிலாளர்கள் வேலை நேரத்தைக் குறைப்பதையும், குழந்தைத் தொழிலாளர்களின் வயது வரம்பை உயர்த்துவதுதையும் நோக்கமாகக் கொண்டே சீர்திருத்தங்கள் கோரப்பட்டன.
‘பெண்கள் தொழிற்சாலை வேலைக்குச் சென்றால் குடும்ப அமைப்பு உடையும்’ என்ற கருத்து பொதுவாக எல்லா நாடுகளிலும் மேலோங்கி இருந்தது. இது பெண்களை வேலைக்கு எடுக்கும் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. ‘பெண்கள் தனிப்பட்ட மனிதர்களாக வெளிவேலைக்குச் செல்வது என்பது அவர்களின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும் அவசியமானது’ என்ற நோக்கில் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்படவில்லை. பெண்களை மீண்டும் வீட்டுக்கு அனுப்பி, அதன் மூலமும் ஆதாயம் பெருவதற்கே ஆளும் வர்க்கங்களும், அவற்றின் அமைப்பான அரசுகளும் கணக்குப் போட்டன.
“முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சியால் மட்டுமன்றி, அந்த வளர்ச்சியின் அறைகுறை வளர்ச்சியாலும் நாம் அவதிப்படுகிறோம்” என்றார் மார்க்ஸ். இந்தக் கூற்று பெண்களின் நிலையை, பெண் தொழிலாளர்களின் நிலையை நாம் புரிந்துகொள்வதற்குக் கச்சிதமாக உதவுகிறது. “நவீன காலத் தீமைகளோடு கூடவே, நாம் மரபுரிமையாகப் பெற்ற பண்டைய தீமைகளும் நம்மை ஒடுக்குகின்றன” எனும் மார்க்ஸின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையான வார்த்தைகள்! பழைய வரலாற்றைப் படிக்கும் போதும் சரி, நாம் வாழும் காலத்தில் நடக்கிற விஷயங்களை நேரடியாகப் பார்க்கும் போதும் சரி, மார்க்ஸின் இந்த வார்த்தைகள் நம்மைப் பொட்டில் அறைகின்றன.
“பழைய உற்பத்தி முறை உயிர்ப்பற்று இன்னும் எஞ்சி இருக்கிறது. அதனுடைய காலத்துக்கொவ்வாத சமூக, அரசியல் தீமைகள் நம்மை இன்னமும் வதைக்கின்றன.” என்கிறார் மார்க்ஸ். நிலவுடைமைச் சமூகத்தில் குடும்பம் சார்ந்து உற்பத்தி நடந்தது. பெண்கள் அப்போதும் உற்பத்தியில் ஈடுபட்டார்கள். அவர்கள் என்றைக்குமே ‘சும்மா’ இருந்ததில்லை. ஆனால், வர்க்க சமூகத்தில் பெண்கள் வீட்டளவில் செய்த வேலைகளுக்கு ‘சமூக மதிப்பு இல்லை’ என்பதால், அவர்கள் பிரதான தொழிலாளர்களாகக் கருதப்படவில்லை. ‘குடும்பத்தைப் பராமரிப்பது, குழந்தைகள் வளர்ப்பு- இவையே பெண்களின் பிரதான கடமை’ என்றே சமூகம் கருதியது. அதனால், அன்றைக்குப் பெண்கள் செய்த உற்பத்தி சார்ந்த வேலைகள் சமூகக் கணக்கில் வரவே இல்லை. முதலாளித்துவ சமூகத்தில் பெண்கள் வெளிவேலைக்குச் செல்லும் சூழல் கனிந்தாலும், ‘பெண்கள் பிரதான தொழிலாளர்கள் கிடையாது’ என்ற பண்டைய பார்வையே முதலில் எழுகிறது. எனவே, முதலாளித்துவ முறை வளர்ந்த போது, ‘குடும்பம் என்னாவது?’ ‘பெண்களின் இடம் வீடு!’, ‘அவர்களை வீட்டுக்கு அனுப்பு!’ பழைய பல்லவிகள் பாடப்படுகின்றன. புதிய பேயோடு, பழைய பேய்களும் இணைந்து கொள்கின்றன.
எனினும், ‘ஆண்கள்தான் பிரட் வின்னர்’என்ற கருத்து முதலாளித்துவ சமூகத்தில் வலுப்பெற்றாலும், வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் போன குடும்பங்களின் நெருக்கடிகளை சாதமாக்கிக்கொண்டு, வாய்ப்புள்ள போதெல்லாம் பெண்களின் உழைப்பை முதலாளித்துவம் உறிஞ்சவே செய்தது. பெண்களை வேலைக்கு எடுத்தாலும், எடுக்க முடியாமல் போனாலும், முதலாளித்துவத்திற்கு லாபமே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
‘பாட்டாளி வர்க்கத்தைப் பராமரித்து ரத்தமும், சதையுமாக வைத்திருக்கும் கடமை பெண்களுடையது’என்ற அடிப்படையில், முதலாளித்துவ அமைப்பில் பெண்கள் வெளிவேலைகளில் இல்லாமல் வீட்டில் அடைக்கப்பட்டிருந்தாலும், அவர்களால் இந்த முறைக்கு மிகப்பெரும் பயன் இருக்கிறது. எனவே, முதலாளித்துவத்துக்கு ‘பெண்கள் வெளிவேலையில் இருந்தாலும் ஆயிரம் பொன், வெளிவேலையில் இல்லாவிட்டலும் ஆயிரம் பொன்.’
தொடரும்…
ஆதாரங்கள்:
- The Capital, Volume 1
- Clara Zetkin, Only in Conjunction With the Proletarian Woman Will Socialism Be Victorious, (1896), Speech at the Party Congress of the Social Democratic Party of Germany, Gotha, October 16th, 1896. Berlin.
- Gender and Jobs in Early Twentieth-Century French Industry, Louise A Tilly, 1993, International Labour and Working-Class History
- Women and the Labour Movement In France, 1861-1914, Patricia J Hilden, The Historical Journal, 29, 4 (1986)
- Patriarchy and Accumulation on a World Scale: Women in the International Division of Labour, Maria Mies, Zed Books, 2014