சற்று தள்ளி ஒருவன் நின்றுகொண்டிருந்தான். சைக்கிளில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தவர் சட்டென்று நிறுத்தி, அவனுக்குப் பின்னால் இடைவெளிவிட்டு நின்று பார்த்தார். பிவா வெயிலின் உக்கிரத்தால் உருகி ஓடும் தார்ச்சாலை அருகில் வயிற்றில் பசியோடும், தாகத்தோடும் நின்றிருந்தான். நடந்து நடந்து கால்களெல்லாம் ஓய்வுக்கு கெஞ்சின. சைக்கிளில் வந்தவர் முகக் கவசத்தை முக்கிலிருந்து லேசாக இறக்கி, பசியால் வாடிக் கிறங்கிப் போயிருக்கும் அவனுடைய கண்களை ஊடுருவிப் பார்த்துக் கேட்டார்.
“ஏம்ப்பா… அங்கே கிடக்கிற பிரேதம் யாரோடது ? உனக்கு வேண்டியவங்களா…?”
“யார்…யாருன்னு தெரியலைங்களே” பசி மயக்கத்தில் பிவாவினால் பேச முடியவில்லை.
“மரத்தடியில் நிக்கிற, பிரேதம் யாருதுன்னு கேட்டா மரம் மாதிரி நிக்கிறாயே…
அப்போது முகக் கவசம் அணிந்த இன்னொருவர் சைக்கிளில் வந்து இறங்கினார். பேசிக்கொண்டிருந்தவரின் முகத்தைப் பார்த்து, “ஏன் முகக் கவசத்தை நாடிக்குக் கீழே இறக்கிவிட்டிருக்கிறாய்? மூக்கின் மேலே ஏற்றிப் போடு” என்றவர் திரும்பி பிவாவை அருவருப்போடு பார்த்தார்: “அந்தப் பிணம் யாருதுனு ஏதாவது சொன்னானா?”
“ஒண்ணுமே தெரியலை என்கிறான். எப்போது இங்கு வந்து செத்துப் போனதுன்னு யாருக்குத் தெரியும்? புலம் பெயர்ந்து வருபவர்களை எவரென்று அறிய முடியாது.”
இரண்டு பேரும் கண்ணுக்கெட்டிய தூரம் தேசிய நெடுஞ்சாலையை உற்று நோக்கினார்கள். ஊரடங்கினால் தார்ச் சாலையில் வெகுதூரம் வரையில் யாரும் தெரியவில்லை.
பல நாட்களாகவே வெளி மாநிலத்திலிருந்து ஜனங்கள் பெட்டிகளையும், மூட்டைகளையும் தூக்கிக் கொண்டு இந்த சாலை வழியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று சைக்கிளில் வந்தவர்களில் ஒருவர் சொன்னார்.
“நான் நேற்று மாலை வரை இந்த இடத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். மக்கள் சாரை சாரையாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் இது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. நேற்று இரவிலோ அல்லது அதிகாலையிலோ யாரோ இந்தப் பிணத்தை இங்கு கொண்டுவந்து போட்டிருக்கவேண்டும் அல்லது சம்பவ இடத்திலே வந்து இறந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?”
“பிணத்தைக் கொண்டுவந்து போடுகிறவர்கள் ஏன் சாலையிலிருந்து இருபது அடி தள்ளி இருக்கிற மரத்தடியில் போட வேண்டும்?” சைக்கிளில் வந்த மற்றொருவர் கேட்டார்.
“ஆமா… நேற்று இந்தப் பகுதியின் காவல் பணி நீதானே செய்தாய்? இரவு காவலரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அல்லவா நீ வந்திருக்க வேண்டும். வெளியூர்க்காரன் எவனாவது இந்த வழியே வந்து ஊருக்குள் நுழைந்திருக்கிறானா?”
பிணத்தைப் பற்றிய உரையாடல் அவர்களுக்குள் தொடர்ந்துகொண்டிருந்தது.
புலம்பெயர்ந்து இந்த சாலை வழியே நடந்து போய்க்கொண்டிருக்கும் ஏராளமான மக்களில் கொரோனா வைரஸ் பாதித்த யாராவது ஒருவர் ஊருக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக கிராமத்திலிருந்து ஊர்க்காவல் போட்டிருக்கிறார்கள். பெருந்தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து இது வரை இந்த மாதிரியான சம்பவம் நடந்ததில்லை. வெளியாள் யாரும் ஊருக்குள் நுழைய முடியாது. அப்படியிருக்க இந்தப் பிணம் இங்கே எப்படி வந்தது என்று தெரியவில்லை. நடந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
“சரி. அதை விடு. அடுத்து இந்தப் பிணத்தை எப்படி அப்புறப்படுத்துவதென்று யோசிக்கலாம்”.
“போலீசுக்கு தகவல் சொல்லலாமா?”
“போலீஸ் வந்து என்ன செய்வாங்க? புகார் எழுதிக் கொடுக்கச் சொல்வாங்க…இறந்தவரைப் பற்றி நாங்க விசாரணை செய்துக்குறோம். இந்தப் பிணத்தை நீங்களே அடக்கம் பண்ணிருங்க என்பார்கள். நம் முதுகில் ஏறி சவாரி செய்துகொண்டு நம்மிடமே வேலை வாங்குவார்கள். இது தேவையா? அதற்கு முன் பிணம் அழுகி வீச்சம் எடுத்துவிடும். இன்னொரு முக்கியமான விஷயம். அந்தப் பிணம் கொரோனாவால் பாதித்திருந்தால் நம்ம கிராமத்திற்குள் வைரஸ் பரவ ஆரம்பித்துவிடும்”.
அவர்களில் ஒருவர் பிவாவை ஏற இறங்க பார்த்துவிட்டு சொன்னார்: “இவனையே ஏன் பிணத்தை அடக்கம் செய்யச் சொல்லக் கூடாது?”
“ நல்ல யோசனை. அவன் வெறும் ஆளாகத்தான் இருக்கிறான். அவனை பிணத்தின் அருகே போகச் சொல்லுவோம். கிராமத்துக்காரர்கள் யாரும் பிணத்தைத் தொட மாட்டார்கள். நாம் விலகியே இருப்போம்”.
இவ்வளவு நேரமாக அத்தனை உரையாடல்களும் பிவாவின் முன்னால் தான் நடந்துகொண்டிருக்கிறது. சுற்றி நடப்பதைப் பற்றிய பிரக்ஞை அவனுக்கு இல்லை. சோகங்களையும், துயரங்களையும் கடந்தே வந்திருக்கிறான். கொரோனாவைத் தேசிய பேரிடர் என்கிறார்கள். பேரிடர் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்ன செய்தார்கள்? கடந்த பல நாட்களாக சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது அவன் கண்டது என்ன? பல்லாயிரம் மனிதர்கள் சொந்த வீடு நோக்கி வேகாத வெயிலில் கால் நடையாகப் பயணிக்கிறார்கள். பட்டினியால் மடிகிறார்கள். குழந்தைகள் பாலின்றி சாகின்றன.
தான் இவ்வளவு நேரமும் தகிக்கும் வெயிலில் நின்றுகொண்டிருப்பதை பிவா அப்போதுதான் உணர்ந்தான். சூரியனின் வெப்பத்திலிருந்து காக்க நிழல் பகுதியை நோக்கி நகர்ந்தான். உடனே அவர்கள் இருவரும் அவனைத் தடுத்து நிறுத்தினார்கள்.
“நில்லுப்பா… பிரேதம் யாருன்னு தெரியலைன்னா இருக்கட்டும். நீதான் அந்தப் பிணத்தை புதைக்க வேண்டும். அது வரையில் நீ போக முடியாது” என்று மிரட்டும் தொனியில் கூறினார்கள்.
பிவாவின் கால்கள் தளர்ந்து நடுங்கின. அவர்களின் பயமுறுத்தும் வார்த்தைகள் இன்னொரு பேரிடருக்குள் தள்ளியது போல் உணர்ந்தான். நா வறண்டு, கண்கள் உள்ளே போய், வயிறு ஒடுங்கி நிற்பவனைப் பார்த்து அவர்களில் ஒருவர் இரக்கத்துடன் கேட்டார், “பசிக்கிறதா?”
“தண்ணீர்…தண்ணீர் வேண்டும். கையில் காசு இல்லை.”
பேச்சே வரவில்லை. கொர கொரவென்று சத்தம் வந்தது. பட்டினியால் வயிறு ஒட்டிப் போயிருந்தாலும் அவன் உணவை நாடவில்லை. தொண்டைதான் வறண்டுவிட்டது. முதலில் தண்ணீர்தான் அவனுக்குத் தேவை.
“உனக்குத் தேவையானதெல்லாம் இங்கே வந்துவிடும். சொன்ன வேலையைப் பார்”. பிவாவுக்கு உணவும், தண்ணீரும் கொண்டுவர சைக்கிளை எடுத்து வேகமாய்க் கிளம்பினார்.
இவனுக்கு கொரோனா தொற்று இருக்குமோ…இவனை சைக்கிளில் ஏற்றிச் செல்ல முடியாது. மற்றொரு சைக்கிள்காரர் நினைத்துக்கொண்டார். பிவா அவர் பின்னால் தள்ளாடியபடி நடந்து சென்றான்.
கோவாவிலிருந்து புறப்பட்ட பிவா, நடை பயணத்தின் போது பல்வேறு மனிதர்கள் உடன் வந்தார்கள். தூக்கமிழந்து, நடை தளர்ந்து, பசியோடு நடந்து வந்தார்கள். அவர்களெல்லாம் இவனுக்கு கூட்டாளி ஆவார்களா? புலம் பெயர்ந்து பிழைப்பு தேடிப் போன ஒவ்வொருவரும் வீடு போய்ச் சேர வேண்டும் என்ற வேட்கையோடு திரும்பி நடந்து செல்கிறார்கள். பிவா கையிலிருக்கும் பணத்தை லாரி டிரைவரிடம் கொடுத்து இரண்டு வண்டியில் மாறி மாறி இந்த இடத்திற்கு வந்திருக்கிறான்.
சீக்கிரம் வீட்டிற்குப் போய்விடலாம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. கோவாவிலிருந்து கிளம்பி பத்து நாட்களாயிற்று. கோலாப்பூருக்கும், சோலாப்பூருக்கும் இடையில்தான் தற்போது இருக்கிறான். ஊரை நெருங்கிவிட்ட குதுகலம் வந்தது. கையில் பணம் இருந்தால் இந்நேரம் ஊர் போய்ச் சேர்ந்திருக்கலாம். லாரி டிரைவரிடம் பணம் கொடுத்தால் வண்டியில் சரக்குகளோடு சரக்குகளாக ஏற்றி குறிப்பிட்ட தூரத்தில் இறக்கி விட்டுவிடுகிறார்கள். அவன் சொந்த ஊரான நான்டெட் இங்கிருந்து சில மணி நேர பயணம் என்றாலும் காசில்லாமல் எப்படி ஊர் போய்ச் சேர முடியும்?
அப்போது பிரேதம் இருந்த இடத்திலிருந்து அரைக் கிலோ மீட்டருக்கு அப்பால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் இவனுக்கு தெரிந்தவர்களாகக் காணப்பட்டார்கள். எங்கே தன்னைக் கூப்பிட்டு: விடுவார்களோ என பயந்தான். இப்போது இந்த ஊர்க்காரர்களைப் பயன்படுத்தித்தான் நமது ஊருக்குப் போக வேண்டும். அவர்கள் பார்ப்பதைத் தவிர்த்து தலையைத் திருப்பிக்கொண்டான். அவர்கள் எல்லோரும் இவன் பார்வையிலிருந்து கடந்து போனார்கள். அவர்கள் ஏதாவது இவனிடம் கேட்டால் பதில் சொல்லும் தெம்பு இல்லை. சைக்கிள்காரர் கூடவே சென்றுவிட்டான்.
அருகில் வந்தபின்தான் அது பெண் பிணம் என்று தெரியவந்தது. ஐந்தாறு கிராமத்து ஆட்கள் பிணம் கிடந்த மரத்தடியிலி;ருந்து சமூக இடைவெளிவிட்டு நின்றிருந்தார்கள். பிரேதத்தைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். கூடிக் கலைகிற கூட்டம் போல் ஒரு தகவலும் பெற முடியவில்லை. பிரேதம் யாரென்ற விபரம் கிடைக்கவில்லை. ஆனால் கூட்டத்திலிருந்த ஒருவருக்கு பிணத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் கள்ள மௌனமாக இருந்தார்.
ஒரு பிணத்தை யாருடையது என்று எப்படி சொந்தம் கொண்டாட முடியும்? ஒரு பெண் உயிரோடு இருந்தால் தாயாக, ஒருவரின் மனைவியாக, சகோதரியாக இருக்க முடியும். ஆனால் அவள் இறந்து விட்டாள். அவள் யாருக்குச் சொந்தமானவள்? முடிவில்லாத விவாதமாகத் தொடர்கிறது.
இந்தப் பிணத்திற்கு மட்டும் பேசக்கூடிய சக்தி இருந்தால், பாலின்றி பட்டினியால் மடிந்த அவளுடைய குழந்தையை மூன்று நாட்களுக்கு முன் சாலையோரம் புதைத்துவிட்டு வந்ததைச் சொல்லியிருப்பாள். இறந்த குழந்தையை சாலையோரத்தில் கிடத்திவிட்டு வா என்று அவளுடைய கணவன் வற்புறுத்தி அழைத்தான். தாயுள்ளம் கேட்கவில்லை. அவள் வர மறுத்த போது, இவர்களை விட்டு விட்டு அவன் சென்றுவிட்டான். பட்டினியாலும், தாகத்தாலும் மூன்று நாட்களாக நடந்து நடந்து குழந்தை இறந்த ஏக்கத்தோடு இவ்விடத்தில் அவள் உயிர் பிரிந்தி;ருக்கிறது,
பிவா பிரேதத்தின் அருகில் சென்று சுற்று முற்றும் பார்த்தான். சைக்கிள்காரர், கிராமத்து ஆட்களுடன் நெருக்கமாக நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
“இறந்தவள் என்ன சாதியோ, மதமோ தெரியவில்லை. அவர்கள் வழக்கத்தில் பிணத்தை எரிப்பார்களா, புதைப்பார்களா?”
“எரித்தால் அதிகம் செலவாகும். பேசாமல் புதைத்துவிடுவதுதான் சரியானது” என்றார் ஒருவர்.
“புதைப்பதென்றால் எங்கே குழி தோண்டுவது? நமது ஊர் மண்ணில் இவளை புதைக்கக் கூடாது. ஊர் எல்லையைத் தாண்டி தாழ்வான பகுதியில்தான் அடக்கம் செய்ய வேண்டும்” என்றார் மற்றவர்.
புதைக்கிறவனுக்குக் கூலி கொடுக்க, வந்தவர்கள் ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்தார்கள். ஒருவர் மிச்ச ரூபாயைப் போட்டு நூறு ரூபாயாக ஆக்கினார். சாப்பாடும் தண்ணீர் பாட்டிலும் வாங்க ஊருக்குள் போனவர் இன்னும் திரும்பி வரவில்லை. இங்கே இருப்பவர்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. பிவாவை சத்தமாக அழைத்து வேலையை ஆரம்பிக்கச் சொல்லி, பாதுபாப்பாக பத்தடிக்கு அப்பால் தள்ளி நின்றுகொண்டார்கள்.
பிணத்தைத் தாழ்வான பகுதிக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஊர்க்காரர்கள் பிணத்தைத் தூக்க உதவிக்கு வர மாட்டார்கள். என்ன செய்வது? எப்படியாவது கொண்டுபோக வேண்டும். வயிறு வேறு பிசைந்து கொண்டிருந்தது. விரைவில் வீட்டுக்குப் போக வேண்டும். சட்டென்று முடிவெடுத்தான். குனிந்து பிணத்தின் தோளுக்கடியில் கைகளைக் கொடுத்து இழுத்துச் சென்றான். முகத்தைப் பார்க்கவில்லை. பிணம் பயங்கரமாக கனத்தது. ஆனால் அவன் அடைந்த துயரத்தின் முன் இந்த பிரேதத்தின் கனம் சிறியதுதான்.
திடீரென்று அவனுக்கு தோன்றியது. ‘இறந்தவர்களை மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும். இழுத்துச் செல்லக் கூடாது. இந்த சமுதாயத்தில் பிறந்து, வாழ்ந்து இவ்வுலகிலிருந்து விடை பெற்றுக் கொள்பவர்களுக்கு கண்ணியமான முறையில் வழியனுப்பி வைப்பதே சிறந்த மனித நேயமாகும்’.
மீண்டும் குனிந்து பிணத்தின் பின் கழுத்தின் கீழும், முழங்கால்களுக்குக் கீழும் கைகளை வைத்து தூக்கினான். அவன் உடம்பின் எடையை விட பிணத்தின் கனம் அதிகமாக இருந்தது. கண்கள் இருண்டன. பின் நிதானித்து முழு பலத்தையும் திரட்டி தூக்கி நடந்தான்.
புதைக்கும் இடம் வரை பிணத்தைத் தூக்கி வந்ததால் மேல் மூச்சு வாங்கியது. வேகமாக சுவாசித்தான். நாய்கள் வேகமாக ஓடிவந்து மூச்சு வாங்கி இளைப்பது போல் தஸ் புஸ் என்று காற்று மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் வெளியேறியது. கீழே பார்த்தான். ஆச்சரியமாக இருந்தது. ஊர்க்காரர்கள் ஏற்கனவே குழி தோண்டி வைத்திருக்கிறார்கள். நல்ல வேளை குழி வெட்டும் கடினமான வேலை இல்லாமல் போனது. ஆனால் ஊர்க்காரர்கள் இவன் கடப்பாறை, மண்வெட்டியைத் தொட்டால் அதன் மூலம் கொரோனா தொற்று ஊருக்குள் பரவிவிடும் என்ற அச்சத்தில் தான் உள்ளுர்காரர்களை வைத்து புதை குழி தோண்டியிருக்கிறார்கள். ஊரின் ஒதுக்கத்தில் செல்லாத காசுகளை சேமிக்கும் உண்டியலாக இருக்கும் சுடுகாட்டில் கூட அந்தப் பிணத்தைப் புதைக்க ஊர்க்காரர்கள் விரும்பவில்லை.
“பிணத்தைத் தூக்கி உள்ளே போடு…”
தூரத்திலிருந்து கத்தினார்கள்.
பிவா அவ்வாறு செய்யவில்லை. பிரேதத்தைத் தூக்கி குனிந்து மெதுவாக உள்ளே இறக்கி படுக்க வைத்தான். அவன் மகள் இறந்தபோது இருக்கிற கண்ணீரெல்லாம் முழுவதுமாக வெளியேறி வற்றிவிட்டது. மனிதனுக்கு இருக்கும் ஒரே ஆசுவாசம் அழுகை மட்டுமே. அது கண்ணில் சுரந்துகொண்டிருக்கும் வரை வாழ்வில் எந்த சோகத்தையும் தாங்கிக்கொள்ள முடியும். இப்போது சிந்துவதற்கு கண்களில் நீர் இல்லை. தொண்டையில் கட்டி உருவாகி முழுவதும் அடைத்துவிட்டது போல் உணர்ந்தான். வாயெல்லாம் உலர்ந்து, உதடுகள் வெளுத்துவிட்டன. அடுத்த சாவு நானாகத்தான் இருக்கும். அவன் நினைத்துக்கொண்டான்.
“மண்ணைத் தள்ளி குழியை மூடு…”
மீண்டும் சத்தம் கொடுத்தார்கள். அவர்கள் போதும் என்று சொல்லுகிற வரை மண்ணை அள்ளி போட்டுக்கொண்டே இருந்தான். குழியளவிற்கு மேடாக்கி கல்லறை போல் ஆக்கினான்.
“சரிப்பா…வேலை முடிந்துவிட்டது. நாங்கள் போகிறோம்”.
காகிதத்தில் சுற்றப்பட்ட இரண்டு சப்பாத்திகளையும், தண்ணீர் பாட்டிலையும் கீழே வைத்தார்கள். ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்துவிடாமல் இருக்க அதன் மீது சிறு கல்லைத் தூக்கி வைத்தார்கள். நூறு ரூபாய் இதிலே இருக்கிறது எடுத்துக்கொள்.
வந்தவர்கள் அனைவரும் முகக் கவசங்களை சரி செய்துகொண்டார்கள். மிகப் பெரிய வேலையை மிக எளிதாக முடித்துவிட்ட திருப்தியில் சமூக இடைவெளிவிட்டு ஊருக்குள் திரும்பிப் போனார்கள்.
பிவா பாட்டிலை எடுத்து இரண்டு மடக்கு தண்ணீரைக் குடித்தான். காகிதத்தை பிரித்த போது, அதில் தடித்த இரண்டு சப்பாத்தியும், பு+ண்டு சட்னியும் இருந்தன. சட்னியை சிறிது எடுத்து நாவில் தடவினான். வாயில் எச்சில் ஊறியது. கரகரப்பான வாசனை மூக்கைத் துளைத்தது. செரிமான உறுப்புகளெல்லாம் இயங்காததினால் அவனுக்கு பசியெல்லாம் இல்லை. சப்பாத்திகளை காகிதத்தில் சுருட்டி பேன்ட் பைக்குள் திணித்து, ரூபாய் நோட்டுக்களை எண்ணி சட்டைப் பைக்குள் வைத்தான்.
புலம்பெயர்ந்து போய் வேலை செய்து வாங்கிய சம்பளத்தையும், தற்போது இந்த வேலைக்குக் கிடைத்திருக்கும் கூலியையும் ஒப்பிட்டுப் பார்த்து புன்னகைத்தான். கடைசியாக புதை மேட்டின் மீது பாதங்களால் சிறிது மண்ணைத் தள்ளிவிட்டான்.
‘எனக்கு இது மாதிரி மரணம் வந்தால், நடந்து வரும் வழியில் எனது குடும்பத்தின் மூன்று உயிர்கள் ஒவ்வொருவராக பலியானதை, ஊரிலுள்ள அம்மாவும், அண்ணனும் எப்படி தெரிந்து கொள்வார்கள்? எனது உயிர் பிரியும் போது, அது எனது சொந்த ஊரில், சொந்த வீட்டில் நிகழ வேண்டு’மென்று நினைத்தான்.
கையில் தண்ணீர் பாட்டிலைப் பிடித்துக்கொண்டு நெடுஞ்சாலைக்கு வந்தான். சூரியன் தனது நெருப்புக் கோளத்திலிருந்து வெப்பத்தை பூமியின் மீது இறக்கிக்கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலை உக்கிரமான வெயிலை உள்வாங்கி அதை அப்படியே வெளியிட்டது. வானத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் அவனுடைய உடம்பின் தோலுக்குள் ஊடுருவிக்கொண்டிருந்தது.
சாலையில் நடந்தான். சட்டைப் பையில் உள்ள நூறு ரூபாய் அவனுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுத்தது. எதிர்காலத்தை நோக்கி வாழும் மனிதனின் இயல்புதான் இக்கட்டான சூழலிருந்து அவன் மீள உதவுகிறது.
இந்த நூறு ரூபாயை எந்த லாரிக்காரரிடம் கொடுத்தாலும் ஊரில்கொண்டுபோய் இறக்கி விட்டுவிடுவார். வீடு போய்ச் சேர்ந்துவிடலாம்.
நன்றி: இண்டியன் லிட்டரேச்சர்- 322
கொங்கணி மூலம் : தாமோதர் மௌசோ
ஆங்கிலம் வழி, தமிழில்: மாதா
மூலக் கதை ஆசிரியர் தாமோதர் மௌசோ அவர்களைப் பற்றி…..
தாமோதர் மௌசோ கொங்கணி மொழியில் மிகச் சிறந்த எழுத்தாளர். அடிப்படையில் சிறுகதைகள் அதிகம் படைப்பவர் என்றாலும், சிறுகதைகளும், நாவல்களும் அவருடைய படைப்புக் களமாக உள்ளது. இதுவரை அவர் கொங்கணி மொழியில் பதினேழு நூல்களும், ஆங்கிலத்தில் ஒரு நூலும் வெளியிட்டுள்ளார். மிக ஆழமான இலக்கிய விமர்சகரான இவரது நூல்கள் மராத்தியிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளன. “ கர்மெலின்” என்ற தமது முதல் நாவலுக்கு “சாகித்ய அகாதமி” விருது பெற்றவர்.
வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் பெற்றோர்களது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணியில் அமர்த்தப்படும் கோவா மாநிலப் பெண்களது பாடுகளையும், இன்னல்களையும் வடித்திருந்த அந்த நாவல் பதின்மூன்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கேரள இலக்கியங்கள் கூடப் பேசாத அந்தக் கருப்பொருளைத் தமது நாவல் பேசியது என்று சொல்லும் மௌசோ, கொங்கணி இலக்கிய வரலாற்றில் கத்தோலிக்க சமூகம் பற்றிய முதல் பதிவும் இது தான் என்று சொல்கிறார். “சுனாமி சிமோன்” என்ற நாவலுக்கு” வி.வி. பை புரஸ்கர்;” விருது வழங்கப்பட்டது. கோவா அரசின் கலாச்சார விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். அண்மையில் அவருக்கு ஒன்றிய அரசு, இலக்கியத்தில் மிக உயர்ந்த விருதான “ஞான பீட” விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
மொழிபெயர்ப்பாளர் மாதா எனும் மா தங்கராசு அவர்களைப் பற்றி ….
பள்ளி இறுதிக் கல்வி வரை மட்டுமே படிக்க முடிந்த எளிய நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்த மா தங்கராசு அவர்கள், அயல் மொழி இலக்கியங்களை வளமான தமிழில் மொழி பெயர்த்து வருபவர், இது வரை 21 மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மாதா என்ற இவரது புனைபெயரில் வெளியாகியுள்ளன. பல்வேறு விவாதப் பொருள்கள் மீதான 32 கட்டுரைகளும் படைத்துள்ள இந்த உற்சாகமிக்க 63 வயதுக்காரர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர். சமூக செயல்பாட்டாளர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கொரானா வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் இந்த கதையை