நூல் அறிமுகம்: அ.உமர் பாரூக் எழுதிய ‘ஆதுர சாலை’ நாவல் குறித்து – அ.குமரேசன்

நூல் அறிமுகம்: அ.உமர் பாரூக் எழுதிய ‘ஆதுர சாலை’ நாவல் குறித்து – அ.குமரேசன்ஆதுர சாலை

அ. உமர் பாரூக்

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,

பக்கங்கள்: 376

விலை: ரூ.400

சரித்திரக் கதை, பயண நூல், அறிவியல் புனைவு  என்பன போல் ‘ஆதுர சாலை’ ஒரு மருத்துவ நாவல். மக்களுக்கான மருத்துவ சேவையைத் தொற்றிய வணிகமய நோய் பற்றிப் பேசுகிற, பாரம்பரிய மருத்துவ அறிவுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டதன் அரசியலைக் காட்டுகிற, நோயும் மரணமும் சார்ந்த மக்களின் அச்சத்தைப் பயன்படுத்திப் பின்னப்பட்டிருக்கும் ஊழல் வலையமைப்புக்கு எதிராக ஒலிக்கிற இலக்கியக் குரல்.  ஒலிக்கச் செய்திருப்பவர் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், முன்னணி அக்குபங்சர் சிகிச்சையாளர் அ. உமர் பாரூக்.

“இந்த நாவலில் வரும் பகுதிகளோ கதாபாத்திரங்களோ யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இவை கற்பனைகளால் உருவாக்கப்பட்டவை அல்ல, சமூகத்தால் விளைவிக்கப்பட்டவை,” என்ற “பொறுப்பேற்பு” அறிவிப்புடன் புத்தகம் விரிகிறது.

மருத்துவ ஆய்வுக்கூடத் தொழில்நுட்பவியலாளரான இளைஞர் ஒருவரின் தன் கதை கூறல் நடையில் நாவல் எழுதப்பட்டுள்ளது. “தம்பி” என்று அவரை அழைக்கிறவர் மருத்துவர் அன்பு. இருவரின் உரையாடல்கள் வழியே நிகழ்த்தப்படும் மருத்துவ அறிவியல் தத்துவ விசாரமே நாவலின் நாயகம். கதையோட்டம் தேனி, கம்பம் வட்டாரங்களைச் சுற்றினாலும் கருத்தோட்டம் தமிழகத்திற்கு, இந்தியாவிற்கு, ஏன் உலகத்திற்கே பொதுவானது.

நுண்ணிய கிருமிகளைக் காட்டும் மைக்ராஸ்கோப் மீது காதல் கொண்டவர் தம்பி. அதைக் கையாளப்போகும் உற்சாகத்தோடு ஆய்வுக்கூடத்தில் சேரும் அவருக்கு முதல் நாள் தரப்படும் வேலை என்ன தெரியுமா? ஒட்டப்பட்ட கவர்களை, சில முகவரிகளில் ஒப்படைத்துக் கையெழுத்துப் பெற்று வருவது! அந்த முகவரிகள் பல மருத்துவர்களுடையவை.  என்ன வைக்கப்பட்டிருக்கிறது என்றே தெரியாமல் ஒவ்வொரு மருத்துவமனையாகப் போய்க் கொடுக்கிறபோது, “இப்படி கவர் கொடுத்துவிட வேண்டாமென்று ஏற்கெனவே சொல்லிட்டேனே, நீங்க புதுசா வந்திருக்கீங்களா” என்று கேட்கிறார் அன்பு. ரத்தப் பரிசோதனை தொடங்கி, கருவுறுதல் சிகிச்சை வரையில் மருத்துவ வளாகங்களின் நுண்ணிய ஊழல் கிருமிகளைக் காட்டுகிறது நாவல்.

அன்பு, தம்பி இருவரின் நேர்மையே இருவரின் தோழமைக்கு அடிப்படையாகிறது. அன்புவின் மருத்துவமனையிலேயே, ஊழியத்தையும், ஊதியத்தையும் தாண்டி நிறைய உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்புடன் இணைகிறார் தம்பி. அப்படித் தெரிந்துகொள்கிற உண்மைகளில் ஒன்று, அலோபதி மருத்துவரான அன்பு, நோயர்களுக்குக் கொடுப்பது சித்த மருந்துகளே என்பது. கைவிடப்பட்ட நிலையில் இருந்த தன் அண்ணனை, தான் பணியாற்றிய அரசு மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் தயக்கத்தோடு சொன்ன யோசனைப்படி, ஒரு கிராமத்துச் சித்த மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அவர் மரபார்ந்த சிகிச்சையால் மீட்கிறார். அந்த நேரடி அனுபவத்திலிருந்து தானும் அலோபதியைத் தாண்டிய அறிவியல் தத்துவத் தேடலில் இறங்கியதை வெளிப்படுத்துகிறார் அன்பு.

பயனர்:- தமிழ் விக்கிப்பீடியாஅ.உமர் பாரூக்

சரியான ஆய்வு முடிவுகளைத் தள்ளுபடி செய்கிற மருத்துவர்கள், முடிவுகளை மாற்றி எழுதுகிற ஆய்வக நிர்வாகங்கள், ஒவ்வொரு கட்டத்திலும் பணம் உறிஞ்சுகிறவர்கள் சம்பந்தப்படுகிற காட்சிகள் அதிர்ச்சி தருவதாகக் கூற முடியாது. நம்முடைய சொந்த அனுபவங்களின்  பிரதிபலிப்பாகவும் இருப்பது அதிர்ச்சி தராதல்லவா?

தனிப்பட்ட முறைகேடுகளை ஒட்டுமொத்த அலோபதி மருத்துவத்தின் குற்றமாகக் கூறலாமா? நாடி பார்ப்பதிலும், மூலிகைக் கலவையிலும் ஏற்படக்கூடிய தவறான கணிப்புகளுக்கு சித்த மருத்துவத்தையே குற்றவாளியாக்க முடியாதல்லவா? இக்கோணத்தில் வரக்கூடிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதாக, அலோபதி தத்துவத்தின் தோற்றுவாயிலேயே பிழை இருக்கிறது என்கிறார் அன்பு:

“அலோபதியோட ஆரம்பகாலப் பயன்பாடே மில்ட்ரில மட்டும்தான். இன்னைக்கு அடிபட்டுக் காயமானா நாளைக்கே போருக்குப் போகணும். ஆள் தேவை அதிகம். அதுனால ரசாயனங்கள வச்சு வலி குறைக்கிற முறையை பயன்படுத்தினாங்க… வலியோட மூலகாரணம் தெரியாம, வலியை மட்டும் குறைக்கிற ரசாயன மருத்துவத்தை அப்ப இருந்த பெரும்பாலான வைத்தியர்கள் ஏத்துக்கிறலை. ஆனாலும் மக்கள் மத்தியில் பரவ ஆரம்பிச்சுச்சு. பிறகு அதைச் சொல்லித்தர்றதுக்கு மாடர்ன் மெடிக்கல் ஸ்கூல்ஸ் வர ஆரம்பிச்சது. அதுக்குக் கிடைக்கிற வரவேற்பைப் பார்த்து அன்னைக்கு இருந்த சாயப்பட்டறைகள் மருந்து தயாரிக்கிற கம்பெனிகளா மாற ஆரம்பிச்சது. அந்தக் காலத்துல வந்த அதே மருந்துக் கம்பெனிகள் இப்பவும் பெரிய ஆதிக்கத்தோட வளர்ந்து நிக்குது. வெள்ளைக்காரன் போன இடத்துக்கெல்லாம் இந்த மருத்துவத்தையும் தூக்கிட்டுப் போனான். நம்ம நாட்டுலயும் இப்படித்தான் அலோபதி வந்துச்சு…”

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு ஏற்ற கல்விமுறையைக் கொண்டுவந்தவரான மெக்காலே, அலோபதி மருத்துவத்துக்கான கல்வி நிலையங்களையும் ஏற்படுத்தினார். பாரம்பரிய மருத்துவங்கள் தாமாகவே அழியச் செய்யும் நுட்பமான ஏற்பாடுகள் செய்யப்பட்ட செய்தி நாவலிலிருந்து தெரியவருகிறது. அந்த நுட்பம் நாட்டின் விடுதலைக்குப் பிறகும் தொடர்ந்ததுதான் அவலம்!

சிறுநீரில் எண்ணெய் கலந்து பார்க்கிறபோது ஏற்படும் தோற்றங்களின் அடிப்படையில் நோயைக் கண்டறியும் “நீர்க்குறி, நெய்க்குறி” முறைகள் இருந்திருக்கின்றன. தங்களின் பெயர்களைக் கூட பதிவு செய்யாத அன்றைய சித்தர்கள் கையாண்ட ஆய்வு முறை குறித்த செய்தி இது. பாரம்பரிய மருத்துவங்களின் பரிணாமமாக அல்லாமல் பகையாக நவீன மருத்துவம் நிறுவப்பட்டுவிட்டது ஒரு சோகம்.

இத்தகைய அறிவியல் தேங்கிப் போனதற்கு ஆங்கிலேய மருத்துவத்தின் சந்தை ஆக்கிரமிப்பு, சுதந்திர இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட அடிமைத்தனமான கொள்கைகள் ஆகிய புறத் தாக்குதல்கள் மட்டும்தான் காரணமா? இல்லை. மருத்துவத்தையும் விட்டுவைக்காத சாதி என்ற அகக்காரணமும் இருந்திருக்கிறது!

ஆதுர சாலை – தைத்திங்கள்

சித்தர்கள் அன்று சொன்னதெல்லாம் இன்று  முற்றிலுமாக ஏற்கத்தக்கதா? இல்லை, அவற்றில் கொஞ்சம் உண்மை இருக்கலாம் என்கிறார் அன்பு. அவைகளில் அறிவியல்பூர்வமானவற்றையும், அப்படியல்லாதவற்றையும் கண்டறிகிற பொறுப்பு அன்புகளின் தம்பிகளுக்கு இருக்கிறது.

இறப்பு வேறு, மரணம் வேறு என்கிறார் அன்பு. கருவில் செல் உருவாகிறபோதே “எக்ஸ்பைரி டேட்” தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. அதன்படி வருகிற இறப்பு வலியற்றது, வரவேற்கத்தக்கது. நோய், விபத்து, கொலை, தற்கொலை என்று வருகிற மரணம் வலி மிக்கது, பீதியைத் தருவது. “மரண நாடி” பார்க்கத் தெரிந்தால் “எக்ஸ்பைரி டேட்” நெருங்குவதை அறிந்து அமைதியாக எதிர்கொள்ளலாமாம்! அப்படித்தான் அன்புவும் எதிர்கொள்கிறார்!

உயிர், மனம் பற்றிய சித்தர் சிந்தனைகள் அறிவியலோடு கைகுலுக்குகின்றன. அதேவேளையில், மனிதரின் நினைவுகள் இறப்போடு அழிந்துவிடுவதில்லை, புறத்தே சுற்றிக்கொண்டிருக்கும், பொருத்தமானவர்களைப் பற்றிக்கொள்ளும் என்கிறார் அன்பு. ஒரு நினைவு அல்லது கருத்து தனியானதொரு சக்தியாகச் சுற்றிக்கொண்டிருக்குமா? அது பேச்சாகவோ, எழுத்தாகவோ சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறபோதுதான் கேட்கிறவர்களிடம் பதிகிறது. நாவலிலேயே கூட, அன்பு சொல்வதால்தானே தம்பிக்கு இந்தக் கருத்து வந்து சேர்கிறது?

சைக்கிள் கடையின் குழந்தைத் தொழிலாளி, கல்லூரி விடுதியில் தரமான உணவுக்காக ஏங்கும் மாணவர்கள் எனப் பலரும் மனதைத் தொடுகிறார்கள். இறுதியில் ஒரு மருத்துவமனையில், உயிருக்கே ஆபத்தான கட்டி என்று ஒரு பெண்ணுக்குக் கர்ப்பப்பை அகற்றப்படுகிறது. உண்மையிலேயே அது என்ன என்று தெரிகிறபோது தம்பிக்கும் அங்கிருக்கும் நர்ஸம்மாவுக்கும் கண்கள் கலங்குகின்றன. வாசிக்கிற நமக்கும்.

உடற்கூறு அறிவியலையும் மருத்துவ அரசியலையும் பேசுகிற ‘ஆதுர சாலை’ இலக்கியப் புனைவின் பரவசத்தைத் தருகிறதா? உயிரியக்கம் பற்றிய இயற்கைப் புரிதலின் பரவசத்தை தருகிறது. மருத்துவ அறிவியல் தளத்தில் கடும் விமர்சனத்திற்கு இந்நாவல் உள்ளாகக் கூடும். அந்த விமர்சனம் திறந்த மனதோடு ஆரோக்கியமான விவாதத்திற்கு இட்டுச் செல்லுமானால் உலகம் பயனுறும்.ஆதுர சாலை

அ. உமர் பாரூக்

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,

6 மஹாவீர் காம்ப்ளெக்ஸ்,

முனுசாமி சாலை,

கலைஞர் கருணாநிதி நகர் மேற்கு,

சென்னை – 600 078

மின்னஞ்சல்: [email protected]

பக்கங்கள்: 376

விலை: ரூ.400


Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *