ஆதுர சாலை

அ. உமர் பாரூக்

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,

பக்கங்கள்: 376

விலை: ரூ.400

ஆசிரியர் அ.உமர் பாரூக் அவர்களின் ஒப்பற்ற படைப்பான ‘ஆதுரசாலை’, ஒரு தலைசிறந்த மருத்துவம் தழுவிய நாவல். ஒரு ஈடு இணையற்ற மருத்துவம் சார்ந்த பொக்கிஷமாகத் திகழ்ந்ததோடில்லாமல் அன்பு, பாசம், நேசம், துக்கம் அழுகை ஒழுக்கம் போன்ற உணர்வுப்பூர்வமான உணர்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு காவியமாகவே நான் இதை கருதுகிறேன். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு உணர்ச்சி மேலோங்கி இருப்பதையும், ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் அதன் தொடர்ச்சி அடுத்த அத்தியாயத்தில் என்னவாக இருக்கும் என்கிற சுவாரஸ்யத்தையும் கொண்டே நாவலை நகர்த்தி உள்ளது ஆசிரியரின் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறது. முப்பத்திவொன்பது அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் குளிர்ச்சி-வெப்பம் என்ற இரு சூழற்ச்சிகளைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது வித்தியாசமான கண்ணோட்டத்தை ஏற்படுத்துகிறது. ஒன்று மற்றொன்றின் ஆரம்பமாக திகழ்கிறது. இயற்கையின் சுழற்சிமுறையும், மனிதவாழ்க்கைவின் சுழற்சியும் ஒரேவிதமான வினையை ஏற்படுத்தும் என்ற மையக்கருத்தை முன்னிறுத்துகிறது இந்த நாவல். ஏனெனில் ‘அண்டத்திலுள்ளதே பிண்டம்’ ஒத்திசைவான இந்த இயற்கையின் படைப்புகளின் கோட்பாடு. அதே கோட்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நாவல் நகர்ந்துள்ளது.
இந்த நாவலின் பெரும்பகுதி ஒரு புனைவு படைப்பாக இருந்தாலும், சுயசரிதையை போல் ஆசிரியர் தம் வாழ்வில் எதிர்கொண்ட அனுபவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுடன் சில கற்பனை பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் சேர்த்து படைத்திருப்பது வாசகர்களுக்கு வாசிப்பதிலும், படைப்பை முழுவதுமாக உள்வாங்குவதிலும், ஒவ்வொரு காட்சிகளையும் கண்முன் திரையிட்டு காண்பது போலும் அந்த காட்சிகளுக்குள் தம்மை பிரவேசித்துக் கொண்டு, கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து அவர்களுடன் ஒவ்வொரு காட்சிகளிலும் உடனிருந்து கண்டு களித்து வாழ்ந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு உருவத்தை நம் மனதில் உருவாக்கி மனதில் கதாபாத்திரங்களின் உணர்ச்சிப்பூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார் ஆசிரியர் உமர் பாரூக் அவர்கள். நாவலை வாசித்த பின் அதிலிருந்தும் கதாபாத்திரங்களிலிருந்தும் காட்சியமைப்புகளிலிருந்தும் வெளிவர முடியாத அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் ஆசிரியர். ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பவர் வாசகர்களை நாவலோடு இணைத்து வாசிக்க வாசிக்க அடுத்தடுத்த காட்சிகளுக்குள் புகுத்தி நாவலிலிருந்து வெளியேற விடாமல் முழுவதுமாக இறுதி அத்தியாயம் வரை நாவலுடன் பயணிக்கச் செய்து நாவலை முழுமையாக வாசிக்கும் ஆவலை ஏற்படுத்த வேண்டும், அதன் தாக்கத்தில், படைப்பைப் பற்றிய சிந்தனையில் பல நாட்கள் உழன்ற நிறைவை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர் அந்த நிறைவை பரிபூர்ணமாக ஏற்படுத்தியுள்ளார்.
முதல் பகுதியான வெப்பம் என்ற தலைப்பில் 17 அத்தியாயங்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த நாவல் பள்ளிப்பருவ அனுபவங்களையும், கண்டுகளித்த இடங்களையும், பழகிக் களித்த மனிதர்களையும், கடந்து வந்த பாதைகளையும் உணர்ந்து அனுபவித்த உணர்ச்சிப் பெருக்குகளையும், அதுமட்டுமின்றி பள்ளி பருவத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள், பால்யகால நினைவுகள், கல்வி பயின்ற பள்ளிக்கூடத்தை பற்றிய தகவல்கள், கற்ற அனுபவங்கள்,மருத்துவ ஆய்வுக்கூட கல்லூரியின் சேர்க்கை அனுபவம், உடன் பயின்ற நண்பர்கள் என நம்மையும் பள்ளிப்பருவ நினைவலைகளுக்குள் மூழ்கச் செய்தார். டாக்டர் அன்புவைச் சந்தித்த நாட்கள் நாவலின் முதற் பகுதி கி.மு-கி.பியைப் போல அ.மு-அ.பி(அதாவது டாக்டர் அன்புவின் பரிச்சயத்திற்கு முன்; டாக்டர் அன்புவின் பரிச்சயத்திற்குப் பின்) யாகவே நான் இந்த நாவலை பார்த்தேன். முதற்பகுதியில் டாக்டர் அன்புவின் பரிச்சயம் ஏற்பட்டாலும் அன்புவுடனான நெருக்கமும், முழுமையான பிணைப்பும் ஈடுபாடும் இரண்டாவது பகுதியிலேயே முழுமையாகப் படைக்கப்பட்டுள்ளதால் அ.மு-அ.பி என்கின்ற எழுத்துச் சுருக்கம் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஒவ்வொரு நிகழ்வுகளைப் பற்றிய அழகான, தெளிவான, எளிமையான, இனிமையான, எளிய நடையில், அதேசமயம் மொழி வடிவிலும் எழுத்து வடிவிலும் சொற்களைக் கையாண்ட விதத்திலும் ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டு ஒவ்வொரு தனி மனிதனைச் சிந்திக்கச் செய்து, ஒரு பரிபூரணமான படைப்பைப் படைத்திருபபது சாலச் சிறந்ததாகும்.


‘ஆதுரசாலை’ தலைப்பே நம்மை வரலாற்றின் முந்தைய பக்கங்களுக்கு, அதாவது கி.முவிற்கு அழைத்துச் சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பண்டைய நம் தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தைத் தழுவியே நாவல் படைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. நாம் முற்றிலும் மறந்து போன, அந்நியர்களால், அந்நியர் படையெடுப்பால், அந்நிய ஆதிக்கத்தால் மறைக்கப்பட்ட ஆணி வேரோடு பிடிங்கி எறியப்பட்ட நம் பாரம்பரிய மருத்துவங்களப் பற்றி, தமிழகத்தின் சித்த மருத்துவத்தைப் பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்தி ஆங்கில மருத்துவத்தின் சிகிச்சை முறையே சிறந்த பயன்பாடாக, மருத்துவமாக அனைவரின் மனதிலும் பதித்து, அனைத்துவிதமான நோய்களுக்கான சர்வரோக நிவாரணியாக ஆங்கில மருத்துவத்தை மக்களின் மத்தியில் பரப்பி நம் பாரம்பரிய மருத்துவங்கள் என்று மக்களால் போற்றப்பட்டு வந்த பின்பற்றப்பட்டு வந்த சித்த மருத்துவம், யுனானி, ஆயுர்வேதா, வர்மா, அக்குபங்சர் போன்ற மரபு வழி மருத்துவகளின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, இன்றளவும் கூட்டம் கூட்டமாக ஆங்கில மருத்துவத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும், அறியாமையின் விளிம்பில் சிக்கி உயிரையும் உடைமைகளையும் இழந்து நோய்களிலிருந்தும் தொந்தரவுகளிலிருந்தும் வெளியேற முடியாமல் மக்கள் புரிதலின்மையாலும் நோயைப் பற்றிய அச்சத்தினாலும் அறியாமையினாலும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அவர்களை இருள் சூழ்ந்த அறையின் ஒரு சிறு விளக்கின் பிரம்மாண்டமான வெளிச்சமாய் இந்த நாவல் நிச்சயம் விளங்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இந்த நாவலை வாசித்தவுடன் எனக்குள் ஏற்பட்டது. இன்றைய சமூகத்தில் தற்போதிய தலைமுறையினர் சித்த மருத்துவத்தைப் பற்றிய தகவல்களைப் புத்தகமாகப் படைத்து,மரபுவழி மருத்துவத்தின் மகத்துவத்தை மக்களின் பார்வைக்குக் கொண்டு வர இந்நூல் பெரிதும் துணை புரியும். எதிர்காலத்தில் தொடரப்போகும் சமுதாயத்திற்கும், வளர்ந்து கொண்டு வரும் தலைமுறையிருக்கும் நம் பாரம்பரிய மருத்துவங்கள் என்பது கானல் நீராகும், பார்த்தறியாத கேட்டிராத,உணர்ந்திராத வரலாற்று நிகழ்வுகளாகவும், பாடப்புத்தகத்தில் அவ்வப்போது வந்து போகும் ஒரு சில பாடங்களாகவே எதிர்காலத்தில் திகழும் என்ற அச்சம் பெரும்பாலோனோருக்கு,ஏன் எனக்குள்ளும் அவ்வப்போது அரித்துக்கொண்டே இருந்தது.
ஆனால் ஆசிரியரின் இந்த படைப்பு ஒரு மாபெரும் புரட்சியையும், எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு ஆழ்கிணற்றிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட அரிய பொக்கிஷமாகவே நிச்சயம் இந்த நாவல் ஒளி வீசப் போகிறது. எதிர்கால சந்ததியினர் மீண்டும் நம் பாரம்பரிய மருத்துவங்களைப் பின்பற்றவும், மீண்டும் அவற்றை மீட்டுருவாக்கம் செய்யவும் அவர்கள் மேற்கொள்ளப் போகும் முயற்சிகளுக்கான ஒரு வித்தாகவே இந்த நாவல் திகழப் போகிறது என்பதே ஆணித்தனமாக உண்மை.. அலோபதி மருத்துவத்தைக் கொண்டு வணிகம் நடத்திப் பணம் பார்ப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மக்களின் அறியாமையையும், அச்சத்தையுமே மூலதனமாகக் கொண்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சுவதிலேயே கண்ணாக இருக்கும் இந்த ஆங்கில மருத்துவத்தைச் சார்ந்த அனைவருக்கும் ஒரு சாட்டையடியாக, ஆங்கில மருத்துவத்தின் அனைத்துவிதமான சித்து வேலைகளையும், பரிசோதனை என்கின்ற பெயரில் நடத்தப்படும் மாயாஜால வித்தைகளையும், கண்களைத் திறந்துக் கொண்டே ஏமாற்றுகிறோம் என்று தெரிந்தே ஏமாறும் அப்பாவி மக்களின் அறியாமையையும்,, உழைக்கும் ஏழை எளிய அன்றாடங் காய்ச்சிகளின் உழைப்பை சுரண்டிப் பிழைப்பை நடத்தும், அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து அதில் ஆனந்தப்படும் ஆங்கில மருத்துவர்களின் அஜாக்கிரதைகளையும், பரிசோதனைகளில் கமிஷனை எதிர்பார்க்கும் மருத்துவகூடீடத்தின் முகத்திரையைக் கிழிப்பதில் சற்றும் தயவு தாட்சண்யமின்றி சிறிதும் அச்சப்படாமல் திறந்த புத்தகமாக, சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்து இந்த நாவலின் மூலம் மருத்துவ உலகில் ஒரு மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் ஆசிரியர் திரு உமர் ஃபாருக் அவர்கள்.
இந்த நாவலின் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டு, ஒவ்வொரு பாத்திரமும் தெளிவாக சித்தரிக்கப்பட்டு முழுமையாக ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாமல் பாத்திரங்கள் கூறவரும் கருத்துக்களும் விஷயங்களும் தெளிவாகவும் கதைக்குத் தேவையான உரையாடல்களும் ஒவ்வொரு கதாபாத்திரத்தைக் கையாண்ட விதமும் ஒரு முழுமையான நிறைவை ஏற்படுத்தியுள்ளது. நாவலில் என் மனம் கவர்ந்த கதாபாத்திரமான டாக்டர் அன்பு கதாபாத்திரம் இந்த நாவலின் ஒரு மாபெரும் திருப்புமுனையாகும், நாவலின் ஆணிவேராகவும் ஆழ்ந்த சிந்தனையுடன் பார்த்து பார்த்து ரசித்து ஆசிரியரின் ஆழ்மனதில் நீண்டகாலமாக இப்படியொரு உயர்ந்த, மதிப்பிற்குரிய, போற்றுதலுக்குரிய மருத்துவராக உயரிய சிந்தனைகளுடனும், தன்மையுடனும் தெளிவுடனும், அறிவுடனும், மருத்துவத்தின் நுட்பத்தையும் உடல் இயக்கங்களின் மீதான துல்லிய அறிவுடனும், ஆழ்ந்த செறிவூட்டப்பட்ட ஞானத்துடனும், ஒரு நல்ல பண்புகளுள்ள மனிதனாகவும் படைக்கப்பட்டிருப்பது ஒரு கரு எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு குழந்தையாக உருவெடுக்கிறதோ, உருப்பெறுகிறதோ, அதேபோல் டாக்டர் அன்பு கதாபாத்திரம் ஆசிரியரின் மனதில் மெல்லமெல்ல வளர்ந்து அவர் கண்டுகளித்து பேசி பழகி உணர்ந்து ரசித்த பல நல்ல உள்ளங்களின் கூட்டாக இந்த புனைவுப் பாத்திரம் திகழ்கிறது என்பது என் கருத்து. பெயருக்கேற்றாற் போல் அன்பு பாத்திரம் தம்மை நாடி வரும் நோயாளிகளின் மீதும் சுற்றியுள்ள மனிதர்களின் மீதும் நிறைந்த அன்பை வெளிப்படுத்துகிறது. மருத்துவத் துறையில் ஈடுபட்டு தொந்தரவுகள் என்று நாடி வரும் மக்களுக்கு ஒரு முழுமையான மருத்துவராக திகழ வேண்டும் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்கிறது.
முதல் பகுதிக்கு அவர் வைத்த ‘வெப்பம்’ என்கிற தலைப்பு சாலப் பொருத்தமானது. ஆசிரியரின் எதிர்பார்ப்புக்குக் கிடைத்த ஏமாற்றத்தால் வெகுண்டு எழுந்த அந்த கோபக் கனலை, அந்த வெப்பத்தை இரண்டாம் பாகமான குளிர்ச்சி என்கின்ற பகுதியில் டாக்டர் அன்புவுடனான நட்பு அவரை குளிர்ச்சி அடைய செய்தது. ஒரு மருத்துவர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், சிறந்த மருத்துவர் என்றால் மருத்துவத்துறையில் அர்ப்பணிப்புடன் மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற ஆசிரியரின் அடிப்படை எதிர்பார்ப்புகள் அனைத்தையும் டாக்டர் அன்பு முழுமையாக நிறைவு செய்தார். ஆசிரியரின் வெப்பம் தணிந்து குளிர்ச்சித் தன்மை திரும்பிய அத்தியாயம்கவே இரண்டாம் பகுதியான குளிர்ச்சி என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. அலோபதி மருத்துவத்தை முழுமையாக தூக்கி எறிய காரணமான முக்கிய சம்பவத்தைக் கொண்ட பகுதியாக இந்த இரண்டாம் பகுதி விளங்குகிறது. ஆசிரியரின் வாழ்வில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய பகுதி என்றே இந்தப் பகுதியை கூறலாம்.


‘ஆரோக்கிய நிகேதனம்’ என்ற புத்தகத்தின் அடிப்படை தகவல்கள், ‘பிரார்த்தனை என்பது செயல்’என்பதற்கான விளக்கங்கள் அகமனம்-புறமனம் பற்றிய வேறுபாடுகள், சித்தர்களைப் பற்றிய அநேக தகவல்களும்,பாடல்களும், நாடி பரிசோதனை முறைகள், மருத்துவத்தில் சித்தர்களின் அணுகுமுறைகள், ஆங்கில மருத்துவத்தின் கவனக்குறைவால் ஏற்பட்ட இழப்புகள் என பல தளங்களைத் தழுவியே நாவல் நகர்ந்துள்ளது. மரபு வழி மருத்துவங்களில் ஒன்றான சித்த மருத்துவத்தைப் பற்றிய தெளிவான தகவல்களையும், கூர்மையான பார்வைகளையும் கொண்டே இந்த நாவல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து தகவல்களும் கேள்விக் கணைகளாக ஆசிரியர் டாக்டர் அன்புவிடம் கேட்டு தெளிவு பெறுவதாகத் தொகுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து வாசகர்களின் கேள்விகளுக்கான விடைகளாக கொடுத்திருப்பது இந்த நாவல் படைப்பதற்கான நோக்கத்தை மேலும் தெளிவு படுத்துகிறது..நம் மனதில் மருத்துவத்தைப் பற்றியும் இதர தளங்களைப் பற்றியுமான எண்ணற்ற சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்குமான முழுமையான விடைகளை இந்த நாவல் மூலம் ஆசிரியர் கொடுத்திருப்பது சாதாரண பாமர மக்களும் மருத்துவ ரகசியங்களில் தெளிவுபெறவேண்டும், உடலைப் பற்றியும் மருத்துவத்தைப் பற்றியுமான தகவல்கள் மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்ற அவரின் உயரிய நோக்கமே முற்றிலுமாக வெளிப்படுகிறது.
முதற்பகுதியில் தான் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஆய்வுக்கூடத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் ஆங்கில மருத்துவத்தின் மீதும், ஆய்வுக் கூட பரிசோதனைகளின் மீதும் ஏற்பட்ட அவநம்பிக்கைகளும் வெறுப்புகளும் ஆசிரியரை அங்கிருந்து வெளியேற்றியது. டாக்டர் அன்புவின் இயற்கையான இறப்பின் தருணங்களை ஒவ்வொரு கட்டமாக, நாடியில் ஏற்பட்ட மாற்றங்களை ஆசிரியர் மிக மிக நூதனமாக தம் எழுத்தின் மூலம் படைத்திருப்பது டாக்டர் அன்புவின் இறுதிப் பயணம் காட்சியகமாக வெளிப்பட்டு கண்களை கலங்கச் செய்தது. இந்த நாவலின் வாயிலாக நாடி பார்க்கும் நூதன முறையில் ஆசிரியரின ஆர்வமும் மரபு வழி மருத்துவத்தின் மீதான ஈடுபாடும் இந்த மருத்துவத் துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வைத்துள்ளார் என்பது நன்கு விளங்குகிறது.
“எப்போதும் மனதால் சுயமாக முடிவெடுக்க முடிந்தாலும் அதனை செயல்படுத்துவதற்கான வாய்ப்பினை காலம் எல்லோருக்கும் கொடுத்து விடுவதில்லை. நாம் விரும்பாத ஒன்றில் மறுபடியும் இயங்க வேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது”.
நிதர்சனமான வாக்கியங்கள். நானும் என் வாழ்க்கையில் பலமுறை இந்தச் சூழலைச் சந்தித்திருக்கிறேன். ஒரு மருத்துவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட ஒரு சிசுவின் இழப்பு, ஒரு தலைமுறையே வேரோடு வெட்டிச் சாய்த்தது. இந்த சம்பவமே ஆசிரியரை அலோபதி மருத்துவத்துறையிலிருந்து வெளியேற்றி மரபு வழி மருத்துவகளில் பக்கம் திசை திருப்பியது. “இன்னும் வளர்ந்து முடிக்காத விரல்கள் என்னை மருத்துவத்திலிருந்து வெளியே தள்ளியதைப் போல இருந்தது”. ஆழ்ந்த உணர்வுப்பூர்வமான வரிகள். நீண்ட நாட்கள் கருத்தரிக்காத கருப்பையில் முதன் முதலில் இயற்கையால் வழங்கப்பட்ட ஒரு பொக்கிஷமாக தரித்த குழந்தை தரையில் கால் பதிக்கும் முன் இந்தப் பிரபஞ்சத்திற்குள் நுழையும் முன்பே தரித்த இடத்திலேயே வதம் செய்யப்பட்ட கொடுமையை வாசிக்க வாசிக்க இதயம் கனத்தது.
நாவலை வாசிக்க வாசிக்க நம்மை அடுத்தடுத்தக் காட்சிகளில் புகுத்தி சுவாரஸ்யத்தைத் தூண்டியது. டாக்டர் அன்புவின் இறப்பையும், கர்ப்பப்பையில் கட்டி என்று உயிருள்ள ஒரு கருவைக் கொன்ற சம்பவத்தையும் ஆழ்ந்த வரிகளால் காட்சிகளாகச் செதுக்கி மனதை நிலைகுலையச் செய்துள்ளார் ஆசிரியர். நாவலை வாசித்து முடித்த பின் பல நாட்கள் நாவலின் சம்பவங்கள் மனதை வருடிக் கொண்டே இருந்தன. ஒரு முழு திரைப்படத்தைக் கண்டு களித்த மனநிறைவை இந்த நாவல் முழுவதுமாக ஏற்படுத்தியது.நீண்ட நாட்கள் நாவலிலிருந்து வெளிவர முடியாமல் மீண்டும் மீண்டும் மனத் திரையில் காட்சிகள் தோன்றிக் கொண்டே இருந்தன.நிச்சயம் மருத்துவம் சார்ந்த இந்த நாவல் ஆங்கில மருத்துவத் துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்த போகிறது. இந்த நூல் மரபு வழி மருத்துவக் கூறுகளை எதிர்கால சந்ததியினரிடம் கடத்திச் செல்லப் போகும் ஒரு பாலமாகவே நிகழப் போகிறது என்பதில் ஐயமில்லை. வாசகர்களாகிய நம்முடைய கடமை இந்த நூலை ஒரு பொக்கிஷமாக கருதி எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டும். அழிந்து போன நம் பாரம்பரிய மருத்துவங்களை மீட்டுக் கொண்டு வர வேண்டும். .
இந்த நூல் ஒவ்வொரு மக்களின் இல்லத்திலும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான ஆதாரம்.
நன்றி..
து.பா.பரமேஸ்வரி,
சென்னை.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *