athyaayam 11 : pen: andrum indrum...-narmada devi அத்தியாயம் 11: பெண்: அன்றும், இன்றும்… -நர்மதா தேவி
athyaayam 11 : pen: andrum indrum...-narmada devi அத்தியாயம் 11: பெண்: அன்றும், இன்றும்… -நர்மதா தேவி

அத்தியாயம் 11: பெண்: அன்றும், இன்றும்… -நர்மதா தேவி

கற்பனைக்கும் எட்டாத சுரண்டல்

அமெரிக்கா போன்ற புதிய காலனிகளை ஆய்வு செய்யும்போது, 1) ‘அடிமை’த் தொழிலாளர் நிலை, 2) ‘சுதந்திர’ ‘வெள்ளை’ உற்பத்தியாளர்கள் குடும்பங்களில் உழைப்பு, 3) ‘சுதந்திர’ ‘வெள்ளை’த் தொழிலாளர்களின் கூலி-உழைப்பு- இவற்றில் பெண்களின் பாத்திரம் என்ற அடிப்படையில்தான் நாம் அணுக வேண்டி இருக்கிறது. அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்தில் பெண்களின் நிலை குறித்த பார்வைக்கு வருவதற்கு, புதிய அமெரிக்க சமூகத்தின் உற்பத்தி முறைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதால், அவற்றை சற்று விரிவாகவே பார்த்துவிட்டு, பிறகு தொழிலாளர்களில் பெண்கள் நிலைக்குப் பிரத்யேகமாகச் செல்வோம்.

மேற்கு ஐரோப்பிய காலனி ஆதிக்க நாடுகளில் முதலாளித்துவ உற்பத்தி முறை வளர்ந்ததற்கும், இந்த நாடுகள் ஆசியா, அமெரிக்கா, பசிபிக் பகுதிகளில் உருவாக்கிய காலனிகளில் முதலாளித்துவ முறை வளர்ந்ததற்கும் இடையில், சில முக்கியமான வேறுபாடுகள் இருக்கின்றன.

புதிய முதலாளித்துவ உற்பத்தி முறையில் நவீன இயந்திரங்கள் புகுத்தப்பட்டு அதிவேகமாகவும், குறைவான விலையிலும் பொருள் உற்பத்தி சாத்தியமானது. போக்குவரத்து, தொலைத்தொடர்பு தொழிநுட்பங்கள் வளர்ச்சியடையத் தொடங்கின. புதிய உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியடைந்தபோது, தங்கள் நாட்டில் நடக்கும் அதிநவீன முதலாளித்துவ உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருட்களை உற்பத்தி செய்யும் கூடங்களாக தங்களுடைய காலனிப் பிரதேசங்களை ஐரோப்பிய காலனி ஆதிக்க சக்திகள் பயன்படுத்திக்கொண்டன. நிலப்பரப்பு அதிகம் கொண்ட புராதனப் பொதுவுடமைச் சமூகங்கள், தவிர வேறு சமுகங்கள் வளராத அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து பகுதிகளில் ஏற்படுத்திய புதிய உலகக் காலனிகளை ஒரு வகையில் பயன்படுத்தின. வளர்ச்சியடைந்த சமூகங்களில் உருவாக்கிய பழைய உலகக் காலனிகளை வேறு வகையில் பயன்படுத்தின.

தாய்நாட்டு விசுவாசமும், ‘குடியரசு’, ‘மக்களாட்சி’ என்ற கோஷமும்…

புது உலகில் தங்கம், வெள்ளியைத் தோண்டி எடுத்து தாய்நாடுகளுக்கு அனுப்புவது, நிலங்களில் தோட்டப்பயிர்களைப் பயிரிட்டு கச்சாப்பொருட்களை ஏற்றுமதி செய்வது, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு சந்தை உருவாக்கிக் கொடுப்பது- இதையெல்லாம் தொடக்கத்தில் புது உலகிற்குக் குடிபெயர்ந்த முதலாளிகள், ‘தாய்நாட்டு விசுவாசம்’ என்ற அடிப்படையில் செவ்வனே செய்துவந்தார்கள். என்றாலும், அமெரிக்கப் பிரதேசங்களில் குடியேறிய ஐரோப்பிய முதலாளிகள் வெகுசீக்கிரத்திலேயே தங்களுடைய வணிகநலன்களையும், சுதந்திர வளர்ச்சியையும் தங்கள் தாய்நாட்டின் முடியாட்சிகள் கட்டுப்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது என்ற எண்ணத்தைப் பெற்றார்கள். ‘குடியரசு’ என்கிற அரசமைப்பை நோக்கி நகர்ந்தார்கள்.

18-ஆம் நூற்றாண்டில் வட-அமெரிக்கா இப்படியான ‘குடியரசு’ப் பாதையைத் தேர்ந்தெடுக்க, காலப்போக்கில் (19, 20-ஆம் நூற்றாண்டுகளில்) ஸ்பானிஷ் காலனிகளும் குடியரசிற்கான போராட்டங்களைத் தொடங்கின. 1776 ஆம் ஆண்டில் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டு, தன்னை ‘ஜனநாயக’ நாடு என வட-அமெரிக்கா அறிவித்துக் கொண்டபோது, அதன் 22 லட்சம் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் கருப்பின ‘அடிமைகள்’. என்றாலும், அது ஒரு ‘ஜனநாயக’ நாடு.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா போன்ற பிரதேசங்களின் கதை சற்று வேறுபட்டது. வட-அமெரிக்கா போலவே இந்தப் பகுதிகளும் புதிய காலனிகளாக உருவாக்கப்பட்டவை என்றாலும், ‘பிரிட்டிஷ் தாயகம்’ என்ற சிந்தனைக்கு அவை வெகுகாலமாக விசுவாசமாக இருந்து வந்தன. அந்த விசுவாசம் இன்றைய நவீன காலத்திலும் தொடர்வதால், ‘இறையாண்மையுடைய தனி நாடுகள்’ என்ற அந்தஸ்தை அவை கொண்டிருந்தாலும், இங்கிலாந்து முடியாட்சியின் அங்கங்கங்களாகவே அவை இன்றைக்கும் நீடிக்கின்றன. 73 வயதில் இங்லாந்தின் மன்னராக முடிசூடிக்கொண்ட மூன்றாம் சார்லஸ்தான் இந்த நாடுகளுக்கும் மன்னர். சரி போகட்டும்!

புதிய காலனிகள், ‘தாய்நாட்டின்’ கட்டுப்பாட்டில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்ட சுதந்திர நாடுகள், ‘இன்றைக்கும் முடியாட்சியின் அங்கமாகத்’ தொடர்ந்து நீடிக்கும் நாடுகள் -என எதுவாக இருந்தாலும், முதலாளித்துவ முறையின் வளர்ச்சிக்காகப் பல்வேறு காலகட்டங்களில் உருப்பெற்ற அமைப்புகள்தான் அவை. இதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

அமெரிக்க சமூகத்தின் சில அம்சங்கள்

அன்றைய அமெரிக்க சமூகம் ஐரோப்பிய முதலாளித்துவ சமூகத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்டது. என்றாலும், ஐரோப்பிய முதலாளித்துவ சமூகத்தில் இல்லாத சில பிரத்யேகக் கூறுகளைக் கொண்டே அது உருவானது; உருவாக்கப்பட்டது. ‘மனிதநாகரிகம் முதலாளித்துவ சமூகத்துக்கு முன்புவரை கண்ட அனைத்து சமூக வடிவங்களையும் 19-ஆம் நூற்றாண்டு அமெரிக்க சமூகத்தில் காண முடிந்தது எனச் சொல்லலாம்’ என்கிறார் அமெரிக்க மார்க்சிய அறிஞரான ஜார்ஜ் நொவாக். (இவர் ஒரு டிராட்ஸ்கியிஸ்டும் கூட). புராதனப் பொதுவுடைமைச் சமூகம், அடிமைமுறை, நிலவுடைமை முறை, முதலாளித்துவ முறை எல்லாமே அன்றைய அமெரிக்காவில் இருந்தன.

அமெரிக்காவின் பூர்வகுடிகள் புராதனப் பொதுவுடைமைச் சமூகங்களாக இருந்தனர். இவர்களை அமெரிக்க முதலாளிகள் கொன்றொழித்து, கீழ்ப்படியவைத்து தங்களுக்கான புதிய சமூகத்தில் அவர்களை ‘அடிமை’களாக வைத்து சுரண்ட முயற்சி செய்தார்கள். இப்படி முதலாளித்துவ அமெரிக்க சமூகத்தை நிர்மானிக்க பூர்வகுடி அமெரிக்கர்களின் எண்ணிக்கை போதவில்லை.

இந்தப் பணியைச் செய்து முடிக்க அமெரிக்க முதலாளிகளுக்கு லட்சக்கணக்கான எண்ணிக்கையில் ‘அடிமை’களும், ஐரோப்பாவில் இருந்து லட்சக்கணக்கான கூலி-உழைப்புத் தொழிலாளிகளும் தேவைப்பட்டார்கள். எனவே, ஒரு புறம், ஆப்பிரிக்காவைக் குறிவைத்து ‘அடிமை’களைக் கடத்திவந்தும், அமெரிக்காவிலேயே ‘அடிமை’களை உற்பத்தி செய்தும் அடிமைமுறையைக் கட்டியெழுப்பினார்கள். மறுபுறம், ஐரோப்பாவில் இருந்து கூலி-உழைப்பைச் செலுத்தக்கூடிய சுதந்திர ‘வெள்ளை’த் தொழிலாளர்களையும், சுதந்திர உற்பத்தியாளர்களாக இருக்கக் கூடியவர்களையும் அமெரிக்க சமுகத்தில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு குடியேற வைத்தார்கள்.

ஆப்பிரிக்க கருப்பின மனிதர்களை உடைமைகளாகக் கொண்ட அப்பட்டமான பண்டைய அடிமைமுறையை அமெரிக்க சமூகத்தில் புகுத்தி, நிலங்களை தோட்டவேளாண்மை சாகுபடிக்குள் கொண்டுவந்தார்கள். இதன்மூலம் முதலாளித்துவ முறைக்குத் தேவையான பருத்தி, சர்க்கரை, புகையிலை உள்ளிட்ட கச்சாப்பொருட்களை அவர்களால் உற்பத்தி செய்ய முடிந்தது. இந்தக் கச்சாப்பொருட்கள் அமெரிக்காவின் வளர்ந்துவரும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்லாமல், ஐரோப்பாவின் முதலாளித்துவ முறைக்கும், அவற்றின் காலனிகளுக்கும் கூட முன்தேவையாக இருந்தன.

வட-அமெரிக்காவில் தொழில்வளர்ச்சி தொடங்கிய வடக்கு மாகாணங்களுக்கும், தோட்டவேளாண்மை, அடிமைமுறை கோலோச்சிய தெற்கு மாகாணங்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் 1860 காலகட்டத்தில் தொடங்கியது. அப்போது, 3 லட்சம் அடிமை முதலாளிகள், 40 லட்சம் ‘அடிமை’கள், 50 லட்சம் ‘அடிமை’கள் அல்லாத ‘சுதந்திர’ ‘வெள்ளை’த் தொழிலாளர்கள் (இவர்கள் பெரும்பாலும் தங்களுக்கான வாழ்வாதார உற்பத்தியில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள்) வட-அமெரிக்காவில் இருந்தார்கள் என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். அடிமைமுறையும், நவீன கூலி-உழைப்பும் அடுத்தடுத்து இருந்துகொண்டே அமெரிக்காவில் முதலாளித்துவத்தை வளர்த்திருக்கிறது என்பதை இந்த எண்ணிக்கையைக் கொண்டே நம்மால் உணர முடியும்.

இயந்திரங்களுக்கான விதியே ‘அடிமை’களுக்கும்

ஆப்பிரிக்க அமெரிக்க ‘அடிமை’களைப் பொறுத்தவரை அவர்கள் மூலதனத்தின் பகுதியான இயந்திரங்கள் போலவும் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள், உழைப்பிற்கான மூலமாகவும் இருந்திருக்கிறார்கள். ஒரு ஆப்பிரிக்க ‘அடிமை’யை விலைக்கு வாங்கிய ஒரு முதலாளியால் சராசரியாக 20-30 ஆண்டு காலம் வரை அந்த ‘அடிமை’யின் உழைப்பை உறிஞ்சிட முடியுமாம். ஆனால், அவர்கள் 20 ஆண்டு காலமெல்லாம் காத்திருக்கவில்லை.

‘‘அடிமை’கள்தான் நிறைய கிடைக்கிறார்களே! என்னத்துக்கு அவர்களை வெகுகாலம் உயிரோடு வைத்துக்கொண்டு?!’ ‘போட்டு அடியடியென துவைத்து அடித்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலை வாங்கி… கூடுமான லாபத்தைக் குறுகிய காலத்தில் பெற்றிட வேண்டும்.’ -இதுவே நோக்கம் என இறங்கினார்கள்.

‘‘அடிமைகள்’ தேய்ந்து, பிய்ந்து இறந்துவிட்டால்?!’ ‘பரவாயில்லை அதான் மலிவான முதலீட்டில் வேறு ‘அடிமை’களை வாங்கிக் கொள்ளலாமே!’ எனவே, ‘‘அடிமை’களுக்கு சராசரியாக 20 ஆண்டு காலம் உணவு வழங்கி, பராமரித்து, வேலை வாங்கி பயனடைவதைக் காட்டிலும், சராசரியாக வெறும் 7 ஆண்டுகள் வேலை வாங்கினால் போதும்; பெரும்பலனடையலாம்’ -இப்படி ‘அடிமைகள்’ உபரியாகக் கிடைத்த காலகட்டத்தில் அமெரிக்க முதலாளிகள் அவர்களை இரவு பகல் தொடர்ச்சியாகப் பிழிந்து சாகடித்திருக்கிறார்கள்.

‘எதற்கு வாங்கிய இயந்திரங்களைத் துடைத்துப் பராமரித்து, பொத்திப் பொத்திப் பாதுகாத்து, நீண்ட காலம் ஓடவைத்து, லாபம் பார்க்க வேண்டும்? இயந்திரங்கள்தான் குறைவான விலைக்குக் கிடைக்கிறதே! இரவு பகலாக ஓட்டுவோம்! ஓய்ந்து தேய்ந்தால்? வேறு வாங்கிக்கொள்ளலாம்!’ இப்படியொரு பார்வையை இயந்திரங்களை வைத்து உற்பத்தி செய்யும்போது கொண்டிருக்க முடியும். இதே கண்ணோட்டத்தில்தான் ரத்தமும், சதையும், மூச்சும் கொண்ட மனிதர்களான ‘அடிமை’களையும் அன்றைக்கு முதலாளிகள் பயன்படுத்தி இருக்கிறார்கள். மார்க்ஸ் சொன்ன அதே ‘ஸ்வீட் காமர்ஸ்’

அமெரிக்காவின் தென்மாகாணங்களின் தோட்டங்களில் பகல் முழுவதும் வெயிலில் வேலை பார்க்கும் ஒரு ‘அடிமை’, இரவு பருத்தியில் இருந்து கொட்டைகளை நீக்க வேண்டுமாம். ‘‘அடிமை’களை நாம் மிகவும் மோசமாக வேலைவாங்குகிறோம். அவர்கள் நமது மூலதனத்தின் ஒரு பகுதி என்றாலும், ஒரு வரைமுறை வேண்டாமா?, ‘18 மணி நேரத்துக்கு மேல் ‘அடிமை’களை வேலை வாங்கக்கூடாது’ என்ற விதியைக் கொண்டு வர வேண்டும்’ என்ற பேச்சு அமெரிக்காவில் அடிமைமுறை உச்சத்தில் இருந்த இந்த தென்மாகாணங்களில் அடிபட்டிருக்கிறது.

கூலித்தொழிலாளர், சுதந்திர உற்பத்தியாளர்கள்

‘அடிமை’களுக்கு அருகருகில் வேலைபார்த்த கூலித்தொழிலாளர்கள், சுய உற்பத்தியாளரைப் பற்றிப் பார்ப்போம். முந்தைய நிலவுடைமை, கைவினை உற்பத்தி முறையில் இனி பிழைக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், ஏழை விவசாயிகளும், விவசாயக் கூலித்தொழிலாளர்களும், கைவினைத்தொழிலாளர்களும் நவீன ஆலைத்தொழிலாளிகளாக முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் நுழைகிறார்கள்.

இப்படிப்பட்ட மனிதர்களும் அமெரிக்க சமூகம் எனும் புது உலகில் நுழைந்தார்கள். இவர்களில் ஒரு பகுதி பாட்டாளி வர்க்கமாகத் தொடர்ந்தார்கள்; ஒரு கணிசமான பகுதி மீண்டும் வாழ்வாதாரத்துக்கான சுய-உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்களாக மாறினார்கள். மீண்டும் தொடர்ச்சியாக பிழைப்பு தேடித் தொழிலாளர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.

அமெரிக்க சமூகத்தில் நிலம் எனும் உற்பத்திக் கருவி எக்கச்சக்கமாக இருந்தது. பாட்டாளி வர்க்கமாக நுழைந்த மனிதர்கள், பொருள்சேர்த்து நிலம் வாங்கி பாட்டாளி வர்க்கம் அல்லாத உற்பத்தியாளராக மீண்டும் மாறும் வாய்ப்பு அன்றைக்கு அமெரிக்காவில் ‘வெள்ளை’யர்களுக்கு இருந்தது. இதனால், அமெரிக்க சமூகம், ஆஸ்திரேலிய சமூகம் போன்ற புதிய காலனிகளில், தொழில்வளர்ச்சி தொடங்கிய சூழலில், முதலாளியின் சொத்துகள், ‘மூலதனம்’ ஆவது என்ற மாற்றம் ஐரோப்பாவைப் போல நடக்கவில்லை.

முதலாளித்துவ முறை பற்றி நாம் பொதுவாக எப்படிக் கருதுகிறோம்?

‘முதலாளி பணம், இயந்திரம் என முதல் வைத்திருக்கிறார். இவைதான் மூலதனம். தொழிலாளி உழைப்பை செலுத்தி, உழைப்புக்குக் கூலி பெருகிறார். சுதந்திரமான பரிவர்த்தனை இது!’ -இப்படித்தானே நாம் பெரும்பாலும் நினைக்கிறோம். உண்மையில் பணமும், சரக்குகளும் இருந்துவிட்டால், அவை தானாக மூலதனம் ஆகிவிடாது. அதே போலக் கருவிகள், இயந்திரங்கள், நிலம் போன்ற உற்பத்திச் சாதனங்களும், வாழ்வாதாரச் சாதனங்களும் தானாக மூலதனம் ஆகிவிடாது. அவை மூலதனமாக மாற்றப்பட வேண்டியிருக்கிறது.

இந்த மாற்றம் குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில் மட்டுமே நடைபெறமுடியும் என்கிறார் மார்க்ஸ். இதற்கு, இரண்டு வகையான சரக்கு உடைமையாளர்கள் நேருக்கு நேர் சந்தித்து தொடர்புகொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

ஒரு புறத்தில் பணம், தொழிற்சாலை போன்ற உற்பத்திச் சாதனங்கள், வாழ்வாதாரச் சாதனங்களின் உடைமையாளர்கள். இவர்களுக்குப் பிறரின் உழைப்புச் சக்தியை வாங்கி தங்களுடைய உடைமைகளின் மதிப்புத் தொகையை அதிகரித்துக்கொள்ள வேண்டும். மறுபுறம் ‘சுதந்திர’த் தொழிலாளர்கள் என்பவர்கள், தங்களுடைய உழைப்புச் சக்தி என்ற சரக்கை விற்கிறவர்கள். எனவே, உழைப்பை விற்கிறவர்கள்.

இங்கே சுதந்திரத் தொழிலாளர்கள் என்பதை இரண்டு அர்த்தத்தில் பார்க்க வேண்டும். இவர்கள் அடிமைகளைப் போல தாங்களே உற்பத்திச் சாதனங்களாய் இருப்பவர்கள் அல்ல; உடைமை-விவசாயிகளைப் போல உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்களாகவும் அவர்கள் இல்லை. அதனால் அவர்கள் உற்பத்திச் சாதனங்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களாக, விடுவிக்கப்பட்டவர்களாக – ‘சுதந்திர’த் தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.

இந்தத் தொழிலாளர்கள் தங்களுடைய உழைப்பைச் செலுத்தி பிழைத்துக் கொள்ளக்கூடிய அனைத்து உடைமைகளில் இருந்தும் பிரிக்கப்படுவதுதான் முதலாளித்துவ முறைக்கு முன்தேவையாக இருக்கிறது. தொழிலாளியிடம் இப்போது உள்ள ஒரே சரக்கு அவருடைய உழைக்கும் திறன், எனும் உழைப்புச் சக்தி மட்டுமே. அந்தச் சரக்கை அவர் முதலாளியிடம் கூலிக்கு விற்க வேண்டும். இந்த வகையான ‘சுதந்திர பரிவர்த்தனை’ முதலாளித்துவத்தின் முன்தேவை என்று மார்க்ஸ் விளக்குகிறார்.

இடம்பெயர்ந்த ஐரோப்பிய தொழிலாளர்கள்

பிழைப்புக்கே வழியில்லை என்ற நிலையில் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்த ‘வெள்ளை’த் தொழிலாளர்கள் நிலை வேறாக இருந்தது. புதிய உலகில் சில காலம் உழைத்துப் பொருள் சேர்த்துவிட்டால் அவர்களால் நிலம் வாங்கி, உற்பத்தியாளர்களாக மாறவும் முடிந்தது. அமெரிக்கப் பிரதேசத்தில் நிலம் எக்கச்சக்கமாக இருந்ததும், வாங்கக்கூடிய விலைக்கு நிலம் கிடைத்ததும் இந்த மாற்றம் நிகழ்வதற்குக் காரணமாக இருந்தது. இன்றைக்குக் கூலித் தொழிலாளர்களாக நுழைபவர்கள் நாளைக்கு உற்பத்தியாளர்களாய் மாறும் வாய்ப்பை நிலம் அங்கு ஏற்படுத்திக்கொடுத்தது.

19-ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, வட- அமெரிக்காவில் குடியேற்றங்களை உருவாக்குதில் ‘முக்கிய பங்களிப்பு’ செய்த சீமான் எட்வர்ட் கிபான் வேக்ஃபீல்ட். புதிய உலகில் காலனிகளை உருவாக்கி, மூலதனத்தையும், தொழில்வளர்ச்சியையும் ஏற்படுத்துவதில் உள்ள சிக்கல்களை முன்வைத்து நிறைய கட்டுப்பாடுக் கொள்கைகளை அந்தக் காலத்தில் முன்வைத்தவர். இந்த மனிதரை மேற்கோள்காட்டி மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் அமெரிக்கச் சூழலை அவருக்கே உரித்தான பகடியான நடையில் விளக்குகிறார்.

ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கூலித்தொழிலாளர்கள், விரைவில் “கூலித்தொழிலாளர்களாய் இல்லாமல் போகின்றனர்…உழைப்புச் சந்தையில் தனது முன்னாள் அதிபர்களுடன் போட்டிப்போடாவிட்டாலும் அவர்கள் சுயேச்சையான நிலவுடைமையாளர்கள் ஆகிவிடுகின்றனர்” என்று வேக்ஃபீல்ட் புலம்பித் தள்ளியிருக்கிறார். அவருடைய புலம்பலுக்கு மார்க்ஸ், “அமெரிக்க முதலாளி, தமது மூலதனத்துடன் கூடவே தமது கூலித்தொழிலாளர்களையும் இறக்குமதி செய்யும் தந்திரக்காரர்களாய் இருந்தால், அதனாலும் அவர்களுக்குப் பயனில்லை…. விரைவில் “கூலித்தொழிலாளர்களாய் இல்லாமல் போகின்றனர்…” என்ன கொடுமையான நிலை இது!.. அரும்பெரும் முதலாளி, தனதருமைப் பணத்தை செலவிட்டு தனது போட்டியாளர்களையே நேராக ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார்!” என்று பகடி செய்கிறார்.

ஐரோப்பாவைப் போல முதலாளியை, மூலதனத்தை சார்ந்திருக்கும் நிலையில் குடிபெயர்ந்த கூலித்தொழிலாளர்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? வேக்ஃபீல்ட் சில யோசனைகளை முன்வைத்திருக்கிறார்:

1) குடியேறிய தொழிலாளி உடனே நிலம் வாங்கி, சுயேச்சையான விவசாயியாக மாறும் அளவுக்கு நிலம் மலிவான விலையில் கிடைக்கக்கூடாது. நிலம் வாங்குவதற்கு முன்னால் அவர் நீண்ட காலம் கூலிக்கு வேலை செய்தாக வேண்டும் எனும் அளவுக்கு நிலத்தின் விலை அதிகமாய் இருக்க வேண்டும்.

2) இப்படிச் செய்யும்போது, முதலாவதாக எந்தத் தொழிலாளியும் வேலை செய்து, போதிய பணம் சம்பாதிக்கும் வரை நிலம் வாங்க முடியாது. எனவே, இப்படிக் குடியேறும் தொழிலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முறையில் கொஞ்ச காலத்துக்குக் கூலி வேலை செய்தால், மேலும் பல தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்குத் தேவையான மூலதனத்தை உற்பத்தி செய்ய முடியும்.

3) நிலத்திற்கு உரிய விலையைக் காட்டிலும் மிக அதிக விலைக்கு விற்பதால் கிடைக்கும் கூடுதல் நிதியை, மேற்கொண்டு தொழிலாளர்களை இறக்குமதி செய்வதற்காகப் பயன்படுத்த வேண்டும்”

எப்படிப்பட்ட கோரிக்கைகள் எல்லாம் அன்றைக்கு புதிய காலனிகளில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன?! ஒன்று மட்டும் தெளிவு. தங்குதடையற்ற உழைப்பின் தேவை மட்டுமே அன்றைக்கு அமெரிக்கா போன்ற புதிய காலனிப் பிரதேசங்களை நகர்த்தியது.

1) தொடக்க காலத்தில் அமெரிக்கப் பூர்வகுடிகளை வைத்து சமாளிக்கப் பார்த்தார்கள்.

2) ‘வெள்ளை’ தொழிலாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாய் கொண்டு சென்றார்கள்.

3) ஆப்பிரிக்க கருப்பின மக்களைக் கடத்திச் சென்று மிருகத்தனமாக வேலை வாங்கினார்கள்.

4) ஐரோப்பாவில் இருந்து தொடர்ந்து பிழைக்க வழியில்லாத ‘வெள்ளை’த் தொழிலாளர்களை குடியேற வைத்தார்கள்

5) இந்த அனைத்து முறைகளிலும் பெண்களை கடுமையாகச் சுரண்டினார்கள்.

இப்படி வாய்ப்பிருக்கும் வழிகளில் எல்லாம் உழைப்புக்கான பல்வேறு மூலங்களை அமெரிக்க சமூகம் சுரண்டியது.

கருப்பின ‘அடிமை’ச் சமூகமும், பெண்களும்

சென்ற 21-ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்துதான் கருப்பின ‘அடிமை’களின் வாழ்க்கையை, குறிப்பாக அவர்களின் குடும்ப வாழ்க்கையை ஆராய்ந்து, அதன் மூலகாக பெண் ‘அடிமை’களின் உண்மை நிலையை பகுத்தறியும் ஆய்வுகள் வரத்தொடங்கின. வட-அமெரிக்காவின் மிக முக்கியமான ஆப்பிரிக்க-அமெரிக்க கம்யூனிஸ்ட் ஏஞ்சலா டேவிஸ். கம்யுனிஸ்ட் என்பதற்காக ரீகன் காலத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்து பேராசிரியர் வேலை பறிக்கப்பட்டவர். இவருடைய பெண்கள், இனம், வர்க்கம் (Women, Race and Class) நூல், ஆப்பிரிக்க ‘அடிமை’களின் வாழ்க்கையை, பெண்களின் நிலையைப் படம்பிடித்துக் காட்டிடும். அமெரிக்காவின் சாபங்களாக இனவெறியும், முதலாளித்துவமும் இருக்கின்றன என்பதை ஆணித்தரமாகப் புரியவைத்திடும்.

“அதிகாலை நான்கு மணிக்கு மணிச்சத்தம் கேட்கும். எல்லோருக்கும் கிளம்பிச் செல்ல அரைமணி நேரம் வழங்கப்படும். ஆண்கள், பெண்கள் இருவரும் வேலைகளைத் தொடங்குவார்கள். ஆண்களைப் போலவே பெண்களும் சீராக, வலுவாக வேலை செய்ய வேண்டும். ஆண்கள் செய்யும் அதே அளவிலான வேலைகளை பெண்களும் செய்ய வேண்டும்.” முன்னாள் ‘அடிமை’ ஒருவரின் இந்தப் பதிவைச் சுட்டிக் காட்டி, ஏஞ்சலா டேவிஸ் பெண் ‘அடிமை’கள் சந்தித்த பிரத்யேகமான சுரண்டல் வடிவங்களை விளக்கி இருப்பார்.

தெற்கு-வட மாகாணங்களின் எல்லைப் பகுதிகளில் பெண் ‘அடிமை’கள் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டார்கள் என்றாலும், ‘அடிமை’கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்த தென் மாகாணங்களில் பெண் ‘அடிமை’கள் தோட்டத் தொழில்களில்தான் ஈடுபடுத்தப்பட்டார்கள். பருத்தி, சோளம், புகையிலை, கரும்பு தோட்டங்களில் பெண்களும், ஆண்களும் அன்றைக்கு சரிசமமாக வேலை வாங்கப்பட்டார்கள் என்பதை நாம் மேலே பார்த்த பதிவு புரியவைத்திடும்.

முதலாளிகள் ஒவ்வொரு ‘அடிமை’யின் உற்பத்தித் திறன்களையும் துள்ளியமாக அளந்து பதிவேடுகளைப் பராமரித்து வந்தார்கள். அன்றைக்கு முதலாளிகள் எதிர்பார்த்த வேலை அளவு என்பது, ஒரு மனிதரின் உயிரைக் குடிக்கப் போதுமான அளவு. என்றாலும், அவர்கள் எதிர்பார்த்த அந்த சராசரி வேலை அளவை அன்றைக்கு ‘அடிமை’கள் உறுதிசெய்து வந்தார்கள். இப்படியான முழுஉற்பத்தித்திறன் கொண்ட வயதுவந்த ‘அடிமை’களை ‘முழுகரங்கள்’ (Full hands) என்று பதிவேடுகளில் முதலாளிகள் குறிப்பிடுவார்கள். குழந்தைகளை ‘கால்-கரங்கள்’ (Quarter hands) என்றார்கள்.

வயதுவந்த ‘அடிமை’களில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் முழுகரங்கள்தான். உழைப்பு என்று வரும்போது, பெண்களுக்கு அவர்களின் பாலினத்தால் சலுகை எதுவும் கிடையாது. உழைப்பின் அளவைப் பொறுத்தமட்டில், பாலினப் பிரிவினைகளே கிடையாது; ‘பாலினம் அற்ற’ ‘அடிமை’களாகவே இருபாலரும் வேலை வாங்கப்பட்டார்கள். தொடர்ச்சியான கடுமையான வேலைக்கு இடையில் ‘அடிமை’களின் வேகம் சற்று குறைந்துவிட்டால், உடனே சாட்டை அடி. அவ்வளவுதான், உடனே அவர்கள் வேகத்தைக் கூட்டியாக வேண்டும். சாட்டையடி வன்முறை மூலம் வேலை வாங்குவது என்பதிலும் பாலின பேதம் கிடையாது.

இதுபோக, இனப்பெருக்கம் என்கிற உயிரியல் திறன் பெண்களுக்கு இருக்கிறதல்லவா? இந்தத் திறனை மட்டும் ‘பாலின அடிப்படையில்’ முதலாளிகள் பார்த்தார்கள். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘அடிமை’ இறக்குமதிக்கான தடை வந்ததும், ‘அடிமைப்’பெண்களின் இனப்பெருக்கத் திறனைக் குறிவைத்தார்கள் முதலாளிகள். உள்நாட்டிலேயே இனப்பெருக்கம் வாயிலாக ‘அடிமை’கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். இதுதான் அவர்களின் இலக்கு. 14 குழந்தைகள் வரைப் பெற்றெடுக்க ஆப்பிரிக்க ‘அடிமை’ப்பெண்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

பெண் ‘அடிமை’கள் குழந்தைகளை ஈன்றெடுத்தார்கள் என்றதும், அவர்கள் ஏதோ ‘தாய்மார்களாக’வும் இருந்தார்கள் என நாம் கற்பனை செய்யக்கூடாது. ‘இனப்பெருக்கம் செய்பவர்கள்’ (Breeders) என்று மட்டுமே அவர்கள் பார்க்கப்பட்டார்கள். ‘தாய்மார்கள்’ என்று அவர்கள் பார்க்கப்படவில்லை. தான் பெற்றெடுத்த குழந்தைகளுக்குப் பாலூட்டுதல், பராமரித்தல், வளர்த்தல் எல்லாமே அடுத்து ‘அடிமை’களை அவர் உற்பத்தி செய்கிறார் என்றளவில் மட்டுமே பார்க்கப்பட்டது.

கன்றுக்குட்டியைப் பசுவிடம் இருந்து பிரித்து விற்பது போல, தாயிடம் இருந்து ‘அடிமை’க் குழந்தைகளைப் பிரித்து விற்கும் உரிமை எஜமானனுக்கு இருந்தது. ஆப்பிரிக்க ‘அடிமை’ப்பெண்ணுக்கு எஜமானால், அவன் செய்கிற வன்புணர்வால் குழந்தை பிறக்கலாம். அல்லது அடிமைக் குடியிருப்புகளில் சக-ஆண் ‘அடிமை’களிடம் அவர்கள் கொண்ட திருமண உறவால், அல்லது திருமணம் இல்லாத உறவால் குழந்தை பிறக்கலாம். எப்படியும், அந்தக் குழந்தையின் தந்தை பெயர் தெரிந்திருந்தாலும், பதிவில் தந்தை பெயரைக் குறிப்பிடும் வழக்கத்தை அன்றைக்கு முதலாளிகள் கடைப்பிடிக்கவில்லை. ஆப்பிரிக்க அடிமை சமூகத்தைப் பொறுத்தவரையில், தாய் பெயர் மட்டும் குறிப்பிட்டால் போதும். ‘தாய்வழிச் சமூகமாக’ ஆப்பிரிக்க அடிமைச் சமூகத்தை உருவாக்கினார்கள்.

‘வெள்ளை’ எஜமானர் வீட்டிலோ, ஆண் எஜமானர்தான் வாரிசுகளின், சொத்துகளின் அதிபதி. அவர் மனைவி கொண்டு வந்த சொத்துகள்கூட அவருடைய சொத்துகள் என்றாகிவிடும். ஆனாலும், அதே ஆண் எஜமானர் வன்புணர்வு செய்தததன் விளைவாக ‘அடிமை’ப்பெண் பெற்றெடுத்த குழந்தை ‘அவருடைய வாரிசு’ என்று அடையாளப் படுத்தக்கூடாது. பெற்றெடுத்த அடிமைத் ‘தாய்வழி’ என்று மட்டுமே பார்க்க வேண்டும்.

‘வெள்ளை’யர்கள் குடும்பங்களில் பெண்களின் பாலியல் உறவுகள் வன்மையாகக் கட்டுப்படுத்தப்பட்டது; திருமணத்துக்கு முந்தைய, வெளியிலான உறவுகளுக்காகப் பெண்கள் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டார்கள். நியு இங்கிலாந்து போன்ற பகுதிகளில் ‘நன்னடத்தை’ என்ற பெயரில் பெண்கள் சூனியக்காரிப் பட்டம் சுமத்தப்பட்டுப் கொல்லப்பட்டார்கள். ஆனால், ‘அடிமை’ சமூகத்திலோ, பெண்கள் திருமணத்துக்கு முந்தைய, வெளியிலான உறவு, காதல் உறவு, வன்புணர்வு ‘உறவு’, என அனைத்து வகையான உறவுகளிலும் இருக்கலாம். முதலாளிக்கு இவற்றால் மிகப்பெரும் வணிகப்பயன் இருக்கிறதல்லவா? ‘வெள்ளை’ முதலாளிகள் செய்கிற வன்புணர்வுக் குற்றங்களுக்கு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படாது என்ற அளவிற்கு அமெரிக்க சட்டங்கள் அன்றைக்கு அடிமைமுறையை வலுப்படுத்தின.

இன்னொரு முக்கியமான விஷயம். ‘பெண் ‘அடிமை’களுக்கு இனப்பெருக்க பொறுப்பு இருந்ததால் வேலைகளில் சலுகை இருந்திருக்கலாம்’ என்றும் நாம் கற்பனை செய்யக்கூடாது. வேலையைப் பொறுத்தவரை பாலினப் பாகுபாடு கிடையவே கிடையாது. கர்பிணியாக இருந்த பெண்களுக்கும் சாட்டையடி உண்டு. உழைப்பு என்று வந்துவிட்டால், ‘சரிசமம்’ அல்லவா?

“வயிற்றின் மீது அடிபடாத வகையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சாட்டையடி விழும். தன்னுடைய சகோதரிக்கு அப்படி அடிவிழுந்தபோது, அவர் தோட்டத்திலேயே பிள்ளையைப் பெற்றுவிட்டாள். எனது சகோதரியை அடித்துத் துன்புறுத்திய அதே ஆளால் ஒரு கர்ப்பிணிப் பெண் எங்கள் தோட்டத்தில் உயிர்விட்டிருக்கிறார்.” -இது ஒரு பதிவு…

குழந்தைகள் பிறந்ததும் வயதான பெண் ‘அடிமை’களின் கண்காணிப்பிலோ, அல்லது தன்னுடைய குழந்தைகளில் சற்று பெரிய குழந்தைகளின் பார்வையிலோ சிசுவை விட்டுவிட்டு ‘அடிமை’ப்பெண் வேலைக்குப் போக வேண்டும். சில தாய்மார்கள் வேலை செய்யும் இடத்தில் பார்வையில் இருக்கும்படி குழந்தைகளைக் கிடத்திவிட்டு வேலை பார்ப்பார்கள். சில பெண்கள் மட்டைபோன்ற துணிகளைக் கொண்டு குழந்தையை முதுகில் இறுகக் கட்டிக்கொண்டு வேலைபார்ப்பார்கள்.

“பாலூட்டும் பெண்களுக்கு மார்கட்டிக்கொண்டு வலி ஏற்பட்டு வேலையில் வேகம் சற்று குறைந்தால், அவ்வளவுதான். உடனே சாட்டையடி. பாலும், குருதியும் கலந்து சொட்டிக்கொண்டே இருக்கும். அந்தப் பெண் ‘அடிமை’கள் வேலை பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.”-இது ஒரு பதிவு.

மிகப்பெரும் பிரதேசம். மிகப்பெரும் நிலப்பரப்பு. தோண்டத் தோண்ட வளங்கள். குடியேற்றம் செய்து, முதலாளித்துவ உற்பத்தி முறையை வளர்த்தெடுக்க வேண்டும். உழைப்பின் முக்கிய மூலமாக அடிமை உழைப்பையும் வேண்டியது முதலாளித்துவம். இதுதான் அன்றைக்கு அமெரிக்க சமூகங்களில் நடந்தது.

முதலாளித்துவ உற்பத்தி முறை சமூகத்தில் நிலவும் அனைத்துவிதமான பாகுபாடுகளையும், அடிமைமுறைகளையும் தனது லாபவெறிக்காகப் பயன்படுத்திடும். பெண்ணடிமை முறையை, அப்பட்டமான அடிமைமுறையை, சாதிக்கொடுமை முறையை, எந்த வகையான அடிமையை முறையையும் தன்னுடைய வளர்ச்சிக்காக மீட்டெடுக்கும். அமெரிக்க சமூகத்தின் அடிமைமுறையில், ‘அடிமை’கள் வாழ்க்கையில், அவர்களில் குறிப்பாகப் பெண்களின் வாழ்நிலையைப் பார்க்கும் போது, ‘முற்போக்கான’ முதலாளித்துவத்தின் உண்மையான இந்தக் கொடூரத் தன்மை நமக்கு நன்றாகப் புரிபடும்.

சுதந்திர ‘வெள்ளை’ உற்பத்தியாளர்கள்/ தொழிலாளர்கள் சமூகமும் பெண்களும்

17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வணிக வாய்ப்புகளுக்காக இடம்பெயர்ந்த முதலாளிகள், ஒப்பந்த அடிப்படையிலும் தொழிலாளர்களைக் கொண்டு வந்தார்கள். ஒப்பந்தக் கூலித்தொழிலாளர்களாக நுழைந்தவர்களுக்கு சுதந்திர உற்பத்தியாளாராகும் எண்ணமே அதிகமாக இருந்தது. அதற்கான வாய்ப்புகளும் இருக்கவே நிலம், குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதார உற்பத்தியில் ஈடுபட்டார்கள்.

இடம்பெயர்ந்த புதிய உலகில் வாழ்க்கை மிகக்கடுமையானது. மிகவும் கரடுமுரடானது. ஆண்களுக்கு மனைவிகள் எனும் ‘தலைமை ஏவலாள்’ இல்லையெனில் எதுவுமே ஓடாது என்ற நிலை. எனவே, இடம்பெயர்ந்த தொழிலாளர்/உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரையில் குடும்ப அமைப்புதான் பிரதானம். அந்தக் குடும்ப அமைப்பின் கட்டுக்கோப்புக்கு மனைவிதான் அடிப்படை. அவர்கள் கிளம்பிவந்த இங்கிலாந்தைக் காட்டிலும், பிற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும், குடும்பம் என்ற அமைப்புக்கு அமெரிக்க சமூகத்தில் மிகப்பெரும் முக்கியத்துவம் விதிக்கப்பட்டிருந்தது.

‘காலையில் சூரியன் உதித்ததில் இருந்து இரவில் விறகொளியில் கண்கள் தானாக மூடிக்கொள்ளும் வரை இந்த சுதந்திர உற்பத்தியாளர்களின் குடும்பப் பெண்கள் வேலை பார்த்தார்கள்’ என்கிறார் ஏஞ்சலா டேவிஸ். இடப்பெயர்வு நடக்கத்தொடங்கி முதல் இரண்டு நூற்றாண்டுகள் வரை அமெரிக்கக் குடும்பங்கள் பயன்படுத்தியது, சாப்பிட்டது எல்லாமே வீட்டளவில், ‘மனைவி’ என்ற பெண்ணின் மேற்பார்வையில் உற்பத்தி செய்யப்பட்டவைதான்’ என்கிறார் அவர். (‘அடிமை’களை வேலைவாங்குவதும் இந்த மேற்பார்வையில் அடக்கம்)

“வீட்டில் உள்ளோர் உடுத்திய துணிகள் அவள் நெய்து, சாயமிட்டு, வெட்டித் தைத்தது. அவளுடைய குடும்பம் சாப்பிட்ட உணவு அவள் விளைவித்தது, விளைச்சலில்லாத காலங்களில் அவர்கள் சாப்பிட்டது அவள் சேமித்த உணவு. வெண்ணை, பாலாடைக்கட்டிகள், ரொட்டி, மெழுகுவர்த்திகள், சோப்புகள், குளிருக்கு உடுத்திய ஆடைகள் அனைத்துமே அவள் செய்தது. நவீன தொழில்-வளர்ச்சிக்கு முந்தைய அமெரிக்காவில், நூற்பாளராக, நெசவாளராக, ஆடை வடிவமைப்பாளராக, ரொட்டி செய்பவராக, வெண்ணை, மெழுகு உற்பத்தியாளராக, சோப்பு உற்பத்தியாளராக, etc, etc, etc வாக பெண்கள் இருந்தார்கள்; இன்றைய மதிப்பீட்டில் தொழிற்புரட்சிக்கு முந்தைய பெண்களை ‘குடும்ப நிர்வாகிகள்’ என்று சொல்ல வேண்டும்” என்று விளக்குகிறார்.

“நீங்கள் நினைப்பது போல அன்றைய பெண்கள் தினந்தினம் வீட்டைத்துடைத்துக் கொண்டு சுத்தப்படுத்திக் கொண்டு ஒன்றும் இருக்கவில்லை. தினந்தினம் வீடுகளை சுத்தப்படுத்தும் வழக்கம் அன்றைக்கு கிடையாது. வாரத்துக்கு ஒருமுறை சுத்தப்படுத்துவது கூட கடினமே. வசந்தகாலத்தில் சுத்தப்படுத்தும் முறை இருந்திருக்கிறது.

சாப்பாடு எளிமையானதாக, எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. அழுக்குத் துணிகளை ஒரு மாதம் வரைக்கும் சேர்த்து வைத்துத்தான் துவைத்தார்கள். சில வீடுகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறைகூட சலவை நடக்கும். எனவே, ஆடைகளை எப்போதாவதுதான் மாற்றுவார்கள். தண்ணீரை வண்டியில் கொண்டுவந்து, கொதிக்கவைத்து சலவை செய்ய வேண்டும் என்பதால், பளிச்சென்ற சுத்தத்தை யாரும் கண்டுகொள்ளவே தயாராக இல்லை. குடும்பத்தின் இந்த நிலையில் இருந்தே அன்றைக்கு அமெரிக்கப் பெண்கள் வெறும் வீட்டைப் பராமரித்து, சுத்தப்படுத்துபவர்களாக இல்லை; வீட்டை/குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த உற்பத்தியில் முழுமையாக ஈடுபடும் தொழிலாளராக இருந்தார்கள் என்பது புரியும்” என்கிறார் ஏஞ்சலா.

உற்பத்தி என்பது புதிய அமெரிக்க சமூகம் வீடுகள், குடும்பங்களுக்கு விதித்திருந்த பொருளாதாரப் பொறுப்பு. இதுபோக, சமூகக் கட்டுக்கோப்பை உறுதிசெய்யும் பொறுப்பும் குடும்பங்களுக்கே விதிக்கப்பட்டிருந்தது. மதப் பிரிவுகள் & கிறிஸ்தவ தேவாலயங்கள், அரசு – இவை இரண்டும் பெண்களை அடிப்படையாகக் கொண்ட குடும்பங்களைக் கொண்டே அமெரிக்க சமூகத்தைக் கட்டியெழுப்பின. ‘நல்ல பெண், கற்பு, ஒழுக்கம், கீழ்படிந்த மனைவி’ என நம்மூரின் அனைத்துவிதமான ‘கற்புக்கரசி கண்ணகி பரம்பரை’ மதிப்பீடுகளையும் அங்கு மதம், அரசு இரண்டும் பெண்கள் மீது சுமத்தி இருந்தது. ‘பெண்ணடிமை முறை’, ‘கருப்பின அடிமைமுறை’ இரண்டையும் கட்டிக்காப்பாற்றும் வகையில் அன்றைய அமெரிக்க ஜனநாயகத்தின் சட்டங்கள் இருந்தன.

தொழிற்புரட்சியும் பெண்களும்…

அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குடும்ப அமைப்புகளுக்கு வெளியில் இயந்திரங்களைக் கொண்டு நடைபெறும் உற்பத்தி முறை வளரத் தொடங்குகிறது. அதுவரை வீட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் தொழிற்சாலைகளில் மின்னல்வேகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 1812 ஆம் ஆண்டில் பிரான்சிஸ் கபாட் லவல் என்ற அமெரிக்கர் இங்கிலாந்தின் ஜவுளி உற்பத்தித் தொழிலைப் போல அமெரிக்காவின் மஸசூஷட்ஸ் மாகாணத்தில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்கிறார். 1840 வாக்கில் லவல் எனும் தொழிற்பகுதி உருவாகி முழுவீச்சான நவீன முதலாளித்துவ ஜவுளி உற்பத்தி நிகழ்கிறது. நியு இங்கிலாந்து மாகாணங்களின் விவசாயக் குடும்பப் பெண்கள், திருமணத்திற்கு முன்பு இங்கு பணிபுரிய பெருந்திரளில் அழைத்து வரப்படுகிறார்கள். புதிய உற்பத்தி முறைகள், விவசாயம், சுதந்திர உற்பத்திகளைப் பாதித்ததால் ஆலை உற்பத்திக்குள் வர வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது.

பெண்கள் புனிதமானவர்கள், குழந்தை வளர்ப்பு, வீடுதான் அவர்களின் இடம் என்ற கருத்துகள் இங்கிலாந்து சமூகத்தைக் காட்டிலும் அமெரிக்க சமூகத்தில் சற்று சத்தமாகவே ஒலிக்கின்றன. ‘பள்ளி, கல்வி நிலையங்களில் மகள்களை படிக்க அனுப்பினால் அங்கு அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள் இல்லையா? அதே போலத்தான் இந்த தொழிற்சாலைகளும். பாதுகாப்பாக அவர்களைப் பார்த்துக்கொள்வார்கள், கொஞ்ச காலம் வேலைபார்க்க வைத்து, கல்வியும் அவர்களுக்கு வழங்கப்படும்’ என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. நம்மூரில் ‘சுமங்கலித் திட்டம்’ என்ற பெயரில் திருப்பூர், திண்டுக்கல் ஜவுளித் தொழில்களுக்கு திருமணமாகாத பெண்களை அனுப்பிவைக்கும் போது பெற்றோர்களுக்கு சொல்லப்படும் அதே கதைதான் அங்கும். இளம்பெண்களை இவ்விதம் வேலைக்கு எடுக்கும் முறையை ‘லவல் முறை’ என்றே அழைத்தார்கள். ஆனால் என்ன? 16 மணிநேரம் கூடப் பெண்கள் வேலைவாங்கப்பட்டார்கள். முதலாளித்துவத்தைப் பொறுத்தவரையில் அங்கு, இங்கு, எங்கும்…நேற்று, இன்று, நாளை.. எல்லாம் ஒரே கதைதானே! சுரண்டல், சுரண்டல், சுரண்டல்…

அமெரிக்காவைப் பொறுத்தவரை கருப்பின மக்களின் வாழ்க்கை, அவர்களில் குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கை, அன்றைக்குப் பிற தொழிலாளர்களின் வாழ்க்கையைக் காட்டிலும் கொடுமையானது. அடிமைமுறை ஒழிக்கப்பட்ட பிறகு, ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்களுக்கு வழங்கப்பட்ட பணிகள் வீட்டுவேலைப் பணியாளர்கள் என்ற வேலைதான். ‘அடிமைமுறைக்கு உரியவர்கள்’ என்ற கண்ணோட்டம்தான் இதற்குக் காரணம் என்பதை விளக்க வேண்டியதில்லை. இப்போதும் தொழிலாளர்களிலேயே மிக மோசமான நிலையில் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்கள் இருப்பார்கள் என்பதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.

‘வெள்ளை’ தொழிலாளர்களில் பெண்கள் வேலைக்கு வருவது சென்ற நூற்றாண்டின் தொடக்கம் வரை அவ்வளவு எளிதாக இல்லை. பெண் ‘வீட்டில் இருக்க வேண்டியவள்’, ‘மென்மையானவள்’, ‘பலவீனமானவள்’ என்ற பார்வையால் பெண்களால் வீட்டுக்கு வெளியிலான உற்பத்திக்கு வர முடியவில்லை. அப்படியே பெண்களைப் வேலைக்கு எடுத்தாலும் ‘பெண்கள் பலவீனமானவர்கள்’ போன்ற மோசமான பார்வையைப் பயன்படுத்தி, முதலாளித்துவ முறை குறைவான ஊதியத்தைக் கொடுத்து, அதிகம் சுரண்டியது. பெண்கள் வீட்டில் இருந்தாலும், அவர்கள் பாட்டாளி வர்க்கத்தை உற்பத்தி செய்து பராமரிப்பவர்கள். எனவே, அதுவும் முதலாளித்துவக்கு லாபமே.

“தெற்கில் கருப்பின மக்களை அடிமைகளாக வைத்திருந்தது; வடக்கில் தொழிலாளர்கள் மீதான பொருளாதார சுரண்டல், பெண்கள் மீதான சமூக ஒடுக்குமுறை” மூன்றும் முறையாக ஒன்றோடு தொடர்புடையவை” என்கிறார் தோழர் ஏஞ்சலா டேவிஸ்.

இங்கிலாந்தின் நேரடிக் காலனியாக இருந்து, பிறகு சுதந்திரப் பிரகடனம் செய்த பிறகும் பொருளாதா ரீதியாக வெகுகாலம் பிரிட்டனின் காலனியாகவே வட-அமெரிக்கா இருந்தது. இன்றைக்கு உலக ஏகாதிபத்தியத்தின் தலைமைப்பீடமாக அந்த வட-அமெரிக்கா மாறி இருக்கிறது. இந்தப் பின்னணியில் ஏஞ்சலா டேவிஸின் இந்தப் பகுப்பாய்வு மிக முக்கியமானது.

ஆதாரங்கள்:

1. The Capital, Karl Marx, Volumes 1 & 4

2. Women, Race and Class, Angela Y Davis, 1981, Vintage Books

3. The Evolution of White Women’s Experience in Early America, Mary Beth Norton, The American Historical Review, Vol. 89, No. 3 (Jun., 1984).

 

Show 2 Comments

2 Comments

  1. Karthiyayini

    ஆழ்ந்த கருத்துக்கள் தெளிவான விளக்கம்
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *