athyaayam 12 : pen: andrum,indrum - narmada devi அத்தியாயம் 12 : பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி
athyaayam 12 : pen: andrum,indrum - narmada devi அத்தியாயம் 12 : பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 12 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

இந்தியாநமது இந்தியா

சோம்பேறித் தொழிலாளகள்

“இந்த மில்லில் மின்விளக்குகள் இருக்கின்றன. தொழிலாளர்கள் மின்விளக்கு வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது என்று ஒரே புகாராம்.  தொழிற்சாலை கமிஷன் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். ‘இரவு வேலையை அரசாங்கம் தடைசெய்துவிடும் கவலைப்படாதீர்கள்’ என்று சமாதானம் சொல்லி மேலாளர் அவர்களை வேலைக்குத் திரும்ப வரவழைத்திருக்கிறார்.

தங்களால் ஷாப்பிங் செய்ய முடியவில்லை, வீட்டு விஷயங்களைக் கவனிக்க முடியவில்லை போன்ற காரணங்களால், நீண்ட நேரம் வேலை செய்ய இங்குள்ள ஆண்களுக்குப் பிடிக்கவில்லை.

தொழிற்சாலை சுற்றுச்சுவர் பெரிதாக நல்ல நிலைமையில் இருக்கிறது; நல்ல குடிதண்ணீர், சுகாதாரமான கழிப்பிட வசதிகள் இருக்கின்றன. அதிகபட்சம் 8.30 மணி வரை மில் செயல்படுகிறது.

மொத்தம் பணியாற்றக்கூடிய 644 ஆண் தொழிலாளர்களுக்கும், 124 பெண் தொழிலாளர்களுக்கும் இடைவேளையில் போய்வர மொத்தம் 89 அனுமதிச்சீட்டுகள் தரப்படுகின்றன. ஆண்களுக்கு இடைவேளை நேரம் கறாராகப் பின்பற்றப்படும். பெண்களிடம் கறார் காட்டுவதில்லை.

அரை உழைப்பாளிகளான சிறுவர்கள் தங்கள் இஷ்டப்படி போய் வருவார்கள்.”

பம்பாயின் பரூச் பகுதியில் ஒரு பஞ்சாலை இப்படித்தான் இருந்ததாம். 1908 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்த இந்திய தொழிற்சாலை தொழிலாளர் கமிஷன், தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டது.

‘இந்தியத் தொழிலாளர்கள் சும்மா சுற்றித்திரிகிறார்கள். இங்கிலாந்தின் லாங்கஷயரில் ஒரு தொழிலாளர் செய்யும் வேலையை இங்கு இரண்டரை தொழிலாளர்கள் செய்கிறார்கள். இவர்களை எல்லாம் முறையாகக் கண்காணித்து ஒழுங்குபடுத்தினால், இன்னும் பயன்தரும் வகையில் வேலை வாங்கலாம்’

‘இந்தத் தொழிலாளர்கள் நிரந்தரமாகப் பணியாற்ற மாற்றார்கள். காசு சேர்த்ததுபோதும் என கிராமங்களுக்குக் கிளம்பிப் போய்விடுவார்கள். கிராமத்தில் அவர்களுக்கு நிலம் இருப்பதால் அதில் பிழைத்துக்கொள்ள முடியும் என்ற நினைப்பு’ – இந்தியத் தொழிலாளர்களைப் பற்றி 1908 ஆம் ஆண்டு கமிஷனின் கண்ணோட்டம் இதுதான்.

மார்க்ஸின் மூலதனம் நூலில் இங்கிலாந்து தொழிலாளர்கள் குறித்த தரவுகள் எக்கச்சக்கமாக இருக்கும். இங்கிலாந்து அரசின் பல்வேறு அறிக்கைகளை அவர் மேற்கோள் காட்டியிருப்பார். இங்கிலாந்து சமூகத்தில் தொழிலாளர்களின் நிலை குறித்து பூசி மெழுக முடியாது, என்பதால் அரசாங்கத்தின் கமிஷன்கள் அங்கு வெளிப்படையாகப் பேசி இருக்கலாம். எவ்வளவு உண்மையை வெளிப்படையாகப் பேசினார்கள் என்பது தெரியாது. என்றாலும், இங்கிலாந்து தொழிலாளர்கள் குறித்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தரவுகள் முக்கியமானவை. ஆனால், அதே இங்கிலாந்து அரசு இந்தியத் தொழிலாளர்கள் என்று வரும்போது, எவ்வளவு ஆதிக்க மனப்பாண்மையோடு நடந்துகொண்டிருக்கிறது என்பதை அது நியமித்த இந்த தொழிலாளர் கமிஷனின் அறிக்கை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.

கொள்ளையோ கொள்ளை

இங்கிலாந்தின் மான்செஸ்டர், லான்கஷயர் பகுதிகளில் நவீன ஜவுளி மில்கள் உற்பத்தியைத் தொடங்குவதற்கு இந்தியாவில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட செல்வங்களே அடிப்படையாக இருந்தன. அது மட்டுமல்ல, இங்கிலாந்தின் நவீன ஜவுளித் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதற்கு முன்னால், இங்கிலாந்து மக்களுக்கு அழகிய பருத்தி ஆடைகளை, வேலைப்பாடுகளோடு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தவர்கள் இந்தியாவின் கைவினைஞர்கள்.

இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு அடிப்படையாக இருந்த பொருள் குவிப்பு என்பது இந்தியாவில் அடிக்கப்பட்ட கொள்ளை. குறிப்பாக பிளாஸி போருக்குப் பிறகு அடுத்த நூறு ஆண்டுகளில் ஆங்கிலேயேர்கள் அடித்த கொள்ளை என்று, ‘இன்றைய இந்தியா’ நூலில் தோழர் ரஜனி பாமி தத் குறிப்பிடுகிறார். (கிரேட் பிரட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்)

வங்கத்தில் 1764-65 ஆண்டின் நிலவருவாய் மதிப்பு 8,17,000 பவுண்டுகள். இதே மதிப்பு 1775-76 ஆண்டில் 28,18,000 பவுண்டுகள் என்றானது. வெறும் பத்தே ஆண்டு இடைவெளியில் எவ்வளவு அதிகரிப்பு என்பதை உணர முடியும். இதெல்லாம் போதாது என, 1793 ஆம் ஆண்டில் கார்ன்வாலிஸ் பிரபு ‘நிரந்தர ஏற்பாடாக’ நிர்ணயித்த நிலவரித் தொகை 34,00,000 பவுண்டுகள்.

இங்கிலாந்தில் நவீன ஜவுளி உற்பத்தி வந்ததும், ‘இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குகளுக்கு அதிக வரி! வெறும் கச்சாப்பொருட்களை மட்டும் அந்த அடிமை நாடு அனுப்பினால் போதும்!’ என்று சுரண்டல் விதிகளை இங்கிலாந்து மாற்றியது. அப்போதும் இந்தியத் தொழிலாளி வர்க்கம் ரத்தம் சிந்தி கச்சாப் பொருட்களை உற்பத்தி செய்து அனுப்பியது. 1849-க்கும் 1914 க்கும் இடைப்பட்ட காலத்தில் கச்சாப் பருத்தியின் ஏற்றுமதியின் மதிப்பு 17 லட்சம் பவுண்டில் இருந்து, 2.2 கோடி பவுண்டானது. சணல் ஏற்றுமதி 1849 ஆம் ஆண்டில் 68,000 பவுண்டுகள், 1914-ஆம் ஆண்டில் 86 லட்சம் பவுண்டுகள்.

1800-1825 காலத்தில் இந்தியாவில் பஞ்சத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை மொத்தம் 10 லட்சம்.

1825-1850 காலத்தில் 4 லட்சம்

1850-1875 காலத்தில் 50 லட்சம்

1875-1900 காலத்தில் 1 கோடியே 50 லட்சம்.

இங்கிலாந்துக்கு ஆங்கிலேயர்கள் எடுத்துச் செல்லும் செல்வத்தின் அளவு கூடக்கூட இந்திய உழைப்பாளி மக்களுடைய பஞ்சச் சாவுகள் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போயிருக்கிறது.

இப்படி 17 ஆம் நூற்றாண்டில் இருந்து 19-ஆம் நூற்றாண்டு வரை முன்னூறு ஆண்டுகள் இந்தியாவின் உழைக்கும் மக்களை ஒட்ட சுரண்டி, சாகடித்து, கொள்ளை அடித்துவிட்டு… ‘இந்தியத் தொழிலாளர்கள் சோம்பேறிகள், ஊர் சுற்றிகள்’ என்று ஒரு அறிக்கை கொடுத்திட, எவ்வளவு மோசமான ஆதிக்க உணர்வு இருந்திருக்க வேண்டும்.

‘சோம்பேறிகளை வைத்தா இவ்வளவு செல்வத்தைக் கொள்ளையடித்தோம்’ என இங்கிலாந்தில் இருக்கும் முதலாளிகளே முதலில் இந்தக் கதையை நம்பியிருக்க மாட்டார்கள்.

இந்தியப் பெண் தொழிலாளர்கள்

சரி, இந்தியத் தொழிலாளர் வர்க்கமே பிரிட்டிஷ் கமிஷன்களுக்கு ஒரு பொருட்டில்லை எனும் போது, தொழிலாளர்களில் பெண் தொழிலாளர்கள் பற்றி என்ன பேசி இருக்கப் போகிறார்கள்? பேசி இருக்கிறார்கள்.

1891 தொழிற்சாலை சட்டத்தின்படி 11 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கக்கூடாது. ஒன்றரை மணிநேரம் பெண்களுக்கு இடைவேளை தர வேண்டும். 1908 தொழிற்சாலை கமிஷனோ, ‘நாங்கள் பெண் தொழிலாளர்களின் உடல்நிலையைப் பரிசோதித்தோம். அவர்கள் மிகவும் போஷாக்காக, இன்னும் கூடுதல் நேரம் கூட வேலை செய்யக்கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள். 11 மணி நேர வேலையை 12 மணி நேரமாக்கலாம். இடைவேளையை அரை மணி நேரமாகக் குறைக்கலாம்’ என்று கூசாமல் பரிந்துரை செய்தது.

உலகம் முழுவதும் காலங்காலமாக குடும்ப வேலை என்ற சுமை திணிக்கப்பட்ட ஒரு பிரிவினராக பெண்கள் இருந்து வருகிறார்கள். அதிலும் இந்தியப் பெண்கள் ஆணாதிக்கமும், சாதியமும் பிணைந்துள்ள வர்க்க அமைப்பில் வாழ்பவர்கள். காலை எத்தனை மணிக்கு எழுவார்கள், இரவு எத்தனை மணிக்கு தூங்கப்போவார்கள்? இடையில் எத்தனை வகையான வேலைகளை செய்வார்கள்? – என்பதெல்லாம் ஊரறிந்த, உலகறிந்த கதை. இருந்தும் இப்படியொரு பரிந்துரையை ஒரு கமிஷனால் எப்படி முன்வைக்க முடிந்தது?!  வியப்புதான். 14-17 வயதுக்குட்பட்ட இளையோருக்கு 12 மணி நேர வேலை என்று வேறு பரிந்துரை செய்தது இந்த கமிஷன்.

“பெண் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 ஆக்கிவிட்டால், அவர்களை தொழிற்சாலைகள் வேலைக்கு எடுக்க ஆர்வம் காட்டும். நிறைய பெண்கள் வேலைவாய்ப்பிற்குள் வருவார்கள். இப்போதிருக்கும் தொழிலாளர் பற்றாக்குறை தீரும்” என்று ஒரு விளக்கம் தந்தது.

அமெரிக்க, மேற்கிந்தியத் தீவுகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகு,  ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் கொத்துக்கொத்தாக இந்தியத் தொழிலாளர்களைப் பிடித்துச் சென்று சிலோன், மேற்கிந்தியத் தீவுகள், பசிபிக் பகுதிகள், தென் – ஆப்பிரிக்கா என தோட்டங்களில் பிழிந்தெடுத்தார்கள் ஆங்கிலேயர்கள். தமிழகம், ஆந்திரா, மத்தியப் பகுதிகளில் நிலமற்ற ஒடுக்கப்பட்ட தலித் மக்கள், வேலைவாய்ப்பை இழந்த நிலமற்ற கைவினைஞர் சாதிகள், விவசாயம் செய்தும் எதுவும் மிஞ்சாத அளவிற்கு குத்தகை தர வேண்டிய நிலையில் ஓட்டாண்டி ஆன குத்தகை விவசாயிகளில் கணிசமானோர்- இவர்கள் எல்லாரும் இந்த உழைப்பு முறையில் சிக்கியிருந்தார்கள். 1834 ஆம் ஆண்டில் இருந்து முதல் உலகப் போர் வரை இவ்விதம் 20 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் தூர தேசங்களுக்குப் போயிருக்கிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, ஊருக்குத் திரும்பலாம் என இவர்களுக்கு உறுதி கொடுக்கப்பட்டிருந்தாலும், இவர்களில் மூன்றில் ஒரு இரண்டு பகுதியினரால் என்றைக்குமே தாய்நாடு திரும்ப முடியவில்லை. இதுதான் கதை. வேலைவாய்ப்பை எதிர்பார்த்து லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்ந்தாலும், இந்தியத் தொழிற்சாலைகளில் தொழிலாளர் பற்றாக்குறை, வேலை நேரத்தை அதிகரிப்பது என்று பிரிட்டிஷ் அரசாங்க கமிஷன் கதை பேசியது.

டாக்டர். டி.எம்.நாயர், அப்போதைய முனிசிபல் கமிஷனர். இந்தக் கமிஷனில் இடம்பெற்ற இந்திய உறுப்பினர்களில் ஒருவர். (பிற்காலத்தில் 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நீதிக்கட்சியின் ஸ்தாபனத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்) தனது ஆட்சேபனை அறிக்கையைப் பதிவு செய்திருக்கிறார்.

ஸ்விட்ஸர்லாந்தில் பெண் தொழிலாளர்களுக்கு ஒரு முறை இருந்திருக்கிறது. இடைவேளையுடன் வேலை செய்தால் அவர்கள் காலையில் உரிய நேரத்திற்கு வேலைக்கு வந்து, வேலை முடியும் நேரம் வரை வேலை பார்க்க வேண்டும். அல்லது, சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு, மீதி இடைவேளை நேரத்தை அவகாசமாக எடுத்துக்கொள்ளலாம். காலையில் வீட்டுவேலைகளை முடித்துவிட்டு மீதி இடைவேளை நேரத்துக்குள் தாமதமாக வரலாம், அல்லது இரவு சற்று முன்னரே செல்லலாம். இந்தியப் பெண்கள், அறியாமலேயே இந்த ஸ்விஸ் முறையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்கிறார் நாயர். ஒன்றரை மணிநேர இடைவேளையில் ஒரு மணி நேரத்தை வீட்டு வேலை செய்வதற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதனால் வேலைநேரத்தில் அவர்களுக்கு தேவைப்படும் ஓய்விற்காக இடைவேளையை அவர்களால் எடுக்க முடிவதில்லை. தொடர்ச்சியான தொழிற்சாலை வேலை அவர்களை பலவீனமாக வைத்திருக்கிறது. இந்நிலையில் போய் 12 மணி நேர வேலை என்பது, பெண்களின் உடல்நிலையைப் பாதித்து, குடும்பத்தைக் கவனிப்பதிலும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, ‘பெண்களுக்கு 12 மணி நேர வேலை என்பது அவர்களுடைய உடல்நலத்துக்கும், சமூகத்துக்கும் கேடு’ என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்து தொழிலாளர்களைவிட திறன் குறைந்தவர்களா?

லாங்கஷயரில் ஒரு தொழிலாளி செய்யும் வேலை இந்தியாவில் இரண்டரை தொழிலாளர் செய்யும் வேலைக்கு சமம் என்று தொழிற்சாலை கமிஷன் கருத்து தெரிவித்திருந்தது அல்லவா?

சென்னையின் பின்னி மில்லில் மொத்தம் 35,000 ஸ்பிண்டில்களும், 800 லூம்களும் வாரத்தில் 67 ½ மணி நேரம் இயங்கின. மொத்தம் 2,622 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்தார்கள். லாங்கஷயரில் இதே திறன் படைத்த ஒரு தொழிற்சாலை, 54 ½ மணி நேரம் இயங்கியது, அங்கு 982 தொழிலாளர்கள் வேலை பார்த்தார்கள். அதாவது, 2.62: 1 என்ற விகிதத்தில் இந்தியத் தொழிலாளர்களும், லாங்கஷயர் தொழிலாளர்களும் வேலை செய்தார்கள். ஆனால், லாங்கஷயர் தொழிலாளர்கள் வாங்கிய கூலி 60 ரூபாய். இந்தியத் தொழிலாளி வாங்கிய கூலி 15 ரூபாய். டாக்டர் நாயர் இந்த ஒப்பீட்டைக் குறிப்பிடுகிறார்.

இங்கிலாந்தில் தொழிலாளர்கள் எப்படி சுரண்டப்பட்டார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்களைக் காட்டிலும் இங்கிலாந்தின் காலனியான இந்தியாவில் தொழிலாளர்கள் எப்படி சுரண்டப்பட்டார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக உணர முடிகிறது. அடிமைகளிலேயே ‘சிறந்த’ அடிமைகளாக இந்திய தொழிலாளர்கள் இருந்தார்கள் எனலாம்.

ஆனால், இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். 15 ரூபாய் சம்பளம் என்பது அதிகபட்சம் ஒரு தொழிலாளி பெறக்கூடிய கூலி. ஆண்களுக்குத்தான் இந்த அதிகபட்ச கூலி சாத்தியம். பெண்கள் வாங்கிய கூலி 6-10 ரூபாய். (இந்திய தொழிற்சாலை கமிஷன், 1890). இந்திய தொழிலாளர்கள் எனும் ‘சிறந்த’ அடிமைகளிலேயே, இந்திய பெண் தொழிலாளர்கள் ‘மிகச்சிறந்த’ அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். பெண்கள் பற்றி சமூகத்துக்கு இருந்த தாழ்வான மதிப்பீட்டை அன்றைக்கு முதலாளித்துவம் பயன்படுத்தி லாபம் பார்த்தது. காலங்காலமாக கீழ்ப்படிந்த நிலையில் இருக்கும் பெண்களை மிகக் குறைந்த கூலிக்குப் பிழிந்தெடுக்கலாம் என முதலாளிகள் கருதினார்கள்.

1929 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ராயல் கமிஷன் 1931 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிக்கையில், மதராஸில் 1925-1929 காலகட்டத்தில் தோராயமாக 25 சதவிகித தொழிலாளர்கள் 13-17 ரூபாய் மாத சம்பளம் பெற்றார்கள், 22 சதவிகித தொழிலாளர்கள் 13 ரூபாய்க்குக் கீழ் சம்பளம் பெற்றார்கள் என்கிறது. அதாவது, கிட்டத்தட்ட 47 சதவிகித தொழிலாளர்களின் சம்பளம் தோராயமாக 15 ரூபாயாக இருந்திருக்கிறது எனக் கருத முடியும். அன்றைக்கு உணவு, தங்குமிட வசதிகள் உள்ளிட்ட தேவைகளுக்கு ஒரு குடும்பம் செலவழிக்க வேண்டி இருந்த தொகை 30-37 ரூபாய். பெரும்பாலான தொழிலாளர் குடும்பங்கள் செலவை சமாளிக்க கடன்பட்டன. இந்த நிலையில் ஆண் மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்க வேண்டும் என்றால் கடினம். எனவே, ‘கூடுதல்’ வருவாய் என்ற அடிப்படையில் பெண்கள் அன்றைக்கு தொழிற்சாலை பணிகளுக்குப் போயிருக்கிறார்கள்.

பெண் தொழிலாளர்களின் வேலை நேரம் குறித்த விவாதம் 1870களில் தொடங்கி 1890-91-ல் முக்கிய விவாதமாக இந்தியத் தொழிற்துறையில் போய்க்கொண்டிருந்து. இந்தக் காலத்தில் முதல் தொழிற்சாலை சட்டம் 1881, அடுத்த தொழிற்சாலை சட்டம் 1891 வந்தன. ஒரு புறம் பெண்களின் வேலை நேரத்தை 10,11,12 மணிநேரமாக நிர்ணயிக்க வேண்டும் என்ற விவாதங்கள் நடந்துகொண்டிருந்தபோது (1890-91), இன்னொரு புறம் பெண் குழந்தைகளின் திருமண வயதை நிர்ணயிப்பது குறித்த விவாதமும் நமது சமூகத்தில் நடந்துகொண்டிருந்தது.

இந்த விவாதங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன என்பதைப் பார்க்கும் போது, அன்றைய இந்தியாவின் சமூக, கலாச்சாரக் கூறுகள், பொருளாதார அடிப்படை – எல்லாம் முகத்தில் அறைகின்றன. “இந்த இரண்டு விவாதங்களும் ஒத்திசைந்தவை, என்றாலும் இரண்டும் தனித்தனியாக நடந்தன. இரண்டு விவாதங்களிலுமே, இன்னொரு விவாதம் குறித்த புரிதல்களைக் காண முடியவில்லை” என்கிறார் ஆய்வாளர் சமிதா சென். ஓரிடத்தில் வெளிப்பட்டதைக் காண முடிந்தது. 14-17 வயது இளையோரை முழு-உழைப்பாளர்களாகப் பணிக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும்போது, ‘பெரும்பாலான சிறுவர்களுக்குத் திருமணம் ஆகி இருக்கிறது, அப்படி இருக்கையில் 14-17 வயதினரை 12 மணிநேரம் வேலை வாங்குவதில் என்ன தப்பு?’ என்று கேட்டது 1908 கமிஷன். குழந்தைத் திருமணத்தை சுட்டிக்காடி காட்டி, சுரண்டலை நியாயப்படுத்தியது முதலாளித்துவம்.

1911 நிலவரப்படி இந்தியா முழுவதும் சராசரியாகக் கணக்கிட்டால், 0-5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில், ஆயிரம் பெண் குழந்தைகளில் 14 பெண் குழந்தைகளுக்கும், ஆயிரம் ஆண் குழந்தைகளில் 7 ஆண் குழந்தைகளுக்கும் திருமணம் ஆகி இருந்தது. ஒரு வயதுகூட ஆகாத பெண் குழந்தைகள் விதவைகளாக வாழ்ந்த காலம் அது. இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் நவீன ஆலைத்தொழில் வளர்ச்சியை ஒட்டி பெண்கள் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குப் போகத் தொடங்கினார்கள். இது நிச்சயம் புரட்சிகரமான முன்னேற்றம்தான். ஆனால், முதலாளித்துவ முறையின் முற்போக்கு எது வரை? பழைய சமூகத்தின் ஒடுக்குமுறை வடிவங்களை அது எப்படிப் பயன்படுத்திக்கொள்ளும்? தொடர்ந்து பார்போம். இந்திய சமூகத்தில் பெண்களாகப் பெண்களின் நிலை; தொழிலாளர்களாகப் பெண்களின் நிலை; குடிமக்களாகப் பெண்களின் நிலை என்று மூன்று கோணங்களில் நாம் பெண்களைப் பார்க்க வேண்டிருக்கிறது.

தொடரும்…

ஆதாரங்கள்:

India Today, Rajani Palme Dutt, People’s Publishing House, Bombay, 1947, Digitised copy available at (https://indianculture.gov.in/ebooks/india-)

Working Class of India – History of Emergence and Movement (1830-1970), Sukomal Sen, K. P. Bagchi & Company, Calcutta, First Published 1977, 1979 Edition

Report of the Indian Factory Labour Commission, 1908, Digitised copy available at (https://indianculture.gov.in/ebooks/india-)

Report of the Royal Commission on Labour in India (appointed in 1929), 1931, Digitised copy available at (https://indianculture.gov.in/ebooks/india-)

Between unfreedoms: how caste was a major determining factor in deciding return migration of indentured workers, University of Reading.

Samita Sen, “Gender and Class: Women in Indian Industry, 1890-1990”, Modern Asian Studies, 42, 1, 2008, pp. 75-116.

Census of India, 1911, Volume 1

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *