athyayam 13 : pen: andrum,indrum - narmadadevi அத்தியாயம் 13 : பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி
athyayam 13 : pen: andrum,indrum - narmadadevi அத்தியாயம் 13 : பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 13 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

காலனிகள் இரண்டாம் நிலை உற்பத்தியகங்களே!

தொழில் வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய காலனிய சக்திகள், தங்களுடைய சொந்த நாட்டில் அதிநவீன தொழிற்சாலைகளை நிறுவி தொழில்வளர்ச்சியைக் கொண்டு வந்த வேகத்தில், காலனிகளாகத் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிரதேசங்களில் நவீன தொழில்வளர்ச்சியை சாத்தியமாக்கவில்லை.

‘தங்களுடைய தாய்நாட்டில் தாங்கள் தொடங்குகிற முதன்மையான உற்பத்தி மையத்திற்குத் தேவையான கச்சாப் பொருட்களை, குறைவான முதலீட்டில் காலனி நாடுகளில் உற்பத்தி செய்ய வேண்டும்! இதற்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும்!’ – இதுவே காலனிய ஆதிக்க சக்திகளின் அணுகுமுறையாக இருந்தது.

காலனி நாடுகளின் விவசாய அமைப்பை தங்கள் தேவைக்கேற்றவாறு மாற்றியமைத்து, அங்கு புதிய பணப்பயிர்களின் உற்பத்தியைத் தொடங்கி வைத்தன. தோட்டப்பயிர் வேளாண்மைக்குத் தேவைப்பட்ட ஆராய்ச்சிகளுக்காக உருவாக்கப்பட்டவைதான் தாவரவியல் பூங்காக்கள்.

உற்பத்தி செய்யப்பட்ட கச்சாப்பொருட்களை பக்குவப்படுத்தி, தங்கள் தாய்நாட்டின் தொழிற்சாலைகளுக்குத் தேவையான வடிவில் அனுப்பும் முன்தயாரிப்பு தொழிற்கூடங்களை மட்டுமே அவை பெரும்பாலும் காலனிகளில் அமைத்தன. அந்தப் பிரதேசங்களில் வழக்கில் இருந்த கைவினைத் தொழில், விவசாய உற்பத்தியை சிதைத்து, ஒட்டுமொத்தமாக வழக்கில் இருந்த உற்பத்தி முறைகளையே சிதைத்தன. ‘எங்கள் நாட்டிற்குத் தேவையானதைத் தயாரித்தால் போதும்! எங்கள் நாட்டில் உற்பத்தி செய்கிற பொருட்களுக்கு சந்தையாக இருந்தால் போதும்!’ என்ற நிலைக்கு காலனிகளைத் தள்ளின.

சுருங்கச் சொன்னால், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தொழில் வளர்ச்சி முழுமையாக ஏற்படுவதற்கு, காலனி நாடுகள் இரண்டாம் நிலை உற்பத்தியகங்களாக மாற்றப்பட்டன. ஜவுளி போன்ற துறைகளில்கூட முழுமையான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது என்பது 19-ஆம் நூற்றாண்டின் மிகப் பிற்பகுதியில்தான் நடக்கத் தொடங்கியது. தொழிற்புரட்சியோடு உருவான முதலாளித்துவ உற்பத்தி முறை, ஒரு புதிய சர்வதேச அளவிலான வேலைப் பிரிவினையை-நவீன தொழில்துறையின் முக்கிய நகரமையங்களின் தேவைகளுக்கு ஏற்ற ஒரு வேலைப் பிரிவினையை உருவாக்கியது. உலகின் ஒரு பகுதியை முதன்மையான விவசாய உற்பத்தித் துறையாகவும், மற்ற பகுதியை முக்கியமான தொழில்துறையாகவும் மாற்றும் வேலையைச் செய்தது.

இங்கிலாந்தில் தொழில்வளர்ச்சி தொடங்கிய காலத்தில், இந்தியாவில், பருத்தி, சணல், அவுரி என கிழக்கிந்தியக் கம்பனி, வேளாண் கச்சாப்பொருட்களை மட்டுமே பிரதானமாக உற்பத்தி செய்து இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தது. சீனாவிடம் தேயிலைக்கு மாற்றாக அபினியைக் கொடுப்பதற்காக வங்கத்தின் விவசாயிகள் அபினியை விளைவிக்க நிர்பந்திக்கப்பட்டார்கள். பிரிட்டிஷாருக்குத் தேவையான கச்சாப் பொருட்கள் மற்றும் அவர்களுடைய அவசியத் தேவைக்கான தொழிற்சாலை உற்பத்தி & கொள்முதல் – இவற்றிற்குத் தேவையான ரயில்வே, பாசனம் போன்ற கட்டமைப்புகளில் மட்டுமே ஆங்கிலேய அரசு அன்றைக்கு கவனம் செலுத்தியது.

தீர்க்கதரிசி

“ஆங்கிலேயப் பணக்கார ஆட்சிக்குழு இந்தியாவுக்கு ரயில்வே போக்குவரத்தை அளித்திட விரும்புவதன் ஒரே நோக்கம், தங்களுடைய உற்பத்திப் பொருட்களுக்குத் தேவையான பருத்தி முதலிய கச்சாப் பொருள்களைக் குறைந்த செலவில் கவர முடியும் என்பதே, என்பதை நான் அறிவேன்.

ஆனால், இரும்பும், நிலக்கரியும் இருக்கிற ஒரு நாட்டின் போக்குவரத்தில் இயந்திரங்களைப் புகுத்திவிட்டால், அது விரிவடைவதைத் தடுக்கவே முடியாது. ரயில்வே போக்குவரத்தின் உடனடியான, இப்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான எல்லாத் தொழில் முறைகளையும் புகுத்தாமல், ஒரு பரந்த நாட்டில் ரயில்வே இணைப்பைப் பாதுகாக்க முடியாது; அதிலிருந்து, ரயில்வேயுடன் உடனடியான தொடர்பு இல்லாத தொழில்களிலும் எந்திரத்தைப் புகுத்தும் வழக்கம் தோன்றும். ஆகையால், இந்தியாவில் நவீன தொழில் வளர்ச்சி ஏற்படுவதற்கு ரயில்வே உண்மையான முன்னோடியாக இருக்கும்…

இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், இந்தியாவின் ஆற்றலுக்கும் பெருத்த தடைகளாக இருக்கும் இந்திய சாதிகளை ஆதாரமாய்க் கொண்ட, மரபுவழியாக வந்த வேலைப் பிரிவினையை, ரயில்வேயிலிருந்து தோன்றிய நவீனத் தொழில் கரைத்துவிடும்” என்று மார்க்ஸ் 1853-ஆம் ஆண்டில் எழுதினார். சிப்பாய்க் கலகம் என்று ஆங்கிலேயர்கள் குறிப்பிடும் முதல் இந்தியப் போர் வருவதற்கு முன்னால், இந்தியாவில் சென்னை, கல்கத்தா, பம்பாயில் பல்கலைக்கழகங்கள் வருவதற்கு முன்னால் அவர் கணித்துக்கூரிய கருத்துகள் இவை.

தீர்க்கதரிசியாக மார்க்ஸ் இருந்திருக்கிறார் என்பதை, ரயில்வேத் துறையை அடிப்படையாக வைத்து நாலாபுறமும் தொழில்கள் வளர்ந்ததைப் பார்க்கும்போது உணரலாம். மார்க்ஸ் இதை எழுதிய காலத்தில், இந்தியாவில் 1851-52-ல் இருந்த மொத்த ரயில்பாதை நீளமே வெறும் 82 மைல்கள்தான். 1857-ஆம் ஆண்டில் 4500 மைல்களாக நீண்டது. 1882 ஆம் ஆண்டில் 10,000 மைல்களானது.

இந்தியாவின் முதல் நிரந்தர பஞ்சாலை, சணல் ஆலை தொடங்கப்பட்டது, ரயில்வே பயன்பாட்டிற்கு வந்தது, குறிப்பிடும் அளவிற்கு நிலக்கரி சுரங்கத் தொழில் தொடங்கியது எல்லாம் 1850-55 காலகட்டத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இதற்கு முன்னால் 1820-கள், 30-களில் ஆங்காங்கே நடந்த முயற்சிகள் எல்லாம் பரீட்சார்த்த முயற்சிகளே. இங்கிலாந்தில் சணல், பஞ்சாலை மில்களில் பணியாற்றிய பெண்களை அழைத்துவந்து ஆரம்ப காலத்தில் உள்ளூர் தொழிலாளிகளுக்குப் பயிற்சி அளித்தெல்லாம் பார்த்திருக்கிறார்கள். அவை பெரிதாக வெற்றிபெறவில்லை.

“1818 ஆம் ஆண்டில் ‘லாங்கஷயர் பெண்கள்’ ஆலை உற்பத்தி வேலை முறையை அறிமுகப்படுத்துவதற்காக வங்கத்திற்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சென்ற பழைய பவ்ரியா மில் கல்கத்தாவிற்கு சில மைல்கள் தொலைவில் ஹூக்லி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்திருக்கிறது. அந்த மில் காம்பவுண்டிற்குள் அமைந்திருக்கும் சிறிய கல்லறைத் தோட்டத்தின் சுண்ணாம்பு பூசப்பட்ட கனமான கல்லறைகள், விரைவான மரணத்திற்கு அவர்கள் பலியானதைத் தெரிவிக்கின்றன” என்று ஜேனட் ஹார்வி கெல்மான், தனது ‘இந்தியாவின் தொழிலாளர்கள்’ நூலில் பதிவு செய்திருக்கிறார்.

ரயில்பாதை 8000 மைல்களைத் தொட்ட 1877 காலத்தில் இந்திய ஜவுளித் தொழிற்சாலைகளில் 12,44,206 ஸ்பிண்டில்கள் வந்துவிட்டன. இவற்றில் 10,00,000 பம்பாய் சமஸ்தானத்தில் மட்டும் இருந்தன. ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்த 51 மில்களில் 41 அன்றைக்கு பம்பாயில் இருந்தன. ஜவுளித் தொழிலில் பஞ்சாலைகள் பிரதானம். சணல் ஆலைகள் கல்கத்தாவை ஒட்டி வளர்ந்தன. மேற்கு வங்கத்தின் ராணிகஞ்ச் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து ரயில்பாதைகள் மூலமாக வந்த நிலக்கரி குறைவான விலையில் கிடைத்ததால் கல்கத்தாவில் தொழிற்சாலைகள் வளர்ந்தன.

அஸாமில் தேயிலைத் தோட்ட முயற்சிகள் 1840களில் இருந்து தொடங்கின. என்றாலும், 1850 வாக்கில் இருந்து, மிகப்பெரும் தேயிலை தோட்டங்கள் வரத்தொடங்கின. தெற்கே காபி, ஏலக்காய் உற்பத்தியும் வளர்ச்சியடையத் தொடங்கின. தொடக்க காலத்தில் அஸாம், டார்ஜிலிங்கில் மட்டுமே பிரதானமாக இருந்த தேயிலைத் தோட்டங்கள், 1875-களுக்குப் பிறகு தென்னகத்தின் பீர்மேடு ஆனைமலைப் பகுதிகளுக்கும் வரத்தொடங்கின. 1921 வாக்கில், அஸாம் 56%, வங்கம் 25% மதராஸ் & திருவிதாங்கூர் 15% தேயிலை உற்பத்தி செய்தன. வங்கத்திலும், பர்மாவிலும் அரிசி உற்பத்தி, அரிசி ஆலைகள் பிரதானமாக இருந்தன. பர்மாவின் அரிசி ஆலைகளில் சென்னை மாகாணத்தின் தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றி இருக்கிறார்கள்.

1890 வாக்கில் இந்தியாவின் தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்தார்கள். இவர்களில் 2 லட்சம் பேர் பஞ்சாலை, சணல், நிலக்கரிச் சுரங்களில் இருந்தார்கள். 11:6:3 என்கிற விகிதத்தில் தொழிலாளர்கள் பஞ்சாலை, சணல், நிலக்கரி தொழில்களில் பணியாற்றி இருக்கிறார்கள்.

உலகளாவிய அளவில் முதலாளித்துவத்திற்கான அடிப்படைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன? முதலாளித்துவ சுரண்டல் முறை உலகின் பிரதேசங்களை எப்படிக் கைப்பற்றியது என்பதை மார்க்ஸ் மிகவும் ஆழமாக ஆய்வு செய்திருக்கிறார். இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் அனைத்து முழு காலனிகள், அரை காலனிகள் குறித்த மார்க்ஸின் ஆய்வுகள் முக்கியமானவை. இந்தியாவில் முதலாளித்துவ முறையைத் தோற்றுவிக்கும் அம்சங்கள் குறித்து மிகத் தொடக்க காலத்திலேயே அவர் பதிவு செய்திருக்கிறார் என்பதை, 1850களுக்குப் பிறகு இந்தியாவில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியில் இருந்து உணர முடிகிறது.

நவீன ஆலைத்தொழிலில் பெண் தொழிலாளர்கள்

1891-ல் இந்தியாவில் மொத்த ஆலைத் தொழிலாளர்கள் 3,16,816. இவர்களில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 43,592; ஆண்கள் 2,54,336. சிறுமிகள் எண்ணிக்கை 2,589; சிறுவர்கள் எண்ணிக்கை 16,299. பெண் தொழிலாளர்கள் 13 சதவிகிதம்.

1907 ஆம் ஆண்டில் மொத்த ஆலைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 7,29,663. இவர்களில் பெண்கள் 1,03,764; ஆண்கள் 5,76,652. சிறுமிகள் 9,359; சிறுவர்கள் 41,977. பெண் தொழிலாளர்கள் 14 சதவிகிதம்.

1927 ஆம் ஆண்டில் மொத்த ஆலைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 15,33,382. இவர்களில் பெண்கள் 2,53,158; ஆண்கள் 12,22,662. சிறுமிகள் 9,534, சிறுவர்கள் 48,028. பெண் தொழிலாளர்கள் 16 சதவிகிதம்.

இங்கிலாந்தில் முதலாளித்துவ முறை தோன்றி, நவீன ஆலைத்தொழில் உற்பத்தி தொடங்கியபோது, தொழிலாளர்கள் மிகக் கொடூரமாக சுரண்டப்பட்டார்கள், தொழிலாளர்களில் பெண்கள், குழந்தைகள் மிகமிகக் கொடூரமாக சுரண்டப்பட்டார்கள் என்று பார்த்தோம். அன்றைக்கு இங்கிலாந்தில் 18, 22 மணி நேர வேலைகள் எல்லாம் சர்வசாதாரணம். பணிச்சூழலை முறைப்படுத்துவதைக் காட்டிலும், பெண்களை வெளிவேலைவாய்ப்பில் இருந்து விலக்கிவைத்து, விளிம்புநிலைக்குத் தள்ளுவதில்தான் அன்றைக்கு இங்கிலாந்தின் சீர்திருத்தவாதிகள் ஆர்வம் காட்டினார்கள். ‘நவீன உற்பத்தி முறைக்குள் பெண்கள் இழுக்கப்பட்டதால், பெண்களின் குடும்பப் பொறுப்புகள் பாதிக்கப்படுகின்றன, குடும்பங்கள் சிதைகின்றன. இதைத் தடுத்திட வேண்டும்! குழந்தைகள் தொழிற்சாலை வேலைகளில் மிக மோசமாக சுரண்டப்படுவதை தடுக்க வேண்டும்!’ என்ற குரல்கள் பலமாக ஒலித்தன. பிற ஐரோப்பிய நாடுகளில், புதிய காலனிகளில் தொழிற்துறை வளர்ச்சி தொடங்கிய போதும் இந்த அணுகுமுறையே பிரதானமாக இருந்தது. இங்கிலாந்தின் தொழிற்சாலை சட்டங்களைக் காட்டி, குழந்தைகள், பெண்களின் வேலை நேரத்தைக் குறைப்பது இரண்டும்தான் பிரதான தொழிற்சாலை சீர்திருத்தங்களாக உலகெங்கிலும் முன்வைக்கப்பட்டன. ஆனாலும், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் தொழிற்சாலைகள் உற்பத்தியைத் தொடங்கிய காலத்தில் தொழிலாளர்கள் நிலை மோசமாக இருந்தது; அவர்களில் குழந்தைகள், பெண் தொழிலாளர்கள் நிலை படுமோசமாகவே இருந்திருக்கிறது. ‘மறுபடியும் ஒன்றிலிருந்தா’ கதைதான்.

அதிகபட்ச சீர்திருத்தமே இவ்வளவுதானா?

‘7 வயதுக்குக் குறைவான குழந்தைகளை வேலைக்கு எடுக்கக்கூடாது! 9 மணி நேரத்திற்கு மேல் குழந்தைகளை வேலை வாங்கக்கூடாது!’ – என்கிற குழந்தைத் தொழிலாளர்கள் தொடர்பான சீர்திருத்தத்தை மட்டுமே, இந்தியாவின் முதல் தொழிற்சாலை சட்டமான, இந்திய தொழிற்சாலை சட்டம் 1881 ஏற்றுக்கொண்டது. இந்தியாவில் முதலாளித்துவ முறை தோன்றிய காலத்தில், பணிச்சூழல், தொழிலாளர்களின் நிலை எவ்வளவு மோசமாக இருந்திருந்தால், 5, 6 வயது குழந்தைகள் எல்லாம் அன்றைக்கு வேலை செய்திருப்பார்கள்? வயதுவந்த தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்திட வேண்டும் என்று கோரிக்கை 1870களில் முன்வைக்கப்பட்டாலும், அது குறித்து 1881 சட்டம் வாய்திறக்கவில்லை.

1891ல் வந்த இரண்டாவது சட்டம், பெண்களின் வேலை நேரம் 11 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற வரையறையைக் கொண்டுவந்தது. 9 வயதுக்குக் கீழான குழந்தைகளை வேலைக்கு எடுக்கக்கூடாது என்றது. காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில்தான் குழந்தைகள், பெண்களின் வேலை நேரம் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்ததன் மூலமாக, இரவுப் பணியைப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தடை செய்தது. நல்ல விஷயம். என்றாலும், இந்த சட்டமும் வயதுவந்த தொழிலாளர்களில் ஆண்களின் வேலை நேரத்தை நிர்ணயிப்பது பற்றி வாய்திறக்கவே இல்லை.

‘பிற்பாடு 1911 ஆம் ஆண்டு வந்த தொழிற்சாலை சட்டம், பஞ்சாலைத் தொழிலாளர்களில் ஆண் தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலையை நிர்ணயித்த பிறகுதான், ஆண் தொழிலாளர்களின் வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை வந்தது’ என்கிறார் இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடித் தலைவர், தோழர் சுகுமால் சென். காலனி நாடுகள் என்று வரும்போது சட்ட சீர்திருத்தங்களை எந்த அளவிற்கு ஆங்கிலேய அரசு பின்னுக்குத் தள்ளியது என்பதை வேலைநேரம் குறித்த இந்த வரலாறு நமக்கு உணர்த்தும். இந்தியாவில் முதலாளித்துவ முறையின் தொடக்க காலத்தில் நிலவிய பணிச்சூழலின், தொழிலாளர் நிலையின் குரூரமான பிரதிபலிப்பை குழந்தைத் தொழிலாளர்கள் முறையில் காண முடிந்தது; பெண் தொழிலாளர்களின் நிலையில் காண முடிந்தது.

வாயில்லாப் பூச்சிகளின் நிலை

“வங்கத்தில் தொழிலாளர்கள் 3, 4 மைல்கள் தொலைவில் இருந்த சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வேலைக்கு வந்தார்கள். முதல் எச்சரிக்கை சங்கு அதிகாலை மூன்று மணிக்கு ஒலிக்கும். கமிஷன் சாதாரணமாக விசாரித்தபோது, 7 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை காலை நான்கு மணிக்கு வீட்டை விட்டுக்கிளம்பி, 2 மைல் தூரம் நடக்க வேண்டி இருந்தது என்பது தெரியவந்தது” 1908 தொழிற்சாலை தொழிலாளர் கமிஷனின் அறிக்கையில் பதிவான விஷயம் இது.

‘குழந்தைத் தொழிலாளர்கள் வயதை அதிகரிக்க வேண்டும்’ என்ற நோக்கில் 1881, 1891 சட்டங்கள் வரைமுறையைக் கொண்டுவந்தாலும், 1908 ஆம் ஆண்டில் குழந்தைத் தொழிலாளர் நிலை காலை 3 மணிக்கு விழிக்க வேண்டிய நிலையில்தான் இருந்திருக்கிறது.

வயதுவந்த தொழிலாளர்களில் சராசரி வேலை நேரம் என்பது பகுதிக்குப் பகுதி சற்று வேறுபட்டாலும், 14,15 மணி நேர வேலை என்பது அன்றைக்கு சர்வசாதாரணம்.

‘பம்பாயின் 85 மில்களில் 60 மில்களில் மின்சார விளக்குகள் இருக்கின்றன. இங்கு சராசரி வேலைநேரம் 14 ½ மணி நேரம், சமயத்தில் 15 மணி நேரமாக இருக்கிறது… பகல்வெளிச்சத்தில் மட்டும் இயங்கக்கூடிய பரூச் பகுதி மில்களில் அதிகபட்ச வேலைநேரம் 14 ½ மணியாக இருக்கிறது… ஆக்ராவில் குறைந்தபட்ச வேலை நேரமே 13 ¾ மணி நேரம், அதிகபட்சம் 15 ¼ மணி நேரம்… டெல்லியில் குளிர்காலத்தில் 13 ½, 14, 14 ½ மணி நேரம் வரை வேலை நடந்தது….” இவையெல்லாம் தொழிற்சாலை சட்டத்தின் வரையறைக்குள் வந்த தொழில்கள்.

நரகங்கங்கள்

ஜின்னிங் மில்கள், அரசி மில்கள் போன்றவை, ஆண்டு முழுவதும் செயல்படாமல், பருவகாலத்தில் செயல்படும் தொழில்கள் என்ற அடிப்படையில், தொழிற்சாலை சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை. இங்கெல்லாம், உச்சகட்ட சீசன் காலத்தில் ‘வேலை’ என்ற பெயரில் தொழிலாளர்கள் உச்சகட்ட வன்முறையை அனுபவித்தார்கள்.

‘ஜின்னிங் மில்களில் 17, 18 மணி நேர வேலை, அரிசி, மாவு மில்களில் 20, 22 மணி நேரங்கள் வேலை, அச்சகங்களில் தொடர்ச்சியாக 7 நாட்கள் 22 மணி நேரங்கள் வேலை சில சமயங்களில் நிகழ்ந்தன’ – அதே 1908 தொழிற்சாலை தொழிலாளர் கமிஷன் அறிக்கையில் டாக்டர். டி.எம்.நாயர் அழுத்தமாகப் பதிவுச் செய்திருக்கிறார்.

இந்த வகைத் தொழிற்சாலைகளிலேயே ஜின்னிங் மில்களில் பணியாற்றிய பெண் தொழிலாளகளின் நிலை படுபயங்கரமாக இருந்திருக்கிறது. ஒரு சில நேரடி சாட்சியங்களைப் படித்தால் தூக்கமே வராது.

டாம் டிரிவட், மூத்த கொதிகளன் ஆய்வாளர், பம்பாய்: “ஜின்னிங் சீசன் 8 மாதம் நீடிக்கும். இதில் 5 மாதங்கள் தொழிலாளர்கள் காலை 5 – இரவு 10 வரை வேலை செய்வார்கள். மற்ற மாதங்களில் இரவு பகலாக வேலை செய்வார்கள். இந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். சாப்பாட்டு இடைவேளைக்குக்கூட ஜின்கள் நிறுத்தப்படாது. சாப்பிட்டுக்கொண்டே இந்தப் பெண்கள் ஜின்களில் பஞ்சை செலுத்தும் காட்சியைப் பார்த்திருக்கிறேன். மார்பில் பால்குடிக்கும் குழந்தையோடு ஜின்னில் பஞ்சை வீசுவார்கள். அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு விடுப்பில் சென்றார்கள். 23 மணிநேரம் எல்லாம் அவர்கள் வேலை செய்திருக்கக் கூடும்.”

ஆர். எஃப். வாடியா, மேலாளர்: “சாதாரண காலங்களில் 4,5 மணிக்கு எஞ்சின்களை ஓட்டத் தொடங்குவோம். இரவு 7,8,9 மணி வரை நிறுத்தாமல் ஓட்டுவோம். மார்ச், ஏப்ரலில் தொடர்ச்சியாக இரவு, பகலாக ஓட்டுவோம். அரை மணி நேரம் ஓய்வு. தொடர்ச்சியாக 8 நாட்கள் எல்லாம் ஓட்டுவோம். முடியவில்லை எனில் பம்பாயில் இருந்து ஆட்கள் கிடைத்தால் இன்னொரு மடங்கு ஆட்களை வரவழைத்து ஓட்டுவோம். ஆண்கள், பெண்கள் இருவருமே காலை 3 மணிக்கு வேலைக்கு வந்துவிடுவார்கள். தங்களால் நேரம் பார்க்க முடியாது என்பதால் தாமதம் ஆகிவிடக்கூடாது என்று மில் திறக்கும் முன்பாகவே இவர்கள் வந்துவிடுவார்கள். பச்சோராவில் எனது தொழிற்சாலையில் மொத்தம் 40 ஜின்கள் இருந்தன. மொத்தம் 40 ஜின்களை ஓட்ட 40 பெண்கள் மட்டுமே இருந்தார்கள். 8 பெண்கள் மட்டுமே மாற்றாக இருந்தார்கள். இந்தப் பெண்களை ஜின்னைவிட்டு நகர அனுமதிக்க மாட்டேன். சாப்பிட மட்டுமே செல்லலாம். 4 மணியில் இருந்து 10 மணிவரை ஓட்டினால் 3, 4 அணா சம்பளம். நான் மட்டும் இப்படி செய்வதில்லை. இதுதான் முறையாக இருக்கிறது. இப்படி அதீத நேரம் உழைப்பவர்கள் சீக்கிரமாகவே இறந்து விடுவதுண்டு”

தாணு ரப்பு, கண்காணிப்பாளர்: “வேலை கடுமையாக இருந்த காலத்தில் காலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10.30, 11 மணிவரை தொடர்ச்சியாக வேலை செய்வார்கள். ஆண்கள், பெண்கள் தொடர்ந்து 10, 12 நாட்கள் இரவு, பகலாக ஓய்வின்றி தொடர்ந்து வேலை செய்வார்கள்.”

சூர்ஜி ஹேம்ராஜ்: சிலசமயம் இரண்டு பகல் இரண்டு இரவுகள் தொடர்ச்சியாக 48 மணிநேரம் ஓட்டினோம். ஆண்களைப் போலவே பெண்களும் 48 மணிநேரம் ஓட்டுவார்கள். 48 மணிநேரத்துக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு. இவ்வாறு 8 பகல், 8 இரவு தொடர்ச்சியாக வேலை பார்த்தோம். அதன் பிறகு பம்பாயில் இருந்து இன்னொரு மடங்கு ஆட்களை வரவழைத்து, இரண்டு தொகுதிகளாக வேலை செய்தோம்.

1885 ஆம் ஆண்டு பம்பாய் தொழிற்சாலைத் தொழிலாளர் கமிஷனிடம் வழங்கப்பட்ட வாய்மொழி சாட்சிகள் இவை. (1888 பிரிட்டிஷ் பாராளுமன்ற அறிக்கைகள் LXXVII)

தோழர் சுகுமால் சென் தனது இந்தியாவின் தொழிலாளர் வர்க்கம் நூலிலும், டி.ஹெச். புக்கானன் தனது இந்தியாவில் முதலாளித்துவ நிறுவனத்தின் வளர்ச்சி நூலிலும் மேற்கோள் காட்டிய பதிவுகள் இவை. இந்தப் பெண் தொழிலாளர்கள் ஜின்களின் பகுதியாகவே பார்ககப்பட்டு பிழியப்பட்டிருக்கிறார்கள்.

1885 ஆம் ஆண்டில் இருந்து 23 ஆண்டுகள் கழித்து ஜின்னிங் மில்களில் பெண்களுக்கு இரவு வேலை அனுமதிக்கப்பட வேண்டும் என்ற பழைய பல்லவியையே முதலாளிகள் பாடினார்கள். 1908 கமிஷனும் அதையே கிளிப்பிள்ளை போல பரிந்துரைத்திருக்கிறது. 12 மணி நேர வேலைக்கு மேலே மிகாமல் இரவுப் பணியில் பெண்களை ஜின்னிங் ஆலைகளில் ஈடுபடுத்தலாம் என்றது.

“ஒரு ஊரில் உள்ள அனைத்து ஜின்னிங் ஆலைகளும் ஒரே சமயத்தில் இயக்கப்படுவதில்லை. ஆலை முதலாளிகள் உருவாக்கிய ஒரு வகையான கூட்டு முறைப்படி, ஒரு சில மில்கள் தொடர்ந்து இரவு, பகலாக ஓடும்; பிற மில்கள் ஓடாமல் ஓய்வில் இருக்கும். வேலையையும், வருவாயையும் பகிர்ந்துகொள்ளும் முறையாக ஜின்னிங் முதலாளிகள் பின்பற்றுகிறார்கள். முதலாளிகளுக்குள் கூட்டு முறை இருக்கும் பகுதிகளில்தான் இரவு வேலை தேவைப்படுகிறது” என்ற நாக்பூர் கமிஷனர் ஜே. வாக்கரின் பதிவுகளை சுட்டிக்காட்டி, உண்மையில் இந்த ஜின்னிங் மில்கள் இரவு, பகலாக தொடர்ச்சியாக ஓட்டத் தேவையே இல்லை என்று நிறுவியிருக்கிறார் டி.எம்.நாயர். தங்களுக்கிடையிலான கூட்டு லாபமுறை என்ற பெயரில், தொழிலாளர்கள் உயிரைக் குடிக்கும் சுரண்டல் முறையை முதலாளித்துவம் உருவாக்கியதற்கு அன்றைய ஜின்னிங் மில்கள் சாட்சியாக இருந்திருக்கின்றன. மார்க்ஸ் வார்த்தைகளில் ஸ்வீட் காமர்ஸ்!

கிழக்கு கந்தேஷின் (மத்தியப் பிரதேசம்) உதவி கலெக்டர் ஒரு கணித சூத்திரத்தை வகுத்து, அதன்படித்தான் பெண்களை ஜின்னிங் ஆலைகளில் வேலை வாங்க வேண்டும் என்றாராம்.

(g*h) / 11 = w என்பதுதான் அவர் வழங்கிய சூத்திரம். 

11 என்பது பெண்களை அதிக பட்சம் வேலை வாங்கக்கூடிய நேரம்

g என்பது ஆலையில் உள்ள மொத்த ஜின்களின் எண்ணிக்கை

h என்பது ஜின்னிங் ஆலை மொத்தமாக ஓட வேண்டிய நேரம் 

w என்பது மொத்தமாக வேலைக்கு எடுக்க வேண்டிய பெண்களின் எண்ணிக்கை.

‘சூப்பர்! அப்போது 11 மணி நேர ஷிப்டு முறையில் நிறைய பெண்களை வேலைக்கு எடுத்திருப்பார்கள்’ என நாம் நினைக்கலாம்.

‘ஜல்கோனில் நான் பார்த்த மில்லில் காலை 5 மணிக்கு ஆலை சத்தம் கேட்கத் தொடங்கியது. இரவு 10.30 மணிக்கு மில் சத்தம் நின்றது. 17 ½ மணி நேரம் ஓடி இருக்கிறது. மறுநாள் காலை அந்த மில்லிற்கு நாங்கள் சென்றபோது ஜின்களுக்குத் தேவையான பெண்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். பதிவேட்டில் இன்னும் சில பெண்களின் பெயர்கள் இருந்தன. அவர்கள் எல்லாம் எங்கே என்றதும், ‘வீட்டில் இருப்பார்கள். அவர்கள் எப்போது வருவார்கள் என்று தெரியாது. எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்றார்கள். ஒரு சிலர் மட்டும் எப்போது வருவார்கள், போவார்கள் என்பதே தெரியாத நிலையில், எப்படி வேலை ஓடும்? வேலை செய்துகொண்டிருந்த பெண்களை விடுவிக்க மாற்றுப் பெண்கள் வந்ததாகத் தெரியவில்லை. இத்தனை பெண்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என்று கந்தேஷ் மாவட்ட சூத்திரத்தின் கணக்கிற்காக கான்ட்ராக்டர்கள் வேலையே செய்யாத பெண்களின் பெயர்களை ஒப்புக்குக் கொடுத்திருக்கலாம். ஆலைகளில் துப்புறவு செய்கிற பெண்கள், கான்ட்ராக்டர்களின் உறவுக்காரப் பெண்களின் பெயர்களை ஒப்புக்குக் கொடுத்திருக்கலாம் என்று டி.எம்.நாயர் நிறுவுகிறார்.

1908 ஆம் ஆண்டுக்குப் பிறகு 23 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் கமிஷன் வந்தது.

1931 ஆம் ஆண்டின் தொழிலாளர் குறித்த ராயல் கமிஷன் அறிக்கைகளின் பல்வேறு தொகுப்புகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் சாட்சிப் பதிவுகளைப் பார்க்கலாம். அவற்றினூடே பெண் தொழிலாளர்களின் குரல்களைக் கேட்க முடிகிறது. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னால் வீட்டைவிட்டு வெளியே முதலாளித்துவ முறையில் தொழிலாளர்களாக வேலைக்குச் சென்ற பெண்களின் குரல்கள் அவை.

மகாராஷ்டிரத்தில் ஜல்கோன் பகுதி ஜின்னிங் மில்களில் வேலைபார்த்த இரண்டு பெண்களின் குரல்கள் இது:

மிஸ் காமா: குழந்தைகள் இருக்கிறார்களா? சைனி: எனக்கு ஒரு மகள். 12 வயது. ஜங்லி: எனக்கு இரண்டு மகள்கள். ஒருத்திக்கு 6 வயது. இன்னொருத்திக்கு 4 வயது.

மிஸ் காமா: நீங்கள் வேலைக்கு வந்தால் யார் அவர்களைப் பார்த்துக்கொள்வார்கள்? சைனி: எனது மாமியாரிடம் அனுப்பிவிட்டேன்.

ஜங்லி: வீட்டில். எனது மாமியார்.

கர்னல் ரஸல்: உங்களின் எத்தனை குழந்தைகள் இறந்தன? சைனி: எனக்கு 7 குழந்தைகள். ஒரே ஒரு மகள் இருக்கிறாள்.

மிஸ் காமா: உங்கள் கணவர் எவ்வளவு சம்பாதிக்கிறார்? ஜங்லி: 18 ரூபாய் சைனி: 12 ரூபாய்

சேர்மன்: உங்கள் வீட்டில் எத்தனை பேர்? ஜங்லி: 5 பேர்.

சைனி: நானும், எனது கணவரும் இருக்கிறோம், மகள் மாமியாரிடம் இருக்கிறாள்.

மிஸ் காமா: சென்ற மாதம் எவ்வளவு கூலி வாங்கினீர்கள்?

ஜங்லி: வாரம் 2 ரூபாய் வாங்கினேன். அல்லது வாரத்துக்கு 2.5 ரூபாய்.

மிஸ் காமா: கடன் இருக்கிறதா? சைனி: எனது கணவருக்கு 200 ரூபாய் கடன் இருக்கிறது.

மிஸ் காமா: எவ்வளவு வட்டி? சைனி: 200 ரூபாய் வாங்கினேன். வட்டியோடு 250 ரூபாய். மாதாமாதம் 4 ரூபாய் திரும்பச் செலுத்துகிறேன்.

மிஸ் காமா: இன்னும் எவ்வளவு செலுத்த வேண்டியுள்ளது? சைனி: 200 ரூபாய்

மிஸ் காமா: பகலில் என்ன சாப்பிடுவீர்கள் – சைனி: சோளம்

முதல் சாப்பாடு எத்தனை மணிக்கு? – 8 மணிக்கு

இந்த சாப்பாட்டை ஆலையில் சாப்பிடுவீர்களா? வீட்டிலா? – ஆலையில்.

முதல் சாப்ப்ட்டில் என்ன சாப்பிடுவீர்கள்? – சோள ரொட்டி, பச்சை மிளகாய்

அடுத்த சாப்பாடு எத்தனை மணிக்கு? – 12 மணிக்கு

என்ன சாப்பாடு? – சோள ரொட்டி, பருப்பு

அடுத்த சாப்பாடு? – இரவு அரிசியும், பருப்பும் கலந்து. எல்லா நாட்களும் காய்கறிகள் சாப்பிட மாட்டோம்.

பால் எடுத்துக்கொள்வீர்களா? – இல்லை பால் வாங்க எங்களால் முடியாது?

திவான் சமன் லால்: குழந்தைகளுக்கு வாங்குவீர்களா? – இல்லை

திவான் சமன் லால்: ஏன் முடியாது? – எங்கள் வீட்டில் ஐந்து பேர். வாங்க முடியாது.

இந்த மாவட்டத்தில் எவ்வளவு காலமாக இருக்கிறீர்கள்?

எங்கள் சொந்த மாவட்டம் ஜல்கோன்.

எவ்வளவு வாடகை தருகிறீர்கள்?- மாதம் இரண்டு ரூபாய் (ஜங்லி)

சைனி: எனக்கு சொந்த வீடு இருக்கிறது.

எத்தனை சேலை ஜாக்கெட்டுகள் ஒரு வருஷத்தில் வாங்குவீர்கள்?

ஜங்லி: இரண்டு சேலைகள். ஒவ்வொன்றும் 5 ரூபாய்க்கு. 4 ஜாக்கெட்கள் 7 ரூபாய் எட்டணாவிற்கு

வேலை இல்லாத காலத்தில் என்ன வேலை செய்வீர்கள்?- புல் அறுக்கப் போவோம்.

 இன்னொரு பெண் தொழிலாளி பதானி. நான் இந்த வேலைக்கு வருவதற்கு முன்னால் புல் அறுத்து விற்றேன். வறுமை காரணமாக இந்த ஜின்னிங் ஆலை வேலைக்கு வந்தேன். ஆலைப் பெயர் சொல்ல வராது என்று சொல்லி இருக்கிறார்.

 வாரம் 2 ரூபாய் சம்பளம் இவர்கள் வாங்கினார்கள் என்றால், மாதம் 8 ரூபாய் சம்பளம். 250 ரூபாய் கடன் ஒருவருக்கு இருந்தது என்றால், இவர்கள் வாங்கிய 8 ரூபாய் சம்பளத்தில் கிட்டத்தட்ட 32 மாத சம்பளம் போய்விடும். நான்கு ரூபாயாக அடைக்க வேண்டும் என்றால் 64 மாதங்கள் ஓடும். 5 ஆண்டுகள். ஒரு கடனை அடைத்து முடிப்பதற்குள் புதுக்கடன்கள் வாங்க வேண்டி வரும். கணவர் வேலை பார்த்து, குடிக்காமல் இருந்தால் பிழைக்க முடியும். கணவர் இறந்துவிட்ட பெண்களின் நிலை? கைவிடப்பட்ட தனித்துவாழும் பெண்களில் நிலை?

ஆம்! தனித்துவாழ்ந்த பெண்களும் வேலைக்குச் சென்றார்கள். இதை தேயிலைத் தோட்டம், நிலக்கரி சுரங்கம், சணல் தொழிற்சாலைகள், பஞ்சாலைகள் என தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முதலாளித்துவ முறையின் தொழில்களில் பணியாற்றிய பெண் தொழிலாளர்கள் ராயல் கமிஷனில் சொன்ன சாட்சிகளில் உணர முடிகிறது. இந்தியாவில், தமிழகத்தில் முதலாளித்துவ முறையில் முதன்முதலாகப் பெண்கள் இடம்பெயர்ந்து வெளிவேலைக்கு செல்ல தொடங்கிய வரலாற்றை இன்னும் ஆராய்வோம்.

 

தொடரும்…

 

ஆதாரங்கள்:

Karl Marx, The Future Results of British Rule in India, written on July 22, 1853, Published on August 8, 1853, New York Daily Tribune (Marx and Engels on Colonialism, Foreign Languages Publishing House, Moscow)

Labour in India, A study on the conditions of Indian Women in Modern Industry, Janet Harvey Kelman, 1923, George Allen & Unwin Ltd, London

  1. H. Buchanan, The Development of Capitalistic Enterprise in India, London, 1966

Working Class of India – History of Emergence and Movement (1830-1970), Sukomal Sen, K. P. Bagchi & Company, Calcutta, First Published 1977, 1979 Edition

Report of the Indian Factory Labour Commission, 1908, Digitised copy available at (https://indianculture.gov.in/ebooks/india-)

Report of the Royal Commission on Labour in India (appointed in 1929), 1931, Vol 1, Part 2, (Bombay Presidency, including Sind) Oral Evidence.

Samita Sen, Gender and the Jute Industry, 1890-1990

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *