‘அற்றவைகளால் நிரம்பியவள்’.. அதாவது ‘ஒன்றுமில்லாதவைகளால் நிரம்பியவள்’.

பிரியா விஜயராகவனின் முதல் நாவல். ஆனால, இந்நாவலை படிக்கும்பொழுது, இது அவரின் முதல் நாவல் என்று எந்த இடத்திலும் எண்ணத்தோன்றவில்லை. பெண்கள் பற்றிய நாவல் ஒரு பெண்ணால் எழுதப்பட்டுள்ளது என்பது இதன் தனிச்சிறப்பு. ஒரு ஆண், பெண்களைப் பற்றி, அவர்களின் உணர்வுகளைப் பற்றி, ஒருபொழுதும் முழுமையாக உள்வாங்கி எழுதிவிட முடியாது என்பதையும் இந்த நாவல் உணர்த்துகிறது. அதுமட்டுமின்றி இதன் தனிச்சிறப்பு, பிரியா விஜயராகவன் ஒரு அலோபதி மருத்துவர் ஆயினும், அலோபதி மருத்துவ வணிகம் ஆகிய மனநிலை எல்லாம் தாண்டி நடுநிலையோடு ஒரு நேர்மையான மருத்துவராக பலவற்றை விவரித்துள்ளார்.

மெதுவாகத் தீப்பொறி போல் தொடங்கும் இந்நாவல் ஒரு கட்டத்தில் காட்டுத்தீ போல் கொழுந்துவிட்டு பற்றி எரிகிறது. எவ்வளவுதான் படித்து முன்னேறினாலும், அனைத்து இடங்களிலும் ஊரிப்போயுள்ள சாதிய முறையை தோலுரித்துக் காட்டுகிறது. 

இந்நாவலில் கதாநாயகியாக வரும் அஞ்சனா, ஒரு அலோபதி மருத்துவர். அவரைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள், அவரின் வாழ்க்கைப் பயணம் என கதை விரிகிறது.

ஆப்பிரிக்காவின் மிக அழகிய தீவுகளில் ஒன்றான செய்ஷெல்ஸின் இயற்கை வளம், மக்களின் வாழ்க்கை முறை, மக்களின் மனநிலை, காதல் காமம் பற்றிய அவர்களின் பார்வை, இந்திய மக்களுக்கும் அத்தீவிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பு, சுற்றியுள்ள சிறு சிறு தீவுகளில் மறைந்திருக்கும் கருமையான வரலாற்றுப் பக்கங்கள், அந்நாட்டு அரசியல் என பல விஷயங்களை நுணுக்கமாக விவரித்து, நாம் விவாதித்து மாற்றிக்கொள்ள வேண்டிய பல இடங்களை நமக்கு சுட்டிக் காட்டுகிறது.இந்தியாவின் கடைக்கோடி கிராமம் முதல் இங்கிலாந்து தமிழர்களின் மனங்கள் வரை ஊறிப்போய் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வுகளை அச்சுப் பிசகாமல் சுட்டிக்காட்டுகிறது. உயர் கல்விக்கு தடையாக நிற்கும் சாதி, காதலுக்கு தடையாக நிற்கும் சாதி, மனிதத் தன்மையை இழக்கச் செய்யும் சாதி என பல கோணங்களில் சாதியை பற்றி இந்நாவல் அலசி வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

பல்வேறு நாடுகளைச் சார்ந்த பல மனிதர்கள் நடமாடும் இடமாக இந்நாவல் விரிகிறது. பெண்கள் எவ்வூரில் வாழ்ந்தாலும், எம்மதத்தில் இருந்தாலும், கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளாலும், பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காகவும், நிகழ்த்தப்படும் நேரடியான மற்றும் மறைமுகமான வன்முறைகளை தெள்ளத்தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. 

பல மதங்களில் கூறப்படாத சட்டங்களை, ஆணாதிக்கவாதிகளின் விருப்பத்திற்கேற்ப புனையப்பட்ட பல வன்முறை சட்டங்கள், மதத்தின் பெயராலும் கடவுளர்களின் பெயராலும், பெண்களின் மேல் கட்டவிழ்த்து விடப்படுவது இன்றளவும் உள்ளது என்பதை உணர்த்துகிறது.

இந்தியாவின் கடைக்கோடியில் ஒரு கீழ்ஜாதி பெண்மேல் நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமை பற்றிய அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் எண்ண ஓட்டத்தை கீழ்வரும் வரிகள் படம் பிடித்துக் காட்டுகிறது.

‘பத்துநாள் பரபரப்பான செய்தியாக இருந்தால் கண்மணி. தினங்கள் செல்ல, மெல்ல வேறு கதைகளின் பிடியில் சிக்கி காணாமல் போக, அதில் கண்மணி மறைந்து போனாள்’

இவ்வாறு மறைந்து போகும் பல கண்மணிகள் நம்நாட்டில் இன்றளவும் பெருகிக் கொண்டே வருகிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.போதைப் பொருளால் ஏற்படும் பல தீய விளைவுகளால் எவ்வாறு பல நல்ல மனிதர்களின் வாழ்க்கை சீரழிந்து உள்ளது என்பதை இதில் வரும் பல கதாபாத்திரங்கள் உணர்த்துகின்றன. மனம், இறப்பு, கடவுள், மதம், அன்பு, மனிதம், அறிவியல் ஆகிய அனைத்து தளத்திலும் மிகச் சிறப்பான புரிதல் கொண்ட ஒரு மனிதர், போதைப் பொருளின் பிடியில் சிக்கித் தவித்து, அதிலிருந்து மீள வழி தெரியாது, சாவின் விளிம்பில் இருக்கும் பொழுது, மீண்டும் வாழ வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க, ஆனால் யாராலும் உதவ முடியாத அளவிற்கு இறுதிக்கட்டத்தை அடைந்து இறந்துவிடும் ஈஸ்வர் மிக ஆழமாக மனதில் பதிந்து விடுகிறார். ஈஸ்வருக்கும் நாவலின் கதாநாயகியான அஞ்சனாவிற்கும் நிகழும் உரையாடல்களின் ஒவ்வொரு வரியும் அற்புதப் புதையல்களை உள்ளடக்கி, பல்வேறு தளத்தில் நம் புரிதல்களை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன.

நாவலின் ஓட்டத்தில் வரும், பல நூல்களின் மேற்கோள்கள், சிறு வாக்கியங்கள் ஆகியவை அந்நூல்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை நம்முள்ளே விதைக்கிறது.

அடுத்ததாக இரு முக்கிய எதிரெதிர் கதாபாத்திரங்களாக வரும் டேமியன் மற்றும் ஜெஃப்; மிக சிறப்பானதொரு அரசியல் புரிதலைக்கொண்டுள்ள கதாபாத்திரமாக சித்தரிக்கப்படும் டேமியன், நாட்டு மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள ஒரு அரசியல் போராளியாக, பல்வேறு தளங்களில் மிகச் சிறப்பான புரிதல்களை கொண்டு உள்ளவனாகவும், அவனின் வாயிலாக வெளிப்படும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் நாம் ஆழச்சிந்தித்து செயல்படுத்த வேண்டிய முக்கியமானவையாகவும் இருக்கின்றன.

செய்ஷெல்ஸ் தீவின் போதைப் பொருள் விற்பனையின் தலைவனாக சித்தரிக்கப்படும் ஜெஃப். பெண்களுக்கு மட்டுமே உடலின் மீது வன்முறை நிகழ்த்தப்படும் என்ற எண்ண ஓட்டத்தை முழுமையாக மாற்றி அமைத்து விடுகிறது அவனுடைய சிறு பிராயம் பற்றிய விவரிப்பு.

செய்ஷெல்ஸில் இருந்து இங்கிலாந்து பயணிக்கும் கதாநாயகி நம்மையும் அவரோடு அழைத்துச் செல்கிறார். அங்கு, அவருடைய அறையில் தங்கி இருக்கும் பெண் நண்பர்களின் துயரங்கள் நமக்கு உணர்த்துபவை ஒன்று மட்டுமே. பூகோள வரைபடத்தின் எந்த கண்டத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் சமத்துவமாக முன்னே நிற்பது பெண்ணாகப்பிறந்த ஒரே காரணத்திற்காக அவர்கள் மீது ஆணாதிக்கற்களால் நிகழ்த்தப்படும், நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கும் நேரடியான மற்றும் மறைமுகமான வன்முறை மட்டும் மாறவே மாறாது என்பதை இந்நாவல் முழுக்க நாம் உணர்ந்து கொள்ளலாம்.

மாறன் என்ற கதாபாத்திரத்தின் வழி பல்வேறு தளத்தில், சிறப்பான புரிதல்களை ஏற்படுத்தும் வகையில் உரையாடல்கள் அமைந்துள்ளன. மிக முக்கியமாக காதல் பற்றிய புதிய பார்வையை நமக்குள் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.இறுதியாக, இந்நாவலைப் பற்றி கூற வேண்டுமெனில், இதில் வரும் கதாபாத்திரங்களும் கதைகளும் புனைவா? நிஜமா? என்று பிரித்தறிய முடியா வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தையும் செதுக்கப்பட்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. ஒரு நாவலின் வழியாக, அடிப்படை புரிதல்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை மொத்தமாக மாற்றியமைக்க முடியும் என்பதை இந்நாவலாசிரியர் உணர்த்தி விடுகிறார். 

‘அற்றவைகளால் நிரம்பியவள்’ என்ற தலைப்பிற்கு ஏற்ப நாம் சேர்த்து வைத்திருக்கும் பல்வேறு தவறான புரிதல்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை துடைத்தெறிந்து, வாழ்க்கையை வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்ப்பதற்கு வழிவகுத்து விடுகிறார் நாவலாசிரியர் பிரியா விஜயராகவன்.


11 thoughts on “நூல் அறிமுகம்: “அற்றவைகளால் நிரம்பியவள் நாவல்” – தமிழினி”
 1. புத்தகத்தை படிக்க தூண்டும் நூல் அறிமுகம். மிகவும் சிறப்பு தோழர். வாழ்த்துகள்.

 2. சிறப்பான நாவல் என்பது உங்கள் எழுத்துகளில் தெரிகிறது தோழர்..

 3. வணக்கம் தோழர்,தங்களின் விமர்சனம் மிக மிக அருமை..நாவலை முழுமையாக உள்வாங்கி அதை கருத்தாக பகிர்ந்த விதம் சிறப்பு…நல்ல எழுத்து நடையும்💐💐வாழ்த்துகள்..உங்களது பதிவு பலரை இந்த நாவலை வாசிக்க தூண்டும் என்பது உறுதி👌👍

 4. அருமை தோழா் சிறப்பான விமா்சனபதிவு

 5. அனைவரும் இன் நாவலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் விதமாக விமர்சனம் அமைந்துள்ளது. சிறப்பு தோழர். 👍👏💐

 6. தெளிவான , மற்றும் ஆழமான பார்வையை எடுத்துக் காட்டுகிறது உங்கள் விமர்சன எழுத்து நடை. நிச்சயமாக படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. சிறப்பான விரிவான விமர்சனம். வாழ்த்துகள் தோழர்.

 7. புத்தகத்தை வாசிக்கத் தூண்டும் அருமையான விமர்சனம்….
  நன்றி வாழ்த்துக்கள் தோழர்….

 8. எண்ணங்களை எழுத்துக்களாக்க நினைத்தால் அதன் மீது கருப்பு வண்ணங்கள் பூசினால் அது வார்த்தைகளாக மாறிவிடுகிறது.

  அவ்வாறே மாற்றி எழுதப்பட்ட வார்த்தைகளின் விமர்சன வர்ணனையும் நாவலை படித்த காலத்தில் இருந்தே பூக்கிறது இந்த குறிஞ்சி பூ.

  வாசிக்கும் எல்லோரும் விமர்சனங்கள் எழுதுவதில்லை விமர்சனங்கள் எழுதினாலும் அதை வாசிக்க முடியவில்லை….

  விமர்சனத்தை வாசித்தவுடன் அந்த நாவல் புத்தகத்தை தேடும் ஆவலை தூண்டி விடுகிறது.

  சிறப்பான விமர்சனம் தோழர் வாழ்த்துக்கள் தமிழனி..

 9. நாவலின் சாரத்தை மிகவும் தெளிவாக கூறி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *