நூல்: அற்றவைகளால் நிரம்பியவள்
ஆசிரியர்: பிரியா விஜயராகவன்
வெளியீடு: கொம்பு பதிப்பகம்
விலை: ரூ.430

சமீபத்தில் வாசித்து முடித்த மனதைப் பிசைந்த நாவல், பிரியா விஜயராகவன் அவர்கள் எழுதிய “அற்றவைகளால் நிரம்பியவள்”.
அஞ்சனா என்ற மருத்துவர், இன்னும் மேல் படிப்புக்காக செல்லவிருப்பவர். அவரது பார்வையில் விரியும் இந்த நாவல், 700 பக்கங்களில் விரியும் இந்நாவல், பரந்த நிலப் பரப்புகளூடே விரிகிறது. செஷல்ஸ் தீவுகள், கேரளா, தமிழ்நாடு, லண்டன், இன்னும் பல தேசங்கள் என உலகத்தையே சுற்றி வருகிறது.லண்டன் சென்று மருத்துவம் பயின்று மருத்துவர் பட்டம் பெற்றவர் என்று சில மருத்துவர்களை கொண்டடுகிறோம். ஆனால், அவர்கள் சென்று படிக்க எவ்வளவு கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நாவல் மிக அழகாக விவரிக்கிறது. லண்டனில், மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்புக்காகத்தான் பல நாடுகளிலிருந்து மருத்துவர்கள் வருகிறார்கள். ஆனால், அந்த இடம் கிடைப்பதற்குள், அவர்கள் அடிப்படையில் மருத்துவர்கள் என்பதையே மறந்து, தங்கள் செலவுக்காக பொருள் ஈட்டுவதற்கும், சாப்பாட்டிற்கும் திண்டாட வேண்டியிருக்கிறது என்பதையெல்லாம் நாவல் கண் முன்னே நிறுத்துகிறது. இப்படிப்பட்ட அனுபவங்கள் இது வரை எழுதப்படவில்லை என்றே தோன்றுகிறது. எனவே, புதிய விஷயங்கள் என்பதாலேயே நாவலின் சுவாரசியம் அதிகமாக இருக்கிறது.

ஒரு மருத்துவரின் பயணமாகவும், அனுபவமாகவும் மட்டும் இந்த நாவல் விரிவடையாமல்,, நாவல் முழுக்க பெண் என்பவளைப் பற்றிப் பேசுகிறது. பெண் என்பவள், சதையால் ஆனவளாகப் பார்க்கப் படுவதை, பிரியா அவர்கள், தன் மருத்துவப் பணியினூடாகவும், வரலாற்றினூடாகவும், தன் முன்னோர் வாழ்க்கையினூடாகவும்,, தன் சொந்த அனுபவங்களினூடாகவும் நாவல் முழுவதும் பேசுகிறார். அதில், சில நூற்றாண்டு காலம் முதல் தற்காலம் வரை பலவற்றை விவரித்துச் செல்கிறார். அத்தனை காலங்களிலும், பெண் என்பவள் வெறும் யோனியாகவும், மார்பகங்களாகவுமே பார்க்கப்படுகிறாள். பெண் என்பவள் இதைத் தவிர வேறு எதனாலும் ஆனவள் அல்ல. அவள் வேறு எதனாலும் நிரம்பியவள் அல்ல. இதைத் தவிர வேறு எதுவுமே அற்றவள் என்பதாக, ”அற்றவைகளால் நிரம்பியவள்” என்பதாகவே உலகம் பார்க்கிறது என்பதை திரும்பத் திரும்பச் சொல்கிறது நாவல்.

பெண் என்பவள் இந்த பாலுறுப்புகளால் மட்டுமே சிறப்பு பெறுபவள் என்பதையே திரும்பத் திரும்ப காலம் காலமாக இந்த சமூகம் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. பெண் என்பவள் இருக்கும்போதும்” அவள்” என்பவள் இந்த உறுப்புகள் மட்டுமே. இறந்த பிறகும் அவள் அவை மட்டுமே. அஞ்சனா, தன் பாட்டியின் மரணத்தைப் பார்க்கிறார். அவர் இறந்தபோது, அந்தப் பெண்ணின் பிணத்தைப் பாடையில் ஏற்றும் முன்னால், பிணத்தைக் குளிப்பாட்டி, சடங்குகள் செய்வதில், இறுதியாக, அந்தப் பெண் பிணத்தின் யோனிக் குழி சாணத்தால் அடைக்கப்படுகிறது. இதே போல, இன்னொரு இடத்தில், ஒரு பெண்மணி, திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விட்டவர், இறந்து போன போது, அவள் கன்னி கழியாமல் எரியூட்டப்பட்டால், அவளது ஆவி சாந்தியடையாது என்ற ஐதீகத்தோடு, அந்தப் பிணத்தைத் தோட்டத்தில் வைத்து, குலத்தால் பிற்படுத்தப் பட்ட ஒருவனைக் கொண்டு ”பிணத்தைப் புணர வைக்கும்” சடங்கு நடத்தப்படுகிறது. பெண் என்பவள் இந்த ஊத்தைக் குழி ஊத்தைக்குழி என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.நாவல் நெடுக அஞ்சனா பல பெண்களைச் சந்திக்க நேரிடுகிறது. அதில் அவள் கூடவே படித்தவர்கள், அவரிடம் மருத்துவத்திற்காக வருகிறவர்கள்.
பள்ளியும், கல்லூரியும் படிக்கும்போதே, ஒருவர் இன்றி மற்றவர் வாழவே முடியாது என்றெல்லாம் பேசிக் கொண்டு, திருமணம் செய்து கொண்டவர்களுடைய வாழ்க்கை ஒரு சில வருடங்களுக்குள்ளாகவே அலுத்துப் போகிறது. அஞ்சனாவின் தோழி ஒருத்தி அவளிடமே மருத்துவத்திற்காக வரும்போது, வாழ்க்கை சலித்துப் போனதைச் சொல்லி அழுகிறாள். அவள் சந்திக்கும் இன்னும் சில பெண்கள் திருமண உறவு தாண்டியும் சில ஆண்களோடு உறவு வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருமே, வாழ்க்கையில் சந்தோஷம் என்பதைக் காணவில்லை. எல்லா உறவுகளுமே உடல் சலித்துப் போகும்போது உறவு சலித்துப் போவதாகவே இருக்கின்றன. திருமண உறவோ, மற்றதோ, பெண் என்பவள் வெறும் உடல் இன்பத்திற்காகவே அன்பு செய்யப்படுகிறாள் என்பதே மீண்டும், மீண்டும் நாவல் நெடுக விரவிக் கிடக்கிறது.

அன்பாகப் பழகுவது போன்று பழகி, போதைப் பழக்கத்துக்குஅடிமையாக்கி, அவளைத் தான் பொருள் ஈட்டுவதற்கும், துய்ப்பதற்கும் ஒரு பண்டமாக மாற்றும் ஆண்கள் இந்த நாவலில் வருகிறார்கள். சிறுமியை, மன நிலை பிறழ்ந்தவளை என பெண்ணை உடலாக மட்டுமே பார்த்துச் சீரழிக்கும் ஆண்கள் நாவலில் வருகிறார்கள்.

நாவலின் இறுதியில் லண்டனில் அஞ்சனா தஙியிருந்த ஒரு பெண்கள் விடுதி காட்டப்படுகிறது. அதில், பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் விரும்பி அங்கு வரவில்லை. அவர்கள் யாரும் விரும்பி தங்கள் நாடுகளைத் துறந்து வரவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதால் தங்கள் நாடுகளைத் துறந்து, தங்கள் சுற்றங்களைத் துறந்து, யாருமற்ற அகதிகள் போன்று இங்கு வந்து சேர்ந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் கதைகள் அத்தனையும், நம் நெஞ்சம் பதற வைப்பவை. இலங்கைப் பெண் விவரிக்கும் காட்சியில், இளமையானவள், வயது முதிர்ந்தவள், இளம்பெண், கர்ப்பிணி என எந்தப் பாகுபாடும் இல்லாமல், பெண்கள் பாலியல் துன்புறுத்தலை எப்படி அனுபவித்தார்கள் என்பதை விவரிக்கிறாள்.சிறுமி ஒருத்தி பலரால் சிதைக்கப்பட்டு, கருப்பை சீழ் பிடித்துப் போனதை, போர் என்ற பெயரில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் நடக்கும் எல்லா அராஜகங்களுக்கும் பெண்கள் உடல்களே தீனியாவதை விவரிக்கிறாள்..

ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் ஒரு பெண் நிறுத்தி வைக்கப்பட்டு, அவளுடைய பாலுறுப்புகள் மட்டும் வெளியில் தெரியும்படி அமைக்கப்பட்டு, அவற்றைக் காட்டி அவள் வெளியிலிருந்து ஆண்களை அழைக்க வைக்கப்படுவதை ரஷ்யப் பெண் ஒருத்தி சொல்கிறாள். ஆப்கானில் முதிர் கிழவனுக்கு சிறுமியைத் திருமணம் செய்து வைக்கும் கொடுமையை, சம்மதிக்கவில்லையெனில், அவள் மேல் ஆசிட் வீசப் படுவதைச் சொல்கிறாள். ஆப்பிரிக்க நாடுகளில், பிறப்புறுப்பை சீர் செய்தல் என்ற பெயரில் பெண்களே பெண்களுக்கு இழைக்கும் கொடுமையைச் சொல்கிறாள்.

அப்பப்பா…..தேசங்கள் மாறினாலும், பெண்கள் சீரழிக்கப்படுவது மட்டும் எந்த இடத்திலும் மாறவில்லை. ஏனெனில், பெண் என்பவள் என்பவள் தேசம், இனம், மொழி எல்லாம் கடந்து, பாலுறுப்புகள் கொண்ட உடல் இன்பத்திற்காகத் துய்க்கபடுபவள்.அவ்வளவே.

நாவலில் ஒரு அத்தியாயம் ஒரு த்ரில்லர் போன்று எழுதப்பட்டிருக்கிறது. அஞ்சனாவின் அறைக்குள் நுழைய பல முறை முயன்று தோற்று, ஒரு நாள் நுழைந்தே விடுகிறான் ஒருவன். திருடுவதற்காக அல்ல. அவளை நேரடியாகத் துய்க்கப் பயம். அவன், தூங்கும் அந்தப் பெண்ணை, தடவிக் கொண்டே, தனக்குத் தானே சுய இன்பம் அனுபவிக்கிறான். இந்தக் காட்சி எவ்வளவு அருவருக்கத்தக்கதாகவும், நெஞ்சைப் பகீர் எனச் செய்யவுமாக இருக்கிறது. அவள் ஒரு மருத்துவர் என்று தெரிந்தும் அவன் இந்தக் கயமை செயலில் ஈடுபடுகிறான். ஆண் என்பவனுக்கு, ஒரு பெண் எவ்வளவு பெரிய ஆளுமையகவோ, அறிவார்ந்தவளாகவோ இருந்தாலும், அது ஒரு இன்பம் துய்க்கும் பொருள் மட்டுமே.

இப்படி நாவல் முழுக்க பெண்ணின் உடல் என்பது மட்டுமே பிரதானமாகப் பார்க்கப்படும் அவலத்தை நாவலாசிரியர் பட்டவர்த்தனமாக விவரித்தபடியே இருக்கிறார்.பெண்கள் ஆண்கள் மேல் காதல் கொள்வதற்கு, அவர்களுடைய அறிவு, திறமை இவையெல்லாம் காரணமாக இருக்கும்போது, ஆண்களுக்கோ பெண்களின் புற அழகும், உடலும் மட்டுமே தேவையாயிருக்கிறது. விதி விலக்கான ஆண்களும் உண்டு என்பதற்கு, அஞ்சனா சந்திக்கும் ஒரு சில அரிதான நல்ல ஆண்கள் உண்டு. .
ஓர் அறிஞர் சொன்னார். ஆணுக்கு இரண்டு கஷ்டங்கள் என்றால், பெண்ணுக்கு அதற்கு மேலும் ஒன்று உண்டு. அதுதான் அவள் பெண்ணாயிருப்பது என்று. இதையும் நாவலாசிரியர் வாசகரை உணர வைக்கிறார். நாவலில் அஞ்சனா, சந்திக்கும் அவள் இனம் சார்ந்த பிரச்சினைகளூம் இருக்கின்றன. அவள் அழகுக்காக அவளை விரும்பும் ஆண்கள், அவள் ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவள் என்றவுடன் விலகிக் கொள்வதும், அவள் மருத்துவர், அதிலும் வெளி நாடு சென்று படித்த மருத்துவர் என்ற அடையாளங்கள் இருந்தும் கூட, அவள் என்ன இனம் என்று கேட்டு சங்கடப்படுத்துபவர்களையும் நாவலாசிரியர் நாவல் போக்கிலேயே சொல்லிச் செல்வது வாசகரை, அந்தப் பாகுபாட்டை உணர வைக்கிறது. ஆணுக்குத் தான் சேர்ந்த இனம் மட்டும் பிரச்சினை என்றால், பெண்ணுக்கோ, அதையும் மீறி அவளை ஒரு பெண்ணாகப் பாதுகாத்துக் கொள்வதும் பெரும் சவாலாகவே இருக்கிறது.என்பதை நாவல் சொல்லிச் செல்கிறது.

மலம் அள்ளுவதைத் தொழிலாகச் செய்த பிரிவினரைக் காட்டுகிறார் அஞ்சனா. பெண் பிணத்தோடு புணருவதற்கு ஒரு தாழ்ந்த இனத்தை சேர்ந்த ஓர் ஆண்மகனைத் தான் அழைத்து வருகிறார்கள். எப்படியெல்லாம் இந்தப் பாகுபாட்டினைக் காட்டி இந்தச் சமூகம் மக்களை இழிவுபடுத்தியிருக்கிறது என்பதை, தனித்து வெளியே தெரியும்படியாக அமைக்காமல் நாவலின் போக்கிலேயே பிரியா எழுதிச் செல்வது எல்லாம் நாவலின் வெற்றி.

நாவலில் இரண்டு காட்சிகள் வருகின்றன. ஒன்று, ஒரு பெண் பிணம் உடற்கூறு பரிசோதனைக்காக அறுக்கப்படுகிறது. மற்றொரு காட்சியில், இறந்த பிணத்தை, உறவினர்கள் பார்ப்பதற்காக, அந்த பூதவுடல் புதுப்பிக்கப்படுகிறது.(எம்பாமிங்). இந்த இரண்டு காட்சிகளையும் மிக விலாவாரியாக பிரியா விவரிக்கிறார். இந்த இரண்டு காட்சிகளின் மூலம், நாவலாசிரியர், “இறப்பே அதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் கணங்களை ஒன்றுமில்லாதது ஆக்கி, மாயை என்று காட்டுவதுதான்” என்ற தத்துவத்தை உறுதிப்படுத்துகிறார். இப்படியான உடல்தான் என்றாலும், பெண் உடல் என்பது மட்டும் இந்த ஆண்களிடம் சிக்கிப் படும் பாட்டை நாம் இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

நாவல், வாசிப்பவருக்கு, பல ஆங்கிலப் புத்தகங்கள், பல தத்துவப் பாடல்கள் என பல விஷயங்களைச் சொல்கிறது. படங்களையும் பிரியாவே வரைந்திருக்கிறார். ஒரு சிறந்த நாவலாசிரியராகவும், சிறந்த ஓவியராகவும் மிளிர்கிறார் பிரியா விஜயராகவன்.

வலிகளின் முனகல்களை நாவல் முழுக்கக் கேட்க முடிந்தாலும், நாவல் முழுக்க ஒரு நேர்மறை எண்ணவோட்டத்தைக் காண முடிகிறது. அஞ்சனா சந்திக்கும் அத்தனை பிரச்சினைகளையும் அவள் அமைதியாகவும், பதட்டத்தை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல், அவற்றை எதிர்கொள்வதையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் பிரியா.

பல நாட்டுப் பெண்களின் கதைகளை கேட்ட பிறகு, அஞ்சனா, நினைக்கிறார்.

“ வலியில் இருந்து பிறந்த நெருப்பு பெண்கள் “. கடும் வலியில் பூத்து இந்தப் பெண்களால், இன்னும் மனதார சிரிக்க முடிகிறது. இந்த வாழ்க்கை எத்தனை மகத்தானது. இதில் வாழும் பெண்கள் எத்தனை தைரியசாலிகள், பொறுமை, நம்பிக்கையுள்ள ஜீவன்கள்” என்று. இந்த நம்பிக்கை, இந்ததைரியம் நிச்சயம் பெண்களுக்கு வேண்டும். எத்தனை முறை விழுந்தாலும், எத்தனை தோல்விகளைச் சந்தித்தாலும், அவற்றை உதைத்து எழுவது மட்டுமே பெண்களை பெரும் சக்தியாக உயர்த்தும். அதுவே, “அற்றவைகளால் நிரம்பியவள்” என நினைத்துக் கொண்டிருக்கும் இந்த மானுடத்தை நோக்கி பெண் விடும் சவாலாக இருக்கும் என்ற நம்பிக்கையை நாவலாசிரியர் கொடுக்கிறார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *