ஆகஸ்ட் 10 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரிச்சர்ட் எஃப். கான் (Economist Richard Kahn Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 10 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரிச்சர்ட் எஃப். கான் – முனைவர் பு. அன்பழகன்

ரிச்சர்ட் எஃப். கான் (Richard F. Kahn) ஆகஸ்ட் 10, 1905இல் பிறந்து ஜூன் 6, 1989இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர், கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியின் ஆய்வுறுப்பினர் (fellow), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் மற்றும் மந்தகால மற்றும் உலகப் புகழ்பெற்ற பேரியல் பொருளாதார அறிஞரான ஜே.எம். கீன்ஸின் மாணவர் ஆவார். கான், கீன்ஸின் எழுத்துப்பூர்வமான பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பை (literary executor) ஏற்றதுடன், தனது வாழ்நாள் முழுவதும் கீன்ஸின் கோட்பாடு மற்றும் கொள்கைகளின் தீவிர ஆதரவாளராகவும் முன்னெடுப்பவராகவும் திகழ்ந்தார்.

கான் “பெருக்கி கோட்பாட்டை” (multiplier theory) அறிமுகப்படுத்தினார், இது வேலைவாய்ப்பு தொடர்புடையதாகும். கீன்ஸியப் புரட்சியின் முக்கிய கூறுகளில் ஒன்றான ‘பெருக்கி’ (multiplier) கொள்கையைக் கண்டறிந்ததற்காக கான் பெரிதும் அறியப்படுகிறார். பொருளாதாரத்தில் இயந்திரங்கள் மற்றும் ஆலைகளின் முழுமையற்ற பயன்பாடு அல்லது வேலையின்மை போன்ற காரணங்களால் வளங்கள் சும்மா இருக்கும்போது (idle resources), வெளிப்புறத் தேவை சார்ந்த மொத்தச் செலவினத்தின் (exogenous aggregate expenditure) ஏதேனும் ஒரு பகுதி அதிகரிப்பதற்கும், வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கும் இடையிலான தொடர்பையே இக்கொள்கை விளக்குகிறது. வேலையின்மையை எதிர்கொள்வதற்கான வழியாக பொது முதலீடு குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில் கான் தனது முடிவுகளை முன்வைத்தார்.

பொதுச் செலவின அதிகரிப்பு தனியார் துறை வேலைவாய்ப்பை “வெளியேற்றிவிடும்” (crowd out) என்று அக்காலத்தில் நிலவிய கருத்துக்கு மாறாக, அது மொத்த வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிப்பதே அவரது நோக்கமாய் இருந்தது. பணவீக்கத்தை ஏற்படுத்துவதில், ஊதிய பேச்சுவார்த்தை செயல்முறையின் ஒரு பகுதியாக அமையும் ‘ஊதிய-விலை சுழற்சி’ (wage-spiral) குறித்த விளக்கம் அளித்துள்ளார். கீன்ஸின் புகழ்பெற்ற ‘பொதுக் கோட்பாடு’ (General Theory) உருவானதில் கான் பெரும் பங்கு வகித்தார். அக்கோட்பாட்டின் பல முக்கிய கருத்துக்களை உருவாக்கியவரும் அவரே ஆவார். முதலீடு மற்றும் பன்னாட்டு வர்த்தகம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற கான், பல அரசு குழுக்களிலும், தேசிய நிலக்கரி வாரியத்தின் (1967) பகுதிநேர உறுப்பினராகவும், வங்கி நிறுவனங்களின் ஆலோசகராகவும் பணியாற்றினார். 1955இல் ஐக்கிய நாடுகள் சபையின் ஐரோப்பாவிற்கான பொருளாதார ஆணையத்தின் (UNECE) ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் பிரிவில் அவர் நியமிக்கப்பட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

(1931): “The Relation of Home Investment to Unemployment,” Economic Journal, Vol 4, pp. 173–198.
(1954): “Some Notes on Liquidity Preference,” Manchester School of Economic and Social Studies, I Vol 22, pp 229–257.
(1959): “Exercises in the Analysis of Growth,” Oxford Economic Papers, Vol 11, pp 143–156.
(1976): “Inflation: A Keynesian View,” Scottish Journal of Political Economy, Vol 23 11–16.

ஆதாரம்

www.jewishvirtuallibrary.org; www.hetwebsite.net; www.encyclopedia.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *