எர்ன்ஸ்ட் பிரீட்ரிக் ஷூமேக்கர் (Ernst Friedrich Schumacher) ஆகஸ்ட் 16, 1911இல் பிறந்து செப்டம்பர் 4, 1977இல் மறைந்த பிரித்தானிய நாட்டை சார்ந்த புள்ளிவிவர நிபுணர் மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார். மனித நடப்பின் அளவீடுகள், பரவலாக்கப்பட்ட அதிகாரம் மற்றும் பொருத்தமான தொழில்நுட்பங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தியதின் வழியாகப் புகழ்பெற்றவராவார். ஃபிரிட்ஸ் ஷூமேக்கர் பிரிட்டனின் தேசிய நிலக்கரி வாரியத்தில் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றினார். வளங்கள் தொழில் மயமாக்கலுக்காக சுரண்டுவதை வெளிப்படுத்திய முதல் நபர்களில் ஷூமேக்கர் ஒருவர் ஆவார். தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியினை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக அவர் மனித நல்வாழ்வை மையமாகக் கொண்ட புதிய பொருளாதார சிந்தனையை முன்மொழிந்தார். அவர் இந்தியத் திட்டக் குழுவிற்கும், ஜாம்பியா மற்றும் பர்மா அரசாங்கங்களுக்கும் ஆலோசகராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1955ஆம் ஆண்டில், ஷூமேக்கர் பொருளாதார ஆலோசகராகப் பர்மாவுக்குச் சென்றார். பர்மாவில் அவர் தங்கியிருந்தது அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணமாக அமைந்தது, இதன் அடிப்படையில் அவரை Buddhist Economics (பௌத்த பொருளாதாரம்) என்ற கட்டுரையை எழுத தூண்டியது. இக் கட்டுரையானது, முதன்முதலில் 1966இல் Asia: A Handbook என்பதில் வெளிவந்தது. சரியான மனித வளர்ச்சிக்கு நல்ல வேலை அவசியம் என்ற அடிப்படையில், உள்ளூர் தேவைகளுக்கு உள்ளூர் வளங்களிலிருந்து உற்பத்தி செய்வது பொருளாதார வாழ்க்கையின் மிகவும் சரியானது என்று குறிப்பிட்டார், இதனை அவர் “பௌத்த பொருளாதாரம்” என்று அழைத்து கொள்கைகளை உருவாக்கினார்.
1963ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த ஷூமேக்கர், பாரம்பரிய இந்திய வாழ்க்கையில் நவீனத் தொழில்நுட்பத்தினால் அழிவுகரமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார். வளரும் நாடுகளில் உள்ள மக்களின் தேவைகள் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு இடைநிலை தொழில்நுட்பத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். 1973ஆம் ஆண்டு வாரணாசியில் (இந்தியா) உள்ள காந்திய ஆய்வு நிறுவனத்தில் காந்தி நினைவு சொற்பொழிவை ஷூமேக்கர் நிகழ்த்தியபோது, மகாத்மா காந்தி மிகச் சிறந்த ‘மக்கள் பொருளாதார நிபுணர்’ என்று குறிப்பிட்டார்.
Small is Beautiful (1973) என்ற தனது புத்தகத்தில், முதலாளித்துவமானது கலாச்சார சீரழிவை விலையாகக் கொடுத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது என்று குறிப்பிட்டார். இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை அவர் உறுதியாக நம்பினார். பெரிய தொழில்கள் மற்றும் பெரிய நகரங்கள், பெரிய நிறுவனங்கள் நாட்டின் வளங்களை அதிகமாக பயன்படுத்துவதால் அவை குறைவதற்கான வழியினை உருவாக்கும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பிரச்சினைகள் பற்றிய ஒருங்கிணைந்த சிந்தனையில் அவர் ஒரு முன்னோடியாக இருந்தார். மதிப்புமிக்க புதிய பொருளாதாரத்தினை உருவாக்குவது அடிப்படையானது என்ற கருத்தினை அவர் முன்வைத்தார்.
ஷூமேக்கரின் எண்ண ஓட்டங்களைச் செயல்படுத்த, மாசசூசெட்ஸின் கிரேட் பாரிங்டனில் உள்ள நியூ எகனாமிக்ஸ் இன்ஸ்டிடியூட் நூலகமானது பல்வேறு செயல்கள் வழியாக வெளிக்கொண்டுவருகிறது. இங்கு, விரிவுரைகள், கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல், ஆவணங்களை வெளியிடுதல், மாதிரி பொருளாதார திட்டங்களை உருவாக்குதல் மற்றும் குழுக்களுக்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் வலுவான, மாறுபட்ட உள்ளூர் பொருளாதாரங்களை உருவாக்க மக்களை, நிலத்தை மற்றும் சமூகத்தை இணைக்கிறது.
ஆதாரம்: www.centerforneweconomics.org; www.britannica.com; www.econation.one; www.environment-ecology.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

