அவள் நலம் – நூல் அறிமுகம்
மூடநம்பிக்கையை தகர்த்து, மெய் நம்பிக்கையை உயர்த்துவது அவசியம்.
அவள் நலம் எனும் நூல் மருத்துவர் அனுரத்னா எழுதிய நூலாகும். இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக கிராமப்புறங்களில் அறிவியலைப் பரப்பும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மருத்துவ நூல்கள் தமிழில், தமிழ் மொழியில் அதிகம் வெளிவர வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்த வருகிறார். குறிப்பாக மருத்துவக் கல்வியும் தமிழ் வழியில் பயிற்றுவிக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருபவர். இந்த நூல் மிகவும் அருமையான நூலாகும்.
84 பக்கங்களைக் கொண்ட, அவள் நலம் நூலில் 22 அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூல் பெண்ணின் நலமே உலகின் நலம் என வலியுறுத்துகிறது.
மருத்துவர் அனு ரத்னா மகப்பேறு மருத்துவராக இருப்பதால் பெண்கள் சார்ந்த மருத்துவ விஷயங்களை தமிழ் மொழியில் மிக அழகாக அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூலில் படைத்துள்ளார்.
வளர் இளம் பருவத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி எல்லாம் பாதிப்பை சந்திக்கிறார்கள் இவர்களை சரியாக வழிநடத்தினால் தனிமனித எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் இவர்கள் தீர்மானிக்க கூடியவர்களாக வார்த்திருக்க முடியும் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
நாகரீகம் வளர வளர பெற்றோருக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே உள்ளது . இது குடும்ப நலனுக்கு மட்டுமல்ல சமூக நலனுக்கும் இந்த நாட்டின் நலன் இருக்கும் உகந்ததல்ல. எனவே இவர்களை சரியான வழிகாட்டுதல்கள் வழங்கினல் தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட்டு சிறந்தவர்களாக உருவாக்க முடியும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
பிரசவத்திற்கு உகந்த இடம் மருத்துவமனையே. எவ்வித அறிவியல் வளர்ச்சியும் இல்லாத காலத்தில் தாய் சேய் நல மருத்துவர்கள் மூலம் பிரசவம் பார்த்த காலம் உண்டு. இன்று அறிவியல் வளர்ச்சி பெருமளவில் வளர்ந்துள்ளதோடு அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறைய தொடங்கப்பட்டுள்ளது. எனவே பிரசவத்திற்கு உகந்த இடம் மருத்துவமனை தான் என்பதை அழுத்தமாக கூறியுள்ளார்.
பெண்கள் நலம் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு இடைவெளி அவசியம் என்பதை இன்நூலில் தெரிவித்துள்ளார். முதல் குழந்தை பிறந்தவுடன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் அடுத்த குழந்தையை பெற்றெடுக்க வேண்டும். அந்தத் தாய் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் இந்த இடைவெளி அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உருவானது மும்தாஜ்க்கு குழந்தை பிறந்த பின்பு இடைவெளியை கடைப்பிடிக்காமல் 38 வயதில் 14வது குழந்தையை பெற்ற போது தான் அவர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவர் மறைந்த பின்பு தான் தாஜ்மஹால் உருவாக்கப்பட்டது.
ஆனால் தாஜ்மஹால் முக்கியமா? அல்லது நீடித்து வாழ வேண்டும் என்று என்பது முக்கியமா? என்றால் ஆரோக்கியமான வாழ்வுக்கு இடைவெளி அவசியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அனைவராலும் பணக்கார வியாதி என்று கூறப்படும் நீரிழிவு நோய் இன்று எல்லோருக்கும் பொதுவானதாக மாறிவிட்டது. அதற்கு காரணம் அதிக மாவுச்சத்து உள்ள உணவுகளை உண்பதே என்பதை மருத்துவர் தெளிவாக பதிவு செய்துள்ளார். எனவே நமது உணவுப் பழக்கங்களில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்து இளம் வயதிலே நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாப்பது அவசியமாகும்.
கர்ப்ப காலத்தில் இணை நோய்கள் உருவாகின்றன. இதற்கு காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு தான். குறிப்பாக ரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி இருதய நோய் பிரச்சனை போன்றவை தற்போது அதிகம் வருகிறது. அத்தோடு உடல் பருமனும் இன்று அதிகரித்துள்ளது . எனவே இக்காலங்களில் உணவு கட்டுப்பாட்டுடன் நாம் இருந்தால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் இணை நோய்களை தவிர்க்க முடியும் குறிப்பாக ஆரோக்கியமாகவும் வாழ முடியும் என்பதை சிறப்பாக பதிவு செய்துள்ளார் மருத்துவர்.
இந்திய பெண்களிடம் அதிகம் இணைந்து இருப்பது ரத்தசோகை. குறிப்பாக ரத்த சோகை என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது தான். ஆனாலும் பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. இது குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு தான் முக்கிய காரணமாகும். இதை ஈடு செய்வது மிகவும் அவசியம்.
பெண்களுக்கு ஏற்படும் மாதாந்திர உதிரப்போக்கை இன்றும் தீட்டு என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
மாத சுழற்சி உதிரப்போக்கானது நல்ல உதிரமே. ஆரோக்கியமான உடல் நிலையை தக்க வைப்பது மாத சுழற்சி காண உதிரப்போக்கு நடை பெற்று ஆக வேண்டும். இல்லை என்றால் பெண்கள் பல்வேறு நோய்களை சந்திக்க நேரிடும். இந்த உதிரிப் போக்கு இழப்பை மீண்டும் ஈடு செய்ய பெண்கள் இரும்பு சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். இதன் மூலமே ரத்த சோகையை நாம் போக்க முடியும்.
குழந்தை பேரின்மையை இன்று மிகப்பெரிய பேசும் பொருளாக இச்சமூகம் ஆக்கிவிட்டது. இதன் மூலம் சமூக அளவில் பாதிக்கப்படுவது பெண்களே. குழந்தை இல்லா பெண்களை இச்சமூகம் என்ன பாடு படுத்துகிறது என்பதை நாம் எல்லாம் அறிவோம். இதை ஈடு செய்வதற்கு இன்று மருத்துவத்துறையில் பெரும் முதலீடு செய்து வணிக தன்மை கொண்ட சூழலாக மாறிவிட்டது. இதற்கான சிறப்பு சிகிச்சைகள் கொண்ட மருத்துவமனைகள் இன்று ஏராளமாக உருவாகியுள்ளது தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை பெற இயலாத நிலைக்கு ஆணுக்கும் பங்கு உண்டு என்பதை இங்கு இந்த சமூகம் ஏற்பதில்லை. பெண்ணிற்கு மட்டுமே பிரச்சனை இருக்கும் என்ற புரிதல் இங்கு பரவலாக உள்ளது. இதனால் பெண்களின் பெற்றோர்கள் எவ்வளவு செலவு செய்தேனும் தன் மகளுக்கு சிகிச்சை அளித்து குழந்தை பேரை உருவாக்க முயலுகிறார்கள். இதை வணிக மருத்துவமனைகள் தெளிவாக பயன்படுத்திக்கொண்டு பணத்தை பிடுங்கிக் கொள்கிறார்கள். இதிலிருந்து பாதுகாப்பாக வெளியேற வேண்டும். இதற்கு அரசு இலவசமாக மருத்துவ வசதி செய்து தருவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளார் மருத்துவர்.
குழந்தை பேரு இல்லாதவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும் என்பதையும் அதற்கான வழிமுறைகளையும் சட்டங்களையும் அதில் உள்ள சிக்கல்களையும் அருமையாக தெரிவித்துள்ளார்.
மூடநம்பிக்கையானது தனி மனிதனின் அறிவை மட்டும் மழுங்கடிக்காமல் இந்த சமூகத்தின் வளர்ச்சியையும் மழுங்கடிக்கிறது.
அறிவியல் வளராத காலங்களில் உருவாகிய இத்தகைய மூடநம்பிக்கைகள் இன்றைக்கு பெரும் அறிவியல் வளர்ச்சி பெ நிலையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை மிகவும் வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார். எனவே மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டு முற்போக்கு சிந்தனைகள் வளர வேண்டும் என்று அனைவரும் குரல் கொடுத்து இதை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
பெண் குழந்தை பிறந்தால் அதற்கு காரணம் அந்தப் பெண்தான். ஆண் குழந்தை பிறந்தால் அதற்கு காரணம் ஆண் தான் என்ற நிலை உள்ளது. இந்த அறிவியல் புரிதல் அற்ற நிலையில் பெண்களை கொடுமைப்படுத்தும் செயல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதன் மூலம் வரதட்சணை கொடுமை. பெண் கரு கலைப்பு, பெண் சிசுக்கொலை போன்றவை இன்றும் நிகழ்ந்து கொண்டே இருப்பது மிகவும் வேதனைக்குரியது.
ஆணும் பெண்ணும் ஒன்றே என்பதை நாம் இந்த சமூகத்திற்கு வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
குடும்பக் கட்டுப்பாட்டு செய்து கொள்வது பெண்களின் கடமை என்ற நிலைமை மாற வேண்டும். ஆண்களும் அவசியம் கருதி, குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும்.
ஏன் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது மார்பக பரிசோதனையின் அவசியம் என்ன? மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்ன ? அதற்கான சிகிச்சை என்ன? என்பதையும் அது போன்று கர்ப்ப வாய் புற்றுநோய் குறித்தும் மிக விளக்கமாக தெளிவாக நூலில் பதிவு செய்துள்ளார் மருத்துவர்.
அவள் நலம் எனும் இந்நூலினை ஆண்கள் அவசியம் படிப்பதோடு அனைவரும் இந்நூலை வாசிப்பது அவசியம்.
நூலின் தகவல்கள் :
நூல் : “அவள் நலம்”
நூலாசிரியர் : மருத்துவர் அனுரத்னா
விலை : ரூபாய் 125
வெளியீடு : ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகம்
சென்னை-600083
தொடர்பு எண்: 9600398660.
நூல் அறிமுகம் எழுதியவர் :
MJ. பிரபாகர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.