நூல் அறிமுகம்: அவலங்கள் சிறுகதைத்தொகுப்பு – கருப்பு அன்பரசன்அவலங்கள்
சாத்திரி
எதிர் வெளியீடு
தான் உள்வாங்கிய தனக்குள் எந்த நேரமும் கொதி நிலையிலேயே இருக்கக்கூடிய கருத்துக்களை, சிந்தனைகளை வெளிப்படுத்தும் இடமெதுவாக இருந்தாலும், எவரிடமாக இருந்தாலும், எப்பொழுதாக இருந்தாலும் கொஞ்சமேனும் சமரசமின்றி தெளிவாக எடுத்துரைத்து, வருவதை எதிர் கொள்ளும் சக்தி மிகுந்த ஆளுமையாக எழுத்தாளர் சாத்திரி அவர்கள். ஆயுத எழுத்து என்கிற புதினத்தின் வழியாக அறிமுகமானவர் சாத்திரி. அவரின் எழுத்து சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பலரிடையே கலக்கத்தையும் கலகத்தையும் தொடர்ந்து நிகழ்த்தி வந்த வண்ணமே இருந்துகொண்டிருக்கிறது. கனவாகிப் போன தனி ஈழம்.. செயல்பட்ட குழுக்கள் பார்த்த மனிதர்கள்.. பழகிய உறவுகள்..
அவர்களின் பேரன்புகள் வஞ்சகங்கள் துரோகங்கள் இயலாமைகள் இப்படி எவர் குறித்தும், எது குறித்தும் இவரின் கதைகள் எழுத்துக்களாக வந்து விழுந்து நேர்கொண்டு பேசும் வாசிப்பவரின் உள்ளத்தினில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வடுக்களாக மாற்றிவிடும் அபாயகரமானது.. அப்படிப்பட்ட ஒரு கலகத்தை அவர் சொல்லும் மனிதர்களின் மீதான கழிவிரக்கத்தை; ஏமாற்றமதை மனவெளி எங்கிலும் நிரப்பிக்கொண்டு கனவுகளுக்காக ஏங்கித் தவித்த தூக்கம் இழந்தவர்களை, வார்த்தை ஜாலங்களால் ஆட்கொண்டு துரோகத்தின் உச்சாணியில் அமர்ந்த மனித வேட்டையாடியவர்களை சாத்திரியின் “அவலங்கள்” என்கிற சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கும் பொழுதில் நமக்குள் அறிமுகப்படுத்தி நடைபெற்ற நிஜங்களை அழுக்குகளை அடையாளம் காட்டுகிறார்.
சாத்திரியின் எழுத்துக்கள் தொடர்ந்து நிகழ்த்திவரும் கேள்விகள், கலகங்கள் குறித்தான ஒரு அவதானிப்பும் புரிதலும் எனக்கு இருந்தாலும், அவர் இந்தத் தொகுப்பில் கண்டெடுத்த.. பழகிய மனிதர்களில் இருந்து முழுவதுமாக வேறுபட்டு, பேரன்பு கொண்ட நெஞ்சங்களாக அடையாளம் காட்டப்பட்டிருக்கும் மனிதர்களின் நேசம் மிகுந்த காதல் உணர்வுகள்; ஆணின் பதின் பருவத்தில் அவனுக்குள் உணர்ச்சி வழியாக நின்ற காதல், பேயாட்டமாடி அவன் மனதை அலைக்கழிக்கும் பொழுது அவனை சரியான திசைவழியில் நல்வழிப்படுத்தி விடும் அக்காக்களின் அழுக்கற்ற ஈரம் ததும்பும் நெஞ்சங்களை, அவைகளின் வலிகளை உள்வாங்கி புனைவுகள் வழியாக கதைகளை கொடுத்திருக்கும் சாஸ்திரியை எனக்கு ரொம்பவும் பிடித்துப் போனது.
“அவலங்கள்” சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் கதைகளில் “சிமிக்கி” என்னை முழுவதுமாக ஆரத்தழுவிக் கொண்டது. சாவித்திரி-நாதன் இருவரின்  இருதயத்தில் முளைவிட்டு எழுந்த நூற்றாண்டுகால ஆலமரத்தின் உயிர் வேராக இருவரின் ரத்தநாளம் எங்கும் விரவிக்கிடக்கும் பிரியம் மிகுந்த அன்பும், புரிதலும்.. வாசிப்பவர்களின் நெஞ்சும் முழுவதிலும் வியாபித்து கிடப்பார்கள் இருவரும்.  புதுமணத் தம்பதிகளாக தங்களின் வாழ்வினை துவக்கியவர்கள்; பார்த்த முதல் திரைப்படத்தின் பாடலுக்குள் இளசுகளின் மத்தியில் ரசவாதத்தை நிகழ்த்திய “காதோடு தான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன்” என்கிற எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் மயங்கி தாமும் ஒரு ஜெமினி கணேசனாகவும் ஜெயந்தியாகவும் மாறிய சூழலில் ஜெயந்தி அணிந்திருந்த சிமிக்கி போன்று தன்னுடைய மனுசிக்கிம் சிமிக்கி வாங்கிக்கொடுக்க ஆசைப்பட்டு; வாங்கிக் கொடுத்து சாவித்திரியின் குரல் வழியாகவும் காதோடு தான் நான் பாடுவேன் பாடலை தன் காதுக்கு மட்டும் அவளை பாடச்சொல்லி கேட்டுக்கொள்கிறான் நாதன்.. இப்படியான அழகிய வடிவான காதலோடு தொடங்கிய அவர்களின் வாழ்க்கை இலங்கைக்குள் நடைபெற்று கூடிய அரசியல் போராட்டங்கள் ஊடாகவே ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் ஆகிறார்கள். இலங்கைக்குள் உள்நாட்டு யுத்தம் வெவ்வேறு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க தன்னுடைய வளர்ந்த திருமணமான பிள்ளைகளை பாதுகாப்பாக தாங்கள் சேமித்து வைத்திருக்கும் அத்தனை பொருளாதாரத்தையும் செலவழித்து பிரான்சுக்கும் லண்டனுக்கும் அனுப்பி வைக்கிறார்கள்..
பொருளாதாரத் தேவைக்காக தன் சாவித்திரிக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்த சிமிக்கியும் அடகுக் கடைக்கு போய், அங்கே இவர்கள் ஏமாற்றப்பட்டு காணாமல் போய்விடுகிறது.. சிமிக்கி அடகுக் கடைக்கு போன நாள் தொடங்கி வேறு எந்த நகையையும் போட மனதில்லாத சாவித்திரி தன் காதுகளில் வேப்பங்குச்சியை சொருகிக் கொண்டு வாழ்வை கடத்துகிறார்.. இலங்கைக்குள் இனி வாழ முடியாது என்ற உயிர் பயம் மேலோங்க நாதன் பிரான்ஸில் இருக்கும் மகனுடைய வீட்டிருக்கும்; சாவித்திரி இலண்டனில் இருக்கும் மகளின் வீட்டிற்கும் போய் தனித்தனியாக பிரிந்து வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.. மகள் தன் அம்மாவின் காதுகளுக்கு ஏதேனும் நகை வாங்கிக் கொடுத்தாலும் போட மறுக்கிறாள்.. அதேபோன்று பிரான்சில் நாதனுக்கு வாழ்வதற்கான தேவை அனைத்தும் இருந்தாலும் ஒரு வெறுமையான வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.. அவனுக்குள் தன் மனைவியின்  காதுகளின் ஓட்டையில் குத்தியிருக்கும் வேப்பங்குச்சி மட்டுமே இருக்கும்.. அவன் நினைவிற்குள் சுழன்று கொண்டே இருக்கிறது சிமிக்கி. அந்த நினைவே அவனை ஒவ்வொரு நாளும் தன் சாவித்திரியின் மேல் மிகப்பெரிய ஏக்கத்தை வளர்த்துக் கொண்டே இருக்கிறது. வெறுமையாக இருக்கும் தன் மனுசியின் காதுகளுக்கு ஜிமிக்கி அணிவிக்க ஆசைப்படுகிறான்.. மகனுக்கு தெரியாமல் பிரான்சிலேயே ஒரு கடையில் வேலைக்கு சேர்கிறான்.. வேலைக்கு சேர்ந்த உடனேயே தன்னுடைய மனைவிக்கு சிமிக்கி வாங்க நகைக்கடை ஒன்றில் அவனே வரைந்து கொடுத்து சிமிக்கி ஆர்டர் கொடுக்கிறான்..
இலங்கையில் தமிழ் புத்தகங்களுக்குத் தடையா?: எழுத்தாளர் குற்றச்சாட்டு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema ...
சாத்திரி
கடையில் சேர்ந்த சில மாதங்களில்  மருமகள் வழியாக மகனுக்கு தெரியவர “உங்களுக்கு நான் என்ன குறை வைத்தேன், ஏன்  வேலைக்கு சென்று என்னை அவமானப் படுத்துகிறீர்கள்” என்று கேள்வி கேட்க நாதன் சொந்த நாட்டிற்கே அவன் சாவித்திரியோடு திரும்ப வேண்டிய ஒரு அவல நிலைக்கு பெற்ற குழந்தைகளையே உள்ளாக்கப்படுகிறான்.. பிரான்சிலிருந்து இலங்கை கிளம்பிய விமானம் ஒன்றில் நாதனும் சாவித்திரியும் அருகருகே அமர்ந்து கண்களாலும் சத்தமில்லாத உதடுகளின் அசைவினில் தங்களின் பேரன்பை, ஒருவரோடு ஒருவருக்கான ஆதரவை பகிர்ந்து கொள்ள.. நாதன் தன்னுடைய மனுசிக்கு ஆசையாய் வாங்கி வைத்திருந்த சிமிக்கி தன்னுடைய சட்டைப் பையிலிருந்து எடுத்துக்கொடுக்க சாவித்திரியின் கண்களில் காதலும் பேரன்பும் கண்ணீரோடு கலந்து வழிந்தோட.. “காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன்” பாடல்  ஒலி அலையாக வந்து வாசிப்பவரின் காதுகளுக்குள் இதம் சேர்க்கிறது.. இனி சிமிக்கி பார்க்கும் போதெல்லாம் சாவித்திரியும் நாதனும் காதோடுதான் நான் பாடுவேன் பாடல் மட்டுமே நம் கவனத்திற்கு வரும்.. சபாஷ் சாத்திரி அவர்களே.
இந்திய அமைதிப் படையினால் இலங்கை மண்ணிற்குள் சீரழிக்கப்பட்ட எண்ணற்ற தமிழ்ப் பெண்களின் குறியீடாகவே ராணியக்கா.. தமிழ் பேசும் இளைஞர்கள் பலரை புலிகளின் பெயர் சொல்லி, இந்திய அமைதிப் படையினரால் வேட்டையாடப்பட்டு வரும் செயலின் பகுதியாக தன் தம்பியைத் தேடி வரும் பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிட, புலி என்று ராணி அக்காவை இழுத்துப் போய் தங்களின் உடல் பசிக்கு உணவாக்கி வீசி எறிந்து இருப்பார்கள்.. அகிம்சையின் வழி வந்த தேசத்திலிருந்து வந்த அமைதிப்படையின் கொடூரத்தை பதிவாக்கி இருக்கிறார் “ராணியக்கா” என்கிற சிறுகதையில்.
ஆதிக்க சாதியின் கொடூரத்தை மல்லிகா என்கிற சிறுகதையில் இலங்கை தமிழ் மண்ணில் நடைபெற்ற கொடூரத்தை கொடுமைகளை பேசியிருக்கிறார் பேசியதோடு மட்டுமல்லாமல் அங்கே இருக்கக்கூடிய இளைஞர்கள் குழு சாதிய ஏற்றத்தாழ்வு எதிராக கோயில் நுழைவு போராட்டத்தையும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் என்பதை பதிவாக்கி இருக்கிறார்.
மலரக்கா.. ஆண் சமூகத்தால் திட்டமிட்டே தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வரும் பெண்களின் குறியீடாக.. பொருளாதார பிரச்சனைகள் வரும்பொழுது வழியில்லாமல் வேறு திசை நோக்கி செல்லக்கூடிய பெண்கள் குறித்தான கதை.. பதின் பருவத்து ஆண்களுக்கு பொதுவாக ஆசையும் காமமும் இணைந்த ஓர் உணர்ச்சி தன் வயதுக்கு மீறிய பெண்களிடமிருந்து முதலில் ஆரம்பிக்கும்..
நூல் நோக்கு: அவலங்களின் வாழ்வு! | நூல் நோக்கு: அவலங்களின் வாழ்வு! - hindutamil.in
மலரக்கா மீதிருக்கும் ஆசையாலும் காமத்தாலும் அதை காதலாக உணர்ந்துகொண்டு அவளிடம் பேசிட முற்படும் பொழுது அதனை புரிந்து கொண்ட மலரக்கா அவனுக்கு புரியவைத்து நல்வழிப்படுத்தி தன்னை இனி ஒருநாளும் சந்திக்கக் கூடாது என்றும் ஒருவேளை அப்படி சந்திக்க நேர்ந்தால் பேசக்கூடாது என்றும் சத்தியம் வாங்கிக் கொள்வார்.. எதிர்பாராதவிதமாக மலர் அக்காவை அவன் பிரான்சின் கோவில் ஒன்றில் சந்திக்க நேரிடும் பொழுது அவனின் மன உணர்ச்சிகளை இயல்பாக பதிவாக்கி இருக்கிறார் ஆசிரியர் “அவனாக” இருந்து. எல்லா ஆண்களுக்கும் நிச்சயம் ஓர் மலரக்கா அறிமுகமாகி இருப்பார்கள் அவர்களுடைய பதின் பருவத்து நிலைதனிலே.
பீனாகொலாடா
கதையின் பெயர்.. மயக்கும் திரவமிது..
பெண் குழந்தைகளை பெற்றெடுத்த அமுதவல்லி குடும்பத்தில் சந்திக்கும் பிரச்சனைகள்.. தனித்து விடப்பட்ட பெரும் சோகம்.. சோகத்தினை தாங்கி குடும்ப வருவாய்க்காக வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம்.. அங்கே சென்ற பிறகு திட்டமிட்டு இடைத்தரகர்களால் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட கொடுமை..  அமுதவல்லியின் வாழ்வியலை தன் மனைவி கண்டெடுத்த ஒரு பச்சைநிற  டி ஷர்ட் வழியாக தமிழகம் வரையிலும் இக்கதையினை கொண்டு வந்திருப்பார் ஆசிரியர். ஆணின் நேர்மை மிகுந்த அன்பிற்காக ஏங்கித் தவிக்கும்  அமுதவல்லிகள்  இங்கு நிறையவே. பீனாகொலாட ஒரு கிளாஸ் எனக்கும் வேண்டும் சாத்திரி. கிடைக்க வாய்ப்பு இருக்குமா.?
உலக நாடுகள் முழுவதிலும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்கள் இலங்கைக்குள் தனி ஈழம் மலர்வது என்பது உறுதி என்ற கனவினில் புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய புலி தொடர்பாளர்களிடம் பல லட்சக்கணக்கான பண உதவிகளை நிதியாகவும் கடனாகவும் தருகிறார்கள் .. சிலரை வஞ்சகமாக ஏமாற்றியும் பணம் பறித்தும் புலிகளின் தொடர்பாளர்கள் தங்களின் வருவாயையும் வசதியான வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொள்கிறார்கள்.. அப்படி ஏமாந்த அமுதனின், அவன் குடும்பத்தின் சோகம்தனை “கடைசி அடி” என்கிற கதையில் பதிவாக்கி ஏமாற்றியவர்களை அம்பலப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.
இப்படியான கதைகளாக தொகுப்பு முழுவதும் போராளிகளும் புரட்சிக்காரர்கள் ஏமாற்றமும் துரோகங்களும் பிணைந்து கிடந்த செய்திகளை புனைவுகளில் கொண்டு வந்து “அவலங்கள்” என்கிற 12 கதைகளைக் கொண்டத் தொகுப்பாக கொடுத்திருக்கிறார் ஆசிரியர் சாத்திரி. நல்லதொரு முறையில் வெளியிட்டிருக்கிறார்கள் எதிர் வெளியீடு பதிப்பகம்.
அன்பும் வாழ்த்துக்களும்..
கருப்பு அன்பரசன்