ஆசிரியராக பணிபுரிவதால் பல குடும்பங்களில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும். பெண்களில் படித்த, படிக்காத பெண்கள், கூலி வேலைக்குச் செல்லும், மாதம் கை நிறைய சம்பாதிக்கும் பெண்கள், என ஒடுக்கப்படுவதில் எந்த வித்தியாசமும் இல்லை. சாதி, இனம், மதம், குடும்பம், சமூகம் என அனைத்தும் பெண்களை அடிமைப்படுத்துவதில் ஒன்றுக்கொன்று சற்றும் சளைத்ததில்லை.
பணிபுரிந்தாலும் தன் ஏடிஎம்மின் பின்நம்பர் தெரியாத ஆசிரியர், உறவினர் திருமணத்திற்கு செல்ல முடிக்கு டை அடிக்க பணம் கேட்டு சந்தேக வார்த்தைகளை கேட்டு குழந்தை போல் தேம்பி அழுத ஆசிரியர், விரும்பி மணந்தாலும் அவ்வப்போது வரும் சண்டைக்கு விவாகரத்து கேட்பவனுடன் இரு குழந்தைகளுடன் போராடும் தோழி என பெண்கள் எல்லாரும் ஆணாதிக்க குடும்ப அமைப்பின் victimsகளாக தான் வாழ்கின்றனர். இல்லை வாழ்வதாக சமூகத்திடம் கூறிக் கொள்கிறார்கள். அதை தானே இச்சமூகம் கெளரவம், கலாச்சாரம் என கூறி குடும்ப அமைப்பின் பெருமைகளாக பறைச்சாற்றுகிறது.
அவளோசை. பல அவள்களின் கதைதான். மணமான பெண்ணின் விருப்பங்கள், ஆசைகள், உணர்வுகள் கூட கணவனின் இசைவை எதிர்பார்க்க வேண்டுமே.
மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவளின் கதை..
ஏன் அங்கு வந்தாள்? என்ன ஆயிற்று? ஏன் தற்கொலைக்கு முயன்று கொண்டேயிருக்கிறாள்? வாழ்வதை விட மரணத்துடனான போராட்டத்தை ஏன் ரசிக்கிறாள்?
சிறு கடுஞ்சொல்லுக்கே பயந்து அழுகிறவள் 10 வருட மணவாழ்க்கை அவளை
வலிகளை மரத்துப்போகச் செய்யமளவு செய்திருந்தது. பெற்றோர் இல்லாத ஜெயந்தனை மணந்து கோவையிலிருந்து சென்னை வாழ் வந்த அவளின் கதை.
இவளின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுக்காத போது, அவள் பெற்றோர் கூறும் சமாதானங்கள், குடும்ப கெளரவம் என்று தன்னை அடக்கிக்கொண்டே பழகியவள் ஒரு கட்டத்தில் கணவனது கொடுமைகளை தன் பெற்றோரே நம்பாததும்,தான் வெறும் சதைதான் என்ற உணர்வும், சுதந்திரமாக சற்று மூச்சு விட அவள் எடுக்கும் முயற்சிகளும் சேர்ந்து கடைசியாக அவளை மரணத்தை நோக்கி தள்ளுகிறது.
பல அவள்களின் கதை.. விடை தெரியா விடுகதையாகதான் உள்ளது இந்தியப் பெண்களின் கதை.
அவளோசை
ஆசிரியர்: கவிதா செந்தில்குமார்
பதிப்பகம்: கலக்கல் ட்ரீம்ஸ்
Leave a Reply
View Comments