மண்ட்டோ அவர்களின் முக்கியமான 5 சிறுகதைகளும், சில துணுக்குகளும் கொண்ட தொகுப்பு தான் இந்த நூல்.
மண்ட்டோவின் படைப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது மக்கள் மதத்தின் பெயரால் பட்ட துன்பங்களில் மூலம் புனையப்பட்ட கதைகள் இவை. அவரின் படைப்புகளைப்பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்,
“என்னுடைய கதைகள் அசிங்கமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் வாழும் சமூகம் அசிங்கமாக இருக்கிறது என்று பொருள். அந்த உண்மையை நான் எனது கதைகள் மூலம் அம்பலப் படுத்தமட்டுமே செய்கிறேன்”
இந்த தொகுப்பின் முதல் கதை, “காலித்”. நீங்கள் ஒரு குழந்தைக்கு தந்தையாக இருந்தால், இந்த கதையின் முடிவில் நீங்கள் அழுவதை தடுக்கவே முடியாது. பிரியமான தன் மகன் இறந்து போவான் என்று தொடர்ந்து ஒரு குரல் மும்தாஜுக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது. குழந்தையின் பிறந்தநாள் நெருங்கும் சமயம் காலித்துக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. அதன் பின்பு என்ன நடந்தது என்பது தான் கதை. மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு சிறுகதை.
இந்த நூலின் தலைப்பாக அமைந்த “அவமானம்” என்ற சிறுகதை சுகந்தி என்ற பாலியல் தொழிலாளி பற்றிய கதை. சுகந்தியை மாது என்ற ஒருவன் பொருளாதார ரீதியாக சுரண்டிக் கொண்டு இருக்கிறான். இது தெரிந்தும் மாதுவுடனான தொடர்பை விடாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறாள் சுகந்தி. ஒரு நாள் இரவு சுகந்தி ஒரு வாடிக்கையாளரை சந்திக்க வேண்டும் என்று அழைத்து செல்லப்படுகிறாள். அங்கே அவள் அவமானப்படுத்தபட்டதாக நினைக்கும் சுகந்தி என்ன செய்தாள் என்பது தான் கதை.
இந்த தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளுமே உணர்வுப்பூர்வமான கதைகள் தான் என்றாலும், “திற!” என்ற கதை மனதை மிகவும் பாதிப்படைய செய்வது. இந்த கதையை வாசித்தவுடன் நான் இந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். அடுத்த 2 நாட்கள் கழித்து தான் மீண்டும் வாசிக்க எடுத்தேன். நம்மை தொடர்ந்து வாசிக்கவிடாமல் செய்யும் ஒரு வகையான கதை இது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரத்தில் ஒரு தந்தை தனது மகளை தொலைத்து விடுகிறார். பல நாட்களுக்கு பிறகு கிடைக்கும் மகளை அவர் மருத்துவமனையில் சந்திக்கும் அந்த இடம் மனதை கூர்மையான கத்தியை கொண்டு கீறுவது போன்ற ஒரு உணர்வை கொடுத்தது.
மிகவும் ஆழமான ஒரு சிறுகதை.
மதக்கலவரத்தில் இறந்து போகும் ஒரு மனிதனின் மனிதத்தன்மை பற்றிய கதை தான் “சஹாய்”
“சில்லிட்டுப் போன சதைப் பிண்டம்” என்ற கதையும் கிட்டத்தட்ட “திற” கதையை போலவே மதக்கலவரத்தை மையப்படுத்திய ஒரு கதை. ஆனால் இந்த கதையில் தன் தவறை உணரும் ஒருவன் அந்த தவறுக்கான தண்டனையையும் பெறுவது போல முடிவடையும். கலவரத்தை சாக்காக கொண்டு தான் தூக்கிக்கொண்டு வந்த ஒரு பெண் இறந்து போனதுபற்றி ஒரு சிங் சொல்லும் கதை தான் இது.
இந்த ஐந்து முக்கியமான கதைகளுடன் சில துணுக்குகளும் இந்த தொகுப்பில் உள்ளன. மிகவும் ஆழமான ஒரு சிறுகதை தொகுப்பு.
ஆசிரியர் குறிப்பு:
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள சாம்ராலா வட்டாரத்தின் பாப்ரோடி கிராமத்தில் சாதத் ஹசன் மண்ட்டோ 1912ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி பிறந்தார். காஷ்மீரி முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த இவர் அமிர்தசரசில் முஸ்லீம் உயர்நிலைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். இருப்பினும் கற்றலில் ஆர்வம் இல்லாத இவர் மெட்ரிக் தேர்வில் இரண்டு முறை தோல்வியுற்றார். உருதுமொழி இலக்கியத்தில் முத்திரைப்பதித்துள்ள மண்ட்டோ ஆரம்பத்தில் அம்மொழிப் பாடத்திலும் கூட தேர்வாகவில்லை. ஆங்கிலம் வழியாகப் புதினங்கள் வாசிப்பதிலேயே அதிக நாட்டம் கொண்டார்.
ஒருவழியாக பள்ளிப் படிப்பை முடித்த பின் இந்து சபா கல்லூரியில் சேர்ந்தார். இந்தக் கல்லூரி அப்போது விடுதலைப் போராட்ட வீரர்களின் களமாகத் திகழ்ந்தது. மண்ட்டோவும் இதனால் ஈர்க்கப்பட்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை மையமாகக் கொண்டு இவரது முதல் கதை உருவானது இதன் பிரதிபலிப்பேயாகும். 20 வயதில் தந்தையை இழந்த இவருக்குத் தாயார் உற்றதுணையாகவும் வழி காட்டியாகவும் விளங்கினார். 1933 ஆம்ஆண்டில் அப்துல் பாரி,அலிக் என்பவருடன் ஏற்பட்ட சந்திப்பு இவரது வாழ்க்கையில் இருப்பு முனையை ஏற்படுத்தியது. இவரின் புதின வாசிப்பு ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு ரஷ்ய, ஃபிரெஞ்சு மொழி இலக்கியங்களைப் படிக்கத்தூண்டினார் அலிக் இதன்படி விக்டர் ஹியூகோ,ஆஸ்கர் ஒயில்ட், ஆன்டன் செகாவ், மாக்சிம் கார்க்கி ஆகியோரின் நாவல்களால் கவரப்பட்டார். இதன் தொடர்ச்சியாக சில நாவல்களை உருது மொழியில் மொழி பெயர்க்கவும் செய்தார். இது இலக்கிய வட்டாரத்தில் மண்ட்டோவுக்கு செல்வாக்கை உருவாக்கியது. அவ்வப்போது எழுதிவந்த சிறுகதைகளின் முதல் தொகுப்பு அவரது 24ஆம் வயதில் 1936ஆம் ஆண்டு வெளிவந்தது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் இணைக்கும் மையமாக விளங்கிய இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் 1936ஆம் ஆண்டு இணைந்தார். இந்தி திரைப்படத்துறையில் சில ஆண்டுகள் பணிபுரிந்து கதை -வசனம் எழுதிப் புகழ்பெற்றார். பின்னர் 1941 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியின் மும்பை நிலையத்தில் பணியில் சேர்ந்து சிறந்த நாடகங்களைத் தயாரித்தளித்தார்.
1939 ஆம் ஆண்டு சஃபியாவைத் திருமணம் செய்து கொண்டார். நிஹாத், நஷாத், நஸ்ரத் என மூன்று மகள்களுக்குத் தந்தையானார். சமூக அக்கறையுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட பல படைப்புகளைத் தந்த மண்ட்டோ சமூகத்தில் விளிம்பு நிலை மாந்தர்களாகக் கருதப்பட்ட பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை, அவர்தம் உளவியலை மையமாகக் கொண்டு பல கதைகளை எழுதியிருக்கிறார்.
1947 ஆம் ஆண்டு சுதந்திரத்தின்போது இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட வன்முறைகள் ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு, வாழப்பிறந்த மனிதர்களுக்கு மதம் பிடித்ததால் செத்து மடிந்த சோகங்களுக்கு எதிராக இலக்கியங்கள் படைத்தவர் மண்ட்டோ. இவரது ‘திற’ என்கிற கதையும் அதை வைத்து தயாரிக்கப்பட்ட குறும்படமும் பிரபலமானவை.
மூதாதையர்களின் குடும்பத்தினர் லாகூரில் குடியேறியதால் கனத்த இதயத்தோடு மண்ட்டோ குடும்பத்தினரும் பாகிஸ்தானில் குடியேறினர். ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியை தன்குணர்ந்தவர் அவர். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் அதனை அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதை “அங்கிள் சாமுக்குக் கடிதங்கள்” என்ற உரைநடை இலக்கியத்தின் மூலம் அம்பலப்படுத்தியவர்.
லாகூரில் வாழ்ந்த போது பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக் கொடுக்கவும் வசதியின்றி வாழ்ந்தார். அப்போது அமெரிக்கத்தூதரகத்தினர் அவரை அணுகி தாங்கள் நடத்துகிற உருதுமொழி பத்திரிகைக்கு ஒரு படைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர், வழக்கமாக படைப்புக்கு 20 ரூபாய் சன்மானம் கிடைத்துவந்த நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு காரணமாக 200 ரூபாய் கேட்டால் வந்தவர் திரும்பி விடுவார் என்றெண்ணி அதே தொகையைக் கேட்டார். வந்தவரோ 500 ரூபாய் தரவும் தயாரானார். மீண்டும் உஷாரான மண்ட்டோ எனது படைப்பில் ஒரு வார்த்தையையும் குறைக்காமல் வெளியிடுவதானால் தருகிறேன் என்றார். இந்த நிபந்தனை தமக்கு ஆபத்தானது என்றெண்ணிய அதிகாரி வாய்பேசாமல் திரும்பிவிட்டார். வறுமையிலும் நேர்மையாக ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக நின்று நிலைத்தவர் மண்ட்டோ என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
அசோக்குமார், ஷியாம், நர்கீஸ், நூர்ஜஹான் போன்ற இந்தித் திரையுலக நடிகர்கள், நடிகையரின் வாழ்க்கைச் சித்திரங்களை நினைவோடைகளாக நன்றியுடன் பதிவுசெய்திருப்பவர் மண்ட்டோ.
“படைப்பாளியின் உணர்வுகள் புண்படுகிறபோது அவன் பேனாவைத் திறக்கிறான்” என ஒருவழக்கின் போது நீதிமன்றத்தில் முழங்கிய மண்ட்டோ 22 சிறுகதைத் தொகுப்புகள், ஒருநாவல், 5 வானொலி நாடகத் தொகுப்புகள், 3 கட்டுரைத் தொகுப்புகள் ஒரு சொற்சித்திரம் ஆகியவற்றைத் தனது வாரிசுகளாக விட்டு விட்டு 1955 ஆண்டு ஜனவரி 18ம் நாள் 42 வது வயதில் லாகூரில் மரணமடைந்தார்.
நூல்: அவமானம்
ஆசிரியர்: சதாத் ஹாசன் மண்ட்டோ, தமிழில் ராமாநுஜம்
பக்கங்கள்: 96
பதிப்பு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க லிங்கை கிளிக் செய்க: Thamizhbooks.com