அவன்… – கவிதை
அன்று அதே சாயலில் ஒரு மனிதன் அப்படியே கடந்துப் போனான்.
திரும்பவும் வந்தான், திரும்பவும் போனான்.
எனக்குப் புரியவேயில்லை.
அவன் எதற்கோ வருகிறான் , எதற்கோ
போகிறான் ….. என ஒன்று மட்டும் புரிந்தது.
அது எதற்காக என என்னால் அறிய முடியவில்லை, புன்னகை படர்ந்த
முகம், சோக ரேகை அடர்ந்த மனம்.
எதுவுமில்லாமல் வந்து வந்து போவான்.
ருசியா? பசியா? சுவையா?
என அறியாத மனத்தோடு அவனைப் பார்த்து நின்றேன்.
ஒவ்வொரு மனிதனையும்
பார்ப்பேன். ஒவ்வொரு மனிதனும்
ஒவ்வொரு விதமாய் சஞ்சரிப்பார்கள்.
ஏதோ
தோன்றிய நாளிலிருந்து
விடுதலை பெறும் நாள்
வரை …..
மனிதர்கள் இப்படித்தான்,
மனிதர்களே
ஒரு கலைக்களஞ்சியம் தான்,
ஏனோ,
மனிதர்கள் மட்டும்
அனைவரும் ஒரே
மாதிரி இருப்பதில்லை,
காலையில்
சிரிப்புடன் ….
தூரமா?…எனக் கேட்ட
கோவிந்தண்ணன் கூட சிரிக்க மறந்து விடுகிறான்.
ஏண்ணே, ஏன் இப்படி …. என கேட்டால்,
சவத்து எளவுல , அவன் எடுத்துற மாட்டானா?
என்பான்.
கொஞ்ச நேரம் கழித்துக் கேட்டால்,
கொஞ்சம் கனிக்க போட்டா,
எல்லாம் சரியாகி விடும்
என்பான்…..
கொஞ்சம் நேரம்
கழித்துப் பார்த்தால்…
இராகம் போட்டுப் பாடுவான்.
பல தத்துவ நறுக்குகள்
வந்து விடும்.
சிரிப்பாய் உதிர்க்கும் மனம்.
அடுத்த நாள்,
அதே கோவிந்தண்ணன்
தம்பி….
தூரமா? எனும் கேள்வியோடு….
மனம் சொல்லும்
“சாயங்காலம்
சரி கோளு தான்….”என்கும்.
இப்படித்தான் ஒவ்வொரு வாழ்வும்….
அடர்ந்த வன குதிருக்குள்
எறும்பரிக்கும்
செம்பக உடல்,
எத்தனை
அழகான பறவை,
எத்தனை
தடவைகள்
கூவியிருக்கும்…?
இப்படிக் கேட்பாரற்று கிடக்கின்றதே,
என மனம் சொல்லும்..
இப்படித்தான்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொருவர்
சடலமாய்…..
எழுதியவர் :
இராஜேஷ் சங்கரப்பிள்ளை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

