ஒரு இரவில் காட்டில் நடக்கும் காட்சிகளை படமெடுத்துக் காட்டி இருக்கிறது இந்த குறுநாவல். தன்னந்தனியே ஒரு கிழவன் இரவில் அந்த காட்டில் செல்லும் போது நடக்கின்ற நிகழ்வுகளை பதை பதைப்புடன் நமக்கு காட்சிமைப்படுத்தி இருக்கின்றார் எத்திராஜுலு.
பன்றிகளோடும் தன் பெயரனோடும் காட்டில் வசிக்கிறான் ஒரு கிழவன். அன்றைக்கு என்னவோ அந்த கிழவனுக்கு மிகச் சோர்வு. பன்றிகளை மேய்க்கும் பொறுப்பினை பெயரனிடம் கொடுக்கிறார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பன்றி அன்றைய பொழுது திரும்பவில்லை. அதனைத் தேடி கிழவன் காட்டிற்குள் புறப்பட்டு செல்கிறான். மொத்தம் உள்ள 20 பன்றியில் ஒரு பன்றி இங்கே குட்டிகளை ஈன்று கிடக்கிறது. மற்றொன்றைத் தேடி கையில் ஒற்றை ஆயுதமான ஈட்டியை மட்டும் வைத்துக் கொண்டு மொந்தக்கள்ளை குடித்து விட்டு காட்டை நோக்கி அவன் செல்கிறான். வயதுக்கு மீறிய வேகத்தோடு எப்படியும் அதனை கண்டறிந்து விட வேண்டும் என்று குறைவாக நடையைக்கட்டுகிறான்.
குட்டிகளை ஈன்ற பன்றிகள் வெகு உக்கரமாக இருக்கும். தன்னுடைய எஜமானராக இருந்தாலும் குட்டிகளைக் காண அணுக விடாது. இந்நேரம் குட்டியை ஈன்றிருக்க வேண்டுமே ஒரு மறைவான இடத்தில் அது இருக்க வேண்டுமே என்ற யோசனையுடன் கரடு முரடான அந்த காட்டுப்பாதையில் அதே சிந்தனையோடு விரைவாக நடையை கட்டுகிறான் கிழவன்.
அப்படி அவன் போகும்போது பழைய கால நினைவுகள் மனதில் வந்து அசை போடுகின்றன. அப்படித்தான் ஒரு மழைக்காலத்தில் காணாமல் போன எருமைமாட்டை தனியாக மீட்ட கதையினை எண்ணி தனக்குள் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்கிறான். இப்பொழுது அவனுக்கு பசி அதிகமாக இருக்கிறது. அங்கே காட்டில் ஒரு முயலை வேட்டையாடி சுட்டுத் தின்று கொண்டு மிகுந்த தன்னம்பிக்கையோடு பன்றியை தேடி இன்னும் இன்னும் அதிகமாக விரைகிறான்.
ஒரு சிட்டுக்குருவி குரல் எழுப்பி அங்கும் இங்கும் அசைந்து அவன் முன்னே சென்று கொண்டிருக்கிறது. அது அவனுக்கு ஏதோ தகவல்களை தருவதைப் போன்று தோன்றுகிறது.
நடந்து நடந்து போனவன் ஒரு முடிவில் ஈன்ற குட்டிகளோடு தாய்ப்பன்றியையும் காண்கிறான். குட்டிகளை காணும் ஆவலில் புதருக்குள் ஊர்ந்து ஊர்ந்து சென்று அதனைக் காண்கிறான் இதனை கண்ணுற்ற பன்றி தன் எஜமானர் என்று தெரிந்தும் தன்னிலை இழந்து அவனை அதிகமாக தாக்குகிறது. கை, கால் அனைத்தையும் கடித்து வைக்கிறது. கிடைத்த சிறு சந்தர்ப்பத்தில் தப்பித்து பக்கத்தில் இருக்கின்ற பூவரச மரம் மீது ஏறிக் கொள்கின்றான்.
இப்படி அடிபட்டு ரத்தக்கறையுடன் இருந்தும் எப்படியாவது தாய் பன்றியையும் குட்டிகளையும் காக்க வேண்டும் என்று எண்ணி மரத்தின் மேலேயே இருந்து காவல் காக்கிறான். இவனுடைய ரத்த வாடைக்கும் ஈன்ற பன்றியின் இரத்த வாடைக்கும் நரிகள் அதனை உண்ண நெருங்கி வருகிறது. அப்போது கிழவன் அடையும் பதட்டமும், தாய்ப் பன்றியே குட்டிகளை இரை தேட வருகின்ற நரிகளை அந்த இடத்தில் பார் இந்த இடத்தில் பார் என்றும் அப்படித் தாக்கு இப்படித் தாக்கு என்று சொல்ல வேண்டும் என்று எண்ணி காக்க பாடுபடுகிறான். கையில் இருப்பதோ ஒரே ஒரு ஈட்டி மட்டுமே. இறுதியில் என்ன நடக்கிறது என்பதை மீதி கதை.
வேட்டையாடுதல் மற்றும் பன்றிகளை மேய்த்தல் இது மட்டுமே தொழிலாக கொண்ட ஒரு கிழவன், அந்தக் காடு, ஒரு பேரன் இவற்றைச் சுற்றி நகரும் கதை.
கிழவன் மட்டுமே முக்கியமான கதாபாத்திரம். காடுகளினூடே பயணிக்கின்ற அவன் சில உயிரினங்களைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து எவ்வாறு மாறுகின்றான் என்பதைக் காட்டுகிறது. உணவுச் சங்கிலி எவ்வாறு காட்டுடன் தம்மை தொடர்புபடுத்திக் கொண்டிருக்கின்றது என்பதனை அவனும் உணர்ந்து நமக்கும் உணர்த்துவதே இந்த கதையினுடைய சிறப்பம்சமாகும். அதிக வசனங்கள் எதுவுமின்றி ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு மிகவும் விறுவிறுப்பாக கதை நகருதல் சிறப்பு. சிறப்பாக மொழி பெயர்த்த எத்திராஜுலு அவர்களுக்கு பாராட்டுகள்.
அவன் காட்டை வென்றான்…
கேசவரெட்டி | தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு
நேஷனல் புக் ட்ரஸ்ட்வெளியீடு
பக்கங்கள் 88
விலை ரூ. 105.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்