Avasarapadathe amaravathi Poem By Pangai thamizhan அவசரப் படாதே அமராவதி - பாங்கைத் தமிழன்




அடடா தமிழா கேள்
ஆதியினத் தமிழா கேள்
இயற்கை வாழ்வு கண்ட
ஈரமுள்ள தமிழா கேள்!

ஐயா தமிழ் மறவா
ஆனந்தம் உன்வாழ்வு
ஔவை மகள் பெயரன் உன்
அன்புள்ளம் நல் வாழ்வு!

வீரமிகுக் காதலிலே
விளைந்து வந்த தமிழ் மறவா
சேர சோழ பாண்டியரின்
சிறந்த புகழ்க் குடிமகனே!

கம்பனவன் புகழ்ப் பெயராம்
கனித் தமிழைத் தந்தவனாம்!
அம்பிகா பதி என்னும்
அன்புமகன் இவன் மகனே!

அரசன் மகள் மேலே
அடைந்தானே காதலின்பம்
அரசன் அவன் தந்ததுதான்
ஆணவத்தின் முதல் துன்பம்

அன்பு மகள் விருப்பம்
ஆனாலும் ஆண்டை எண்ணம்!
கம்பனிடம் சொல்லி வைத்தான்
கடுமையான போட்டி ஒன்றை!

சிற்றின்பம் கலவாத
சீர் நூறு பாடல்களை
கம்பன் மகன் பாடி விட்டால்
கன்னி அவன் உரிமை என்றான்!

போட்டிப் பாடலிலே
புகழ் மாலை இறைவனுக்கு!
முதல் பாடல் கணக்கில்லை;
அடுத்தடுத்தப் பாடலையே
அலையலையாய் பாடுகையில்;

தொண்ணூற் றொன்பதைத் தான்
தொட்டு அவன் பாடுகையில்;
கடவுள் வாழ்த்தோடு
கணக்குநூறு என நினைத்து;

காதல் முகம் காட்ட
காதலியாம் அமராவே;
கடவுள் தனை மறந்தான்
கம்பன் மகன் அம்பிகாவும்!

காமம் சொட்டியது கடைசிப் பாட்டினிலே;
அழகு வெளிச் சத்தில்
அறிவதுவும் மயங்கியதே;
அவன் காதல் பாட்டினிலே!

காதல் பிரித் திடவே
கடுகளவுக் காரணமாம்
ஆணவக் கொலை செய்தான்
அரசன் குலோத்துங்கன்!

அரசன் ஆரம்பித்த
ஆணவக் கொலை இன்றும்
ஒரு நாள் தவறாமல்
ஊரெல்லாம் வளர்கிறதே!

தமிழர் சாதி யிலே
தாழ்ந்த இனம் ஏதுமில்லை;
காதல் தூய்மை எனில்
காதலிப்போர் கள்வர் இல்லை!

உண்மைக் காதல் என்றால்
உயிர் வாழும் எந்நாளும்
அதற்குச் சாட்சி தானே
அம்பி அமரா காதல்!

அவசரம் வேண்டாமே
அமராவதி இனமே;
உள்ளத் தூய்மையினால்
உண்மையுடன் காதல் கொள்வீர்;
அரக்கர் ஆணவத்தை அன்பாலே வெல்வீரே!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *