“அவிழ்ந்து வீழ்ந்த கொள்கைப் பதாகைகள்” கவிதை
***********************************************
கடவுளின் பெயரால்
உறுதிமொழி எடுத்தவர்கள்
கட்சித் தாவலில்…..
கல்லான கடவுள் எப்படி
காண்பான் என்று
கண்ணியவான்களுக்குத் தெரியும்!
உளமாற உறுதி கூறியவர்கள்
அதிகாரத்தின் வாசனைஅடித்ததும்
அவசரமாய் அவிழ்ந்து வீழ்ந்தது
அவர்களின் கொள்கைப் பதாகைகள்…..
மக்களின் விரல்களில் மை தடவி
மாற்றத்தைக் காண வந்தவர்கள்
மக்களின் முகங்களில் மை பூசி
குளிர்சாதன அறைகளின்
ரகசிய மேசைகளில்
விலை பேசப்படும் வெறும்
காகிதங்களாக மாறிப் போயினர்!
ஐந்து பேர் போனால் என்ன
ஐம்பதுபேர் வந்தால் என்ன?
இங்கு கொள்கை என்பது
பருவ காலத்திற்கு ஏற்ப
நிறம் மாறும் ஆடை தானே!
சாட்டையைச் சுழற்றுகிறான்
பண முதலைகளின் பாகன்!
விற்பனைக்கு வரிசையில் நிற்கின்றன
மக்களாட்சி தந்த மகுடங்கள்!
குதிரை பேரத்தின் குளம்படிகள்
ஜனநாயகத்தின் நெஞ்சின் மீது
அசுர வேகத்தில் ஆழமாய்
மிதித்து ஓடுகின்றன…..
நாற்காலிகளின் கால்களைத் தடவி
அதிகாரப் பாதங்களை முத்தமிட
வரிந்து கட்டி நிற்கிறது சுயநலம்!
இது மாற்றத்திற்கான நகர்வா?
இல்லை…..
மண்ணின் குரலை விற்றுவிட்டு
மறுபடியும் சிம்மாசனம்
அமரத் துடிக்கும்
அரசியல் வியாபாரமா?
இடம் மாறும் பறவைகளுக்கு
மரங்களின் மீது
என்ன விசுவாசம் இருக்க முடியும்?
இன்று ஒரு கிளையின் கனி
நாளை வேறொரு மரத்தின் நிழல்
இவர்கள் தேடுவது
விடியலை அல்ல….
தங்கள் சிம்மாசனத்தை
அலங்கரிக்கும்
புதிய பட்டுத் துணிகளை!
விலை போகும் மனிதர்களே!
ஒன்றை மட்டும் நீங்கள்
நினைவில் வையுங்கள்
காலத்தின் தராசு
எப்போதும் அதிகாரத்தின் பக்கம் சாய்வதில்லை….
துரோகங்களைச் சுமந்து நிற்கும்
நாற்காலிகளின் கால்கள்
மக்களின் ஒற்றைப் பார்வையில்
தூள் தூளாகப் போகும் நாள்
வெகு தொலைவில் இல்லை….
மாயவலையில் சிக்கிய மான்கள்
வேடனின் கையால்
மாய்வது திண்ணமே…..
***********************************************
📚 எழுதியவர் :
✍🏻 கு. மணி
த/பெ: குருசாமி
தெற்குப்புதுத்தெரு
சக்கம்பட்டி- 625512
ஆண்டிபட்டி வட்டம்
தேனி மாவட்டம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

