Avusaari Shortstory By Manimathavi அவுசாரி சிறுகதை - மணிமாதவி

அவுசாரி சிறுகதை – மணிமாதவி




சாந்தி…சாந்தி…

ம்ம்ம்..

சாந்தி….கொஞ்சம் எந்திரி…

ம்ம்ம்…

சாந்தி….எழுந்துரு…

என்னய்யா‌ ….இந்நேரம் ஏன் எழுப்புற…

பேசனும்…

இப்பவா…என்னாச்சு மாமா….எதும் பிரச்சனையா….ஏதும் வேணுமா…

இல்ல…கொஞ்சம் பேசணும்..

இந்நேரம் என்னத்தய்யா பேச போற….காலைல பேசலாம் போய் படு…

இல்ல இப்ப பேசனும்…

என்னய்யா ரோதனையா போச்சு உன்னோட….எத பத்தி பேசனும் சாமகாட்டுல…

இல்ல இன்னைக்கு ஊருக்கு போனத பத்தி ….

ஆமாயா….ஒரு மாசமா பழனி பழனின்னு பசப்பிட்டே திரிஞ்சதுக்கு இன்னைக்கு போயாந்தாச்சு ….ஒத்த மொட்டை வழிச்சு வர்றததுக்குள்ள போதும் போதும்னு ஆயாச்சு…ஆனாலும் உம்ம வீட்டாளுகள இழுத்து போய் வாரதெல்லாம் மலையை மயித்தகட்டி இழுக்குற காரியம்யா.‌….யாத்தே யாத்தே…மனுசருக்கு அத்தாவுத்தியா வந்துடும் இதுகள இழுத்து போயி வரமுன்ன …..வெள்ளன கெளம்பி செத்தமுன்ன தான் வந்து சேர்ந்தோம்….செத்தம் குறுக்க சரிப்போம்னு பார்த்தா சாந்தி சாந்தினு வந்து நிக்க….அத்த பத்தி என்னத்த பேச சொல்ற…

இல்ல காருல….

நான்தேன் உம்மட்ட படிச்சு படிச்சு சொன்னேம்ல …உங்காத்தாகாரி வரல வரலம்பா கார் வந்ததும் மொதெ அவதேன் ஏறுவா….நம்ம வீட்டு சனத்துக்கு டாடா சுமோ போதாதுயா …..வேனுக்கு சொல்லும்னா கேட்டியாயா…..சிறுக்கி பேச்ச கேட்க நாதியில்லாம….ஒம்பது சனம் போறதுல பத்தொன்பத நெறச்சா …..பரிதவிச்சு வந்து போச்சுயா….

இல்ல கரிக்கோலு….

உம்ம அண்ணே மவன்தான…‌ஏம்யா உங்காத்தாகாரிக்கு மசுரோட மண்டைக்குள்ள ஏதுமிருக்கா….அவன என்ன சின்ன நொல்லன்னு நெனச்சுபுட்டாளா….இளவட்டமாட்டம் இருக்கான் அவன என் மடில தள்ளிட்டா …எம்பொசமும் போச்சு ….ஒத்தபக்க பிட்டமும் போச்சு…

இல்ல கார்ல வச்சு யாருக்கும் தெரியாம போன் பேசுனியாமே..

யார் சொன்னா….நீ என்னத்த கண்ட……

இல்ல கரிக்கோல் தான்..மதுரை நெருங்கையில …எல்லாம் அசந்த நேரம்… யாருட்ட …என்ன பேசுன…

பேசுனேன் சொன்னவன் ..என்ன பேசுனுன்னு சொல்லலியோ

நீ தான் திருட்டு தனமா குசு குசுன்னு பேசுனியாம்ல ….அவன் வந்து சொல்லயிலே எனக்கு அசிங்கமா போச்சு.‌‌

போன் பேசுனதுல உமக்கென்னயா அசிங்கம் …

ஆத்தா அப்பனெல்லாம் திருட்டு தனமா அவுசாரிதேன் பேசுவா …‌நான் பெத்தவன் நீ சரியா இருந்தா சிறுக்கி அவுசாரிதனம் பண்ணுவாலான்னு கேட்டுபுட்டாவ…அண்ணனும் கொஞ்சம் வெசனபட்டான்….

என்னத்துக்கு…

நான் கொடுக்குற இடத்துலதான நீ இம்புட்டு ஆடுற….யார் என்னன்னு விசாரின்னு….

நீ என்னத்த சொன்ன…

எம்பொண்டாட்டி நான் கேட்காமலே என்ட எல்லாம் சொல்லிடுவான்னு மெச்சி வந்தேன்….இம்புட்டு நேரம் நீயும் சொல்லுவ பாத்தேன்….நீ தூங்கிபுட்ட அதேன் எழுப்புனேன்…..யாரு புள்ள….

இப்ப நான் யாருன்னு சொன்னாதான் நம்புவியா

இல்ல அவுகட்ட நான் ஒன்ன சரியா வச்சுருக்கேனு சொல்லனும்ல…

ஓ….நான் போன காட்டி அத நீ அவுகட்ட சொல்லிதேன்….நான் அவுசாரி இல்லன்னு நிருபிப்பியோ….

அப்படியில்லடி….ஒன்ன தப்பா பேசிட கூடாதுல….

அவுக பேசுனதோட ‌நீ என்ட்ட இப்ப கேட்குறதுதாம்யா நோவுது…

ஏய் .. யார்ட்ட பேசுனனு காட்டுறதுல உனக்கு என்ன ஆகிட போவுது ….உம்மேல தப்பில்லனா ஏன்டி பயப்படுற…

நான் பயப்பட்டேன்னே வச்சுக்கோயா…..இந்த போன்காட்டுல பாத்துதேன் ‌நீ என்ன நம்புவனா…..அப்டி ஒரு நம்பிக்கை தேவையேயில்ல…நான் அவுசாரியாவே இருந்துட்டு போறேன்யா…

ஏய்….என்னடி திமிரா….

ஆமான்னே வச்சுக்கோ…

எக்கா ….எக்கா ….அம்சவேணிக்கா….

ஏய் என்னடி …இம்புட்டு வெள்ளன வந்துருக்கவ….என்னடி ஆச்சு …ரவ்வுக்கு தூங்குனியா இல்லையா…கண்ணுலாம் வீங்கி கெடக்கு….உம்புருசனோட எதும் தகராறா….அவன் வெள்ளனவே வெளிய போனான்….

இல்லக்கா…. வந்துசேரவே ராவாகிபோச்சு…. எல்லாம் முடிச்சு உடம்பு நோவு சரியா தூக்கமில்ல….

என்னத்தயோடி …‌சரி இப்ப என்னத்துக்கு வந்தவ ….

சீட்டு எடுக்க கேட்டேனே ….

ஆமா ….நேத்து போனுலயும் இத தானடி சொன்ன….இந்த முறை எடுத்துக்கோன்னு சொல்லிபுட்டேனே …இன்னும் பத்து நா கெடக்கு ..‌அதுக்குள்ள ஏண்டி விடியமுன்ன வந்து நிக்க….

இல்லக்கா அது வேணாம்னு…..சொல்ல வந்தேன்….நான் கடைசி சீட்டே தட்டிகுறேன்கா…

அடி பாதகசத்தி….அரை நாளுக்குள்ள அப்படி என்னடி உனக்கு வந்துச்சு….நேத்துதேன் ….இந்த சீட்டு எடுத்தே தீருவேன்னு நின்ன இன்னைக்கு வேணாம்ங்க‌…கோட்டி கீட்டி புடிச்சுருக்கா…

இல்லக்கா ….எனக்கு வேண்டியவுகளுக்கு வண்டி எடுக்க கைகடிச்சுதுன்னு நேத்து பேசிட்டுருந்தாவ….சரிி நான் வீட்ல சிறுபாட்டுல போட்ட சீட்டுதான இது ….அவுகளுக்கு உதவ கொடுக்க நெனச்சேன்….

சரி இப்ப என்னாச்சு ‌…..அவுக வண்டி எடுக்கலயா..

இல்ல….அவுக செத்துட்டாவ……

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *