ஆயிஷா இரா.நடராசன் - கழுதை வண்டி (Ayeesha Era.Natarajan - Kazhuthai Vandi)

இளையோர் இலக்கிய இமயம் கழுதை வண்டி!

 

முதலில்“ கழுதை வண்டி ‘ – தலைப்பு என்னை வெகுவாக ஈர்த்தது. கதையா?…. கட்டுரையா?… என்ன மாதிரி படைப்பு என்று யோசித்து — யோசித்து…..

புத்தகம் கிடைத்து படித்ததும் – கதைகளின் வளமையான சொற்களிடையே மனம் சுருண்டு- கதைகளின் ஈர்ப்பில் இருந்து விடுபடமுடியாமல் கழுதை வண்டியுடன் ஊர் ஊராய் மெல்ல … மெல்ல… பயனித்து…. இறுதியில் இமயத்தின் உச்சியில் ஏறி நின்று தனியன்… தனியன்… என்றழைத்த என் குரலுக்கு……

(‘கழுதை வண்டி’) –           இதை வாசிப்பவர்கள்

                                                      சாதாரணமாணவர்கள்ஆனால்

                                                     இதில் வசிப்பவர்கள்

                                                     சரித்திரமாணவர்கள் ‘-

என்ற தனியனின் பதிலை கேட்டதும் – பல கோடி சிறகுகள் முளைத்துசர்ர்… என்று கழுதை வண்டி அருகே இறங்கினேன். ஆயிஷா இரா .நடராசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .

எல்லோர்க்குள்ளும் ஒரு சரித்திரம் புதைந்து கிடக்கிறது சரித்திரத்தை உருவாக்குவதிலும் – புரட்டிப்போடுவதிலும்- நிலைப்படுத்துவதிலும் – முக்கிய பங்காற்றுவது ‘நாக்கு’ காலம் காலமாக வாய்மொழிக்கதைகள் வழியாக சரித்திரம் வாழ்ந்து கொண்டிருப்பதை தனியன் வாயிலாக நிரூபித்த – பன்முக, ஆளுமைத் திறன்மிக்க படைப்பாளியின் திறன் ரசனைக்குரியது. நாம் ஆயிஷா இரா. நடராசனின் காலத்தில் வாழ்கிறோம் என்பதே சிறப்பு என பறைசாற்ற இந்த ஒரு நூல் போதும்.

கதை வண்டி பயணிக்கும் பாதை நெடுகிலும் எழுத்தாளரின் தனி முத்திரைகளாக – வரலாற்று அறிவின் எச்சங்களும் , வாழ்வியல் நியதிகள்- பொது நல நோக்குகள் அறிவியல் ஆர்வத்தின் படிமங்கள் – கற்பனை நயம் – என கதை முழுவதும் அழகு மயிலாய் தோகை விரிக்கிறது ஆசிரியரின் வளமான தமிழ்!.

கதைகளத்தில் தனி ஆளாய் நின்று வாய்வழிகதைகளால் சிக்ஸர்களாக அடித்து …. தூக்கி… அதகளம் பண்ணியது தனியனா? தோனியா?…. கோலியா?

தனிமை – வலி – ஏக்கம், பசி, ரணம் – இவற்றுடன் கரம்கோர்த்து தான் தன் பயணத்தை இலகுவாக்கும் மாயாஜாலக்காரன் அவன் நெஞ்சுக்குள் சோகம் சுருண்டாலும் – அவன் சொல்லும் கதையின் சொற்களுக்குள் சுகத்தை தூக்கி வைத்த ஆசிரியரின் சூட்சுமத்தை பாராட்டுவதில் நான் வள்ளல்! வாழ்க்கை

கற்பித்த அனுபவத்தினால் திடமும் – துணிவும். அறிவில் தெளிவு- சிந்தனை திறன் – அதையும் தாண்டி- சமயோசித புத்தியால் மக்களை ஈர்த்தல் – என பன்முகத்தன்மையால் – உச்சகட்ட திருப்பமாக – தனியனுக்கு தலைமை மகுடம் சூட்டியவரின் சாதுர்ரியம் சாணக்கியத்தனத்துக்கு சான்றானது இனிய வரலாறு தானே! ,இவைகளை பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கவே முடியாது . ஆயிஷா சார் கதையை வாசித்ததும் – கதை ஏன் எவர்க்கும் மறப்பதில்லை? என்ற கேள்வி இஸ்ரோ ராக்கெட்டாய் சீறீ- என் நினைவுகிடங்கில் விடைத்தேடி பாய்ந்தது…. பாய்ந்தது கதை கேட்பதில் ஆர்வம் – சொல்பவர்களின் குரல் – நடிப்பு- பாவனைகள் – மொழி – இவைகள் நம்மை ஈர்ப்பதால் கதைகள் மறப்பதில்லை. ஞாபகம் மனதில் தோன்றி மனதோடு மட்டும் முடிவதல்ல – நினைவாற்றல் – உடலோடும் – ஐம்புலன்களோடும் – அனுபவங்கள் வழியாக எண்ணங்கள் நினைவுகளாக பதிகின்றன என்ற பதிவை என் மனதில் ஒளிரச்செய்தவன் தனியன் – தனித்துவமானவன் – அவனை இனியனாக்கிய பெருமை ஆசிரியரையேச் சாரும் !

பேசும் தராசுகளின் அருங்காட்சியகம் – எத்தனை வகை வகையான தராசுகள் – எத்தனை எத்தனை பயன்பாடுகள் – படிக்க …. படிக்க மலைக்க வைக்கிறது. வானில் நிறத்தை அளக்ககூட ஒரு தராசு, ஆனால் படைப்பாளியின் கூர்ந்த அறிவுத்திறனை அளக்கதராசு இல்லாதது பெருங்குறை அதை ஆசிரியரே வைத்தது சிறப்புதானே! யோசித்து தருவது மட்டுமல்ல நேசித்துத் தருவதே உன்னத படைப்பு- ஆயிஷா வரிசையில் தனியனும் சேர்கிறான்.

ஆயிஷா நம் 300 கிராம் இதயத்தை திருடியவள் தனியனோ 1300 கிராம் எடையுள்ள நம் மூளைக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டான். ஆயிஷாப் போல் தனியனுக்கு மிக … மிக.. நீண்ட ஈயுள் நிச்சயம் . வாழ்த்துக்கள் ‘ஆயிஷா ‘ சார்.

அட்டையில் தனியனுக்கு முடிசூட்டி , கதையின் முடிவை வண்ணத்தூரிகையால் சுட்டிய ஓவியக்கலைஞருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!

  வரலாறு என்பது

            வந்து போனவர்களின் தொகுப்பல்ல,

            ‘சாதனைகளை ‘- தந்து

            கொண்டிருப்பவர்களின் தொகுப்பு

 நூலின் முன்னுரையில் ரமேஷ் வைத்தியா குறிப்பிடுவதைப் போல கழுதைவண்டியை ஒரு மாணவர் தலைகுனிந்து வாசித்தால் போதும் . தலைமைப் பண்பின் சிகரமாகிவிடலாம்.

நூல் மணம் நுகர்ந்தவர்,

நல்லாசிரியர் தா. கமலா

 

 

நூலின் தகவல்கள் 

நூல் : கழுதை வண்டி

நூலாசிரியர் : ஆயிஷா இரா.நடராசன்

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்,பாரதி புத்தகாலயம்

விலை : ரூ.100

நூலறிமுகம் எழுதியவர் 

 நல்லாசிரியர் தா. கமலா


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *