அறிவியல் பிரேக்கிங் நியூஸ்.. ட்ரெண்டிங்!
இனி ஆய்வக (சோதனை) எலிகள் தேவையில்லை.. நாம்தான் இருக்கிறோமே!
– ஆயிஷா இரா.நடராசன்
2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை என்னவெல்லாம் செய்து விட்டது என்கிற அதிர்ச்சியோடு நடப்பதையெல்லாம் BREAKING NEWS மாதமாக.. அலறியபடி அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம் ஏறக்குறைய ஆய்வக எலிகளாகத்தான் நம்மை உணர வேண்டி இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.. இப்படி செய்து பார்த்து விடுவோமா அப்படி செய்து பார்த்து விடுவோமா என்று எல்லா பக்கமும் இருந்து எல்லாரும் சாதாரண ஜனங்களின் மீது அனைத்து வகையான அரசியல் சமன்பாடுகளையும் சோதித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தசூழலில்..2026 என்கிற ஆண்டு அறிவியலில் ஏன் முக்கியம் என்பது பற்றி தொடர்ந்து கொஞ்சம் எழுதலாம் என்று இருக்கிறேன். அதற்காக முதலில் நான் எடுத்துக்கொண்டது உயிரி தொழில்நுட்பம் என்கிற துறை.. அடுத்தடுத்து பிரேக்கிங் நியூஸ்!

பொதுவாக இன்று அனைத்து துறைகளுமே செயற்கை நுண்ணறிவு மயம் ஆக்கப்பட்ட பிறகு.. அறிவியல் தொழில்நுட்பம் BREAKING NEWS மிகுந்ததாகத்தான் இருக்கிறது.. உயிரித் தொழில்நுட்பத்தின் தாக்கங்கள் ஒரு குறிப்பிட்ட வருடாந்திர சுழற்சி முறையில் நிகழ்வதில்லை தான் ஆனால் சில ஆண்டுகள் தெளிவான திருப்புமுனைகளாக அமைகின்றன.. அதிலும் 2026 கட்டாயமான திருப்புமுனை ஆண்டாக உருவாகி வருகிறது என்பது தான் BREAKING NEWS.
ஒரு காலத்தில் ஆரம்ப கட்ட கண்டுபிடிப்புகளிலேயே இருந்த முன்னேற்றங்கள் இப்போது மருத்துவ சரிபார்ப்பு ஒழுங்குமுறை ஆய்வு மற்றும் பெரிய அளவிலான பயன்பாடு ஆகிய நிலைகளுக்குள் நுழைகின்றன.. மரபணு திருத்தம் என்று ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள் இந்த பகுதி செயற்கை நுண்ணறிவால் இயங்கும் மருந்து உருவாக்கம் முதல் புதிய சோதனை மாதிரிகள் மற்றும் இடம் சார்ந்த உயிரியல் வரை இந்த மாற்றங்கள் உடனடி திருப்புமுனைகளாக ஆய்வகங்களே அன்றாடம் செயல்படும் விதத்தை மாற்றுபவையாக.. மாறி வருவது தான் அதிர்ச்சி அளிக்கிறது.
இதுவரையில் இந்த ஆண்டில் மட்டுமே வெளியிடப்பட்ட மருத்துவ தரவுகள் FDA எனப்படும் அமைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கிற வழிகாட்டுதல்கள் மற்றும் தொழில்துறை உத்வேகம் என்று பார்த்தால் உயிரித் தொழில்நுட்பத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் அதிவேகமாக வந்து கொண்டிருக்கின்றன என்று பார்க்க விரும்பினேன்.
கீழே உள்ள ஒவ்வொரு பிரிவும் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வந்திருக்கின்றன அவை ஏன் முக்கியமானவை..2026 ஆண்டில் நாம் எதை கவனிக்க வேண்டும் மற்றும் ஆய்வகங்களுக்கு அதனுடைய அர்த்தம் என்ன என்பதை சுருக்கமாக விளக்க விரும்புகின்றேன் நம்முடைய வாழ்க்கைச் சூழலிலிருந்து பார்க்கும்பொழுது அது எப்படி நம்மை பாதிக்கும்.. அதேசமயம் தமிழக சூழலில் பணி சுமையோடு உழைத்துக்கொண்டிருக்கும் இளம் விஞ்ஞானிகள், ஆய்வக தோழர்கள், செயல்பாட்டு குழுக்கள் போன்றவர்களுக்கு உலகில் என்ன நடக்கறது என்பதை எளிமையாக விளக்கும் ஒரு முயற்சி என்றுதான் இது தொடங்கியது. ஆனால்…
2026 ஆம் ஆண்டின் மே மாதத்தில் இருக்கிறோம்.. இந்த ஐந்து மாதங்களில் மட்டுமே மிகப்பெரிய உயிரி தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் ஆய்வு மாற்றங்கள் உலகில் நிகழந்துள்ளன என்றால் நம்புவது கஷ்டம்..நான் ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்கிறேன்.. ஆய்வக எலிகள்.. ஆய்வக எலிகளாக பயன்படுத்தப்பட்ட மக்கள்!
மனிதர்களுக்கு பொருத்தமான மருத்துவ சோதனை மாதிரிகள் மாற்றப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு போதும் இனி நேரடியாக விலங்குகளையும் மனிதர்களையும் மருந்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை.. இது உண்மைதானா.
ஆய்வுக் கூடத்தில் விலங்குகளை நேரடியாக பரிசோதிக்கின்ற முறைகள் கைவிடப்படுகின்றன.. செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே பெரும் தரவு துறையை பயன்படுத்தி இந்த விலங்குகளை டிஜிட்டல் மயம் ஆக்கி கொடுத்திருக்கின்றன.. மருத்துவத்திற்கு முந்தைய பாதுகாப்பிற்காக ஆர்கன் ஆன் எ சிப்.. மற்றும் இன் சிலிகோ மாதிரிகள் என்று அழைக்கப்படுகின்ற செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள் நோக்கி உயிரி தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருகிறது.. என்பது ஏன் பிரேக்கிங் நியூஸ்?

இது எதனால் முக்கியம் என்றால் ஆராய்ச்சி மற்றும் மருந்து மேம்பாட்டை மனிதர்களுக்கு பொருத்தமான தரவுகளை நோக்கி நகர்த்தி நடைமுறை பயன்பாட்டு துல்லியத்தை மேம்படுத்துவதோடு விலங்கு சோதனைகளை செயற்கை நுண்ணறிவின் மூலம் கட்டமைப்பதன் வழியே வேகமான முடிவுகளையும் துல்லியங்களையும் இப்போது பெற முடியும். மருந்துகள் உற்பத்தியில் அடுத்தடுத்து தோல்வி விகிதத்தை இது குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆய்வுக்கூட விலங்குகளை பயன்படுத்தாத புதிய மருந்து ஆய்வு விண்ணப்பங்கள் மிக விரைவான மதிப்பாய்வை பெற்று முன்னாடி திட்டங்களாக நிதிஉதவியைப் பெறுகின்றன என்பதுதான் 2026 ஆண்டின் உயிரி தொழில்நுட்பத்துறையின் BREAKING NEWS.
மூன்றாமுலக நாடுகளைச் சேர்ந்த மக்களை மருத்துவ மேம்பாட்டு ஒப்பந்தம் என்கிற பெயரில் எத்தனை விதமாகவெல்லாம் ஆய்வுக்கூட எலிகளாக பயன்படுத்தினார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துவைத்துள்ளது.. கோவிட்19 முடக்க காலத்தில் அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி போடப்பட்ட அந்த நாட்களில் நோய் தடுப்பு என்கிற ஒன்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமா அல்லது நம்மையும் பிரமாண்ட ஆய்வு கூட எலிகளாக பரிசோதித்துவார்களா என்கிற சந்தேகம்.. மனிதர்கள் கொத்து கொத்தாக இறந்து போன சூழலில் வலு பெறவில்லை.. ஆனால் அது உண்மையாகவும் இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.
பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் ஏழை நாடுகளில் நடத்தும் மருந்து பரிசோதனைகள் ஒன்றா இரண்டா.. ஆப்பிரிக்கா ஆசியா லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் பல முறை மருந்து சோதனை மையங்களாக கிராமங்கள் மாற்றப்படுவதை இன்றைக்கும் பார்க்கிறோம்.. இந்த கொடூரங்கள் ஒரே ஒரு நாட்டில் மட்டும் நடந்துவிடாது.. இது உலகளாவிய விஷயம். அரசுகள், ராணுவ அமைப்புகள், மருந்து நிறுவனங்கள், உளவுத்துறை அமைப்புகள் ஆகியவை மிகுந்த அதிகாரத்தை கொண்டவை. கைதிகள், ஏழைகள் இன அடக்குமுறைக்கு உள்ளானவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காலனித்துவ மக்கள் என்று இவர்களுக்கான பரிசோதனை எலிகள் ஒன்றிரண்டு அல்ல.
இது போன்ற விஷயங்களில் உடனடியாக நாம் ஹிட்லர் நடத்திய மரண முகாம்களை தான் காரணமாக உதாரணமாக சொல்லுகின்றோம்.. ஆனால் உண்மையில் உற்றுப் பார்த்தோமானால்..1932 முதல் 1972 வரை 40 வருடங்கள் ஒரு தவறான மருந்து ஒரு குறிப்பிட்ட மக்கள் திரளின் மீது பரிசோதிக்கப்பட்ட மறைக்கப்பட்ட வரலாறு தெரியுமா உங்களுக்கு.. டஸ்கிகி சிபிலிஸ்.. மறக்க முடியாத கொடூரம். உலக மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய அவப் பெயர் பெற்ற சம்பவங்களில் பிரதானமானது இதன் பின்னால் இருப்பது அமெரிக்கா.
1932 தொடங்கி சுமார் 600 ஏழை ஆப்பிரிக்க அமெரிக்க கருப்பின ஆண்கள் மருத்துவ ஆய்வில் கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு சிபிலிஸ் நோய் இருந்தது.. இது ஒரு கொடூரமான நோய் அதற்கு சிகிச்சை அளிக்கிறோம் என்கிற பெயரில் தான் அவர்கள் மருத்துவ ஆய்வுக் கூட எலிகளாக திறந்த வெளியில் விடப்பட்டனர்.. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசு உண்மையை அவர்களிடமிருந்து மறைத்தது.. ஒரே ஒரு பென்சிலின் ஊசி போதுமானது ஆனால் அப்படிப்பட்ட ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் சிகிச்சை திட்டமிட்டு மறுக்கப்பட்டு சோதனையாக தொடர்ந்தது. நோய் மனித உடலை எவ்வாறு அழிக்கிறது என்பதை நீண்டகாலம் கவனிப்பதற்காக இந்த பரிசோதனை நிகழ்த்தப்பட்டது என விஞ்ஞானிகள் பிற்காலத்தில் கூறினார். அந்த அப்பாவி மக்கள் தங்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது என்று நம்பினர் ஆனால் உண்மையில் பலர் வேதனையுடன் பலவகையான உடல் உபாதைகள் பெற்று இறந்தனர். தங்கள் குடும்பம் சுற்றத்தாருக்கு நோயை பரப்பினர். குழந்தைகள் பிறவி உடல் சிதைவுகளுடன் இன்றைக்கும் பிறக்கின்றன. மருத்துவ அறிவியலுக்குள் இனவெறி மற்றும் வர்க்க சுரண்டல் எவ்வாறு கலந்து கரைந்து கிடக்கிறது என்பதை இந்த ஒரு சம்பவம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. INFORMED CONSENT சுய சம்மதத்துடன்.. என்கிற ஒரே ஒரு கையெழுத்து போதுமானது. எந்த நீதிமன்றமும் குறுக்கிட முடியாது.. சரி அப்படி ஒரு கையெழுத்தாவது இந்த விஷயத்தில் பெறப்பட்டது.

ஜோசப் மெங்கலே மற்றும் பிற நாஸி மருத்துவர்கள் தங்கள் மருந்துகளை பரிசோதிக்கும் ஆய்வுக்கூட எலிகளாக சிறை முகாம்களில் இருந்த மக்களின் மீது கொடூரமான பரிசோதனைகளை செய்தனர்.. இதற்கு யாருடைய சம்மதமும் தேவையில்லை.. யூதர்கள், ரோம மக்கள், மாற்றுத்திறனாளிகள், சோவியத் கைதிகள் குழந்தைகள் என்று யாரெல்லாம் கிடைத்தார்களோ.. அவர்களெல்லாம் மருந்து பரிசோதனை க்கான ஆய்வுக்கூட எலிகளாக ஹிட்லரின் கனவுகளுக்கு பலியிடப் பட்டார்கள்.. சோதனைகள் கொடூரமான குற்றங்கள். மனிதர்களை உயிருடன் உறைய வைத்தல்.. கட்டாய மலட்டுத் தன்மையை ஏற்படுத்துதல்.. நோய்களை கட்டாயமாக தோன்ற அவர்கள் துடிப்பதைப் பதிவு செய்வது.. உடலுறுப்புகளை அப்புறப்படுத்தி எத்தனைநாட்கள் உடல் அந்த உறுப்பு இல்லாமல் இருக்க முடியும் என்பன போன்ற நேரடி கொடுமைகளை அவர்கள் அனுபவித்தார்கள்.
ஜப்பான் யூனிட் செவன் தர்டி ஒன் 731.. சம்பவம் மிக பிரபலமானது.. அதே இரண்டாம் உலகப் போரின்போது சீனாவில் உயிரியல் ஆயுத சோதனைகளை ஜப்பானின் மருத்துவர்கள் மேற்கொண்டார்கள். பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட சீனா நோயாளிகளை ஆய்வுக்கூட எளிதாக்கி மயக்க மருந்தே இல்லாமல் உடல் வெட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டன. கடும் குளிர் தாக்கங்கள் எப்படி இருக்கும் என்பதற்காக மைனஸ் 17 முதல்-90 டிகிரி வரை வெப்பத்தை குறைத்து மனிதர்கள் துடிப்பதை பதிவு செய்தார்கள்.. தங்களுடைய ரசாயன ஆயுதங்களை அவர்கள் மீது பரிசோதித்து.. ஆயிரக்கணக்கான சீன மக்கள் இந்த ஆய்வுகளில் இறந்து போனார்கள்.. பிற்காலத்திலேயே போர்க்குற்றங்கள் அடிப்படையில் தண்டனைகள் வழங்கப்பட்ட போது இந்த சோதனைகளை செய்த பல விஞ்ஞானிகள் தேசத்தின் பற்றாளர்களாக போற்றப்பட்டார்கள்.. இவர்கள் சேகரித்திருந்த புள்ளி விவரங்களை பெறுவதற்கு உலக அளவில் போட்டா போட்டி.
மனிதர்கள் மீது கொடூரமான அனு குண்டு தாக்குதலை நிகழ்த்தி கதிரியக்க பரிசோதனைகள் செய்யப்பட்ட போரின் இறுதிக்கட்டம் ஒருபுறம் என்றால்.. எத்தகைய முன்னறிவிப்பும் இன்றி அமெரிக்கா தொலை தூரத்தின் மூன்று தீவுகளில் இருந்த மக்களை.. பரிசோதனை என்கிற பெயரில் அணுஆயுத சோதனைகள் நிகழ்த்தி படைவீரர்கள் கர்ப்பிணி பெண்கள் சாதாரண மக்கள் தங்கள் உடலுக்குள் கதிரியக்க பொருட்கள் செலுத்தப்பட்டு இருக்கின்றன என்பதே தெரியாமல் பரிசோதனைக்கு உதவியது என்பது ஆய்வு கூட எலிகளை விட கொடூரமாக நடத்தப்பட்ட நிகழ்வுகள் ஆகும்.
1946-48 காலகட்டத்தில் குவாத்தமாலா பகுதியில் நடத்தப்பட்ட கொடூரமான நேரடி மனித ஆராய்ச்சி நம்மை அதிர வைக்கும். அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பற்ற பொதுமக்கள், மனநல மருத்துவமனை நோயாளிகள், இவர்களுக்கு சிபிலிஸ் மற்றும் கொனோரியா போன்ற பாலியல் நோய்களை தோற்ற வைத்தனர்.. பலருக்கு தாங்கள் பரிசோதனையின் ஒரு பகுதியாக இருப்பதே தெரியாது. சிலர் கட்டாய பாலியல் தொடர்புகள் மூலம் நோய் தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.. இரண்டு ஆண்டுகளில் இப்படி பரிசோதனைக்கு பயன்படுத்தக்கூடிய உடல்களைக் கொண்ட ஏழை நாடு.. ஒடுக்கப்பட்ட மக்கள் கேட்பாரின்றி ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.. பிறகு அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பொழுது கோதமாலாவிடம் அதிகாரப்பூர்வ மன்னிப்பு கேட்டதும் வரலாறு.
இப்படிப்பட்ட வரலாற்று சூழலில் இருந்து மனித இனத்தை காப்பாற்ற முடியுமா. இப்போதும் அப்படியான பரிசோதனைகள் நடக்கின்றனவா இல்லையா.. மருத்துவ துறையையும் சேர்த்து நாடுகள் ரகசிய காப்புரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவந்துவிட்டன.. ஒரு மருந்தை கண்டுபிடித்து காப்புரிமை பெறுவது என்பது அது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதன் அடிப்படைகளை ரகசியமாக காப்பாற்றும் சட்டங்கள் இன்று உலகஅளவில் சர்வ சாதாரணமாக நிறைவேற்றப்பட்டு விட்டன.. எனவே அதுகுறித்து தற்போதைக்கு தகவல்கள் எதுவும் இல்லை
எனவே செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூட எலிகள் இல்லாமல் மருத்துவ ஆய்வை மேம்படுத்தும் என்கிற BREAKING NEWS என்ன சொல்ல வருகிறது.. தடுப்பூசி உருவாக்கம், புரத அமைப்பு கணிப்பு, மருத்துவ முன்னறிவிப்பு, மருந்து கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் ஆய்வுக்கூட விலங்கு பரிசோதனைகளை குறைக்கின்ற விதமாக பயன்படும்.. ரஷ்யாவில் தற்போது புற்றுநோய் தடுப்பு மருந்து ஒன்று அறிமுகம் ஆகியிருக்கிறது..(இது பழைய BREAKING NEWS ஆகிவிட்டது!) இந்த மருந்து எத்தனை பேர் மீது பரிசோதிக்கப்பட்டது.. அதன் பின்னணி என்ன போன்ற தகவல்கள் எல்லாம் வெளிவருவதற்கு(எதிர்கால பிரேக்கிங் நியூஸ்?) இன்னும் 70 ஆண்டுகள் ஆகும்.. இதுதான் சர்வதேச கார்பரேட் ஆதரவு சட்டம்.
மனித பரிசோதனைகளின் தேவையை செயற்கை நுண்ணறிவு குறைக்கும் என்றால் அல்லது தடுக்கும் என்றால்.. அதை கொண்டு வருவதற்கு என்ன செலவாகும்.. லாபத்தை மட்டுமே முதன்மையாக கருதுகின்ற மருந்து உற்பத்தி கார்ப்பரேட் சுரண்டல் அதை வர அனுமதிக்குமா.. ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதநேய ஒழுக்கத்தை உருவாக்க முடியுமா.. எந்த மேம்பட்ட தொழில்நுட்பமும் லாபம் சுரண்டல் ஆகியவற்றை கடந்து நெறிமுறை சார்ந்து செயல்பட கார்பரேட் உலகம் அனுமதிக்குமா.. இவற்றையெல்லாம் பற்றி யோசித்துக் கொண்டே நாம் அடுத்த BREAKING NEWS வருவதற்கு காத்திருப்போம்.
📚 எழுதியவர் :

✍🏻 – ஆயிஷா இரா.நடராசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


தோழர் நடராசன் அவர்களே கொரோனா தடுப்பூசி பற்றிய சந்தேகத்தை இப்போது கிளப்புகிறீர்கள்? டூலேட்
காலம் கடந்து பரிசீலனை செய்வது நமது ஊறிப் போன குணம்
இனியாவது அளவு மாற்றம்தான் குணத்தை மாற்ற வேண்டும்
How interesting.
Using innocent humans for drug testing .. has been wonderfully exposed in the article.. even though we can expect biotech can bring some changes the corporate drug mafia’s will not permit anything to change.. what about the medical health insurance sector..Ayesha sir please write about it