“இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100” என்று ஆயிஷா இரா. நடராசன் எழுதிய 425 பக்கங்களை கொண்ட நூல் இன்று மாலை (31.12.2025) வெளியாக உள்ளது. இந்த 100 விஞ்ஞானிகளில் 29 பேர் பெண்கள், 43 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதி புத்தகாலயத்தின் BOOK DAY இதழில் வெளியான 100 கட்டுரைகளை ஆசிரியர் 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக பல்வேறு தரவுகளை திரட்டி தயாரித்துள்ளார். இந்திய அரசின் மேனாள் அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் முனைவர் கே.விஜயராகவனும், அறிவியலாளர் தா.வி.வெங்கடேஸ்வரனும், இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார்கள்.
வாசிக்க கடினமாக இருக்கும்; அதேநேரம் படிக்கத் தொடங்கி விட்டால் தொடர்ந்து படித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். மாணவர்கள் இந்நூலை படித்தால் உயர் கல்வியில் அறிவியலை படிக்கத் தூண்டும். பெரியவர்கள் இந்த நூலைப் படித்தால் மாணவர் பருவத்தில் அறிவியல் படிக்கவில்லையே என்ற ஏக்கத்தை உருவாக்கும்.
விஞ்ஞானிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளை விளக்கியது மட்டுமல்ல, அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட அவர்களை தூண்டியது எது என்பது குறித்து விஞ்ஞானிகளோடு உரையாடி சுவைபட எழுதியுள்ளார். உதாரணமாக மும்பை நகரத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி (37) கரண் ஜானி இயற்பியல் பட்டப் படிப்பின் போது புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘தி பிரீஃப் ஹிஸ்ட்ரி ஆப் டைம்’ என்ற புத்தகத்தை வாசித்த பிறகு பலவகையில் முயற்சி செய்து அவரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். அது அவரை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு முதுகலை அறிவியல் படித்து ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் ஆய்வை மேற்கொண்டார். சூப்பர் கணினிகளை பயன்படுத்தி கருந்துளைகள் ஒன்றிணைவதில் இருந்து வருகிற ஈர்ப்பு அலைகளை மாதிரிப்படுத்தி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சமன்பாட்டை தீர்த்தார்.
நாக்பூர் நகரைச் சேர்ந்த அதீதி பந்த் என்ற பெண் விஞ்ஞானி ‘தி ஓப்பன் சி’ என்ற புத்தகத்தை பள்ளி நாட்களில் படித்தது அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. புனேயில் வேதியியல் பட்டப்படிப்பு முடித்து அமெரிக்க நிதி உதவியில் ஹவாய் பல்கலைக்கழகத்தில் கடல்சார் உயிரினங்கள் பற்றிய முதுகலை பட்டம் பெற்றார். 1990 முதல் புனே வேதியியல் அறிவியல் ஆய்வகத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றினார். அமெரிக்காவில் வேதியியல் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார். அடுத்து அண்டார்டிகா ஆய்வு பயணங்களில் அங்கம் வகித்து கடல் சூழல் அமைப்புகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு இந்திய பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார். இவர் மும்பை நகரத்தில் மூட பழக்க வழக்கங்களுக்கு எதிராக அறிவியல் பார்வையை உருவாக்கிட பாடுபட்ட டாக்டர் தபோல்கரின் மகாராஷ்டிரா சமிதி என்ற அமைப்பில் செயலாளராக இருந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
மும்பையைச் சேர்ந்த சந்தியா கவுசிகா என்ற பெண் விஞ்ஞானி தன்னுடைய பள்ளிக்கல்வி காலத்தில் பள்ளி நூலகத்தில் இருந்து மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை படித்து எதிர்காலத்தில் அறிவியல் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். மேரி கியூரி இரண்டு நோபல் பரிசுகளை பெற்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி என்பதை அனைவரும் அறிவோம். சந்தியா கவுசிகா நமது உடலில் நரம்பு செல்களில் நரம்பியல் வழியே மூலக்கூறுகள், புரதங்கள் மற்றும் இழை மணிகள் நரம்பு சந்திக்குறிய ஜவ்வு பைகள் உட்பட பல உள்ளுறுப்புகள் கொண்டு செல்லப்படுகிற நுண்ணிய நரம்பியல் போக்குவரத்து குறித்த ஒரு சிக்கலான துறையில் முனைவர் பட்டம் பெற்றார். அவருடைய கண்டுபிடிப்பு நரம்பியல் மருத்துவ சிகிச்சைக்கு குறிப்பாக நரம்பு சிதைவு நோய்களை குணப்படுத்த பெரும் உதவியாக உள்ளது.
இந்நூலில் உள்ள பல விஞ்ஞானிகள் முனைவர் பட்டத்திற்காக செய்த ஆய்வு நமது உடல் கூறுகளில் உள்ள அற்புதங்களையும், ரகசியங்களையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சீனிவாச சக்கரவர்த்தி என்ற அறிவியலாளர் கணக்கீட்டு நரம்பியல் என்ற புதிய துறை விஞ்ஞானி. கோட்பாட்டு நரம்பியல், கணினி மற்றும் கணித மாதிரிகளை வைத்து மூளையின் செயல்பாடுகளை இவர் ஆய்வு செய்தார். அதையும் கடந்து உயிரியல் அமைப்பின் இன்றியமையாத அம்சங்களின் ஒன்றான இடம் சார்ந்த அளவீடுகளில் மூளை புரிந்து கொள்ளும் விதத்தை இவர் ஆய்வு செய்து அறிவியல் ரீதியில் விளக்கியிருக்கிறார். உதாரணமாக நாய்கள் மோப்ப சக்தியின் மூலம் வழிகளை எளிதில் கண்டுபிடித்து வருகின்றன.
எவ்வளவு தொலைவுக்கு சென்றாலும், பூனைகள் திரும்பி வருகின்றன. இதைப் போன்று ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்கின்ற போது நம்முடைய மூளை வழிகளை கண்டுபிடிக்கிற, நினைவில் வைத்துக் கொள்கிற ஆற்றல் குறித்து ஆராய்ச்சி செய்தார். நம்முடைய மூளையில் 86 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன. இந்த நரம்பு செல்களில் எத்தகைய இணைப்புகள் உள்ளன என்பதையும், இணைப்புகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றம் நடைபெறுவதையும் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். தமிழக கல்லூரியில் பி.டெக் பயின்று அமெரிக்காவில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சென்னை ஐஐடி தொழில்நுட்ப நிறுவனத்தில் கணக்கீட்டு நரம்பில் மற்றும் கணக்கீட்டு இருதயவியல் என்கிற ஆய்வகங்களில் பணியாற்றி வருகிறார். அவருடைய கண்டுபிடிப்பு மூளை நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது.
நிஷா கண்ணன் என்ற பெண் விஞ்ஞானி மனித உடல் கடிகராமாக செயல்படும் விதத்தை ஆய்வு செய்திருக்கிறார். மனிதன் பிறக்கும் போதே அவருடைய உடலில் ஒரு விசித்திரமான காலக் கடிகாரம் செயல்படுகிறது. மனிதன் மட்டுமல்ல, உலகத்தின் ஒற்றை மரபியல் உயிரிகளான பாக்டீரியாக்கள் முதல் அனைத்து உயிர்களுக்குள்ளும், ஒரு கடிகாரம் செயல்படுகிறது என்று அருதியிட்டு தனது ஆய்வில் குறிப்பிடுள்ளார். உடல் கடிகார அமைப்பின் மூலக்கூறு அடிப்படையில் புரிந்து கொள்வதில் மரபணு மற்றும் மூலக்கூறு சார்ந்த அனுகுமுறையில் கிடைத்த சான்றுகள் உதவியுள்ளன. மனிதனின் உறக்க நிலையில் மூளையில் உள்ள நரம்பு செல்களின் இணைப்புகள் தன்னை மறுசீரமைப்பு செய்து கொள்கின்றன. உடல் கடிகாரத்தின் முக்கியமான பணி மனிதனை உறக்கத்தில் தள்ளுவது, உறக்கத்தை தள்ளி வைப்பது அல்லது இரவு நேரத்தில் பணி செய்து பகலில் உறங்குவது இவை அனைத்தையுமே உடலில் உள்ள நுண் ஆர்.என்.ஏ-க்கள் சரியாக இயக்குகின்றன. நிஷா கண்ணன் ஆராய்ச்சி தூக்கமின்மை ஏன் ஏற்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது.
மருத்துவ அறிவியலாளர் பிரக்யா யாதாவ் கதை மெய்சிலிர்க்க வைக்கும். இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐசிஎம்ஆர்) நடத்தும் தேசிய வைரசியல் நிறுவனம் ஆய்வுக் கூடத்தில் இவர் தற்போது செயல்பட்டு வருகிறார். இவரின் பங்களிப்பு ரத்தக்கசிவு காய்ச்சல், நிபா வைரஸ், எபோலா போன்ற நோய்த் தொற்று தடுப்பு மற்றும் மேலாண்மைக்கு ஏற்ப தேசிய சுகாதார கண்காணிப்பு கொள்கையை மேம்படுத்த வழிவகுத்தது. கோவி 19 என்ற ஆட்கொல்லி நோய் தடுப்பில் இவரின் பங்களிப்பு மகத்தானது. இந்திய கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கிய குழுவிற்கு இவர் தலைமை வகித்தவர். 2019 -2020 காலத்தில் 45 நாட்கள் அதே நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் தன் ஆய்வை தொடர்ந்து கடுமையாக உழைத்து கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கினார். தன் குடும்பத்தில் 3 உறுப்பினர்களை இந்த நோய்க்கு அவர் பறிகொடுத்தார். இந்தியாவில் கோவிட் தாக்குதலில் இருந்து பிழைத்த கோடிக்கணக்கான மக்களின் நன்றியை எப்போதும் பெற்று இவர் உயர்ந்திருப்பார். அதுதான் அவருக்கு வழங்கப்படும் தலை சிறந்த விருது.

பன்னாட்டு கூட்டு ஆராய்ச்சி
அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா போன்ற பல நாட்டு விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து அணு கருப்பு பிணைப்பு செயல் முறையை பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்ய நீண்ட கால இலக்கோடு விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி என்பது நடைபெற்று வருகிறது. பலநாட்டு விஞ்ஞானிகள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள முக்கியமான பணி இது. இதில் இந்தியாவில் இருந்து செஜல்ஷா என்ற விஞ்ஞானி இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார். நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரி பொருட்களுக்கு மாற்றாக சூரியனில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமா என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். பிரபஞ்சத்தில் உள்ள நமது சூரியனும், மில்லியன் கணக்கான வின்மீன்களும் மிகப்பெரிய ஆற்றல் மூலாதாராமாக இருந்து ஒளியாகவும், வெப்பமாகவும் ஆற்றலை வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. அவை பிரபஞ்சம் முழுவதையும் சூடேற்றுவதோடு, ஒளியையும் உமிழ்கின்றன.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வழங்கிய E=MC2 எனும் வேதிப் பயன்பாட்டை பயன்படுத்தி அணுக்கரு பிளப்பு முறையில் செயல்படும் விதத்தில் அணு குண்டுகள் தயாரிக்கப்பட்டன. தற்போது பல நாட்டு விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து சூரியனில் நடைபெறும் வேதி விணை அணுக்கருப்பு பிளப்பின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்திட ஆய்வு செய்து வருகிறார்கள். இது வெற்றி அடைந்தால் பசுமை ஆற்றலை (கிரீன் எனர்ஜி) உருவாக்கிட முடியும். வேறு வார்த்தைகளில் சொன்னால் புவியிலேயே சூரியனின் ஒரு பகுதியை அயமின்பா (பிளாஸ்மா சயின்ஸ்) அறிவியலின் அடிப்படை நோக்கம். சூரியனில் நடைபெறும் அணு கருப்பு பிணைப்பை பூமியில் தோற்றுவிக்க அவர்கள் போராடுகிறார்கள். சுருங்கச் சொன்னால் அணு பிளவினால் அணுகுண்டு தயாரிக்கப்பட்டது, அணு பினைவு மனித உயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லாமல் தூய்மையான ஆற்றலை உருவாக்கும் முயற்சியாகும். இன்று உலக அளவில் அறியப்பட்ட அணுக் கருப்பு பினைவு ஆராய்ச்சியாளர் இந்தியாவின் ஷா என்பதில் நாம் பெருமைப்பட வேண்டும்.
அறிவியலாளர்களின் பெருமைமிகு கண்டுபிடிப்புகளை பெருமையுடன் புரிந்து கொள்கிற போது இன்றைய மத்திய பாஜக அரசு அறிவியல் வளர்ச்சியை , அறிவியல்; ஆய்வை. அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்களை, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களை அழிக்க முற்பட்டு வருவதை இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை சூன்யமாக்கிடும் அபாயம் உருவாகி வருகிறது. 2014ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் செயல்படக் கூடிய பாஜக அரசு அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து விஞ்ஞானத்திற்கு விரோதமாகவும், அஞ்ஞானத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின் விஞ்ஞான தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கி வந்த விஞ்ஞான பிரச்சார் என்ற துறை மூடப்பட்டு விட்டது. மக்கள் மத்தியில் அறிவியல் பூர்வாமான பார்வையை உருவாக்கிட வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. இத்தகைய பணியை செய்து வந்த விஞ்ஞான பிரச்சார் துறையை மோடி அரசு நிரந்தரமாக மூடி விட்டது.
TIFAC (Technology Information, Forecasting and Assessment Council) தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் அறிவியல் ஆய்வு நிறுவனம் அப்துல் கலாம் முன்முயற்சியால் உருவாக்கப்பட்டது. வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மதிப்பீடு செய்து அதை நம் தேசத்தில் பயன்படுத்துவதற்கான திட்டமிடக் கூடிய ஒரு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம். பாதுகாப்புத் துறை, தொழில் வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல துறைகளில், பல வடிவங்களில் இத்துறை பங்களிப்பு செய்து வந்தது. மோடி அரசு இத்துறையை உருவாக்கிய அப்துல் கலாமை குடியரசு தலைவராக்கியது. ஆனால் அவர் உருவாக்கிய அறிவியல் தொழில்நுட்பத் துறையை மூடி விட்டார்கள்.
அதைப்போலவே இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ் அமைப்பு (Indian Science Congress Association) இந்த அமைப்பு 1914ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1947க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட இந்த அமைப்பினுடைய மாநாட்டிற்கு பிரதமர் நேரு தலைமை தாங்கினார். 30 ஆயிரம் விஞ்ஞானிகள் உறுப்பினர்களாக உள்ளனர் என்று கூறினார். 2015ஆம் ஆண்டு இந்த அமைப்பின் அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது பிரதமர் உள்ளிட்டு மத்திய அமைச்சர்கள் அறிவியலுக்கு புறம்பான கருத்துகளை முன்வைத்து பேசினார்கள். இந்தியாவில் வேத காலத்திலேயே விமானம் கண்டு பிடிக்கப்பட்டதாக அறிவியலுக்கு புறம்பான கருத்துகளை பேசினார்கள். விநாயகர் கடவுள் உருவானதே அக்காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அறிவியல் பூர்வமாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை என்று கூறினார்கள். இந்திய அளவிலும், உலக அளவிலும் இத்தகைய கருத்துகளை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் கடுமையாக கண்டித்தார்கள்.
அறிவியல் குறித்து அறிவியல் மாநாட்டில் யார் பேச வந்தாலும், அவர்களுடைய கருத்து அறிவியல் பூர்வமாக உள்ளதா என பரிசீலித்து அனுமதிக்க முடிவெடுத்தது. ஆனால் அதன் பிறகு அறிவியல் மாநாட்டிற்கு முன்னதாக பேச விரும்புவோரின் கருத்துகள் அறிவியல் பூர்வமாக இருந்தால் அதை அனுமதிக்க மறுப்பது போன்ற ஒன்றிய அரசின் செயல்பாடுகளின் மூலம் இந்திய அறிவியல் காங்கிரசின் செயல்பாட்டை மத்திய அரசு சீர்குலைத்து வருகிறது. அந்த மைப்பின் செயல்பாட்டை முடக்கி விட்டது. கடந்த ஆண்டு கூட உத்தரப்பிரதே ஆளுநர் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக பர்த்வாஜ் முனிவர் விமானத்தை கண்டுபிடித்து இயக்கினார் என தெரிவித்துள்ளார். முதன் முதலில் விமானத்தை கண்டுபிடித்தது ரைட் சகோதர்கள் அல்ல, வேத காலத்திலேயே விமானம் கண்டு பிடிக்கப்பட்டது என்று பிரதமர் மோடியில் துவங்கி மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டு பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர்.
தங்களுடைய அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம்தான் தேசிய கல்விக் கொள்கை 2020. அதனடிப்படையில் பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு அகில இந்திய அளவில் பல பல்கலைக்கழங்களில் அமலாக்கி வருகிறார்கள். தேசியக் கல்விக் கொள்கை 2020இன் அடிப்படையில் சேதுபந்த வித்துவான் யோஜனா என்ற திட்டத்தின் அடிப்படையில் குருகுல சமஸ்கிருத் கல்வி நிலையங்களில் (12ஆம் வகுப்பு முடித்த) 5 ஆண்டுகள் படித்தால் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மாணவராக சேரலாம். மாதம் 65 ஆயிரம் ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கிடும். இந்த 5 ஆண்டுகால குருகுல பள்ளியில் வேதம், வாஸ்து, சோதிடம் உள்ளிட்ட பல பாடத்திட்டங்களை போதிக்கிறார்கள்.
திருப்பதியில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டு மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அந்த பல்கலைக்கழகத்தில் தர்ம சாஸ்திரம், வேதம் உள்ளிட்டவைகள் பாடமாக கற்பிக்கப்படுகின்றன. இன்றைய ஹீரோக்களை விட அனுமன், அர்ஜுனன் ஆகியோர்தான் ஹீரோக்கள் என்று சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். இத்தகைய முறையை வலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவும், மோகன் பகவத்தும் பேசியுள்ளனர். உலக அளவில் அறிவியல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் போது,, இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்ல மநுநீதியை, சனாதனத்தை நியாயப்படுத்தி பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கற்பிக்கிறார்கள். இந்தியாவின் எதிர்கால அறிவியல் வளர்ச்சியை மட்டுமல்ல, சமூக பொருளாதார வளர்ச்சியை இப்படிப்பட்ட அணுகுமுறை கடுமையாக பாதிக்கும். இத்தகைய பின்னணியில்தான் நாட்டு வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்திட்ட 100 இந்திய விஞ்ஞானிகளைப் பற்றி ஆசிரியர் ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல் வெளியாகிறது. இந்நூலை மக்களிடம் எடுத்துச் செல்வோம், அறிவியல்பூர்வமான இந்தியாவை வளர்த்தெடுப்போம்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100 |
| ஆசிரியர்: | ஆயிஷா இரா. நடராசன் |
| வெளியீடு: |
பாரதி புத்தகாலயம்
|
| விலை: | ₹.399 |
| அறிமுகம் எழுதியவர்: |
ஜி. ராமகிருஷ்ணன் –
சிபிஐ(எம்) மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் |
******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் சென்னை புத்தக காட்சியை நேரடியாக வந்து பார்வையிட்டு அதில் தங்களுக்கு பிடித்த புத்தகம் குறித்த நூல் அறிமுக கட்டுரையை ஜனவரி 8 முதல் ஜனவரி 18 வரை www.bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
