பள்ளிக் கல்வி என்பது அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டிய தேர்- பள்ளி கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார்

Ayesha. Era. Natarasan's Kattral Enbathu Yathenil Book Release Event on Teachers Day Celebration. Book Day is Branch of Bharathi Puthakalayam.சென்னை: கல்விச் சிந்தனைகள் குறித்த வளமையான புத்தகங்கள் தமிழில் வெளிவர வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார் கூறினார்.

செப். 5 ஆசிரியர் தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம் ஏராளமான நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆயிஷா இரா.நடராசன் எழுதிய ‘கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0’ நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று (செப்.1) சென்னையில் நடைபெற்றது. பேரா. ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நூலை மேனாள்துணைவேந்தர் பேரா. க.அ.மணிக் குமார் வெளியிட முதல் பிரதியை கே.நந்தகுமார் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் ‘கல்விச் சிந்தனைகள் நூல் திரட்டு’ விற்பனையை தொடங்கி வைத்து கே.நந்தகுமார், அயல்நாட்டு கல்வியாளர்கள், சிந்தனையாளர்களின் புத்தகங்களை தேடிதேடி படிப்பது என்ற நிலை மாற வேண்டும். தமிழில் முதல் தரமான புத்தகங்கள் வேண்டும். ‘கற்றல் என்பது யாதெனில்; கல்வி 4.0’ போன்று நல்ல நல்ல நூல்களை ஆயிஷா நடராசன் போன்றவர்கள் எழுத வேண்டும். பள்ளிக் கல்வி என்பது அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டிய தேர். அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.

Ayesha. Era. Natarasan's Kattral Enbathu Yathenil Book Release Event on Teachers Day Celebration. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பேரா.க.அ.மணிக்குமார் குறிப்பிடுகையில், “பல்கலைக் கழக பேராசிரியர்கள் எழுதும் ஆய்வு நூல் தரத்தோடு இந்த நூல் உள்ளது. திறமையான ஆசிரியர்களை ஊக்குவித்தால் மிகச்சிறந்த கல்வி முறையை உருவாக்க முடியும்” என்றார்.

“வகுப்பறைகள் மறைந்து, மனிதநுண்ணறிவை கொண்டு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டி உள்ளது. தொழில் நுட்பத்தை ஆசிரியர்கள் புறக்கணிக்க முடியாது. தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. மாணவர் இடைநிற்றல் 22 சதவீதமாக உள்ளது. ஒன்றரை வருடம் கல்விச் சூழலில் இருந்து துண்டிக்கப்பட்டு, பயிற்சிகள் இன்றி கணித அடிப்படைகளை மறந்த நிலையில் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகின்றனர். கற்றல், கற்பித்தல் இயல்பாக இருக்காது என்பதை ஆசிரியர் சமூகம் உணர்ந்து கற்பிக்க வேண்டும்” என்று கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி கூறுகையில், “காலையில் எழுந்து பல் தேய்க்க பழகியவர்கள், இப்போது செல் தேய்க்க பழகிவிட்டோம் என்பன போன்ற வாக்கியங்கள் வாசிப்பை நகர்த்தி செல்கிறது. 2010க்குப் பின் பிறந்த குழந்தைகள் பாதி மனிதர்களாகவும், பாதி கருவி களாகவும் உள்ளனர். இந்த அழகையும் ஆபத்தையும் உணர வேண்டும். தமிழக கல்வியில் கற்றல், கற்பித்தலில் உள்ள இடைவெளியை சரி செய்யவேண்டி உள்ளது. அதற்கு இந்நூல் உதவும்” என்றார்.“தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்கின்றன. அரசு நிர்வாகத்தின் இயலாமையின் வெளிப்பாடாக, ஆன்லைன் வழி கல்வியை கற்பிக்க ‘அகஸ்தியா’ என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர். ஆசிரியர் சமூகத்திற்கு மட்டுமின்றி மாணவர் சமூகத்திற்கும் இந்நூல் பேருதவியாக இருக்கும்” என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் குறிப்பிட்டார்.

May be an image of 4 people, indoor and text that says 'கற்றல் என்பது யாதெனில் sed'

ஏற்புரையாற்றிய நூலாசிரியர் ஆயிஷா இரா.நடராஜன், “கடந்த ஒன்றரை வருடத்தில் ஆன்லைன் வாயிலாக முறைசாரா கல்வி பயின்று மாணவர்கள் தங்களை புதுப்பித்துக் கொண்டுள்ளனர். எனவே, கல்வி 4.0வை ஒவ்வொரு பள்ளிக்கும் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கேற்ப ஆசிரியர்களும் தயாராக வேண்டும் என்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது” என்றார்.“இந்தியாவிலேயே கியூஆர் கோடு என்ற முறையை பாடத்திட்டத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான். தமிழக பாடத்திட்டம் முதலில் குழந்தையை குழந்தையாக அணுகும். அடுத்து மாணவனாக, தேடலில் ஈடுபடும் நிபுணனாக, எதிர்காலத்தை திட்டமிடுபவராக உயர்த்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒரே பாடத்திட்டத்திற்குள் இவ்வளவையும் வைக்கும் அளவிற்கு அரசு பள்ளி ஆசிரியர்களிடம் திறமை உள்ளது. செயல்திறன் மிக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ள சூழலில், கல்வியில் மாற்றத்தை உருவாக்க முடியும். அதற்கு தொழில் நுட்பத்தையும் கைக்கொள்வோம்” என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில், பாரதி புத்தகாலய நிர்வாகிகள் க.நாகராஜன், ப.கு.ராஜன், சுரேஷ் இசக்கிபாண்டி உள்ளிட்டோர் பேசினர்.

நன்றி: தீக்கதிர் நாளிதழ்
புத்தகம் வாங்க கிளிக் செய்க: கற்றல் என்பது யாதெனில் – கல்வி 4.0

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.