ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "நூலகாலஜி" புத்தகம் | நூல் அறிமுகம்: வெ.இறையன்பு ஐஏஎஸ் | Ayesha Era Natarasan's Noolagalogy Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “நூலகாலஜி” – நூல் அறிமுகம்: வெ.இறையன்பு ஐஏஎஸ்

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “நூலகாலஜி” புத்தகம் 
நூல் அறிமுகம்: வெ.இறையன்பு ஐஏஎஸ்

புத்தகங்கள் புனிதமானவை

ஜெயகாந்தன் ‘அந்தரங்கம் புனிதமானது’ என்கிற சிறுகதையை எழுதியிருப்பார். அந்தக் காலத்தில் புரட்சிகரமான சிறுகதையாக இருந்தது. புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவை புனிதமானவையென்றே எனக்குத் தோன்றும். சின்ன வயதில் நமக்குச் சொல்லிக்கொடுத்த பழக்கம் இப்போதும் தொடர்கிறது. காலில் ஏதாவது புத்தகம் தட்டுப்பட்டுவிட்டால் கண்ணில் ஒற்றிக்கொள்வதுதான் அது.

மனித சமுதாயத்தை மாற்றியமைத்தது மொழி. எழுத்தும் பேச்சும் நம் எண்ணங்களை ஆவணப்படுத்தவும், அடுத்த தலைமுறைக்கு அதைக் கடத்தவும் பயன்பட்டன. கடந்த காலத்தை அறியவும், எதிர்காலத்தை நீட்சிமையாகப் பார்க்கவும் புத்தகங்களே நமக்குக் கற்றுத்தந்தன. புத்தகங்களில்லாத வாழ்க்கையை பெரும்பாலானோர் கற்பனை செய்து பார்க்க முடியாது. அதே நேரத்தில் புத்தகங்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதைப்போல வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்.

நூலகங்களை அடையாளமாகக்கொண்டு இயங்குகிற சமூகமே அற்புதமானது. ஓர் ஊரில் வழிகேட்கும்போது எதை அடையாளமாகக் கூறுகிறார்கள் என்பதில் அவர்கள் பண்பாடு நமக்குப் பரிச்சயமாகும். திரைப்பட அரங்கைக் கூறினால் அங்குப் போக்கே பொழுதுபோக்குதான். பள்ளியைக் கூறினால் படிப்பே பிரதானம். மதுக்கடையைக் கூறினால் போதையே பாதை. துணிக்கடையைக் கூறினால் அங்கு நாகரிகமே முக்கியம். உணவகத்தைச் சொன்னால் சாப்பாடே பிரதானம். நூலகத்தைச் சொன்னால் வாசிப்பே கௌரவம்.

நூலகத்தை அடையாளமாகச் சொல்கின்ற அளவுக்கு நூலகங்கள் பெருக வேண்டும் என்கிற அடிப்படையில்தான் பாரதிதாசன் நூலகங்களைப்பற்றி ஓர் அழகான கவிதையை எழுதினார். வீதிதோறும் நூலகங்கள் இருக்க வேண்டும் என்கிற பெருங்கனவு கண்டார் அவர். தமிழ்ச் சமூகம் அனைத்திலும் மேம்பட வேண்டும் என்கின்ற தணியாத ஆர்வம் கொண்டவர் அவர். தமிழ் நூல்கள் மற்ற மொழிகளிலெல்லாம் ஆக்கம் செய்யப்பட வேண்டுமென்ற ஆர்வத்தைக் கவிதையில் தேக்கியவர்.

பெரும்பாலும் பள்ளிகளில் நூலகங்கள் ஆசிரியர்களுக்கானதாகவே இருக்கின்றன. அங்கு மாணவர்களுக்கு நூல்கள் சுற்றுவிடப்படுகின்றன. எங்கள் சிறுவயதில் புத்தகம் கிடைப்பது அரிதாக இருந்தது. எனவே, கிடைத்த புத்தகங்களை மூச்சுவிடாமல் படித்து முடிப்போம். சிறுநூலாக இருந்தால் திரும்பத் திரும்பப் படிப்போம். பொழுதைப் போக்கவும் பொழுதை ஆக்கவும் நூல்களே அடைக்கலமாயின. நாங்கள் அச்சடித்த நூல்களால் சிறைப்படவில்லை, சிறகு பெற்றோம். எங்கள் இல்லத்தில் ‘சாணக்கியன் சபதம்‘ என்கிற நாடகப் புத்தகமொன்று இருந்தது. வாசிக்க ருசியானது. வேறு புத்தகங்கள் இல்லாதபோது அதைமட்டும் இருபது முறை நான் படித்திருப்பேன்.

கல்லூரியில் சென்றபோது அற்புதமான நூலகமொன்று அனைவருக்குமானதாய் அந்த வளாகத்தை அலங்கரித்தது. அறிவியல் தொடர்பான நூல்களுக்கே அங்கு ஆதிக்கம். வேளாண்மை தொடர்பான இதழ்களுக்கே அங்கே இருக்கை. இலக்கியம் முதலியவற்றில் மாணவர்கள் ஈடுபட்டு மூலத்தை மறந்துவிடக் கூடாதென்று தனியாகப் பூட்டி வைத்திருப்பார்கள். அதற்கென அனுமதி பெற்று வாசிக்க வேண்டும்.

வேளாண்மையைப் பொருத்தவரை மகத்தான புத்தகங்களெல்லாம் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆய்வு செய்பவர்களுக்கும் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் அந்த நூலகம் அமுதசுரபியாக இருந்தது. கல்லூரி நாட்களில் அந்த நூலகத்தை அதிகம் பயன்படுத்தியவர்களே வெளிநாடுகளில் விஞ்ஞானிகளாக வித்தகம் புரிந்தார்கள்.

ஆயிஷா நடராஜன் ஆசிரியப் பணி வகித்தவர். கடலூரில் நான் பணியாற்றுகிறபோதே அறிமுகமானவர். சமூகப் பணிகளிலும் கல்வியைச் செம்மைப்படுத்துவதிலும் ஆர்வம் கொண்டவர். இடைவிடாமல் இயங்குபவர். கடலூரில் இருக்கிற சிறைச்சாலை நண்பர்களுக்கு அறிவொளித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஒன்றில் முதன்முதலாகச் சந்தித்துக்கொண்டோம். அவர் ஓ ஹென்றி என்ற புனைப்பெயருடன் எழுதிய சிட்னி போர்ட்டர் பற்றியெல்லாம் விரிவாகப் பேசினார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நாங்கள் அங்கு வாசம் செய்பவர்களுக்குப் பேச்சுப் போட்டி நடத்தினோம், அவர்களுக்கு டிரைசெம் திட்டத்தின்கீழ் பயிற்சிகள் அளித்து அவர்கள் செய்த பொருட்களை விற்று வங்கிக் கணக்கில் வரவு வைத்து கணக்குப் புத்தகத்தை ஒப்படைத்தோம்.

நடராஜன் அவர்கள் கணையாழி நடத்திய சிறுகதைப்போட்டிக்கு ‘ஆயிஷா‘ என்கிற படைப்பை அனுப்பி முதல் பரிசு பெற்றார். அது மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு அவர் ‘ஆயிஷா‘ நடராஜன் என்றே அழைக்கப்படுகிறார்.

அவருடைய நூல்கள் பல்வேறு தளங்களில் பயணிப்பவை. அறிவியல் புதினம், சிறார்களுக்கான நூல்கள், கட்டுரைப் புத்தகங்கள், புனைகதைகள், அபுனைவுகள், கல்வி குறித்த பிரதிபலிப்புகள் என்று இடைவிடாமல் இயங்குபவர் அவர். அவருடைய நூல்களுக்கு எண்ணற்ற பரிசுகளும் கிடைத்திருக்கின்றன. ‘இது யாருடைய வகுப்பறை?‘ என்கிற நூல் மாணவர்களை மையமாக வைத்து இயங்க வேண்டிய வகுப்பறையைப்பற்றி உரக்கப் பேசுகிறது. உலக நாடுகள் கையாளும் கல்வி முறையையும், ஃபின்லாந்து, கியூபா போன்ற நாடுகளில் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிற சுதந்தரத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அந்த நூலுக்கும் பரிசு கிடைத்திருக்கிறது. இதுவரை 175 நூல்களை எழுதியிருக்கிறார். அண்மையில் இவருடைய நூல் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் வெளியிடப்பட்டது என்பது மகிழ்வளிக்கக்கூடிய செய்தி.

மணிவிழாவின்போது மண்டபத்தில் மணக்கோலத்தில் அமர்ந்து, மந்திரம் ஓத, மாலை மாற்ற, மாங்கல்யம் அணிவிக்க, மதிய உணவு படைப்பது வழக்கம். ஆனால் இவருடைய மணிவிழாவின்போது மாணவர்கள் அதைத் தங்கள் கொண்டாட்டமாக மாற்றினார்கள். அந்த விழாவின்போது இவருடைய நூல்கள் வெளியிடப்பட்டன. அப்போது என்னை வாசிப்பு குறித்த உரையை நிகழ்த்துமாறு விண்ணப்பம் வைத்தார்.

மணிவிழாவின்போது வெளியான மகத்தான நூல் நூலகாலஜி. நூலகங்களைப் பற்றிய அரிய செய்திகளைச் சுவையாகப் பேசிச் செல்கிறது. நூலின் தொடக்கத்திலேயே எவ்வாறு தனக்கு நூலகம் பிடித்தமான இடமாக மாறியது என்பதையும், நூலகத்தில் தான் தொலைந்து போனதையும் எழுதியிருக்கிறார். தொலைந்து போவதற்குச் சரியான இடமாக நூலகம்தான் இருக்க முடியும்.

படையெடுக்கிற நாடுகள் நூலகங்களை அழித்துச் சிதைப்பது வழக்கம். அறிவை நிர்மூலம் செய்வதுதான் அடிமைப்படுத்துவதற்கான முதற்படி. அடிமைப்படுத்த வேண்டுமென்று நினைப்பவர்களெல்லாம் அழகான நூலகங்களின் அடிமடியில்தான் கைவைப்பவர்கள். அலெக்சாண்ட்ரியாவிலிருந்து யாழ் நூலகம் வரை இது நிகழ்ந்திருக்கிறது. ஹிட்லர் சுவீடன்மீது படையெடுத்தபோது தேசிய ராயல் நூலகத்தின் மீதுதான் முதலில் குண்டு வீசினான் என்பதையும் குறிப்பிடுகிறார். லாவர் அருங்காட்சியகத்திலிருக்கிற அரிய ஓவியங்களை ஜெர்மனிக்கு அவன் கடத்த முயன்றபோது தொடர்வண்டி ஓட்டும் ஒரு நபர் உயிரைக் கொடுத்து தடுக்க முனைந்த கதை ‘ரயில்‘ என்கிற அற்புதமான திரைப்படமாக வந்தது.

தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் நூலகத்திற்குள் நுழைந்த ஒருவர் எப்படிப் படைப்பாளியானார் என்பதை விவரிக்கும் முதல் நிகழ்வாக ‘தற்கொலைக்கு உகந்த இடம் நூலகமல்ல‘ என்ற கட்டுரை பேசுகிறது. அகஸ்டின் என்கிற அமெரிக்கர் ‘உலகின் தலைசிறந்த விற்பனையாளர்‘ என்கிற புத்தகத்தை எழுதியவர். அதற்கு முன்பு மன உளைச்சலின் காரணமாக அவதிப்படுகிறார். உலகப் போரில் பணியாற்றியதால் நிகழ்ந்த உயிர்க்கொலைகளின்பொருட்டே அவருக்குக் குற்ற உணர்வு. ஜெர்மனியில் தன்னால் குண்டுவீசப்பட்டு எத்தனை குழந்தைகள் மரித்திருக்குமென்ற மிகைசிந்தனையில் தற்கொலைசெய்துகொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருகிறார். தற்கொலைகள் குறித்த கையேடுகள் சீருடை அணிந்திருப்பவர்களிடம்தான் அதிகத் தற்கொலைகள் நடக்கின்றன என்று விவரிக்கின்றன.

அகஸ்டின் துப்பாக்கி ஒன்றை வாங்கிக்கொண்டு அருகே தென்பட்ட கட்டடத்துக்குள் நுழைந்தார். அது ஒரு நூலகம். துப்பாக்கியில் தோட்டாவை நிரப்பிக்கொண்டிருந்தபோது புத்தகம் ஒன்று அவர் கண்ணில் படுகிறது. அதன் பெயர் ‘நான் இறந்துபோவதற்கு முன்‘. தலைப்பால் ஈர்க்கப்பட்டு துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு வாசிக்கத் தொடங்குகிறார். அதில் ருசி கண்ட அவர் அந்தக் குட்டி நூலகத்தில் எல்லாப் புத்தகங்களையும் வாசித்தார். அங்கேயே வாழத் தொடங்கி ‘ஓக் மாண்டினோ‘ என்கிற பெயரில் தன் மகளுக்குக் கதை சொல்வதைப்போல எழுத்த் தொடங்கினார். தலைசிறந்த எழுத்தாளராகப் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிற அளவிற்கு உயர்ந்த அவர் பேச்சாளராக, நூலக மேதையாக உயர்ந்தார். தற்கொலைகளைக்கூட நூலகங்கள் தடுத்துவிடுபவை என்கிறார் நூலாசிரியர்.

ஜார் மன்னன் உக்ரேனிய நூல்களைக் கைப்பற்றி அழிப்பதற்கு முன்னால் ஆயிரக்கணக்கான நூல்களை அயல்நட்பு வட்டாரத்தின் மூலம் நாட்டுக்கு வெளியே எடுத்துச்சென்ற வெர்னாட்ஸ்கி என்கிற அறிவியல் அறிஞரைப்பற்றி அறியாத தகவல்களையெல்லாம் வாசிக்க முடிகிறது. அவர் எழுதிய ‘உயிர் மண்டலம்‘ (Biosphere) என்கிற நூலும் தடைசெய்யப்பட்டதாகவே இருந்தது. உபரித்தகவல் ஒன்றையும் உதிர்த்திருக்கிறார். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம் உக்ரேனிய மொழியில் பேராசிரியரின்மையால் பாடத்தை நடத்த முடியாது என நிர்வாகம் முடிவெடுத்தபோது ‘ஒரு குறிப்பிட்ட மொழியில் பயின்றிட முடியாத நிலை இருந்தால் அந்தப் பல்கலைக்கழகத்தையே மூடிவிடுங்கள்‘ என்று லெனின் அறிவித்த அற்புதத் தகவலது. ஜெர்மானிய நாஜிப்படை வெர்னாட்ஸ்கியின் உலகப் புகழ்பெற்ற நூலகத்தைத் தரைமட்டமாக்குவதைத் தனி நோக்கமாக அறிவித்தபோது எப்படி அவர் காப்பாற்றினார் என்பது மயிர்க்கூச்செறிய வைக்கும் சம்பவம். இன்று உலகின் பிரம்மாண்டமான நூலகங்களில் ஒன்றாக கீவ் நகரில் ‘வெர்னாட்ஸ்கி தேசிய நூலகம்‘ அமைந்திருப்பது அவருடைய பங்களிப்பை நினைவுபடுத்தும்.

சர்வதேச அளவில் ஒன்பது தேசிய நூலகங்கள் முழுக்க முழுக்கப் பெண்களின் வாசிப்புக்காகவே மகளிர் நூலகமாக இருக்கிறது என்று கூறுகிறார். இஸ்லாமியப் பெண்மணியான ஃபாத்திமா அல்ஃபிரி மொரோக்காவில் அமைத்த நூலகம்தான் பாரபட்சமின்றி அனைவருக்காகவும் திறந்துவிடப்பட்ட முதல் நூலகமென்பதையும், அதுவரை அமைக்கப்பட்ட அனைத்து நூலகங்களிலுமே பெண்களுக்கு இடம் கிடையாது என்கிற அதிர்ச்சித் தகவலையும் நாம் பார்க்கிறோம். புரட்சி நிகழ்ந்த பிறகு சோவியத் மண்ணில் எழுத்தறிவு 19 சதவிகிதமே இருந்தது. கல்வி முக்கியம் என்பதை கருத்தில்கொண்டு அறிவொளி இயக்கம் போன்ற கற்றல் இயக்கத்தையும், இல்லந்தோறும் கல்வித் திட்டம் போன்ற கற்பித்தல் இயக்கத்தையும் முன்னெடுத்தவர் லெனின். வாசிப்பாளர்கள் ‘எனது முதல் ஆசிரியர்‘ என்கின்ற சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய நூலை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

ஐன்ஸ்டீனின் மூளை திருடப்பட்ட வரலாற்றையும் திருப்பி அளிக்கப்பட்ட வரலாற்றையும் இந்நூல் பேசுகிறது. மூளைகளில் இருக்கிற வேறுபாட்டைவிட எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்கிற வேறுபாடே முக்கியம். வெறும் அறிவியல் அறிஞராக மட்டும் அவர் விளங்கவில்லை. எழுபதாவது பிறந்த நாளில் அவர் அணுகுண்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு மிக மிக எளிமையாக மதிய உணவு அருந்தினார் என்றும், சொந்தமாகக் கார்கூட வைத்திருக்கவில்லை என்றும், கடும் குளிரிலும் மழையிலும் நடந்தோ பேருந்துகளிலோ பயணித்தவர் என்றும் படிக்கிறபோது புருவங்கள் மேலெழும்புகின்றன. அதனால்தான் அவர் காந்தியடிகளைப் பாராட்டி பின்னால் வரும் சந்ததிகள் இப்படி ஒருவர் வாழ்ந்தார் என்பதை நம்புவது கடினம் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்கர்கள் ஒரு காலத்தில் இடதுசாரி இலக்கியங்களையெல்லாம் கொளுத்தியிருக்கிறார்கள். நூலகங்களையே வெறுத்திருக்கிறார்கள். புகைப்பதையும் குடிப்பதையும் விரும்பி செய்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் ‘சிலந்தி மனிதன்‘ என்கிற கதை வாசிப்பை மீண்டும் துலங்க வைத்தது என்று தெரிவிக்கிறார். நிக்கலஸ் டெஸ்லாவைவிட எடிசன் அதிகம் அறியப்பட்டவர். எவ்வாறு டெஸ்லா புறக்கணிக்கப்பட்டார், இறுதியில் வறுமையால் இறந்து போனார் என்பதை விரிவாக எழுதியிருக்கிறார். தந்திரங்கள் தெரியாததால் விளம்பர உலகில் வெற்றிபெற முடியாமல் போனவர் அவர். பள்ளிக் கணிதத்தை மனத்திலேயே கணக்கிட்டு விடையை மட்டும் எழுதுமளவிற்கு விற்பன்னராக இருந்தவர் அவர். மாறுதிசை மின்சார ஆற்றலை அறிமுகப்படுத்தியவர். அப்படிப்பட்ட அந்த மனிதர் 117 புத்தகங்கள்மூலம் தனது கண்டுபிடிப்புகளைக் கைப்பட எழுதினார் என்பது அவருடைய மேன்மையைக் காட்டுகிறது. கடைசியில் நியூயார்க்கர் விடுதியில் 3327 எண்கொண்ட அறையில் ஒரு கோலி சோடா உடைக்கப்படுவதைப்போன்ற ஓசைகூட இல்லாமல் இறந்துபோய் விட்டார்.

விழியற்றவர்களுக்கான நூலகத்தைப்பற்றிப் படிக்கிறபோது வியப்பு ஏற்படுகிறது. புத்தகத் திருவிழாக்களில் விழியற்றவர்களுக்காகத் தனி வாசிப்பு அனுபவப் பகிர்வு அரங்கத்தை இணைக்க வேண்டும் என்கிற இவருடைய யோசனை மகத்தானது. பிரெய்ல் நூல்களைக்கொண்டு மார்த்தா அர்னால்ட் என்கிற பெண்மணி தொடங்கிய நூலகம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிய முடிகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆஸ்ட்ரோ-ஹங்கேரியப் பேரரசு அறிவு இயக்கத்தை முடக்கி மதவெறியை விதைத்த ஆண்டுகளில் கலிலியோவாதிகள் என்று அழைத்துக்கொண்ட சிந்தனாவாதிகள், சோஷலிச சமூகப் போராளிகள், புரட்சிகர ஜனநாயகவாதிகள் ஆகியோர் கலிலியோ வட்டம் என்கிற ரகசிய வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கினார்கள். அது பின்னர் 7000 புத்தகங்களுடன் நடமாடும் நூலகமாக ஆகியிருக்கிறது.

பட்டூரி நாகபூஷணம் நடத்திய படகு நூலகச் சேவையையும், கிருஷ்ணா நதி பேடாவடலபுடி-கொல்லூர் வழியாக அது 600 புத்தகங்களோடு செயல்பட்டதையும், ஆரம்பக் காலங்களில் அரசாங்கம் அறியாத இருளில் பயணிக்கும் ரகசியச் சேவையாக இருந்தது என்பதையும், பின்னர் அது ஏழு படகுகளில் 12,000 நூல்களோடு விஸ்தரிக்கப்பட்டதையும் படிக்கிறோம். அண்மைக் காலமாக சில ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வண்டிகளிலேயே சிறுநூலகத்தை வைத்திருக்கிறார்கள்.

தனியொரு மனிதரே புத்தகங்களோடு நடக்கும் நூலமாக மாறிய சம்பவம் போலன் சர்க்கார் என்பவருடைய அர்ப்பணிப்பை உணர்த்துகிறது. இரு தோள்களிலும் பைகளில் எழுச்சி நூல்களை எடுத்துக்கொண்டு நடைப் பயணம் செய்வதர் அவர்.

யாழ் நூலகம் மூன்று முறை எரிந்த வரலாறு குறித்தும் எழுதியிருக்கிறார். நாளந்தா பல்கலைக்கழகம் உண்மையில் பக்தியார் கில்ஜியால் எரிக்கப்படவில்லை, உள்ளூர் மத வெறியர்களால் எரிக்கப்பட்டது என்கிற தகவலும் உண்டு.

இந்த நூலை வாசித்த பிறகு இன்னும் ஆழமாக நூலகங்களை மக்கள் நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

பெட்டிச் செய்தி

அமெரிக்காவின் ரோஹ்டி தீவில் மனிதத் தோலில் உருவாக்கப்பட்ட தோல் அட்டைகள் கொண்ட 100 நூல்கள் உள்ள ஜான் ஹே நூலகம் உள்ளது என்கிற தகவலை ஆயிஷா அளிக்கிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஹௌட்டன் நூலகத்திலும் மனிதத் தோலால் செய்யப்பட்ட புத்தகம் இருந்திருக்கிறது. 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தப் புத்தகம் நீக்கப்பட்டு வேறொரு இடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: நூலகாலஜி
ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்
வெளியீடு:
விலை: ₹.90
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻வெ.இறையன்பு ஐஏஎஸ்

நன்றி: ராணி வார இதழ்

புத்தகம் வாங்க :  https://thamizhbooks.com/

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

  1. S.Ragunath

    ஆயிஷா இரா நடராஜன் அவர்களின் நூலகாலஜி புத்தகத்தில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தை பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையில் ‘உலகிலேயே மூன்று முறை எரித்து சாம்பலாக்கப்பட்ட ஒரே நூலகம் யாழ் பொது நூலகம்’ என குறிப்பிட்டுள்ளார்.

    1981ஆம் ஆண்டு சிங்களவர்களின் தாக்குதலால் நூலகம் எரித்து சாம்பலாக்கப்பட்டது. அதன்பிறகு 1988 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போர் சூழலின் காரணமாக ஆங்காங்கே குண்டுகள் பொழியப்பட்டது. அப்போது நூலகத்தை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்பட்டது. ஆனால் நூலகத்தில் உள்ள புத்தகங்களுக்கோ, ஏனைய இருப்புகளுக்கோ பாதிப்போ, நூலகம் சாம்பலாக்கப்படவோயில்லை. அது மட்டுமல்லாமல் அதன்பிறகு நூலகத்திற்கென எவ்வித தாக்குதலும் பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஆகவே இவ்விடயத்தை தங்களின் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    யாழ் பொது நூலகம் மூன்று முறை எரித்து சாம்பலாக்கப்படவில்லை.

    நன்றி,
    சாந்தி ஜொ (எஸ் ரகுநாத்)
    WhatsApp – 0094761769689

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *