அறிவியல் மைல்கல் 1:-
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பின் தங்குகிறதா இந்தியா..?
– ஆயிஷா இரா.நடராசன்
இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்பம் என்றால் அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான்.. ஒரு நாட்டில் எந்த அளவிற்கு சேர்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பதை வைத்துத்தான் அந்த நாடு அறிவியல் முறையில் எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்பதை பார்க்கிறார்கள்.. அதே சமயத்தில் அந்த நாட்டு மக்கள் எந்த நாட்டினுடைய சேர்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது என்பதையும் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்.. இந்த இடத்தில்தான் பெரும்பாலான இந்தியர்கள் இந்திய நிறுவனங்கள் இந்தியாவினுடைய மென்பொருள் மட்டுமல்ல கல்வித்துறை, மருத்துவத் துறை வரை அனைவருமே பெரும்பாலும் அமெரிக்காவின் சேர்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைதான் பயன்படுத்துகிறார்கள் என்கிற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.. நான் சாட் ஜிபி டி உட்பட அனைத்தையும் தான் சொல்கிறேன்.
இந்த இடத்தில் ஒரு கேள்வியை நான் எழுப்பிக் கொள்கிறேன் இந்தியாவுக்கு என்று ஏன் இந்திய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தேவை? உலகின் முன்னணி AI நிறுவனங்கள் உருவாக்கும் சாட் ஜிபிடி ஜெமினி கிளாடு போன்ற செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் இந்தியர்களுக்கும் மிகவும் பயனுள்ளவைதான். அவற்றை நிராகரிப்பது இந்த கட்டுரையின் நோக்கமால்ல. ஆனால் இந்தியாவின் எல்லா தேவைகளுக்கும் வெளிநாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு சேர்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மட்டுமே சார்ந்திருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.. யுவால் நோவா ஹராரி எனும் அறிஞர் சொல்வது போல ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது ஒரு பிரஜை போலத்தான்.. சிந்திக்கும் ஆற்றல் கொண்ட கணினி அடிப்படையான கருவியாகது இருப்பதால் நீங்கள் உங்கள் வீட்டில் அமெரிக்கர் ஒருவரை வேலைக்கு வைத்திருப்பதும் அந்த நாட்டினுடைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் இரண்டும் ஒன்றுதான்.. அந்த அடிப்படையில் பார்த்தால் நாம் இந்தியாவுக்குள் ஏற்கனவே எந்தெந்த நாடுகள் ஊடுருவி விட்டன என்பதை நினைத்துப் பார்ப்பதற்கு மனம் கூசுகிறது. நம்முடைய அடிப்படை தரவுகள் அபகரிக்கப்படுவதும் ஒரு வகை காலனித்துவம் தான்.
நம் நாட்டின் இறையாண்மை பாதுகாப்பு.. மற்றும் பல்வேறு அடையாளங்கள் குறிப்பாக அடிப்படை மொழிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் நமக்கென்று ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நம் நாடு உருவாக்க வேண்டும்.. ஏனெனில் இந்தியா ஒரு மொழி நாடு அல்ல.. ஒரு மொழி பிரபஞ்சம்! நம் நாட்டின் மிகப் பெரிய சவால் அதுதான். ஒரே ஒரு செயற்கை நுண்ணறிவு மாதிரி ஒன்றை வைத்துக்கொண்டு தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் வங்காளம் மராத்தி குஜராத்தி பஞ்சாபி ஒடியா அசாமி என்று போராட முடியுமா இதைத் தவிர ஒவ்வொரு மொழிக்குள்ளும் ஏராளமான வட்டார வழக்குகளும் உள்ளன இந்திய மொழிகள் பேச்சு வழக்குகள் கலாச்சார சூழல் உள்ளூர் அறிவு போன்றவற்றை அறிந்து கொள்ளும் ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வதுதான் பாதுகாப்பானது.. இந்த அர்த்தத்தில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த அறிவியல் துறையில் என்பதைப் பார்க்க வேண்டும்.. என்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.
ஏன் மொழிகள் சார்ந்து நாம் சிந்திக்க வேண்டும்.. ஏனென்றால் மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு அல்ல அது அறிவுக்கான கதவு.. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஆங்கிலம் மிக சிறப்பாக அறிவு தேடலின் கருவியாக பயன்பட்டு வருகிறது.. ஆனால் அதே சமயத்தில் தமிழில் அனைத்தையும் உருவாக்குவது என்பது நம் ரத்தத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட சவால்.. ஒரு விவசாயி ஆங்கிலம் கற்றுக்கொள்ளாததால் உலக அறிவியலை அணுக முடியவில்லை என்றால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் என்ன பயன்.. அறிவை அறிந்து கொண்டவர்களிடமிருந்து மட்டுமே பெறுகின்ற ஒரு நிலை இருந்த வரையில் அடிமையாக கிடந்தோம். நம்முடைய சொந்த மொழியில் அறிவை அணுகும் நமக்கு விளக்குகின்ற ஒரு கருவியை கையில் வைத்திருக்கும் காலத்திற்கு வந்துவிட்டோம்.. ஆனால் இதை முழுமையாக செயல்படுத்தும்பொழுதுதான் பல வகையான தீண்டாமை பெண் அடிமை உட்பட இருக்கின்ற வேற்றுமைகளை நாம் களைய முடியும்.. நம்முடைய நாட்டிற்கே உரிய இதுபோன்ற சிக்கல்களிலிருந்து விடுபட நம் நாட்டிற்கே உரிய தலைசிறந்த அனைவரையும் இந்திய அரசியல் சட்டத்தின்படி நடத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட வேண்டும்.
ஆனால் இந்த விஷயத்தில் இந்திய விஞ்ஞானிகள் நம்மை ஏமாற்றவில்லை. மிக அற்புதமான மைல்கற்களை அடைந்து நம்மை அவர்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.. சொன்னால் நம்புவது கஷ்டம்.. நம்முடைய நாடு,மென்பொருள் அவுட்சோர்ஸிங் நாடாக இருப்பதில் இருந்து மெல்ல மெல்ல நமக்கான சொந்த செயற்கை நுண்ணறிவு மாடல்ஸ் உருவாக்கும் நாடாக நாம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம்.. ஆனால் அதுகுறித்து யாரும் வெளியில் பேசுவதில்லை. ராக்கெட் விடுவதை மட்டுமே அறிவியல் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம்.. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்டிருக்கும் அற்புதமான முன்னேற்றங்கள் அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானிகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் நாடு என்கிற இடத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் நாடு என்கிற இடத்தை நோக்கி நம்மை அந்த விஞ்ஞானிகள் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட IndiaAI Mission, இவ்வளவு விரைவாக நமக்கு அற்புதங்களை நிகழ்த்தும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. இத்தனைக்கும் முதலில் 20,000 கோடி என்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீட்டை பாதியாகக் குறைத்து 10,371 கோடி என்று மத்திய அரசு மாற்றியது.. ISRO அமைப்பிற்கான இந்தியாவின் பட்ஜெட் ஒதுக்கீடு இதை விட நான்கு மடங்கு அதிகம்..2026 ஆகஸ்ட் நிலவரப்படி பகிரும் கணினிமய ஆற்றல் இந்தியாவைப் பொறுத்தவரையில் (SHARED COMPUTE CAPACITY ) 45000+GPUக்களாக உயர்ந்துள்ளது. 237 திட்டங்கள் 93.18 லட்சம் GPU மணிநேரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.. இதன் அர்த்தம் என்ன?
இந்தியாவிலேயே உருவாகி இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இந்திய மொழிகள் இந்திய சிக்கல்கள் போன்றவைகளை ஆழமாக புரிந்து கொள்ளும் நம்முடைய தொழில்நுட்பத்தை நோக்கி மிக வேகமாக நாம் நகர்ந்து வருகிறோம் என்பதுதான் இதன் அர்த்தம்.. மேற்கண்ட திட்டத்தின் அடிப்படையில் 506 திட்ட மாதிரிகளை நம்முடைய விஞ்ஞானிகள் வழங்கினார்கள் அவற்றை ஆய்வு செய்ததில் ஒன்றிய அரசு 20 ஆய்வுகளுக்கு ஒப்புதல் அளித்ததாக சொல்லப்படுகிறது..(இது மிக மிகக் குறைவு என்பது ஒரு புறம் இருக்கட்டும்)
இவற்றில் 12 உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் எல் எம் எம் என்கிற மல்டி மாடல் அமைப்புகள்
8 மாதிரிகள் செயல்திட்ட அடிப்படையில் எஸ்எல்எம் என்று அழைக்கப்படும் சிறு மற்றும் பிராந்திய மொழி மாதிரிகள்.
ஆச்சரியம் என்னவென்றால் வெறும் தட்டச்சு செய்யப்படும் தகவல்களை அதாவது செய்திகளை புரிந்துகொள்வது மட்டுமல்ல தகவல்கள் படங்கள் குரல் மற்றும் வீடியோக்கள் போன்ற அனைத்து தகவல்களையும் ஒன்றாக புரிந்து கொள்ளும் இந்தியாவுக்கென்றே இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுவிட்டது.. AI4BHARAT என்று அதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள் இதன் பின்னணியில் இருக்கும் மாபெரும் ஸ்தாபனம் ஐஐடி சென்னை!
IndicBERT, IndicBART, IndicTrance, மற்றும் Indic Trancsv2 22 இந்திய மொழிகளை கையாளும் இயந்திர மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை ஆச்சரியப்படும் வகையில் உருவாக்கி நம்முடைய சென்னை தொழில்நுட்ப கல்வி நிறுவன சார்ந்த விஞ்ஞானிகள் அசத்தியிருக்கிறார்கள்.
பேராசிரியர் மித்தேஷ் கப்ரா. லண்டனில் இருந்து வெளிவரும் டைம் இதழ் உலக அளவிலான 100 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப விஞ்ஞானிகளின் பட்டியலில் இவருடைய பெயரை எட்டாவதாகக் குறிவிட்டது. A14Bharat , அந்த மூலக்கருவிகளை தரவுத் தொகுப்புகளை உருவாக்குவதில் புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.. இதற்காக அவருடைய குழு ஆயிரக்கணக்கான மணி நேரம் உள்ளூர் பேச்சுகளை பதிவு செய்வதற்காக இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 500 மாவட்டங்களுக்கு பயணம் செய்தது. கப்ராவின் AI தரவுத்தொகுப்புகள் இந்திய அரசின் பாஷினி இயக்கம் மற்றும் பிராந்திய குரல் வழி தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருப்பது மட்டுமல்ல நமக்கே உரிய தொழில்நுட்பமாக வளர்ந்து ஆச்சரியம் தருகிறது.

நம் கவனத்தைப் பெறும் மற்றொரு விஞ்ஞானி பேராசிரியர் ப்ரத்யூஷ் குமார்.. இவரும் சென்னையில் உள்ள ஐஐடியின் பேராசிரியராக இருக்கிறார்.. சர்வம்AI என்கிற செயற்கை நுண்ணறிவு இந்திய மாதிரியை உருவாக்கியவர்.. சர்வம் AI என்பது 2023 ஆகஸ்ட் மாதம் பெங்களூரில் உள்ள விவேக் ராகவன் என்பவரோடு இணைந்து இவர் உருவாக்கியது. இது இந்தியாவுக்கான செயற்கை நுண்ணறிவு தன்னாட்சியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மொழிகள் மற்றும் உள்ளூர் வணிக தேவைகளுக்கு உகந்ததாக மேம்பட்ட குரல்வழி மற்றும் பன்மொழி மாதிரிகளை உருவாக்குவதில் இது கவனம் செலுத்துகிறது..A14Bhart, திட்டத்திலும் இவருடைய பங்களிப்பு உள்ளது. குறிப்பாக இந்திய மொழிகளுக்கான தரவுத் தொகுப்புகளை கொடுத்து பேச்சை உறையாக மாற்றுகின்ற கருவிகள் மற்றும் மொழிக் கருவிகளை உருவாக்குவதற்கான ஐஐடி சென்னையில் இயங்கும் அமைப்பை சேர்ந்து இயக்கிக் கொண்டிருப்பவர் என்று பிரதியூஷ் குமார் போற்றப்படுகிறார்.
செயற்கை நுண்ணறிவு புரட்சி என்பது இயந்திரங்கள் மனிதர்களைப் போல சிந்திக்கத் தொடங்குவது மட்டுமல்ல. மனிதர்களின் மொழியில் மனிதர்களின் அன்றாட பிரச்சனைகளை புரிந்து கொண்டு நமது வாழ்க்கையை மேம்படுத்தும் அறிவியல் கருவியாக செயற்கை நுண்ணறிவு மாற்றப்பட வேண்டும். நம் நாட்டிற்கே உரிய சிக்கல்களைப் புரிந்து கொண்டு இயங்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நமக்கு தேவை.. இந்திய மக்களின் மரபணு வேற்றுமை ஊட்டச்சத்து குறைபாடு, கிராமப்புற சுகாதாரம், டெங்கு மலேரியா ரத்தசோகை இந்தியப் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகள் போன்ற நமக்கே உரிய சிக்கல்கள் இருக்க அவற்றை புரிந்து கொள்ள அனைவருக்கும் பயன்படுகின்ற இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் கண்டிப்பாக தேவைப்படுகிறது. மருத்துவ வசதிகளின் விநியோகம் என்பது நம் நாட்டில் சமமாக இல்லை. சிறிய கிராமப்புறங்களில் சிறப்பு மருத்துவர்கள் இல்லாத ஒரு நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் அங்கு உதவ முடியும்.. என்பது ஒரு உதாரணம் தான்.
இந்தியாவிலேயே உருவாக்கப்படுகின்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் விலையின்றி வழங்கப்படும் ஒரு காலகட்டம் வரும் பொழுது நம்முடைய மளிகைக் கடைகள், தையல் காரர்கள், விவசாய உற்பத்தியாளர், சிறு தொழிற்சாலை வைத்திருப்பவர்கள் கிராமப்புற தொழில் முனைவோர் ஆகியோர் சிறப்பாக பயன் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
எனவே இந்திய மொழிகள் இந்திய வானிலை நம்முடைய விவசாயம் நம்முடைய நோய் அறிதல் நம் போக்குவரத்து இந்திய நகரங்களை கிராமங்களோடு இணைக்கின்ற அமைப்புகள் அடிப்படைக் கல்வி பொருளாதாரம் போன்ற அனைத்திற்குமான அணுகுமுறை சமநிலை என்பதை நாம் நம்முடைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்- என்கிற ஒன்றை உருவாக்குவதன் மூலம்தான் அடைய முடியும்.. அயல் நாட்டின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் அதை அடைய முடியாது.
இது யாருடைய தரவு இது யாருக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற கேள்விகள் எழுப்பப்படும் பொழுது அயல்நாட்டிலிருந்து நம்முடைய எல்லா நிகழ்ச்சிகள் கேள்விகள் அடிப்படைகள் அந்தரங்கங்கள் குறித்து ஒருவர் அறிந்து கொள்வது போலத்தான் நாம் அயல் நாட்டின் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது என்பதும் ஆகும்..
இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்த்தால் நம்முடைய நாட்டின் அடிப்படைத் தரவுகளை நாம் பயன்படுத்தி நம்முடைய நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுவதற்கு பதிலாக நம் அடிப்படை தரவுகளுக்குள் ஆய்வுகள் செய்து அயல்நாட்டு நிறுவனங்கள் பயனடைவது இன்னொரு மிகப்பெரிய பிரச்சனை.. நம் நாடு கம்ப்யூட்டர் சிப்ஸ் விஷயத்தில் வெளிநாட்டை சார்ந்திருக்கிறது, கிளவுட் கம்ப்யூட்டிங் என்பதற்கு வெளிநாட்டைச் சார்ந்திருக்கிறது என்கிற நிலையை மாற்றி அவற்றை நாமே உருவாக்குகின்ற ஒரு நிலையை நோக்கி விஞ்ஞானிகள் நம்மை எடுத்துச் சென்று வருவது நம்பிக்கையூட்டும் விஷயமாகும். இந்தியாவிற்கு என்று ஒரு டிஜிட்டல் இறையாண்மை உருவாக்கப்படுவதை இது குறிக்கிறது.
இன்னொரு விஷயம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை நாம் நடுநிலையான கருவிகள் என்று நினைத்துவிடக் கூடாது.. இந்த கருவிகள் மெல்ல மெல்ல நம் சிந்தனையை மாற்றக்கூடும் என்பதற்கு அல்காரிதம் பயன்படுத்தி ஆட்சிக்கு வருகின்ற தமிழகம் போன்ற சூழல்களையும் நாம் நினைத்துப் பார்க்க தவறக்கூடாது.. சமூக கருத்துக்கள் பாலின பார்வைகள் வரலாற்றுப் பார்வைகள்.. ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதிபலிப்பு இந்தியக் குடும்பம் கிராம வாழ்க்கை சாதி பாலினம் மதம் தொழில் கல்வி போன்றவற்றைப் பற்றிய கேள்விகளை இந்திய சமூகத்தின் பார்வையிலிருந்து புரிந்துகொள்ளும் ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நமக்குத் தேவை.. அதே சமயத்தில் மதச்சார்பின்மை சமத்துவம் போன்ற இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறுகளை கட்டி காப்பாற்றுகின்ற.. அமைப்பாகவும் அது இருக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய சவால்.
📚 எழுதியவர் :

✍🏻 – ஆயிஷா இரா.நடராசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

