அறிவியல் மைல்கல் 2:- க்வாண்டம் கணினி இயல்: ஆய்வு பந்தயமும் இந்தியாவும்– ஆயிஷா இரா.நடராசன் | Science Milestone Series | www.bookday.in

அறிவியல் மைல்கல் 2:- க்வாண்டம் கணினி இயல்: ஆய்வு பந்தயமும் இந்தியாவும் – ஆயிஷா இரா.நடராசன்

அறிவியல் மைல்கல் 2:-

க்வாண்டம் கணினி இயல்: ஆய்வு பந்தயமும் இந்தியாவும்

– ஆயிஷா இரா.நடராசன்

சாதாரண கணினிகளின் யுகம் முடிவுக்கு வருகிறது.. க்வாண்டம் கணினி யுகத்தை நோக்கி உலகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.. இந்த காலகட்டத்தில் இந்தியாவின் இடம் என்ன.. சமீபத்திய சாதனை என்ன.. இந்தத் துறையில் உலகெங்கும் என்ன நடந்து கொண்டிருக்கிறது நாம் இந்த பந்தயத்தில் எங்கே இருக்கிறோம். இதுகுறித்து அலசத்தான் இந்தக் கட்டுரை.

2026 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு முக்கியமான மைல் கற்களை நாம் இந்த துறையில் அடைந்திருக்கிறோம்.. க்வாண்டம் கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படுகின்ற அறிவியலில் இந்தியாவும்  தன்னுடைய பங்களிப்பை செலுத்த முடியும் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.. குறைவான நிதி ஒதுக்கீடு மற்றும் அரசியல் குறுக்கீடுகளை கடந்து நம்முடைய விஞ்ஞானிகள் நம் நாட்டை தலைநிமிர வைத்திருக்கிறார்கள்..

இந்த அறிவியல் சாதனைகளை அலசிப் பார்ப்பதற்கு முன்.. முதலில் நாம் க்வாண்டம் கணினி இயல் என்றால் என்ன என்று சுருக்கமாக பார்ப்போம்.. இப்போது நாம் பயன்படுத்துகின்ற கணினி உங்கள் கைபேசியில் இருப்பதிலிருந்து உங்கள் மேசையில் இருப்பதுவரை லாப்டாப்.. பேட் என்று நீங்கள் எப்படி அழைத்தாலும் கிளாசிக்கல் கம்ப்யூட்டர் அல்லது சாதாரண கணினி என்று அழைக்கப்படுகிறது.. எதிர்காலத்தில் மிக விரைவில் உருவாக்கப்பட இருக்கின்ற கணினிகள் குவாண்டம் கணினிகள் என்று அழைக்கப்படுகின்றன.

தொழில்நுட்ப அடிப்படையில் பார்த்தால் இவைகள் சிப்ஸ் என்று அழைக்கப்படும் வில்லைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அணுக்களையே பயன்படுத்த உள்ளன.. சாதாரண கணினி தரவுகளை சேமிக்க பிட்ஸ் என்று அழைக்கப்படும் அலகை பயன்படுத்துகிறது. 0 அல்லது 1 என்ற ஏதேனும் ஒரு நிலையில் மட்டும்தான் அதனால் இயங்க முடியும்.. ஆனால் விஞ்ஞானிகள் உலகெங்கும் உருவாக்கி வரும் க்வாண்டம் இயற்பியல் அடிப்படையில் செயல்படுகின்ற குவாண்டம் கணினிகள் க்யூபிட்ஸ்  எனப்படுகின்ற அலகை பயன்படுத்துகின்றன..

தற்போதைய சாதாரண கணினிகள் ஒரு ஸ்விட்ச் ஆன்(1) ஒரு ஸ்விட்ச் ஆஃப்(0) இருப்பது போல ஒரு நேரத்தில் ஒரு கணக்கீட்டை மட்டுமே செய்ய முடியும்.. ஆனால் குவாண்டம் கணினி என்பது சூப்பர் பொசிஷன் என்று அழைக்கப்படுகின்ற அணுக்களின் பண்பின் மூலம் ஒரு கியூபிட் ஒரே நேரத்தில் 0 மற்றும்1 ஆகிய இரண்டு நிலைகளிலுமே இருக்க முடியும் இதனால் ஒரே நேரத்தில் பல கோடி கணக்கீடுகளை அதனால் செய்ய முடிகிறது.

கணினிகள் எப்போதுமே அவை செயல்படும் வேகத்தை வைத்தே மதிக்கப்படுகின்றன. இதற்கு ப்ராசஸிங் ஸ்பீட் என்று பெயர் வைக்கிறார்கள்.. எளிய மற்றும் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சாதாரண கணினிகள் மின்னஞ்சல்.. வீடியோக்கள் செய்வதற்கு ஏற்றது. ஆனால் மிகவும் சிக்கலான கணித புதிர்களைத் தீர்ப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளை அதை எடுத்துக் கொள்ளும்.. அதே சமயத்தில் குவாண்டம் கணினி சாதாரண கணினிகள் தீர்க்க முடியாத மிக சிக்கலான கணக்கீடுகளை க்வாண்டம் முறையில் சில நிமிடங்களில் அல்லது விநாடிகளில் தீர்த்து வைத்து விடும்.. இது உலகத்தை மேலும் அதிவேகமாக்கப் போகிறது.

மற்றொரு முக்கியமான விஷயம் அதன் பிணைப்பு திறன்.. அதாவது எண்டாங்கில்மென்ட். சாதாரண கணினிகள் அதில் உள்ள ஒவ்வொரு பிட்டும் தனித்தனியாகவே செயல்பட முடியும் ஒன்றின் நிலை மற்றொன்றை பாதிக்காது.. ஆனால் ஒரு க்வாண்டம் கணினி முழுக்க முழுக்க குவாண்டம் எண்டாங்கில்மெண்ட் என்கிற பிணைப்பு திறனின் மூலம் இயங்குகிறது இதன் மூலம் இரண்டு கியூபீட்டுகள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு தகவல்களை பகிர்ந்து கொள்ளும் இது கணினியின் வேகத்தை பல்லாயிரம் மடங்கு உயர்த்தப்போகிறது.

இன்னொரு முக்கியமான அலகாக விஞ்ஞானிகள் முன் வைப்பது இயங்கும் சூழல் மற்றும் பராமரிப்பு சம்பந்தமான விஷயம். சாதாரண கணினி நமது அறை வெப்பத்திலேயே மிக சாதாரணமாக இயங்கக்கூடியது சிறிய மொபைல் ஃபோன் முதல் பெரிய சர்வர்கள் வரை எங்கும் அதனை பயன்படுத்த முடியும்.. ஆனால் குவாண்டம் கணினி அப்படிப்பட்டதல்ல அது மிக சாதாரண அறை வெப்பத்தில் இயங்காது. விண்வெளியை விட மிகவும் குளிர்வான அதாவது -273 டிகிரி என்ற மிகக் கடுமையான குளிர்ந்த வெப்பநிலையில் அதாவது அப்சல்யூட் ஸீரோ வெப்ப நிலையில்தான் இவைகளால் இயங்க முடியும். இதைப் பராமரிக்க பெரிய ஆய்வகங்கள் தேவை என்பதுதான் இப்போதைய நிலை.

ஆனால் பயன்பாடுகள் விஷயத்தில் நமக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.. சாதாரண கணினி இணையத்தில் உலா வர வீடியோ கேம்விளையாட அலுவலக வேலைகள் செய்ய மற்றும் ஆவணங்களை சேமிக்க தயாரிக்க பயன்படுகிறது. இதைத் தவிர தகவல் தொடர்பு என்பது இவற்றின் முக்கியமான பயன்பாடு..  க்வாண்டம் கணினிகள் அதைக் கடந்து மருத்துவ ஆய்வு, வானிலை முன்னறிவிப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பிரம்மாண்ட அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.. இது நம் அன்றாட வாழ்விற்கு வந்து சேர வேண்டி இருக்கிறது அதற்கான ஆய்வுகள்தான் உலகெங்கும் ஒரு போட்டி போல நடந்து கொண்டிருக்கின்றன..

சர்வதேச அளவில் இந்த விஷயத்தில் முன்னிலை பெறுவதற்கு வல்லரசு நாடுகளும் சர்வதேச மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நிலவுகிறது.. இந்த உலகளாவிய போட்டியை புரிந்து கொள்ள எளிமையான சில முக்கிய பிரிவுகள் கீழே தரப்படுகின்றன:

அமெரிக்கா VS சீனா.. நாடுகளுக்கு இடையிலான போட்டி என்று இதைச் சொல்லலாம்.. அமெரிக்கா குவாண்டம் தொழில்நுட்பத்தில் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில் இருக்கும் ஒரு நாடு. அரசு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் கூகுள் ஐபிஎம் போன்ற தனியார் நிறுவனங்களுக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை நிதி உதவியாக அரசு வழங்கி வருகிறது. தேசிய குவாண்டம் மும்முயற்சி சட்டம் என்கிற ஒன்றை இதற்காகவே அமெரிக்கா இயற்றி இருக்கிறது.. சொன்னால் நம்புவது கஷ்டம் அமெரிக்கர் ஒவ்வொருவரும் இந்த ஆய்வுக்காக வரி செலுத்தி வருகிறார்கள்.

சீனா இந்த பந்தயத்தில் அமெரிக்காவுக்கு மிகக் கடுமையான போட்டியை அளித்து வருகிறது க்வாண்டம் ஆராய்ச்சிக்காக உலகிலேயே மிகப்பெரிய தேசிய ஆய்வகத்தை சீனா அமைத்துள்ளது நேஷனல் லாபரேட்டரி ஃபார் குவாண்டம் இன்ஃபர்மேஷன் சயின்ஸஸ் மேலும் உலகின் முதல் க்வாண்டம் செயற்கைக்கோள் மிசியஸ் மூலம் விண்வெளியில் இருந்து பாதுகாப்பான குவாண்டம் தகவல் தொடர்பை அது சோதித்து சாதித்து உள்ளது.

இரண்டாவது மென்பொருள் மற்றும் வன்பொருள் நிறுவனங்களுக்கு இடையிலான மோதல்.. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் சொந்த க்வாட்டம் கணினிகளை உருவாக்க போட்டி போடுகின்றன.

Image

இந்த போட்டியில் முன்னால் இருப்பது ஐ பி எம் (IBM). பல நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவதற்காக தனது குவாண்டம் கணினிகளை கிளவுட் மூலம் முதன் முதலில் பொதுமகளுக்கு கொண்டு சேர்த்தது ஐபிஎம்.. தொடர்ந்து அதிக கியூபிட்கள் கொண்ட புதிய க்வாண்டம் சிப்புகளையும் அது அறிமுகம் செய்து வருகிறது..

அடுத்து வருவது கூகுள். 2019 ஆம் ஆண்டிலேயே உலகின் மிகச்சிறந்த சூப்பர் கம்ப்யூட்டர் 10,000 ஆண்டுகள் செய்ய வேண்டிய ஒரு கணக்கீட்டை தங்களது சைகா மோர் க்வாண்டம் கணினி வெறும் இரநூறு நொடிகளில் முடித்ததாக க்வாண்டம் சுப்ரீமசி என்ற மைல் கல்லை அது எட்டி விட்டதாக அறிவித்தது.

மூன்றாவது மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் மற்ற நிறுவனங்கள் வன்பொருளை உருவாக்கும்பொழுது இவர்கள் குவாண்டம் கணினிகளுக்கான மென்பொருள்கள் அல்காரிதம் மற்றும் கிளவுட் சேவைகளை உலகளாவிய வழக்கில் வழங்குவதில் போட்டியிடுகிறார்கள்..

இதைத் தவிர உலக அளவிலான போட்டியில் ஐரோப்பிய ஒன்றியம் க்வாண்டம் ஃபிளாக்ஷிப் என்கிற பெயரில் ஒரு பில்லியன் யூரோவிற்கு அதிகமான திட்டத்தை தொடங்கி 17 நாடுகள் ஒன்றிணைந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் தங்கள் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் சிப் தயாரிப்புத் திறனைப் பயன்படுத்தி புதிய ஆய்வுக்கூடங்களை ஏற்படுத்தி க்வாண்டம் கணினி இயல் நோக்கி மிக வேகமாக பயணிக்கின்றன..

இந்த இடத்தில் இந்தியாவின் நிலை என்ன என்பதை பார்ப்பதற்கு முன் ஏன் இப்படி ஒரு போட்டி நிலவுகிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.. இது வெறும் வர்த்தகம் சார்ந்த விஷயம் அல்ல. சந்தைகள் க்வாண்டம் கணினி மயமாவதற்கு இரண்டாவது பட்சமான இடமே அளிக்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் நாடு உலக அளவில் பின்வரும் அதிகாரங்களை பெற்றுவிடும் என்று நம்பப்படுகிறது..

  1. இணைய பாதுகாப்பு அதாவது சைபர் செக்யூரிட்டி இன்றைய உலகின் மிகப் பாதுகாப்பான பாஸ்வேர்டுகள் மற்றும் ராணுவ ரகசிய குறியீடுகளை ஒரு குவாண்டம் கணினியால் சில நிமிடங்களில் உடைத்து விட முடியும் எனவே முதலில் க்வாண்டம் கணினியை உருவாக்கும் நாடு மற்ற நாடுகளின் ரகசியங்களையெல்லாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் தங்கள் தகவல்களை உடைக்க முடியாத க்வாண்டம் பாதுகாப்பு அமைப்பாக மாற்றவும் முடியும்.
  2. பொருளாதாரம் மற்றும் மருத்துவம்.. புதிய மருந்துகளை மிக வேகமாக உருவாக்குவது உலகளாவிய வணிக போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலியை மேம்படுத்துவது என பொருளாதார ரீதியில் பல மடங்கு லாபத்தை குவாண்டம் கணினி இயல் வழங்கும்.
  3. சுருக்கமாக சொன்னால் இருபதாம் நூற்றாண்டில் விண்வெளிக்கு செல்வதில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இருந்த போட்டியைப் போலவே தற்போது இருபத்தொன்றாம் நூற்றாண்டில் குவாண்டம் ரேஸ் என்று அழைக்கப்படும் வல்லரசுகளுக்கு இடையிலான மிகப் பெரிய போட்டி நடந்து வருகிறது..
  4. இந்த குவாண்டம் போட்டியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றியோ அல்லது வர்த்தகம் குறித்தோ நடக்கின்ற பல விஷயங்கள் ரகசியமாக பேணப்படுகின்றன.

இப்போது நாம் இந்தியா  இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு கவனம் செலுத்தி இருக்கிறது என்பதை பார்ப்போம் .. ஜப்பான் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை விட மேலான இடத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்றால் நம்புவீர்களா..

நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல இன்றைக்கு உலகம் செயற்கை நுண்ணறிவு புரட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறது.. ஆனால் மிக விரைவில் அது குவாண்டம் கணினி புரட்சியாக மாறப்போகிறது. சாதாரண கிளாசிக்கல் கணினி என்பது கைவிடப்பட்டு க்வாண்டம் கணினிகள் எனும் புதிய கருவியை மானுடம் கையில் எடுக்கப்போகிறது. பல்வேறு துறை சார்ந்த முன்னேற்றங்கள் புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் சூழலில் இரண்டு உதாரணங்களை மட்டும் தருகின்றேன்.

ஒன்று தயாரிக்கப்படும் மருந்தின் மூலக்கூறுகள் குவாண்டம் அமைப்பில் தங்களுடைய அடிப்படை குணங்களை மாற்றிக் கொள்ளும் மிகத் துல்லியத்தை மையமாக வைத்து ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியே மருந்துகள் தயாரிக்கின்ற புதிய துறை ஒன்று உருவாகப் போகிறது

இரண்டாவது உதாரணம் நாம் இப்போது பயன்படுத்துகின்ற பேட்டரி.. க்வாண்டம் அளவில் அணுக்களின் உள்ளே இருக்கும் அணுவியல் நடத்தை காரணமாக நம்முடைய ஆற்றல் தொழில்நுட்பம் முற்றிலுமாக மாறப்போகிறது.. இந்தத் துறையைப் பொறுத்தவரையில் இயற்பியல் கணிதம் கணினி அறிவியல் பொருள் அறிவியல் எலெக்ட்ரானிக்ஸ் வெப்பவியல் என்பதன் உச்சமான க்ரயோஜனிக்ஸ் சைபர் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் சந்திக்கும் ஒரு மைப்புள்ளி எட்டப்பட்டிருக்கும்.

Image

இந்த இடத்தில் நான் இந்தியாவின் மிகப்பெரிய அரசு திட்டமான நேஷனல் குவாண்டம் மிஷன் எனும் திட்டத்தை குறித்து உங்களுக்கு விளக்க வேண்டும்.. தேசிய குவாண்டம் திட்டம் என்பது ஒரு வருடத்தில் தொடங்கி முடிந்துவிடுகின்ற திட்டமல்ல ஏனைய நாடுகள் ஏறக்குறைய வரும் முப்பதாண்டுகளுக்குத் திட்டம் தீட்டி அதற்கான நிதிகளை ஒதுக்கிவிட்ட பிறகு இந்தியாவைப் பொறுத்தவரையில் அடுத்த எட்டாண்டுகளுக்கான திட்டத்தை மட்டுமே அறிமுகம் செய்ய நம்மால் தொகை ஒதுக்க முடிந்தது..2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டம்..2031 ஆண்டு நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த திட்டத்திற்கென்று ஏறக்குறைய 6003.65 கோடி ரூபாய் மதிப்பிலான செலவு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிர்வகிக்கப்படும் தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குவாண்டம் ஆராய்ச்சியில் மற்றும் பயன்பாடுகளில் இந்தியாவை உலக அளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாக நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த திட்டத்தின் பணி நோக்கங்கள் மிக எளிமையானவை..

  1. குவாண்டம் கணினிகள்: மீ கடத்தி மற்றும் ஒளியியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எட்டாண்டுகளுக்குள் 50 – 1000 இயற்பியல் க்யூபிட்களை கொண்ட நடுத்தர அளவிலான குவாண்டம் கணினிகளை இந்தியாவிலேயே உருவாக்குவதுதான் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம்.
  2. க்வாண்டம் தகவல் தொடர்பு: இந்தியாவிற்குள் 2000 கிலோ மீட்டர் தொலைவிற்கு செயற்கைக்கோள் அடிப்படையிலான பாதுகாப்பான குவாண்டம் தகவல் தொடர்புகளை நகரங்களுக்கு இடையே ஏற்படுத்தி குவாண்டம் திரவி பகிர்வு மற்றும் பன்முனை வலையமைப்புகளை அமைத்தல்.. இதன் மூலம் நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்
  3. உணர்விகளின் அளவியல்: இந்தத் துறை சார்ந்த துல்லியமான நேர கணிப்பு வழி செலுத்துகின்ற இந்தியாவிற்கான ஜிபிஎஸ் மற்றும் தகவல் தொடர்புகளுக்காக உயர் உணர் திறன் கொண்ட காந்தமானிகளையும் அணு கடிகாரங்களையும் உருவாக்குதல்.
  4. இதர க்வாண்டம் பொருட்கள்: சாதனங்களை உருவாக்கியதற்காக புதுமையான இடவியல் பொருட்கள் மீ கடத்திகள் மற்றும் ஒற்றை ஃபோட்டான் மூலங்களை மட்டுமல்ல ஆழமாக வேலை செய்யும் துல்லிய கண்டறிவான்களையும் தொகுத்து உருவாக்குதல்.

இந்த நோக்கங்களுக்காக நான்கு கருப்பொருள் மையங்கள்(D- HUBS) உருவாக்கப்படுகின்றன.. இந்த திட்டம் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை பயன்பாட்டை ஒருங்கிணைப்பதற்காக முன்னணி நிறுவனங்களில் நிறுவப்பட்ட நான்கு (பிரிவு-8) லாப நோக்கமற்ற மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

  1. முதல் நிறுவனம் க்வாண்டம் கணினி இயல் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வியகத்தில் உருவாக்கப்பட்டுள்ள குவாண்டம் கணினி இயல் புத்தாக்கத்திற்கான அறக்கட்டளை.
  2. இரண்டாவது க்வாண்டம் தகவல் தொடர்பு குறித்த ஐஐடி மெட்ராஸ் சென்னை தொழில்நுட்ப கல்வியகத்தில் சி டாட் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  3. மூன்றாவது இடம் க்வாண்டம் உணர்தல் மற்றும் அளவியியல் ஐஐடி பாம்பேயில் தனி ஆய்வகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
  4. குவாண்டம் பொருட்கள் மற்றும் சாதனங்கள் தயாரிப்பதற்கு மற்றொரு முக்கியமான ஆய்வுக்கூடத்தை ஐஐடி டெல்லியிலே உருவாக்கியிருக்கிறோம்.

இன்னும் துல்லியமாக உள்ளே சென்று பார்க்கின்றபொழுது 14 தொழில்நுட்ப அணிகளும் 17 செயல்திட்ட குழுக்களும் 43 நிறுவனங்களையும் 17 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய..152 இந்திய ஆராய்ச்சியாளர்கள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்..

Rajamani Vijayaraghavan, associate professor, TIFR
Rajamani Vijayaraghavan, associate professor, TIFR (ராஜாமணி விஜயராகவன், இணைப் பேராசிரியர், TIFR)

இவர்கள் நிகழ்த்தியிருக்கும் சமீபத்திய சாதனைகள் உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன. இந்தியாவினுடைய சூப்பர் கம்ப்யூட்டிங் துறையின் அற்புதமான அறிஞர் ஆர் விஜயராகவன். இவரை மறந்துவிட்டு நாம் இந்தக் கட்டுரையை மேலும் தொடர்வது நியாயமில்லை.. தமிழ்நாட்டைச் சேர்ந்த பெருமைக்குரிய விஞ்ஞானி. இந்தியாவில் குவாண்டம் சர்க்யூட் மற்றும் ஆறு கியூபிட் சூப்பர் கம்ப்யூட்டிங் குவாண்டம் ப்ராசஸர் என்கிற ஒரு அமைப்பை உருவாக்கியவர் அவர்.

பேராசிரியர் அரிந்தம் கோஷ்.. இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் பெங்களூரில் இந்திய குவாண்டம் ஈகோசிஸ்டம் என்ற கட்டமைப்பின் முக்கிய பங்கு வகிக்கும் விஞ்ஞானி. இந்தியாவில் குவாண்டம் துறையில் கல்வியை அறிமுகம் செய்தவர்களில் ஒருவர் அவருடைய கூற்றுப்படி க்வாண்டம் புரட்சி என்பது ஒரு கருவியை உருவாக்குவது மட்டுமல்ல ஒரு தலைமுறையை குவாண்டம் விஞ்ஞானிகளாக மாற்றுவது ஆகும்.

டாக்டர் இந்தராக்ஷி ராய் சௌத்ரி.. இந்தப் பெயர் உலகையே அதிர வைத்த இந்தியக் குவாண்டம் அறிவியலின் அற்புதம் ஆகும் உயர் ஆற்றல் இயற்பியல் துறையில் இவர் பிட்ஸ் பிலானி கோவாவில் பணியாற்றி வருகிறார்.

பேராசிரியர் அரிதம் கோஷ் உருவாக்கிய 1000 கிலோ மீட்டர் க்வாண்டம் தகவல் தொடர்பு! இந்தியாவிற்கு மிகப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்த அற்புதமான ஆய்வு வெற்றி. 2026 ஏப்ரலில் க்வாண்டம் தகவல் தொடர்பின் மூலம் ஒரு தகவலை 1000 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு  வினாடி எனும் அளவுக்கும் மிகக் குறைவாக செலுத்தி சாதனை படைத்த இந்தியா.

பேராசிரியர் அரிதம் கோஷ் (Prof Arindam Ghosh)

இரண்டாவது சாதனை 120 கியூபிட் க்வாண்டம் சிமுலேஷன் என்கிற சாதனை. இங்கேதான் டாக்டர் இந்திராஷி ராய் சௌதரி வருகிறார் அவருடைய தலைமையிலான குழு ஐபிஎம் குவாண்டம் ஹார்ட்வேர் பயன்படுத்தி 120 கியூபிட்ஸ் உருவாக்கம் செய்து காட்டியது. க்வார்க்ஸ் மற்றும் குளவான்ஸ் என்கின்ற அடிப்படை துகள்களை பயன்படுத்தி.. அணுவாற்றலை உள்வாங்கி செயல்படுகின்ற கணினி ஆக்கம் சாத்தியமே என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியது.. இந்த பிரம்மாண்ட ஆய்வு வெற்றி பெற்றதன் பின்னணியில் ரீதாஜித் மஜூம்தார், எமில் மேத்யூ, நாதன் எர்னஸ்ட் நோபல்.. போன்றவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை வெளிவந்து லாட்டிஸ் காஜ் கோட்பாடு உண்மையான கால நேரப்படி சாத்தியமே என்பதை நிரூபித்தது.

இதன் மூலம் இந்திய ஆராய்ச்சியாளர்கள் உலகின் முன்னணி க்வாண்டம் ஹார்ட்வேர் பயன்படுத்தி 120 கியூபிட் வரை மிக கடினமான தொழில்நுட்ப சாதனையை உடைத்து உலக அளவில் பிரம்மாண்டத்தை நிரூபித்திருக்கிறார்கள்.

சாதாரண மக்களுக்கு இது ஏன் முக்கியம்.

நாளை வங்கித்துறை, ராணுவ துறை, அரசாங்கத்தினுடைய தகவல் தொடர்பு, பங்கு சந்தைகள், நம்முடைய சுகாதார புள்ளிவிவரங்கள் மட்டுமின்றி நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற தகவல் தொடர்பு முதல் அனைத்து இடங்களிலும் இருக்கின்ற நம்முடைய தரவுகள் பாதுகாக்கப்பட வேண்டும். குவாண்டம் கணினிகள் இருக்கும் எதிர்காலத்தில் இன்று பயன்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர வேண்டும்.. என்பதை எல்லாம் வைத்துப் பார்த்தால் இந்த இரண்டு முக்கிய சாதனைகளும் சமீபத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள திருப்புமுனை என்பது விளங்கும்.

எனவே இந்தியா குவாண்டம் கணினியை உருவாக்குவது என்பதையும் கடந்து க்வாண்டம் ஹார்ட்வேர் அடிப்படையில் எப்படி செயல்பாடுகளை உருவாக்க முடியும் என்கிற முயற்சியை நோக்கி சென்றுவிட்டது ஆனால் பலவீனமே இல்லாமல் இல்லை இந்தியாவின் மிகப் பெரிய பலவீனம் நாமே உருவாக்குகின்ற குவாண்டம் புராசசர் செயல்பாட்டு ஆய்வுகள் இன்னும் சிறிய அளவில்தான் உள்ளன. கூகுள் ஐபிஎம் போன்ற நிறுவனங்களுக்கு இணையாக நாம் நம்முடைய நாட்டின் குவாண்டம் கணினி வளத்தை மேலும் அதிகரிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் அதற்கான முதல் படியை நாம் எடுத்து வைத்திருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.

டாக்டர் இந்தராக்ஷி ராய் சௌத்ரி

குவாண்டம் உலகில் இந்தியாவின் வெற்றி இன்னும் ஒரு பெரிய க்வாண்டம் கணினியை உருவாக்குவது நோக்கி இல்லை.. இந்த கணினியை உருவாக்க தேவையான விஞ்ஞானிகள், ஆய்வகங்கள், இவற்றை உருவாக்குகின்ற தொழிற்சாலைகள், அல்காரிதம் சாரத கணித அமைப்புகள், தகவல் தொடர்பு வலை, கல்வி அமைப்புகள் மற்றும் அரசின் நீண்டகால முதலீடு ஆகிய அனைத்தையும் தூண்டக்கூடிய அளவில் சமீபத்திய இந்த கண்டுபிடிப்புகள் அமைந்திருப்பதால் இந்தியாவில் எப்படியாவது குவாண்டம் கணினி இயலை நோக்கிய பாய்ச்சல் ஏற்பட வேண்டும் என்கின்ற ஒரு மனநிலை பொதுவான அறிவியல் சூழலில் ஏற்பட்டிருக்கிறது.. இதனை அரசு சரியாக பயன்படுத்திக் கொண்டு ராக்கெட் விடுவதை கூட தனியார்மயம் ஆக்குவது மாதிரி இந்த ஆய்வுகளையும் தனியாருக்கு தாரை வார்த்து பணம் கொடுப்பதை தவிர்த்து அரசே முன்வந்து இதனை செயல்படுத்த வேண்டும்.

அமெரிக்கா குவாண்டம் இயந்திரத்தை பெரிதாக்குகிறது. சீனா க்வாண்டம் உள்கட்டமைப்பை விரிவாக்குகிறது. ஐரோப்பா க்வாண்டம் அறிவியலை தொழில்துறையுடன் இணைக்கிறது.. அங்கெல்லாம் பெரிய அளவில் இதை செய்து கொண்டிருப்பவர்களை உற்றுப் பார்த்தால் தெரியும் இந்த வேலையை அங்கு செய்து கொண்டிருப்பதில் 10 பேரில் ஒருவர் இந்தியராக இருக்கிறார்..

இந்தியா இப்போது க்வாண்டம் திறனை ஒரு தேசிய அறிவியல் இயக்கமாக மாற்ற வேண்டியுள்ளது.. இந்தியாவின் சவால் இந்த பாய்ச்சலை வெறும் ஆய்வக சோதனைகளாக நிறுத்திவிடாமல் உலகத் தரமான உள்நாட்டின் தயாரிக்கப்பட்ட கணினி ஆக்கமாக மாற்றுவது ஆகும். ஆனால் அதற்கான படிநிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் நம்முடைய விஞ்ஞானிகளான ஆர் விஜயராகவன் இந்திராக்ஷி ராய் சௌத்ரி, அரிதம் கோஷ், ஊர்வசி சின்ஹா, சி எம் சந்திரசேகர் போன்றவர்கள் எல்லாம் மிகுந்த நம்பிக்கையை தருகிறார்கள். அவர்களின் எண்ணங்களை செயலாக மாற்றுகின்ற பொறுப்பு ஒன்றிய அரசினுடையது.

📚 எழுதியவர் : 

✍🏻 – ஆயிஷா இரா.நடராசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *