அறிவியல் மைல்கல் 3:- நானோ தொழில்நுட்ப அறிவியல் திணறுகிறதா இந்தியா? – ஆயிஷா இரா.நடராசன் | Science Milestone Series | www.bookday.in

அறிவியல் மைல்கல் 3:- நானோ தொழில்நுட்ப அறிவியல் திணறுகிறதா இந்தியா.? – ஆயிஷா இரா.நடராசன்

அறிவியல் மைல்கல் 3:-

நானோ தொழில்நுட்ப அறிவியல் திணறுகிறதா இந்தியா?

– ஆயிஷா இரா.நடராசன்

நானோ தொழில்நுட்பம் உலகளாவிய போட்டி ஏன்?

நான் இந்த கட்டுரையின் தலைப்பை கொஞ்சம் மாற்றி ரிச்சர்ட் ஃபைன்மேன் எனும் மாமனிதரின் கனவிலிருந்து இந்தியாவின் நானோ பாய்ச்சல் வரை என்று கொடுக்கலாம்.. அப்படி இந்தியா இந்த துறையில் ஜொலிக்கிறது என்று ஒரு பத்தாண்டுகளுக்கு முன் எழுதியிருக்க முடியும்.. ஏனெனில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து நானோ தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது.. தற்போதைய நிலை என்ன இந்த துறையில் நடக்கும் உலகளாவிய இந்திய விஞ்ஞானிகளின் போராட்டம் எத்தகையது.. அதைப் பார்ப்பதற்கு முன் நானோ தொழில்நுட்பம் என்றால் என்ன என்கிற அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இருபத்தோராம் நூற்றாண்டின் அறிவியல் துறை என்று நாம் செயற்கை நுண்ணறிவை குறிப்பிடுகிறோம் ஆனால் நானோ தொழில்நுட்பம் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு சாத்தியமில்லை.. பொதுவாக எந்தவொரு அறிவியல் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருப்பது ஒரு மாபெரும் அறிஞனின் ஒற்றை கேள்வி.. ஒரு நூற்றாண்டு முழுவதையும் ஆக்கிரமிக்கும் மிகச் சிறப்பான கேள்வியை சமூகத்தை நோக்கி வீசி எறியும் ஒருவன்தான் வரலாற்றில் இடம் பிடிக்கிறான்.. அதுதான் அறிவியலின் அடிப்படை. அந்த முறையில் ரிச்சர்ட் ஃபைன்மேன் 1959 ஆம் ஆண்டு.. ‘அணுவுக்குள் ஏராளமாக இடம் இருக்கிறது போலிருக்கிறதே.. பிரிட்டானிகா கலைகளஞ்சியத்தை.. ஒரு குண்டூசி முனையில் நிரப்ப முடியுமா?’ என்ற உலகப் பிரசித்திப் பெற்ற ஒற்றைக் கேள்வியின் வழியே வளர்த்தெடுக்கப்பட்டதுதான் நானோ தொழில்நுட்பம்.

Dr. Narottam Sahoo on X: "December 29 | STEM History ...

‘ஒரு அணுவுக்குள் ஏராளமான இடம் இருக்கிறது’ என்கிற ஒரு வாசகம் ஒரு துறையை உருவாக்கி விட முடியாது தான்..1974 ஆமாண்டில் நரியோ டானிகுச்சி எனும் ஜப்பானிய விஞ்ஞானி நானோ தொழில்நுட்பம் என்கிற சொல்லாக்கத்தை அறிமுகம் செய்கிறார். மிகத் துல்லியமாக நானோஸ்கேல் என்று அழைக்கப்படுகின்ற அணுவின் உள்ளே இன்னும் பலபடி நிலைகள் குறைவான இடத்தை அளக்கக்கூடிய மில்லிமீட்டர் சென்டிமீட்டர் போல நானோமீட்டர் என்கிற ஒன்றை அவர் அறிமுகம் செய்தார்.

அணுக்கள் அளவில் சுருக்கப்பட்ட ஒரு பொருள் அந்த அளவில் பண்புகள் மாறி செயல்படுகிறது என்கிற அடிப்படைதான் இந்த குறிப்பிட்ட அறிவியல் உலகத்தின் அடிப்படை ஆகும். உதாரணமாக தங்கம் பார்ப்பதற்கு பளபளப்பாக நாமெல்லாம் ஈர்க்கப்படும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கலாம் ஆனால் துகள் அளவிற்கு குறைக்கப்பட்டு அணு அளவில் தங்கம் என்பது எப்படி செயல்படுகிறது என்று யோசித்துப் பார்த்தால் அது மருத்துவத் துறையில் இன்று ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சாதனைகள் ஆயிரக்கணக்கில் அடங்கும்.. மருத்துவ இமேஜிங், பயோசென்சார், புற்றுநோய் ஆய்வு மற்றும் மருந்துகளின் விநியோகம் உட்பட ஏராளமான பயன்பாடுகளோடு நானோ அளவில் தங்கம் பயன்படுகிறது.

ஒரு பொருளின் வேதி பண்பு என்பது மூலக்கூறுகளாகவும் நம் முன்னால் வடிவம் பெற்று அது இருக்கும் நிலையிலும் தீர்மானிக்கப்படுவதில்லை.. மாறாக அது எந்த அளவீட்டில்.. இருக்கும் பொழுது பயன்படுத்துகிறோம் என்பது அதன் உலகத்தையே மாற்றுகிறது.. முன்பு தனித்தனி கருவிகளாக இருந்த பலவற்றை ஒன்றிணைத்து இன்றைக்கு நம்முடைய திறன் பேசி அனைத்தையும் செய்தொடுகிறது நம்முடைய திறன்பேசி உள்ளே.. கடிகாரம் முதல் புகை படம் எடுக்கும்.. வீடியோ பிடிக்கும் கருவி வரை ஏராளம் உள்ளன. காரணம் நானோ தொழில்நுட்பம்.

Nano Technology for RAS Prelims: Basics, Types and ...

நாம் ஒரு மீட்டர் என்பதை எடுத்துக் கொள்வோம்.. அதில் 100 சென்டி மீட்டர் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.. ஒரு மீட்டரில் ஒரு பில்லியனின் ஒரு பகுதி ஒரு நானோ மீட்டர் என்று அழைக்கப்படுகிறது.. ஒரு மனிதத் தலைமுடியின் தடிமன் சுமார் 50,000 – 1,00,000 நானோமீட்டர்கள் அளவில் இருக்கும்.. இப்போது நானோமீட்டர் என்பது எவ்வளவு சிறியது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.. அந்த மிகச்சிறிய அளவீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஒரு பொருள் அந்த நானோ உலகில் குவாண்டா அளவில் வேறு மாதிரியாக செயல்படுகிறது. நானோ என்பது வெறும் மிக சிறியது என்பதல்ல.. ஒரு பொருளை நானோஸ்கேலுக்குக் கொண்டு வந்தால் அதன் இயற்பியல் வேதியியல் மின்சார ஒளியல் பண்புகள் அனைத்தும் மாறுகின்றன.

நானோ தொழில்நுட்பம் என்பது ஒரு தனித்துறை அல்ல.. இயற்பியல், வேதியியல், உயிரியல், மருத்துவ இயல், மின்னணுவியல், பொருட்களுக்கான அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என்கிற யாவற்றையும் இணைக்கும் ஒரு பாலமாக இருப்பது நானோ தொழில்நுட்பம்.

எனவே ஒரு நாட்டில் இந்தத் துறையின் முன்னேற்றம் என்பது மருத்துவம் மின்னணுவியல் ஆற்றல் இயல் குடிநீர் விவசாயம் சுற்றுச்சூழல் இயல் விண்வெளி இயல் என பல்வேறு துறைகள் சார்ந்து முன்னேற்றத்தைக் கொடுக்கும்.. என்பதால் நானோ தொழில்நுட்பம் குறித்த உலகளாவிய போட்டி மிகக் கடுமையானதாகும்.

இந்த அறிவியல் துறையின் அடிப்படை அறிவோம்.

இரண்டுமே அணுக்கள் தானே இதில் என்ன வேறுபாடு என்று நீங்கள் கேட்கலாம் சாதாரண நிலையில் உள்ள ஒரு உலோகத்திற்கு பல்க் மெட்டல் என்று பெயர். நானோ அளவிற்கு சுருக்கப்பட்ட அதன் வடிவம் நானோ மெட்டல் என்று அழைக்கப்படுகிறது.

இவை இரண்டும் பெரிய அளவிற்கு வேறுபடுகின்றன இயற்பியல் மேதியியல் மற்றும் ஒளியியல் பண்புகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுகின்றன.. நானோ தொழில்நுட்பம் மிகவும் மேன்மையானதாக கருதப்படுவதற்கு மிகச் சிறிய அளவில் பொருட்கள் முற்றிலும் மாறுபட்ட மற்றும் வியக்கத்தக்க புதிய குணங்களை வெளிப்படுத்துவதுதான் காரணம். இவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகள் மற்றும் நானோ தொழில்நுட்பத்தின் மேன்மைகளை நாம் இப்போது புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

முக்கியமான விஷயம் உலோகத்தின் ஒரு அணுவை நானோ அளவிற்கு அவர்கள் வைப்பது இல்லை. அது ஏற்கனவே  0.1 நானோமீட்டர் அளவில்தான் இருக்கும். நாம் செய்வது பல லட்சம் மற்றும் ஆயிரக்கணக்கான அணுக்களால் ஆன ஒரு சிறிய துகளின் அளவை நானோமீட்டர் அளவிற்கு குறைப்பது.. அணுக்களுக்கு இடையிலான வெற்றிடங்களை அப்புறப்படுத்தி அவற்றை அருகில் வைத்து அந்த பொருளை சிரிதாக்குவது.. மிகவும் பிடித்த உலோகமான தங்கத்தை எடுத்துக் கொள்வோம்.. சாதாரண தங்கத் துண்டு பல கோடி கோடி அணுக்கள் ஒன்றாக இணைந்த பெரிய அமைப்பு.. இது நமக்கு தருகின்ற முக்கியமான பயன்களைப் பற்றி நமக்குத் தெரியும்.. ஆனால் அதை மிகச்சூரிய துகள்களாக பிரித்து தனித்தெடுத்து அந்த துகள்களுக்கு உள்ளே .. இருக்கின்ற அணுக்களுக்கு இடையிலான வெற்றிடங்களையெல்லாம் முற்றிலும் அப்புறப்படுத்தி அந்த பெரிய பொருளை சிறிதாக்குவது அதை நாம் படிப்படியாகத்தான் செய்கிறோம்.. நானோ லிதோக்ரபி என்று இதனை அழைக்கிறார்கள்..

முதலில் வெட்டுதல், அரைத்தல், தேய்த்து சிறிதாக்குதல், இயந்திர அரைத்தல், இயந்திரத்தால் நுண்ணியதாக செய்தல் இறுதியாக நுண்வடிவ பதிப்பு அல்லது நுண்கட்டமைப்புப் பதிப்பை உருவாக்குதல் என்பதுதான் நானோ லிதோக்ரபி.. குறைக்கடத்திகள் உருவாக்கத்தில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. ஒளி அல்லது எலெக்ட்ரான்களின் ஒற்றை கீற்றை பயன்படுத்தி மிக நுண்ணிய வடிவங்களை ஒரு மேற்பரப்பில் உருவாக்கும் செயல்முறை இது.

ஒரு பெரிய பொருளை நானோ ஸ்கேல் அளவிற்கு கொண்டு செல்லும் டாப் டவுன் முறையில் வெட்டுதல் அரைத்தல் இயந்திரத்தால் நுண்ணியதாக செய்தல் நுண்கட்டமைப்பு பதிப்பு போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.. அதன் பிறகு இந்த நுண்துகல்களை ஒன்றிணைத்து பாட்டம் அப் என்கின்ற முறையில் இந்த நுண் துகள்களால் ஆன உலோகத்தை கட்டமைக்கிறார்கள்.. இதனால் ஏற்படும் பயன்களை பற்றி சிறிது பார்ப்போம்..

  1. முதலில் மேற்பரப்பு பரப்பளவு சாதாரண நிலை உலகத்திற்கு மிகவும் குறைவு ஆனால் அதே உலகத்தை நானோ நிலை உலோகமாக மாற்றுகின்ற பொழுது மேற்பரப்பு பரப்பளவு என்பது மிக மிக அதிகமாக மாறுகிறது
  2. வேதி வினைத்திறன் சாதாரண உலோகத்திற்கு மந்தமாக இருக்கிறது ஆனால் அதே சமயம் துரிதமாக வினையாற்றுகின்ற அதிவேக வினைத்திறனை நானோ வடிவம் பெறுகிறது
  3. மூன்றாவது மிக முக்கிய அம்சம் நிற மாற்றம்.. தங்கத்தை எடுத்துக் கொண்டால் அது மஞ்சள் நிறத்திலும் வெள்ளி சாம்பல் நிறத்திலும் பளபளப்பதை நாம் பார்க்கிறோம்.. ஆனால் நானோ நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்கத்தை நீங்கள் பார்த்தால் அது சிவப்பு நிறத்திலோ அல்லது ஊதா நிறத்திலோ இருக்கிறது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் நானோ நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஒரு உலோகம் ஒளியியல் முறையில் வேறுபடுகிறது.
  4. அடுத்த முக்கிய மாற்றம் உருகுநிலை சம்பந்தமானது.. பொதுவாக சாதாரண உலோகத்திற்கு நிலையான அதிக உருகுநிலை இருக்கும். ஆனால் நானோ நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஒரு உலோகம் மிகக் குறைந்த வெப்ப நிலையிலேயே உருகக்கூடியதாக இருக்கிறது.. இது பொருட்களின் கட்டமைப்பில் நமக்கு மிகவும் உதவுகின்ற ஒரு அம்சமாகும்.
  5. இறுதியாக காந்த மற்றும் மின் பண்புகள்.. இந்த விஷயத்தில் கடத்தும் திறன் சாதாரண உலோகத்தைப் பொறுத்தவரையில் இருப்பதைவிட குவாண்ட விளைவுகளால் மின்கடத்தும் திறனும் காந்த தன்மையும் ஒரு நானோ பொருளுக்கு பல மடங்கு அதிகமாக இருப்பதை பார்க்கிறோம்.

நானோ தொழில்நுட்பம் சக்தி வாய்ந்ததாகவும் மேன்மையாகவும் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களை அறிவியல் முன்வைக்கிறது

  1. மேற்பரப்பு பரப்பளவு அதிகரித்தல் (INCREASED SURFACE AREA) ஒரு பெரிய உலோக கட்டியை சுருக்கிக் கொண்டே போய் சிறு சிறு துகள்களாக உடைத்து இணைக்கும் பொழுது அதன் ஒட்டுமொத்த மேற்பரப்பு பரப்பளவு பிரமாண்டமாக அதிகரிக்கிறது. இதனால் உலோகத்தின் அணுக்கள் வெளிப்புற சூழலுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படுகின்றன இதன் விளைவாக மிகச் சிறந்த ஊக்கியாக(CATALIST) செயல்பட்டு வேதிவினைகளை துரிதப்படுத்தும் தன்மை ஏற்படுகிறது
  2. குவாண்ட விளைவுகள்: பொருட்களை நானோ அளவுக்கு நாம் சுருக்கும்பொழுது சாதாரண இயற்பியல் விதிகள் மாறி குவாண்ட இயற்பியல் விதிகளை அவை பெறுகின்றன.. இதனால் சாதாரண நிலையில் மின்சாரத்தை கடத்தாத சில பொருட்கள் நானோ நிலையில் மிகச் சிறந்த கடத்திகளாக மாறுகின்றன பொருட்களின் வலிமை நெகிழ்வுத் தன்மை மற்றும் ஒளியை உறிஞ்சும் திறன் ஆகியவை வியக்கத்தக்க வகையில் மேம்படுகின்றது.

உண்மையான உலகின் இரண்டு உதாரணங்களே என்னால் கொடுக்க முடியும்:

  1. தங்கம்(GOLD): நாம் அன்றாடம் பார்க்கின்ற தங்கம் வேதி வினைகளில் எளிதில் ஈடுபடாது(INERT). ஆனால் அதை நானோ தங்கமாக மாற்றும்பொழுது அது புற்றுநோய் செல்களை கண்டறிந்து அழிக்கும் மருத்துவ காரணியாக மாறுகிறது.
  2. வெள்ளி(SILVER): நானோ வெள்ளி மிகச்சிறந்த பாக்டீரியா எதிர்ப்புப் பண்பைக் கொண்டிருப்பதால் மருத்துவ கட்டு துணிகள் மற்றும் நீர் சுத்திகரிப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது..

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.. இந்தத் துறையில் உலக அளவிலான போட்டி என்பது எதனால் உருவானது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

நானோ தொழில்நுட்பமும் இந்திய விஞ்ஞானிகளும்.

இந்தத் துறையில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து தற்போது நாம் பார்க்க வேண்டும்.

ஒன்றை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் உலக நானோ தொழில்நுட்ப போட்டியில் சீனா மிகப் தெளிவாக முன்னிலையில் உள்ளது. 2024 தரவுகளின் அடிப்படையில் சீனா உலக நானோ ஆய்வுக்கட்டுரைகளில் 46 சதவீத பங்கை பெற்றிருந்தது. இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது அதற்கு அடுத்த முக்கிய நாடுகள் என்றால் அமெரிக்கா, தென் கொரியா, ஈரான், ஜெர்மனி, ஜப்பான் போன்றவை..

ஆனால் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே ஒரு நாட்டின் நானோ தொழில்நுட்ப ஆற்றலை அளந்து சொல்ல முடியாது.

இந்த ஆய்வுக் கட்டுரைகளில் வெளியான கண்டுபிடிப்புகள் உரிமங்களாக மாற்றப்பட்டு.. உரிமங்கள் தொழில்துறையினுடைய பொருள் உருவாக்கமாகவும் அதன் சந்தை மற்றும் பயன்பாடு என்பதாகவும் மாற வேண்டும்.

ஒரு நாட்டின் இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை அந்த நாடு குறை கடத்திகள் உருவாக்கும் ஆற்றலை வைத்து கணக்கிடுகிறார்கள். அதைத் தவிர அங்கிருக்கக்கூடிய ஆய்வு கட்டமைப்புகளை வைத்தும் தீர்மானிக்கிறார்கள். இந்த விஷயத்தில் இந்தியாவில் மிகப் பெரிய இடைவெளி நிலவுகிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இந்தியா எங்கே நிற்க நிற்கிறது. இந்தியாவை நாம்  மதிப்பிட வேண்டும் என்றால் நம்முடைய ஆய்வு செய்வதற்கான ஆற்றல் மிக அதிகம். எனவே ஆய்வுக்கட்டுரைகள் நிறைய வெளிவருகின்றன ஆனால் அவற்றை பொருட்களாக மாற்றுகின்ற பிரம்மாண்ட உற்பத்தி தொழிற்சாலைகளை உருவாக்குதல் என்கிற விஷயத்தில் நாம் பின் தங்கி இருக்கிறோம்.

Nano Digest Magazine launched by Prof CNR Rao - The ...

 

நானோ-மெட்டீரியல் எனப்படும் நானோ பொருட்கள் விஷயத்தில் நம் நாடு வலுவான இடத்தை அடைவதற்கு சிஎன்ஆர் ராவ் போன்ற மாமனிதர்களின் பங்களிப்பு போற்றத்தக்கதாகும் 20 ஆண்டுகளுக்கு முன் சீனா செய்த ஒரு முக்கிய வேலையை தற்போது தான் 2025 ஆம் ஆண்டு நாம் ஏற்படுத்தினோம் நேஷனல் ப்ரோக்ராம் ஆன் நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி.. நானோ மிஷன் என்பதுதான் அது தேசிய அறிவியல் தொழில்நுட்பத்துறை மூலம் நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப  ஆராய்ச்சி என்பதை நோக்கிய இந்தியாவின் தேடல்..

ஆனால் சமீபத்திய மிகப்பெரிய அதிர்ச்சி தேசிய அறிவியல் தொழில்நுட்பத்துறை நானோ மிஷன் என்பதன் கீழே செயல்திட்டங்கள் எதையும் ஆதரிக்கவில்லை என்கிற ஒரு செய்தி நம்மை தாக்குகிறது.. நானோமிஷன் இந்தியாவுக்கு ஒரு அடித்தளத்தை அமைத்து விட்டதா அடுத்த கட்டத்திற்கு புதிய தேசிய அளவிலான செயல்திட்டம் என்ன போன்ற கேள்விகளை நாம் எழுப்ப வேண்டி இருக்கிறது.. நானோ விஞ்ஞானிகளை நம் நாடு கைவிடுவது ஏன் என்று நாம் கேட்க வேண்டியிருக்கிறது.. ஏன் திடீரென்று நானோ மிஷன் கைவிடப்பட்டது..

மொகாலி அறிவியல் தொழில்நுட்ப வளாகத்தில் இந்திய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியகம் உருவாக்கப்பட்டு தன்னிச்சையாக இயங்குகின்ற ஒரு கல்வியகமாக அது மாற்றப்பட்டது இந்திய நானோ தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய பெயர் சிஎன்ஆர் ராவ்.    இடநிலை வேதியியல் மற்றும் பொருளியல் அறிவியலில் உலகப் புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி.. நானோ பொருட்கள், கார்பன் நானோ குழாய்கள், கிராஃபைன்.. உலோக ஆக்சைடுகள்.. இரு பரிமாண பொருட்கள் என்று அவருடைய ஆய்வுகள் நுழையாத இடமே இல்லை..

இந்தியாவை உலக அளவிலான நானோ சயின்ஸ் வரைபடத்தில் வலுப்படுத்திய மா மனிதர் சி என் ஆர் ராவ். ஆனால் அவருடைய மிக முக்கியமான ஒரு பார்வை புறக்கணிக்கப்பட்டது. இந்தியா வெறும் நானோ ஆய்வு நாடாக இல்லாமல், ஆற்றல் குவாண்டம் பொருட்களை உருவாக்குதல் மற்றும் இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயத் துறையில் நானோ தொழில்நுட்பத்தை இணைக்க வேண்டும் என்கிற அவருடைய கூக்குரல் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதுதான் நம்முடைய கேள்வி.

ஆனால் இந்தியாவில் நானோ தொழில்நுட்பம் தொடர்பாக சமீபத்திய முன்னேற்றங்களை நாம் பட்டியலிட வேண்டும்.

மிக சமீபத்தில் பெங்களூருனுடைய இந்திய அறிவியல் கழகம் அதாவது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் விஞ்ஞானிகள் க்வாண்டம் திரவ நிலை எலக்ட்ரான்கள் என்கிற மிகவும் சுவாரஸ்யமான ஒரு ஆய்வை செய்து முடித்து கிராஃபைன் என்பது ஒரே அணு தடிமன் கொண்ட கார்பன் ஷீட் நிலை பெறுவதற்கு உலகிற்கு வழிகாட்டியிருக்கிறார்கள் அதில் எலக்ட்ரான்கள் சாதாரணமாக நாம் நினைப்பதைவிட வேறுபட்ட ஒன்றிணைவு பண்புகளை கொண்டிருந்தன.

How do people perceive nanotechnology? View through a ...

2025 ஆம்மாண்டு இந்தியாவின் நானோ பாய்ச்சலாக மிக சிறப்பாக பிலாஸ்மோனிக்ஸ் என்கிற ஒன்று உருவாக்கப்பட்டதை சொல்லலாம் .. இந்திய ஆராய்ச்சியாளர்கள் செய்த மிக முக்கியமான ஆய்வுகளில் ஒன்று இது. பிளாஸ்மோனிக்ஸ் என்கிற புதிய துறையே இதனால் ஏற்பட்டுள்ளது குவாண்டம் அளவில் இழுவை திறன் எப்படிப்பட்டது என்பதை உலகிற்கு இது உணர்த்தியுள்ளது. மின்னணுவியல் ஃபோட்டோனிக்ஸ், உணர்வியல், ஊக்கியியல், ஆற்றல் மாற்ற இயல் போன்றவை அனைத்திலும் இந்த அறிவியல் பயன்பட போகிறது.. நானோ அளவில் அணுவை அல்ல ஒரு எலக்ட்ரானை படைத்தால் அதன் நடத்தை எப்படி மாறும் என்பதை இந்த உலகிற்கு காட்டிய மிக முக்கியமான அறிவியல் ஆய்வு இது..

அடுத்த முக்கியமான பங்களிப்பு என்றால் நானோ மருத்துவம் என்கிற துறையில் இந்தியாவின் பாய்ச்சலை சொல்லலாம்.. இங்குதான் நானோ தொழில்நுட்பம் சாதாரண மக்களுக்குப் பயன்படுகின்ற அறிவியலாக மாறுகிறது நானோ துகள்களின் வழியே மருந்தை எடுத்துச் செல்லும் மிகச் சிறிய வாகனங்களை நாம் உருவாக்கியிருக்கிறோம் ஒரு சாதாரண மருந்து உடலில் சென்றால் பல இடங்களுக்கு சென்று முடிகிறது.. எந்த இடத்தில் நோய் ஏற்பட்டுள்ளதோ அந்த இடத்தை மட்டும் சென்றடையாமல் எல்லா இடங்களுக்கும் மருந்து சென்று விடுவதால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன .. நானோ மருத்துவ துகள் அறிவியல் இதை மாற்றிவிட்டது எந்த இடத்திலே நோய் ஏற்பட்டுள்ளதோ அந்த இடத்தை நோய் விரைந்து செல்கின்ற நானோ அளவிலான வாகனங்களை உடலுக்குள் சேர்த்துகிறார்கள்.. இந்த முறையை புனேவில் பரிசோதித்து பார்த்து இந்திய நானோ விஞ்ஞானிகள் புதிய இலக்கை எட்டியிருக்கிறார்கள்..

INST அதாவது இன்ஸ்டிடியூட் ஆஃப் நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மொகாலி.. இந்த நிறுவனத்தில் பார்க்கின்சன் நோய் குறித்த ஒரு ஆய்வில் நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெலட்டோனின் அடிப்படையிலான நானோ அமைப்பை ஏற்படுத்தி கொடுக்கப்படும் சிகிச்சையின் முறையை மாற்றி பார்க்கின்சன் நோய்க்கு மிக சிறந்த மருத்துவ சிகிச்சை முறை ஒன்றை நாம் அறிமுகம் செய்திருக்கிறோம். நரம்பு மண்டலத்திற்குள் மருந்தை திறம்பட கொண்டு செல்வதுதான் இந்த முயற்சியின் பெரிய சாதனை.

அடுத்து நானோ ஊக்கிகள்(NANO CATALISTS) மொஹாலியின் விஞ்ஞானிகள் தொழிற்சாலை வேதியியல் சார்ந்த முறைகளை சுழலியல் பாதிப்பு மிகக் குறைவாக இருக்கும் வகையில் மாற்றத்தகுந்த நானோ ஊக்கிகளை பயன்படுத்தி உருவாக்கி வென்றுள்ளனர்.. மிக குறுகிய எதிர்காலத்தில் வேதி தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறுகின்ற சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தான பல வகை கழிவுகளை நானோ தொழில்நுட்பத்தின் உதவியோடு சரிசெய்யும் முதல் படிநிலை இது. பசுமை தொழில்நுட்பம் எங்கோ தூரத்தில் இல்லை என்பதை நமக்கு காட்டுகின்ற நம்பிக்கையான முயற்சி.

அதை விட சமீபகாலத்தினுடைய முயற்சி ஒன்றை குறிப்பிடுகிறேன்..2026 பிப்ரவரியில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆக்சுலரேட்டர் மையத்தில்.. நடந்த அற்புதம் அது. சூரிய ஒளியால் இயங்கக்கூடிய  நானோ அணு உலை ஒன்றை உருவாக்கினார்கள்.. அணு உலைகளிலிருந்து வெளியேறுகின்ற சூழலியல் மாசு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் சாயப்பட்டறை போன்றவற்றிலிருந்து வெளியேறுகின்ற கழிவுகள் ஆகியவற்றை சூரிய ஒளியைப் பயன்படுத்தி இந்த நானோ உலைகள் உருமாற்றுகின்றன.. இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உலக அளவிலும் இதற்கான உரிமம் பதிவு செய்யப்பட்டது.

அலகாபாத் பல்கலைக்கழகத்திலும், டெல்லி பல்கலைக்கழகத்திலும் இணைந்து செயல்பட்ட இந்தியாவினுடைய நானோ ஆய்வாளர்கள் சிரோஞ்சி என்கிற தாவரத்தை பயன்படுத்தி சூழலியல் பாதுகாப்பு நானோ தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.. இது சென்ற மாதம் அந்த செய்தி புற்றுநோய் சிகிச்சையிலிருந்து மருத்துவ பாக்டீரியா மற்றும் பயிர் நோய்கள் குறித்து இவை உதவக்கூடும் என்று அந்த ஆய்வு சொல்கிறது இது இந்தியாவினுடைய இயற்கை வளங்களை நானோ தொழில்நுட்பத்தோடு இணைக்கும் முயற்சியாகும்

பெங்களூருவில்  இந்தியா நானோ-2026 என்கிற மிக முக்கியமான கண்காட்சி குறித்து சமீபத்தில் கேள்விப்பட்டேன்.. விரிவாக அறிந்து கொண்டேன். ஒரு புதிய திசையை நோக்கி இந்தியாவினுடைய நானோ அறிவியலை கொண்டு செல்லும் முயற்சி..

NANO TECH NEXT FRONTIER எனும் பொது தலைப்பின் கீழ் நானோ தொழில்நுட்பத்தை செயற்கை நுண்ணறிவு அறிவியலோடு இணைக்கின்ற.. இந்தியாவின் அடுத்தக்கட்ட பாய்ச்சலை விவரிக்கும் பல கண்காட்சி பொருட்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அடுத்த தலைமுறை நானோ தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு அறிவியலோடு நைனோ தொழில்நுட்பத்தை இணைப்பதே ஆகும் மேற்கண்ட அனைத்து வகையான முன்னேற்றங்களிலும்..

முக்கிய பங்கெடுத்த இந்திய விஞ்ஞானிகள் குறித்து நாம் தனியே பார்க்க வேண்டும்.. சி என் ஆர் ராவ் எனும் மாமனிதரைப் பற்றி ஏற்கனவே நாம் இந்தக் கட்டுரையில் பார்த்தோம்

பெங்களூருவின் இந்தியன் இன்ஸ்டுட்யூட் ஆஃப் சயின்ஸ் கிராஃபைன் குறித்த முக்கியமான நானோ தொழில்நுட்ப பண்பு குறித்த ஆய்வுகளில் ஈடுபட்ட விஞ்ஞானி மரியாதைக்குரிய அஜய் கே சூடு..

அதேபோல் சிஎன்ஆர் ராவ் பெயரில் உருவாக்கப்பட்ட இந்திய நானோ அறிவியல் விருதை முதலில் பெற்ற பி எல் வீ பிரசாத்..

நானோ மின் கம்பிகளை உருவாக்குவதில் உல்தாரின் என்கிற முறையை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கும் மின்னணு நுண்ணோக்கியலின் பித்தகர் வீ ரவிஷங்கர்..

இந்திய அறிவியல் தொழில்நுட்பம் பெங்களூரில் கடுமையாக உழைத்து நானோ எலக்ட்ரானிக்ஸ் என்கிற புதிய துறையை ஏற்படுத்தி.. நானோஸ்கேல் டிவைஸ்.. எனும் அளவீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தனி ஆய்வகத்தையே உருவாக்கிய சாந்தனு மகாபத்ரா..

கிராஃபைன் இருபரிமாண நானோ பொருட்கள் மற்றும் அவற்றின் மின்னணு காந்தவியல் தன்மைகளை ஆய்வு செய்து உலக அளவில் புகழ் பெற்ற அபிஷேக் கே சிங்..

நானோ பொருட்களை பொறுத்தவரையில் அவற்றை உருவாக்குகின்ற நானோ உற்பத்தி சாதனங்களை உலகிற்கு வழங்கி வருகின்ற நேகா சௌகான்..

இப்படி நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.. சேர்க்கை நுண்ணறிவு அறிவியலோடு குறைகடத்தி உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை விவசாய த்துறை ஆற்றல்துறை சூழலியல் துறை என்று அனைத்தையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரு பாதையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்றாலும்..

நானோ மிஷன் என்று தொடங்கப்பட்ட இந்தியாவின் மிக முக்கியமான நானோ தொழில்நுட்பம் தொடர்பான செயல் திட்டம் மறுபடியும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது கருத்தும் ஆகும்.

📚 எழுதியவர் : 

✍🏻 – ஆயிஷா இரா.நடராசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *