அறிவியல் மைல்கல் 5:-
உயிரி தொழில்நுட்பம்: தரமான சம்பவம் செய்த இந்திய விஞ்ஞானிகள்!
– ஆயிஷா இரா.நடராசன்
இந்திய உயிரி தொழில்நுட்பத்தின் கதை சுவாரஸ்யமானது. சமீபத்திய தரமான சம்பவம் உலகத்தின் பார்வையை நம்மை நோக்கி திருப்பி இருக்கிறது என்கிற செய்தியோடு தொடங்கினால் இந்த கட்டுரையை முழுமையாக வாசிக்காமல் கீழே வைக்க உங்களால் முடியாது. செயற்கை நுண்ணறிவின் மூலம் வடிவமைக்கப்பட்ட மரபணு திருத்த கருவியை நம்முடைய விஞ்ஞானிகள் இப்போது உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள்.. இது ஒரு அசாத்தியமான முன்னேற்றம்..
எப்போதும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏதாவது ஒன்றை செய்துவிட்டால் ஆறாவது நாடு இந்தியா ஏழாவது நாடு இந்தியா என்று அலறுகின்ற நம்முடைய ஊடகங்கள் உலகிலேயே இப்படியான ஒரு கருவியை கட்டாக் மத்திய அரிசி ஆய்வு நிறுவனத்தில் ICAR உருவாக்கியதன் மூலம் மரபணு மாற்ற திருத்த கருவியை தனக்கு தானே கண்டுபிடித்து வைத்திருக்கும் மூன்றாவது நாடு என்கிற பெருமையை நம்முடைய விஞ்ஞானிகள் நமக்குப் பெற்றுத் தந்திருப்பதைக் கண்டுகொள்ளாதது மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது.. இன்று நேற்றல்ல இது எப்போதும் நடப்பதுதான்.

நம்முடைய விஞ்ஞானிகள் விவசாயத் துறையை எப்போதுமே கைவிட்டது இல்லை.. நம்முடைய நாடு ஒரு விவசாய நாடு இந்த நாட்டில் நடைபெறுகின்ற வேளாண்மை தொடர்பான ஆய்வுகள் மிக மிக முக்கியமானவை சமீபத்தில் ஒன்றிய அரசு இந்த துறைக்கு அளப்பரிய நிதி நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது என்கிற பின்னணியில் இருந்து பார்த்தால் நம்முடைய வேளாண் விஞ்ஞானிகள் PLANT OPEN CRISPR-1(POC1) என்று அழைக்கப்படும் புதிய மரபணு திருத்த கருவியை உருவாக்கியுள்ளனர் என்பது பிரமாண்ட சாதனை.
இதன் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால் இயற்கையில் ஏற்கனவே இருக்கின்ற ஒரு CRISPR புரதத்தை மட்டும் பயன்படுத்துவது அல்ல மாறாக செயற்கை நுண்ணறிவின் உதவியோடு ஒரு புதிய GENOME-EDITING மையக்கரு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி நெல் தாவரங்களின் மீது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் இந்திய அறிவியல் இயற்கையில் கிடைக்கும் மரபணு திருத்த கருவிகளை பயன்படுத்துவது என்கிற நிலையிலிருந்து மரபணு திருத்த கருவிகளையே வடிவமைப்பது என்கிற புதிய நிலைக்கு உலகை எடுத்துச் சென்றுள்ளது. அயல் நாடுகளை நம்பியிருக்காமல் நாம் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்தக்க ஒரு அற்புதத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
NEW PHYTOLOGIST என்கிற சர்வதேச ஆய்விதழில் மே 21 2026 அன்று இணையத்தில் வெளியான இவர்களுடைய ஆய்வுக்கட்டுரை உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. இதன் முக்கியத்துவத்தை ஒருவரையிலே சொல்வதானால் மரபணுக்களை திருத்துவதில் இருந்து மரபணுக்களைத் திருத்தும் கருவிகளையே சேர்க்கை நுண்ணறிவின் மூலம் வடிவமைக்கும் நிலைக்கு இந்தியா முன்னேறி இருக்கிறது.. முனைவர் குத்புதீன் மோலா எனும் விஞ்ஞானியின் தலைமையில் பிரியா தாஸ், ரெமியோ சாகா, தேபஸ்மிதா பாண்டா, சந்தனா கோஷ், எஸ் பி அவினாஷ், சோனாலி பாண்டா, மிஸ்ரா பேக் போன்ற இளம் வேளாண் விஞ்ஞானிகள் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள்..
பொதுவாக இந்தியாவின் உயிரி தொழில்நுட்ப ஆய்வுகள் வெளியே தெரிவதில்லை.
GENOME INDIA என்கிற இந்தியாவின் விஞ்ஞானிகள் அறிமுகம் செய்திருக்கும் முக்கியமான ஆய்வுத் திட்டத்தை நீங்கள் அறிவீர்களா.. இந்தியர்களின் மரபணுக்களை நாமே படிக்கத் தொடங்கிய தருணத்தை நம்முடைய பாடப் புத்தகங்கள் நமக்கு விவரிப்பதில்லை..CRISPR மரபணுக்களை மாற்றுவதற்கான தொழில்நுட்பம். அதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் முதலில் மரபணுக்களை புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக இந்தியா மேற்கொண்ட மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றுதான் ஜிநோம் இந்தியா திட்டம்.. இந்த திட்டத்தில் முதல் கட்டத்தில் சுமார் 10,000 இந்தியர்களின் முழு மரபணு தொகுப்புகள் வரிசைப்படுத்தப்பட்டன.. இந்தியாவில் பல்வேறு மக்கள் தொகை குழுக்களின் மரபணு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.. இந்தியா போன்ற மிகப்பெரிய மரபணு பல்வகைமை கொண்ட நாட்டிற்கு இது மிகப் பெரிய சாதனை ஆகும். மக்கள் தொகை கணக்கெடுப்பை விட மரபணு தொகுப்பை உருவாக்குவது என்பதுதான் சிறப்பான அறிவியல் ரீதியிலான படிநிலை.
உலகின் பல GENOME DATABASES களில் ஐரோப்பிய வம்சாவளியினரின் தரவுகளே அதிகம் இருந்தன. இந்தியர்களின் மரபணு தனித்தன்மைகள் பல நேரங்களில் பொதுவான அளவில் பிரதிபலிக்கப்படவில்லை. இந்தியாவின் உண்மையான மூதாதையர் யார் என் மன போன்ற கேள்விகளை மரபணுத்துறை எழுப்பிக் கொண்டபொழுதுதான் மாற்றங்கள் வரத் தொடங்கின. ஜினோம் இந்தியா திட்டம் இந்த இடைவெளியை நிரப்பத் தொடங்கியது. இந்தியர்களின் மரபணுக்களில் 13.5 கோடிக்கும் அதிகமான மரபணு வேற்றுமைகள் கண்டறியப்பட்டதாக திட்டத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.. அப்படியானால் எப்படிப்பட்ட ஒரு தேசம் இது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது எவ்வளவு பெரிய உண்மை. இந்த மாற்றங்களில் பல மாறுபாடுகள் உலகின் முக்கியமான மரபணு தரவுத்தளங்களில் முன்பு பதிவாகாதவை என்பதையும் இங்கே நான் குறிப்பிட வேண்டும்.
இதனால் எதிர்காலத்தில் இந்தியர்களுக்கான துல்லிய மருத்துவம் என்பதை நம்மால் ஊர்ஜிதப்படுத்த முடியும். இந்த ஜினோம் இந்தியா திட்டத்தின் முக்கிய விஞ்ஞானி குமாரசாமி தங்கராஜ் குறித்து நான் ஏற்கனவே தனிக்கட்டுரை எழுதியிருக்கிறேன்.. இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100 என்கிற என் புத்தகத்தில் முக்கியமான இடத்தை நான் அவருக்கு கொடுத்தேன் கடுமையான உழைப்பாளி. இந்தியாவின்POPULATION GENETICS துறையின் மிக முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர் அவர். மனிதர்களின் மரபணு வேறுபாடுகள் மற்றும் இந்திய மக்களின் மரபணு வரலாற்றை இருபதாண்டுகளுக்கும் மேல் ஆராய்ச்சி செய்தவர் ஜினோம் இந்தியா திட்டத்தின் மிக முக்கிய தேசிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் தங்கராஜ் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

அடுத்த மாபெரும் அறிஞர் எடாட்டி நரஹரி.. பெங்களூரில் இருக்கிற இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் மனித மூளை ஆய்வுக்கென்று ஒரு ஆராய்ச்சி மையத்தை நடத்தி வருகிறது. அதன் முக்கிய விஞ்ஞானியாக நரஹரி இருக்கிறார்.. ஜீநோம் இந்தியா திட்டத்தின் கணக்கீட்டு மற்றும் தரவு சார்ந்த பணிகளில் முக்கிய பங்கு வைத்தவர்.. அடுத்து சொல்வதானால் டாக்டர் மித்தாலி முகர்ஜி இந்திய மக்கள்தொகையின் மரபணு வேறுபாடுகள் குறித்த ஆராய்ச்சிகளில் இந்த பெயர் அடிக்கடி அடிபடுகிறது இந்திய மரபணு மாறுபாடுகள் மற்றும் மரபணு நோய்கள் தொடர்பான ஆய்வுகளில் முக்கிய பங்களிப்பு இவருடையது..
நாம் டாக்டர் வினோத் ஸ்காரியா என்கிற அறிஞரை மறந்துவிடக் கூடாது இந்தியாவின் முன்னணி கணக்கீட்டு உயிரியலாளர்களில்(COMPUTATIONAL BIOLOGIST) ஒருவர்.. மரபணுத்துறை மற்றும் உயிரி தகவல் தொடர்பு துறைகளில் முக்கிய பங்களிப்புகளை செய்தவர்.. அபூர்வ நோய்கள் மற்றும் அதன்மீதான மரபணு தலையீடு போன்ற துறைகளில் தீவிரமாக பணியாற்றியவர்.
இந்திய விஞ்ஞானிகளின் மரபணு மாற்ற கருவி பற்றி பார்ப்பதற்கு முன் 100 விஷயத்தை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் ஜீநோம் இந்தியா ஏன் மிக முக்கியமான திட்டம்.. என்பதுதான் அது. எதிர்கால மருத்துவம் அனைவருக்கும் ஒரே மாத்திரையை மருந்தை கொடுத்துக் கொண்டிருக்கப் போவதில்லை ஒரே மருந்து ஒருவருக்கு சிறப்பாக வேலை செய்யலாம் அதே மருந்து மற்றொருவருக்கு குறைவாக வேலை செய்யலாம் பெரும்பாலான நம்முடைய மருந்துகள் எல்லாம் ஆண்களின் மீது பரிசோதிக்கப்பட்டவை அது பெண்களுக்கு வேலை செய்கிறதா இல்லையா என்பது குறித்து மருத்துவர்கள் கவலைப்படுவதே கிடையாது அதே மருந்தை தான் பெண்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் மரபணு வேறுபாடுகள் இருக்கலாம் தற்போது மிகப்பெரிய துறையாக வளர்ந்து கொண்டிருப்பது எது தெரியுமா..PHARMACOGENOMICS மரபணு மருந்துத்துறை! இந்த துறையில் இன்றைய இந்திய இளைஞர்கள் தீவிரமாக பணியாற்றுகிறார்கள்.
எதிர்காலத்தில் புற்றுநோய் சிகிச்சை நீரிழிவு இதய நோய்கள் நரம்பியல் நோய்கள் அறிய மரபணு நோய்கள் மட்டுமல்ல மருதுகளின் தனிநபர் விளைவுகளும் ஆராயப்பட்டு சரிசெய்யப்படும் இந்த இடத்தில் இந்தியாவின் இன்னொரு சாதனையை நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது.. அதுதான்CRISPR மூலம் அரிவாள் செல் ரத்த சோகைக்கு சிகிச்சை கொடுக்கும் முறை-இதற்குBIRSA-101 என்று பெயரிடப்பட்டுள்ளது.. இந்தியாவின் மிக முக்கியமான மரபணு திருத்த(GENE-EDITING ) மருத்துவ ஆராய்ச்சிகளில் ஒன்றுதான் அரிவாள் செல் ரத்த சோகைக்கான(SICKLE CELL DISEASE) சிகிச்சைத்துறை. இந்த துறையில் இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனம் CSIR இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜினாமிக்ஸ் அண்ட் இன்டெக்ரேட்டிவ் பயாலஜி(CSIR-IGIB) புது தில்லியில் உள்ளது.
இந்திய விஞ்ஞானிகள் BIRSA-101 என்ற மரபணு திருத்த அடிப்படையிலான மரபணு சிகிச்சை திட்டத்தை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளனர். இந்த முயற்சியில் ஈடுபட்ட முக்கிய விஞ்ஞானிகள் என்று பார்த்தால் டாக்டர் டபோ ஜோதி சக்ரவர்த்தி மற்றும் சௌவிக் மைதி. அரிவாள் செல் ரத்தசோகை என்பது சிவப்பணுக்களைப் பாதிக்கும் ஒரு மரபணு நோய். பாரம்பரிய மருத்துவம் நோயின் அறிகுறிகளில் விளைவுகளையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்த காலத்தில் இந்த மரபணு சிகிச்சை முறையின் மூலம் நோயின் அடிப்படை மரபணு காரணத்தை இலக்காகக் கொள்ள முயற்சிக்கிறது. இதன் மூலம் இந்தியா நோயின் விளைவுகளை சிகிச்சை செய்வது என்கிற நிலையிலிருந்து நோயின் மரபணு அடிப்படையை மாற்ற முயற்சிப்பது என்கிற நிலைக்கு முன்னேறியது இன்னும் சொல்லப்போனால் இதன்பிறகு இந்த நோயோடு பிறக்கும் இந்தியர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மரபணு மாற்ற வேலைகள் நடந்து வருகின்றன.
மரபணு மாற்ற பொறியியல் துறை என்பது வெறும் டி என் ஏ வை மாற்றுவது மட்டுமல்ல. இப்போது நாம் இந்தியாவின் முதல் உள்நாட்டு CAR-T செல் தெரபி என்று அழைக்கப்படும் NEXCAR19 எனும் திட்டத்தைப் பற்றி அறிய வேண்டும்.. ஏனென்றால் இதுகுறித்தெல்லாம் யாரும் பேசுவதில்லை. மனித நோய் எதிர்ப்பு செல்களையே மரபணு மாற்றம் செய்து ஒரு உயிருள்ள மருந்தாக மாற்றுவதற்கு நாம் முயற்சி செய்து வருகிறோம். இது அளப்பரிய உலக சாதனை. இதற்கு சிறந்த இந்திய உதாரணம்தான் NEXCAR19 எனும் செயல் திட்டம் இது குறிப்பிட்ட ரத்த புற்றுநோய்க்கான சிகிச்சையாகும்.. இந்தியாவில் ஐந்து பேரில் ஒருவருக்கு ரத்த புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகரித்தபொழுது இந்திய விஞ்ஞானிகள் அறிமுகம் செய்த அற்புதம் இது..
நோயாளியின் டீசெல்கள் முதலில் பெறப்படுகின்றன. இந்த T CELLகள் மரபணு ரீதியாக பரிசோதிக்கப்பட்டு தேவையான இடத்தில் திருத்தப்படுகின்றன..மாற்றப்படுகின்றன. அவற்றில் CHIMERIC ANTIGEN RECEPTOR-CAR என்கிற நிலை உருவாக்கப்படுகிறது. இந்த CAR மூலம் புற்றுநோய் செல்களை அடையாளம் காணுகின்ற திறன் டீ செல்களுக்கு கிடைக்கிறது பின்னர் இந்த மரபணு மாற்ற செயல்கள் பெருக்கப்பட்டு நோயாளியின் உடலுக்குள் மீண்டும் செலுத்தப்படுகின்றன. ஆய்வகத்தில் நோயாளியின் மரபணுக்களைப் பெற்று அதில் எதிர்ப்பணுக்களை அதிகப்படுத்தி மீண்டும் நோயாளிக்கு செலுத்துகின்ற இந்த முறையை அறிமுகம் செய்த இரண்டாவது நாடு இந்தியா என்கிற பெருமையை நமக்கு அவர்கள் பெற்றுக் கொடுத்தார்கள்.
அந்த விஞ்ஞானிகளின் பெயர்களை நாம் பார்க்க வேண்டும் ஐஐடி பாம்பே உயிரி அறிவியல் மற்றும் உயிரி பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ராகுல் பருவார்.. அவர்களில் குறிப்பிடத்தக்கவர். இந்தியாவினுடைய CAR-T சிகிச்சையின் முன்னோடி. NEXCAR19 சிகிச்சையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்.. அதேபோல டாக்டர் ஹஸ்முக் ஜெயின். டாடா நினைவு மையத்திலே மிக முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி மேலும் ஒருவர் இருக்கிறார். அவர் தான் டாக்டர் கௌரவ் நரூலா CAR-T சிகிச்சையின் மருத்துவ பயன்பாட்டில் மிக முக்கிய பங்கு வகித்தவர்.. இதன் மூலம் முதல் சிகிச்சை இந்தியாவில் 2021 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது..CAR-T வெறும் வேதிமருந்தல்ல.. அது உயிருள்ள மரபணுக்கள் கொண்ட மூலக்கூறு.. அந்த விதத்தில் இந்த சிகிச்சை முறையில் மரபணு மாற்ற உயிருள்ள மனித செல்களே சிகிச்சை தரும் மருந்துகளாக மாறுகின்றன..LIVING MEDICINE என்று அழைக்கிறார்கள்.. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்தியாவின் முதல் மரபணு கைரேகை புரட்சியை தொடங்கி வைத்தவர் டாக்டர் லால்ஜி சிங் இன்றைக்கு நாம் மரபணு திருத்த கருவிகள் பற்றி பேசுகின்ற பொழுது நம்முடைய ஆரம்பம் முன்னோடிகளை மறந்துவிடக்கூடாது அதில் மிக முக்கியமான பெயர் தான் டாக்டர் லால்ஜி சிங் இவர் இந்தியாவின் டிஎன்ஏ கைரேகை என்று அழைக்கப்படும் ஒரு துறையில் முன்னோடியாக கருதப்படுகிறார். உலகில் பல நாடுகளில் இருந்து குற்றவியல் சிக்கல்கள் பல தீர்வுக்காக இவரிடம்தான் வந்தன. குற்றவியல் விசாரணை, தந்தையை கண்டுபிடிக்கும் சோதனை, தனிநபர் அடையாளம், விலங்குகள் பாதுகாப்பு, மக்கள் தொகை ஜெனெடிக்ஸ் ஆகிய அனைத்து துறைகளிலும் அற்புதமான அறிஞராக விளங்கியவர் இந்தியாவிருக்கென்று தனியாக டி என் ஏ வங்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தவர்.. லால்ஜி சிங்.
அதேபோல இன்னொரு மாமனிதர் டாக்டர் சமீர் பிரம்மச்சாரி மரியாதைக்குரிய பேராசிரியர் பிரம்மச்சாரி இந்திய ஜீனாமிக்ஸ் துறையின் கட்டமைப்பு கலைஞர்களில் ஒருவர். இவர் தான் புது தில்லியில் இப்போது இயங்கி வருகின்ற நம்முடைய மரபணு கட்டமைப்பு கல்வியகத்தின் முதல் இயக்குனர். இந்தியாவில் உயிரி தகவல் தொழில்நுட்பம் என்கிற ஒரு கல்வி உருவாவதற்கு காரணமாக இருந்தவர். மூலக்கூறு மருத்துவம் என்கிற தனித் துறையைத் தோற்றுவித்தவர்.. இதுபோல நம்மால் தொடர்ந்து வரிசைப்படுத்த முடியும் இந்திய விஞ்ஞானிகளை பாடப் புத்தகங்களில் இடம்பெற வைக்கும் நம்முடைய போராட்டம் அதனால் தான் தொடர்கிறது.
இப்போது நாம் இன்றைய அற்புத சாதனைக்கு திரும்புவோம்.. தாவரங்களில் குறிப்பாக நம்முடைய நாட்டில் மிக அதிகமாக உற்பத்தியாகின்ற உணவுப் பொருளான அரிசி.. அதில் நோய்களின் தாக்குதலும் மரபணு திருத்த கருவிகளை நம்பி இருக்கிறது.. இன்னொரு விஷயம் முன் காலத்தைப் போல நாம் இயற்கையாக. தாழ்த்தி முளைக்கின்ற அரிசிகளை விட நெற்பயிர்களை விட நம்முடைய மக்கள்தொகைக்கு ஏற்றாற்போல விவசாய பெருங்குடி மக்களால் விரைந்து கொடுக்க முடிந்த ரகங்களை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.. ஒரு மழை பொய்த்தாலோ அல்லது காவிரியில் நீர் வரவில்லை என்றாலோ தாவரங்கள் அழிவது கொடுமையாகும்.. இதற்கான மாற்றுதான் தற்போதைய விஞ்ஞானிகள் கையில் எடுத்திருக்கும் விஷயம்.
குத்புதீன் மோலா என்கிற மாபெரும் அறிஞரின் தலைமையில் இந்த குழு உருவாக்கிக் கொடுத்திருப்பது GENE KNOCKOUT என்றழைக்கப்படுகின்ற திருத்தக்கருவி.. இதை வைத்துக்கொண்டு மரபணுக்களின் அடித்தளம் திருத்தம்(BASE EDITING ) செய்ய முடியும்.. பிரதான திருத்தம்(PRIME EDITING) என்பதையும் செய்ய முடியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுகின்ற இந்த PLANT OPENCRISPR-1(POC1) என்று அழைக்கப்படும் திருத்த கருவி நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் பொழுது.. கோதுமை பார்லி என்று வழங்கப்படும் முக்கியத்துவம் அரிசி உணவுக்கும் வழங்கப்படும். அடுத்த பத்தாண்டுகளில் சாதாரண விவசாயத்தின் ஆணிவேர் தொழில்நுட்ப உணவு பொருளாதாரத்தின் சர்வதேச சந்தையில் இந்தியாவை தலைநிமர வைக்கும்.
ராக்கெட் விஞ்ஞானிகளுக்கு மட்டுமே எப்போதும் பரிந்துரைக்கப்படும் பத்மஸ்ரீ பத்மபூஷன் போன்ற உயரிய விருதுகள் விவசாய விஞ்ஞானிகளுக்கும் தரப்பட வேண்டும்.. என்பதன் நியாயத்தை எப்போது புரிந்து கொள்ள போகிறோம்
📚 எழுதியவர் :

✍🏻 – ஆயிஷா இரா.நடராசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

