Ayesha Era Natarsan in Newton Kadavulai Nambiyathu Yen? Book Review By K. J. Raju (TNSF). Book Day is Branch of Bharathi Puthakalayam.நியூட்டன் – கடவுளை நம்பியது ஏன்? 
ஆயிஷா. இரா. நடராசன்
பாரதி புத்தகாலயம்

விலை: ₹145.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆயிஷா’ என்ற குறுநாவல் மூலம் தனது அறிவியல் பயணத்தை தொடங்கிய இரா. நடராசன் அண்மையில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்ட ‘நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்?’ என்ற நூல் மூலம் தனது பயணத்தின் ஒரு மைல்கல்லை தொட்டுள்ளார் என நம்பலாம். உலகின் தலைசிறந்த பதிமூன்று விஞ்ஞானிகள் எழுதிய சிறப்பான கட்டுரைகளை கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல தேர்ந்தெடுத்து தமிழில் மொழி பெயர்த்து கொடுத்துள்ளார். இந்த நூல் அறிவியல் தமிழுக்கு அவரது ஒரு அற்புதமான கொடை என்று கூறலாம்.

இந்த நூலின் முதல் கட்டுரையான உலகின் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எழுதிய ‘நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்?’ என்ற கட்டுரையே இந்த நூலின் தலைப்பாகவும் அமைந்துள்ளது. நியூட்டன் வாழ்ந்த காலத்தில உலகம் என்பது சூரியனும் சூரியனை சுற்றி வரும் கோள்களுமேயாகும். சூரியக்குடும்பத்தின் இயக்கவியலை துல்லியமாக கணக்கிட்டு கண்டறிந்த நியூட்டனுக்கு கடவுள் நம்பிக்கை இருந்ததில் வியப்பில்லை. ஏனெனில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் சற்று குறைந்தோ கூடியோ இருந்திருந்தாலும் பூமி சூரியனை சுற்றிவரும் நீள்வட்டப்பாதை சற்று நீண்டோ குறுகியோ இருந்திருந்தாலும பூமி என்ற கோளே உருவாகி இருக்காது. மேலும் அன்றைய காலம் கிருத்துவ மதம் அறிவியல் உலகை ஆக்கிரமித்து இருந்தது. இதுபோன்ற பல காரணங்களால் நியூட்டனுக்கு கடவுளை நம்புவதைத்தவிர வேறு வழி இருக்கவில்லை. நியூட்டனுக்குப்பிறகு இயற்பியலை கணிதம் ஆட்கொண்டது. பிரபஞ்சத்தின் அனைத்து செயல்பாடுகளும் கணித சமன்பாடு மூலமாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பிறகு இயற்பியல் இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. நியூட்டனின் தோள் மேல் ஏறி நின்ற ஐன்ஸ்டீன் நியூட்டனின் முப்பரிமாண பிரபஞ்சத்தை ‘வெளி-காலம்’ என்ற நான்காவது பரிணமாத்துடன் வரையறுத்தார். அவரது புகழ்பெற்ற E=mC2 என்ற சமன்பாட்டின் மூலம் ‘வெளி –காலம்’ என்ற வலையில் பூமி, சூரியன் போன்றவை வளைப்பதால் ஈர்ப்புவிசை உண்டாகிறது என்று கூறினார். அவர் காலத்திலேயே வாழ்ந்த ஹப்புள் என்ற விஞ்ஞானி பிரபஞ்சம் பலூன் போல விரிந்துக்கொண்டே இருக்கிறது எனக்கண்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் கேலாக்கிஸிகள் இவற்றின் இயக்கத்தையும் கண்டறிந்து தற்போது ‘எம் – தியரி’ என்ற நவீன இயற்பில் சித்தாந்தத்தில் வந்து நிற்கிறது. இந்த கொள்கையின்படி உலகில் ஒரு பிரபஞ்சம் மட்டுமில்லை ‘ மல்டிவெர்ஸ்’ எனப்படும் பல பிரபஞ்சங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அவற்றிக்கென தனித்தனி இயற்பில் விதிகளோடு இயங்கலாம் எனக்கூறுகிறது. இயற்பியலின் இரண்டாவது பிரிவு அணுவினுள் பயணம் செய்கிறது.அணுவைப் பிளக்கும் போது அதனுள் புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலெக்ட்ரான் போன்ற துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் புரோட்டான் நியூட்ரான் ஆகியவற்றை பிளந்து பார்க்கும் போது அவை ஆறு வகையான குவார்க்குகள் என்ற துகளால் ஆனது என கண்டறியப்பட்டது. அந்த குவார்க்களை இணைக்கும் ஆறு வகையான குளுவான்கள் என்ற பொருளும் இருப்பது கண்டறியப்பட்டது. இது மட்டுமல்ல அணுவில் புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலெக்ட்ரான் வெறும் பத்து சதவீத இடத்தை மட்டும் ஆக்கிரமித்துள்ளது. மீதமுள்ள தொண்ணூறு சதவீதம் வெற்றிடமாகவுள்ளது. வெற்றிடம் என்பது காலியிடமில்லை. அங்கும் ஆற்றல் உள்ளது. அது இருள் ஆற்றல் எனப்படுகிறது. ஐன்ஸ்டீன் கொள்கைப்படி ஆற்றல் துகள்களாகவும் இருக்கும். மேலும் அணுவினுள் செயல்படும் வல்விசை, மெல்விசை, மின்காந்தப்புலம் மற்றும் ஈர்ப்பு விசைகளால் சிறிய புழு பூச்சியிலிருந்து தாவரம், விலங்குகள், கோள்கள், விண்மீன்கள், கேலேக்ஸிகள் என அனைத்து பொருட்களும் தோன்றியது.

இதன் தொடர்ச்சியாக இறுதியாக இந்த பிரபஞ்சம் இது போன்ற சுமார் நூற்றைம்பது துகள்களால் ஆனது. மேலும் இந்த துகள்களால் ஆன பிரபஞ்சம் என்பது பதினொரு பாரிமாணங்களால் ஆனது என ‘ஸ்டிரிங் தியரி’ எனப்படும் இழைக்கொள்கை வரை இந்த இரண்டாம் வகை இயற்பில் விதி செல்கிறது. மேலும் பிரபஞ்சத்தின் இருப்பு குறித்து இருபது வகையான மாறிலிகள் (கான்ஸ்டன்ட்ஸ்) இருக்கின்றன. அவர் ஒவ்வொன்றிற்கும் ஒரு கோட்பாடு உள்ளது. அடுத்த பத்துவருடத்தில் இது போன்ற பல கொள்கைகளையும் இணைக்கும் ‘அனைத்திற்கும்மான கோட்பாடு’ உருவாகிவிடும் என ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் நம்புகிறார். ஒரு கருத்து என்பதை உண்மை என நிருபிப்பதைவிட தவறுஎன நிருவப்பட வேண்டும் என்பதுதான் அறிவியல் வழிமுறை. அது போல கடவுள் இல்லை என் அறிவியலால் நிருபிக்க முடியவில்லை. ஆனால் தற்போதுள்ள பிரபஞ்சக்கோட்பாடுகளில் கடவுள் என்ற கருத்திற்கு அவசியமில்லை. இயற்பியல் விதிகளே போதமானது என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்.

இரண்டாவது கட்டுரை ‘வேதி உலகின் டார்வின்’ சாம்கீன் என்ற அறிவியல் அறிஞர் எழுதிய ’தி டிஸ்அப்பியரிங் ஸ்பூன்’ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் மான்டிலின் தனிம வரிசை அட்டவணையை உருவாக்கும் போது ஒரு கோட்டையை கட்டுவது போல உருவாக்கினார் என அவரது கடும் உழைப்பை விளக்குகிறது.

மூன்றாவது கட்டுரை டேவிட் பொடானிஸ் என்ற அறிஞர் எழுதிய ‘E=mC2 சமன்பாடும் ஐன்ஸ்டீனும்’ என்ற கட்டுரை பிரபஞ்ச கொள்கை உருவாக்கத்தில் இ;ந்த சமன்பாட்டின் தாக்கத்தை விரிவாக கூறுகிறது.

நான்காவது கட்டுரை பிரபல அறிவியல் அறிஞர் ரிச்சர்டு டாக்கின்ஸ் எழுதிய ‘டார்வின் மட்டும் டார்வினாக முடிந்தது ஏன்’ என்ற கட்டுரை டார்வினின் பரிணாமக்கொள்கை இன்று ஒரு கோட்பாடாக உலகம் முழுவதும் ஏற்கொள்ளப்பட்ட கதையை கூறுகிறது.

பென்மில்லர் எழுதிய ‘மனிதன் சந்திரனில் இறங்கியது உண்மைதானா?’ என சந்தேகப்படும் பிராணிகளுக்கு பல நிருபணங்களை தரவுகளுடன் விளக்குகிறது.
தமிழ்நாட்டு விஞ்ஞானி விளையனூர் எஸ். இராமசந்திரன் எழுதிய மனித மூளை குறித்த கட்டுரை இடம் பெற்றுள்ளது. பிரபல அறிவியல் அறிஞர் ரிச்சர்டு டாக்கின்ஸ் இவரை ‘நரம்பியலின் மார்க்கோபோலோ’ என குறிப்பிடுகிறார். இவர் நோபல் பரிசிற்கு ஒவ்வொரு ஆண்டும் பரிந்தரைக்கப்படுகிறார் என்பது அவரது சிறப்பம்சம். மனித மனத்தின் அத்தனை இரகசியங்களும் மூளையின் மென்படலத்தில் பொதிந்துள்ளது என இந்த கட்டுரை கூறுகிறது.

லீ ஸ்மோலின் என்ற பெண் விஞ்ஞானி எழுதிய ‘தி டிரபுள் வித் பிசிக்ஸ்’ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டகட்டுரை தற்கால இயற்பியலின் ஐந்து பிரமாண்ட சவால்களை விவரிக்கிறது.வேதியியல் இல்லாமல் இயற்பியல் மற்றும் உயிரியல் இருக்காது என கூறும் பென்னி லீ எழுதிய கட்டுரை நெப்போலியனுக்கு வேதியியல் மட்டும் தெரிந்திருந்தால் இன்றைய ஐரோப்பாவின் தலையெழுத்தே மாறியிருக்கும் என கூறுகிறது. நெப்போலின் இரஷ்யாவின் மீது படையெடுத்துச்செல்லும் போது ஆறு லட்சம் போர் வீரர்களுடன் அந்த நாட்டில் நுழைகிறார். அவருடைய போர்வீரர்கள் அணிந்திருந்த சீருடையின் பட்டன்கள் வெள்ளீயத்தால் செய்யப்பட்டிருந்து. வெள்ளீயம் 20 டிகிரி செ. வெப்பநிலையில் அதன் இலகுத்தன்மை இழந்துவிடும். இரஷ்யாவின் 15 டிகிரி வெப்பநிலையில் போர்வீரர்களின் பொத்தான்கள் எல்லாம் பொடிப்பொடியாக உதிர்நத போது அவர்கள் அரை நிர்வாணத்திற்கு தள்ளப்பட்டார்கள். கனத்த கம்பளியை போர்த்தி போரிட முடியாததால் நெப்போலியன் படை பின்வாங்கியது. பசுமாட்டு சிறுநீரிலிருந்து பெறப்படும் யூரியாவை உயிரற்ற வேதிப்பொருளிலிருந்து ஒரு விஞ்ஞானி தயாரித்தார். தேனிக்கள் தங்களது கூடுகளில் C10H18O3 என்ற மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. வேலைக்கார தேனிக்களின் மூலக்கூறு ராணி தேனியின் மூலக்கூறுலிருந்த வேறுபடுகிறது என்பன போன்ற பல சுவையான தகவல்களை தருகிறது.

தமிழ்நாட்டு விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணன் இந்தியாவில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று பின்னர் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உயிரியல் மேல் திடிரென காதல் வந்து உயிரியியலிலும் முனைவர் பெற்றார் என்ற செய்தி ஆச்சிரியத்தை தருகிறது. மேலும் உயிர் வேதியியலில் நோபல் பரிசும் பெற்றார். அவருடைய உயிர் வேதியல் புரியாத என் போன்ற மரமண்டைகள் குமுதம் அட்டைப்படத்திலுள்ள நடிகைக்கு மச்சம் எங்கே இருக்கும் என்ற தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடலாம்.

பால் டேவிஸ் என்ற அறிஞர் எழுதிய ஷோர்டிஞ்சரின் பூனையும் முதல் உயிரியின் தோற்றமும்’ என்ற கட்டுரை இந்த தொகுதியில் ஒரு முக்கியமான கட்டுரை. 1943ம் ஆண்டு அவர் நிகழ்த்திய ‘உயிரி என்றால் என்ன?’ என்ற தலைப்பிலான உரை அறிவியல் வரலாற்றில் ஒரு மைல் கல். பரிணாம வளர்ச்சியை வரையறுத்த டார்வின் உயிரி என்றால் என்ன என்ற கேள்வியை தவிர்த்து எளிதாக கடந்த வந்துள்ளார். உயிரி என்பது மரபணு போன்ற ஒரு ஹார்டுவேர். டிஎன்ஏ ல் பொதிந்துள்ள தகவல்கள் சாப்ட்வேர் ஆகிய இரண்டும் இணைந்ததேயாகும் என குவான்ட்டம் இயந்திரவியல் விளக்குகிறது. குவான்ட்டம் என்பது ஒரு துகளை பிரிக்க முடியாத அளவிலுள்ள கடைசி மிகச்சிறிய அலகு. அந்த நிலையில் செயல்படும் இயங்கியல்தான் குவான்ட்டம் மெக்கானிக்ஸ். இதிலிருந்துதான் மாலிக்குலர் பயாலஜி, குவான்ட்டம் பயாலஜி, குவான்ட்டம் கம்யூட்டர், நேனோ தொழில் நுட்பம் என பல நவீன அறிவியல் தொழில்நுட்பம் மலர்ந்துள்ளது. ஷோர்டிஞ்சரின் பூனையும் குட்டிச்சாத்தான் மூலக்கூறும் நவீன அறிவியல் செல்லும் பாதையை காட்டுகிறது. இந்த புத்தகம் பல கல்லூரிகளில் ஒரு விவாதப்பொருளாக கருத்தரங்கள் நடைபெற்றது என இந்நூலின் பதிப்பாசிரியர் கூறுகிறார். இந்த நூல் ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கையில் இருக்க வேண்டிய ஒரு புனித நூல். இதில் ஒன்றும் புரியவில்லை என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டு விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியை பார்க்கச்சென்றால் அறிவியல் தொழில் நுட்பத்துறையில் சீனர்களிடம் இந்தியா கையேந்துவதை தவிர்க்க இய்லாது. இந்த நூலை முழுவதும் படித்த பின் ‘ஆண்டவன் கொடுத்த அட்சய பாத்திரத்தை பிச்சை பாத்திரமாக்கிய பாக்கியவான்கன் நாம்’ என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை ஏனோ ஞாபகத்திற்கு வந்த தொலைக்கிறது.

கட்டுரையாசிரியர்- கே. ஜே. இராஜு,
தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
நீலகிரி மாவட்டம்.
[email protected]இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *